பொது அறிவு
Published:Updated:

நம்ம கனவு ஆசிரியை ராட்சசி

ஜோதிகா
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோதிகா

உங்களுக்கு எந்த மாதிரி டீச்சரை ரொம்பப் பிடிக்கும்?

ஹெட்மாஸ்டரைப் பார்த்தால் பயந்து ஒதுங்கிப் போவீங்களா, நின்று புன்னகைப்பீர்களா? டீச்சர் எப்படிச் சொல்லிக்கொடுத்தால் உங்களுக்குப் பிடிக்கும்? ‘ராட்சசி' படத்தில் இதற்கெல்லாம் பதில் உண்டு.

நம்ம கனவு ஆசிரியை ராட்சசி

புதூர் என்ற கிராமத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளி. உள்ளூர் அரசியல்வாதிகள் தேவைப்படும்போது குழந்தைகளை கட்சிக் கூட்டத்துக்கு அழைத்துச் செல்வது, மாணவர்களில் சிலர் மதில்சுவரில் அமர்ந்து அரட்டை அடிப்பது, நினைத்த நேரத்துக்கு உதவித் தலைமை ஆசிரியர் வருவது... இப்படியாக இருக்கும் பள்ளிக்குத் தலைமை ஆசிரியையாக வருகிறார் ஒருவர். அந்த நிமிஷத்தில் நம் கனவில் இருக்கும், நாம் ஆசைப்படும் ஆசிரியை கிடைத்துவிடுகிறார்.

நம்ம கனவு ஆசிரியை ராட்சசி

‘வார்ம் அப் சாங்’ போட்டு பிரேயரை ஆட்டத்துடன் ஆரம்பிக்கிறார். மதிய உணவை, மாணவிகளோடு அமர்ந்து சாப்பிடுகிறார். ‘கீதானு பெயர் சொல்லியே கூப்டுங்க' என்று மாணவிகளை ஆச்சர்யப்படுத்துகிறார். ‘சண்டே பாக்ஸ்’ என்ற பெயரில், மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டுவருகிறார். ஒன்பதாம் வகுப்பு ஃபெயிலாகி, வேலைக்குப் போய்விட்ட மாணவர்களை பாஸ் ஆக்கி, பள்ளியில் சேர்க்கிறார்.

இப்படியான விஷயங்களால் இந்த அரசுப் பள்ளிக்குக் கிடைக்கும் புகழைப் பார்த்த தனியார் பள்ளி முதலாளி ஒருவர், சதிகள் செய்கிறார். அதையெல்லாம் தனது புத்திசாலித்தனத்தால் எதிர்கொள்பவர், அரசியல்வாதிகளின் அடியாட்களையும் ஒரு கை பார்த்து, ‘வெரிகுட் டீச்சர்' என ‘ஃபைவ் ஸ்டார்' வாங்குகிறார். தலைமை ஆசிரியர் கீதாராணியாக வரும் ஜோதிகாவின் நடிப்பில், சிறந்த ஆசிரியருக்கான அன்பும் கண்டிப்பும் பளிச்சிடுகிறது. இந்தப் படத்தை இயக்கியவர், அறிமுக இயக்குநர் கெளதம்ராஜ். ‘டீச்சர்ஸ் கொஞ்சம் அதிகம் வேலை செஞ்சா, போலீஸுக்கு வேலை கம்மியாகும்’, ‘சுதந்திரம்கறது இஷ்டத்துக்குப் பண்றதில்லை... எது சரியோ அதைப் பண்றது’ என்று பல இடங்களில் கௌதம்ராஜ் - பாரதி தம்பி கூட்டணியில் வசனங்கள், அழகாக பிராக்டிக்கலைச் சொல்லிக்கொடுக்கிறது.

நம்ம கனவு ஆசிரியை ராட்சசி

ஆட்டோ டிரைவர் கதாபாத்திரம், பர்த்டேவுக்கு கலர் டிரஸ் போட்டுவந்ததுபோல எக்ஸ்ட்ரா ஐஸ்க்ரீம் ஸ்கூப். கடவுளாகவும் தேவதையாகவும் ஜோதிகாவை நினைத்து ரசிக்கும் இரண்டாம் வகுப்பு மாணவன், குட்டி ஹைக்கூ.

படிக்கும் வயதில் காதல் ஆசையில் இருக்கும் மாணவியிடம், “வாழ்க்கைப் பயணத்துல பெரிய ஒரு தங்கப் புதையல் காத்திருக்கு. இப்படிச் சின்னச்சின்ன தங்கக்கட்டியைப் பார்த்து மயங்கி நின்னுரக்கூடாது” என்கிறார் ஜோதிகா. இவையெல்லாமே அந்த மாணவிகளுக்கு மட்டுமல்லாமல், நமக்கும்தான்!

நம்ம கனவு ஆசிரியை ராட்சசி

ஒட்டுமொத்தமாக அரசுப் பள்ளிகள் இப்படித்தானோ என்ற பிம்பத்தை கொடுத்திருப்பது படத்தின் குறை. சமூகத்தில் ஆசிரியரின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது, எத்தனை பொறுப்புமிக்கது. அதை அவர்கள் உணர்ந்து செய்தால், எவ்வளவு பெரிய மாற்றங்களை உருவாக்கலாம் என்பதைச் சொல்ல வந்திருக்கிறார்கள். நிஜத்திலும் கீதாராணி டீச்சர்கள் உண்டு. பல பள்ளிகளில், பல மாணவர்களுக்கு அம்மாவாக, அப்பாவாக, நண்பராக அவர்கள் இருக்கிறார்கள். அந்தப் பல என்பது எல்லாப் பள்ளிகளிலும் எல்லா ஆசிரியர்களும் என்று மாறினால், பள்ளியும் பாடங்களும் நமக்கு மகிழ்ச்சியான விஷயமாக மாறிவிடும்.

நம்ம கனவு ஆசிரியை ராட்சசி

கீதாராணி டீச்சருக்கு ஒரு ஹை ஃபை சொல்வோம்!