Published:Updated:

`ப்ளீஸ்... சேர்ந்து வேண்டாம்!' குழந்தைகள் தனித்தனியே விளையாட சில விளையாட்டுகள்

இப்போதைய சூழலில்... ஒவ்வொரு குழந்தையும் தனியாக, மற்றவர்களுடன் அதிகம் நெருங்காத வகையிலும் விளையாட வேண்டும். அதேநேரம், அந்த விளையாட்டு சுவாரஸ்யமாக இருந்தால்தான் தொடர்ந்து விளையாடுவார்கள். நாம கொஞ்சம் யோசிச்சா, அப்படியான புதுப்புது விளையாட்டுகளை உருவாக்க முடியும்.

இந்தியாவில், கொரோனா பாதிப்பு தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுவையும் ஒத்திவைக்கும் நிலை. சூழ்நிலையின் தன்மையைப் பொறுத்து, பள்ளிகளின் விடுமுறைக் காலம் மேலும் நீட்டிக்கப்படலாம். இதனால், பிள்ளைகளின் விடுமுறை உற்சாகம் கூடிக்கொண்டே செல்கிறது. அவர்களைக் கட்டுப்படுத்துவது கண்டிப்பாக பெற்றோர்களுக்கு சவாலான நேரம்தான். வெளியே இருந்து யாரையும் அனுமதிக்காதீர்கள் என்ற கட்டத்தையும் தாண்டி, வீட்டுக்குள்ளேயே ஒருவருக்கு ஒருவர் அருகில் இருக்காதீர்கள் என்ற கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறோம். ஆனால், இப்போதும் ஆங்காங்கே சிறுவர்கள் கூடி விளையாடுவதையும், ஒரே வீட்டுக்குள் சில குழந்தைகளைச் சேர்த்து விளையாட வைப்பதும் நடந்துகொண்டிருக்கிறது. இப்போதைய சூழ்நிலையில், இப்படி சேர்ந்து விளையாட வைப்பதையும் தவிர்த்தே ஆகவேண்டும்.

வேற எப்படித்தான் இவங்களை அடக்கிவைக்கிறது? அதற்காக 24 மணி நேரமும் மொபைலைக் கையில் கொடுக்க முடியுமா? அந்தப் பழக்கம் பின்னாளில் அவர்களை அதற்கு அடிமையாக்கிவிடும். இப்போதைய சூழலில், ஒவ்வொரு குழந்தையும் தனியாக, அதிகம் நெருங்காத வகையில் விளையாட வேண்டும். அதேநேரம், அந்த விளையாட்டு சுவாரஸ்யமாக இருந்தால்தான் தொடர்ந்து விளையாடுவார்கள். நாம கொஞ்சம் யோசிச்சா, அப்படியான புதுப் புது விளையாட்டுகளை உருவாக்க முடியும். இதோ... இங்கே சில விளையாட்டுகளைச் சொல்லியிருக்கோம். அவற்றை உங்க வீட்டு குழந்தைகளுக்குச் சொல்லிப் பாருங்கள். நாம் கொஞ்சம் கோடு போட்டால் போதும், வீட்டுக்குள் பிரைவேட் ரோடு போட்டுப்பாங்க...

kids
kids
pixabay

பந்து விளையாட்டுகள்:

* பந்தை சுவரில் அடித்து, அது திரும்பி வரும்போது பிடிக்காமல், உள்ளங்கையால் தட்டி, மீண்டும் சுவருக்கு அனுப்ப வேண்டும். இந்த விளையாட்டில், குறிப்பிட்ட நிமிடங்களை டார்கெட்டாக வைத்துக்கொண்டு, அந்த நிமிடங்களுக்குள் இத்தனை முறை இப்படி அடிப்பது எனப் போட்டி வைத்து விளையாடலாம். நன்றாக விளையாட விளையாட, நிமிடங்களைக் குறைத்துகொண்டே, அடிக்கும் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டே போனால் விறுவிறுப்பாக இருக்கும். (விளையாடும் இடத்தில் டி.வி, கண்ணாடி என உடையும் பொருள்கள் இல்லாமல் பார்த்துக்கறது முக்கியம். அப்புறம், நீங்க சொன்னீங்கன்னு செஞ்சு 40,000 ரூபாய் டி.வி போச்சுன்னு சண்டைக்கு வரக்கூடாது.)

`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் #MyVikatan

* பந்தை, தலை மேலே வெச்சுக்கிட்டு கீழே விழாமல் முன்னாடி நடக்கிறது, பின்பக்கமா நடக்கறது, வலது பக்கத்திலிருந்து இடது பக்கம், இடது பக்கத்திலிருந்து வலது பக்கம் நடக்கிறது, ஒரு காலை தூக்கி நகருவது, குட்டியா கரகாட்டம் ஆடுறது என எத்தனை விதமாக முடியுமோ, அத்தனை சேட்டைகளையும், மன்னிக்க, சாகசங்களையும் செய்துபார்க்கலாம். (பந்து கிடைக்கலைன்னு ரிமோட், பூஜாடி, செல்போனை தலையில் வெச்சுட்டு ஆடி, அது கீழே விழுந்தா கம்பெனி பொறுப்பில்லே சொல்லிட்டோம்.)

* குட்டியான பிளாஸ்டிக் பந்தை மேஜே மேலே வெச்சுட்டு, தண்டவாளம் மாதிரி ரெண்டு பக்கமும் சாக்பீஸால் கோடு போடுங்க. அந்த ரெண்டு கோட்டுக்கும் நடுவில் மெதுவாக ஊதி, இந்த முனையிலிருந்து அந்த முனைக்கு அந்தப் பந்து ரயிலை விடணும். தண்டவாளத்தைவிட்டு தடம் புரண்டுவிடக் கூடாது. (தண்டவாளத்தின் இடைவெளிக்கு சின்ன லிமிட்தான் இருக்கணும். கோடுகள் மேஜையைத் தாண்டி தரையில் போட்டுட்டு இது எப்படி இருக்குன்னு பூனை மீசையை முறுக்கக் கூடாது)

ஓவிய விளையாட்டுகள்:

* பாதி ஓவியத்தை வரைந்துவிட்டு, மீதி ஓவியத்தை கண்களைக் கட்டிக்கொண்டு வரையணும். இதை பேப்பரிலும் செய்யலாம். ஆனால், மடக்கு கரும்பலகையில் சாக்பீஸால் வரைந்தால், திரும்பத் திரும்ப அழிச்சுட்டு முயற்சி செய்யலாம். (பக்கத்துலதான் யாருமில்லையேன்னு, கண்கள் தெரியற மாதிரி கட்டுக்கிட்டு செய்யக் கூடாது. நேர்மையே கண்ணாக இருக்கணும்.)

* வலதுகை பழக்கமுள்ளவர்கள், இடது கையால் ஒரு முழு ஓவியம் வரையும் விளையாட்டை முயன்று பார்க்கலாம். முதலில், சிலமுறை வரைந்து பார்த்துவிட்டு, பிறகு ஒரு குறிப்பிட்ட நேரம் முடிவுசெய்துகொண்டு அதற்குள் வரைந்து காட்ட வேண்டும். (பூமி உருண்டை, ரெண்டு கோடு போட்டு மரம் என ஈஸியா செய்துட்டு 100 மார்க் போட்டுக்கப்பிடாது. சவாலா இறங்கணும்)

draw
draw
pixabay

வார்த்தை விளையாட்டுகள்:

என்னதான் இருந்தாலும், எவ்வளவு நேரம் தனியே விளையாடறது? நண்பர்களோடு விளையாடுவது போல மகிழ்ச்சி இருக்குமா? சரி, அதற்கும் முயன்றுபார்க்கலாம்.

* அந்தாக்ஷரி, பாட்டுக்குப் பாட்டு, விடுகதை போன்றவற்றை அவரவர் பிளாட் வாசலில் இருந்தவாறு சத்தமாகச் சொல்லி விளையாடலாம். விதவிதமான மிமிக்ரி போட்டி வைத்துகொள்ளலாம். குயில், காகம், சிங்கம், புலி என ஒரு உயிரின் குரலையே பலரும் முயன்று, யாருடைய குரல் சரியாகப் பொருந்தியது எனப் போட்டி வைத்துகொள்ளலாம். (வீட்டுக்குள் வயதானவர்கள் இருந்தா, அவங்களுக்குத் தொல்லை ஆகாத மாதிரி விளையாடுங்க. ஓவர் சத்தம் போட்டு நிஜமாவே சிங்கம், புலியை வரவெச்சுடாதீங்க.)

பில்டிங் கேம், ஸ்கிப்பிங், பேப்பரில் சின்னதாக காற்றாடி செய்து வீட்டுக்குள்ளே ஓடி சுற்றவைப்பது எனத் தனியாக விளையாட நிறையவே இருக்கு. அதனால், கொஞ்ச நாளைக்கு இதைச் சரியாகக் கடைபிடிக்க வைங்க. எல்லாம் சரியானதும், சுட்டிகளுக்கு பெரிய விளையாட்டுப் போட்டியே வெச்சுப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு