Published:Updated:

இந்தியாவிலேயே முதல்முறையாக கிண்டி பூங்காவில் Augmented Reality தியேட்டர்!

புலி, சிறுத்தை, டால்பின், ஒட்டகச்சிவிங்கி, டைனோசர் உள்ளிட்ட 10 விலங்குகள் திரையில் வரும். அவற்றுடன் நாமும் த்ரில்லாக உலா வரலாம்.

சென்னையில் வசிக்கும் சுட்டிகளுக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து வருபவர்களுக்கும் சிறந்த பொழுதுபோக்கு இடமாக இருப்பது, கிண்டி சிறுவர் பூங்கா. பள்ளிகளிலிருந்தும் மாணவர்களைக் கல்விச் சுற்றுலா அழைத்து வருவார்கள்.

இயற்கையான சூழ்நிலையில் பல்வேறு விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன போன்றவை இங்கே பராமரிக்கப்படுகின்றன. அவற்றைப் பார்வையிடலாம். குறைந்த செலவில் ஒருநாள் முழுவதும் சுற்றிப் பார்த்து, விளையாடி, கதை பேசி மகிழ ஏற்ற இடம் கிண்டி சிறுவர் பூங்கா. விலங்குகள் மற்றும் பறவைகள் பற்றியும் அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் குழந்தைகளுக்கு உணர்த்தலாம்.

சிறுவர்கள் விளையாடி மகிழ ஊஞ்சல் உட்பட பல விளையாட்டுப் பகுதிகளும் இங்கு உண்டு. தவிர, இங்குள்ள பாம்புப் பண்ணையில் பாம்பை வைத்து நஞ்சு எடுக்கும் நிகழ்ச்சியும் மிகவும் புகழ்பெற்றது.

இப்படிப் பல சிறப்புகள் பெற்ற கிண்டி சிறுவர் பூங்காவுக்குச் சிறப்பு சேர்க்கும் இன்னொரு விஷயமும் வரப்போகிறது. நாட்டிலேயே முதன்முறையாக 40 லட்சம் ரூபாய் செலவில், ‘3D அனிமேஷன்’ திரையரங்கம் திறக்கப்படப்போவதாகச் செய்திகள் சமீபத்தில் வெளியாகின. அதுகுறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள, நேரில் சென்றிருந்தோம்.

டைனோசர்
டைனோசர்

``அது, 3D அனிமேஷன் திரையரங்கம் அல்ல. Augmented reality என்கிற புனை மெய்யாக்கத் தொழில்நுட்பம். இந்தத் தொழில்நுட்பத்தில் திரையரங்கம் அமையப்போகிறது. 3D அனிமேஷன் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். திரைக்குள் இருக்கும் உயிரினமோ, பொருளோ வெளியே வருவது போன்றது. ஆனால், இங்கே வரப்போவது, உங்களையே திரைக்குள் கொண்டுசெல்லும். அதாவது, நீங்கள் திரையரங்கத்துக்கு உள்ளே நுழைந்ததும், அங்கிருக்கும் கேமரா உங்களைப் படம் பிடித்து, திரையில் விலங்குகள் இருக்கும் இடத்தில் உங்களை நிறுத்துவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். நீங்கள் அதைத் தொட்டு பார்க்கலாம். அதன் அசைவுகளுக்கு ஏற்ப நீங்களும் அசைந்து நடக்கலாம்'' என்று விரிவாக விவரிக்கிறார் கிண்டி சிறுவர் பூங்காவின் வார்டன் சி.எச்.பத்மா I.F.S.

``இது இந்தியாவிலேயே முதன்முறையாக கிண்டி சிறுவர் பூங்காவில் அமையப்போகும் திரையரங்கம். கொல்கத்தா மற்றும் மும்பையில் இந்தத் தொழில்நுட்பத்துக்கான சோதனை முயற்சி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. Zoo Authority of TamilNadu (ZAT) நிதியிலிருந்து 40 லட்சம் ரூபாய் இதற்காக ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஒவ்வொரு காட்சியும் 13 நிமிடங்கள் நடைபெறும். ஒருநாளைக்கு 6 காட்சிகள் நடத்தலாம் எனத் திட்டமிட்டுள்ளோம்.

டைனோசர்
டைனோசர்

விடுமுறை நாள்களில் வரும் கூட்டத்தைப் பொறுத்து மாறுபடலாம். இந்தக் காட்சியைப் பார்வையிட சிறுவர்களுக்கு 25 ரூபாயும் பெரியவர்களுக்கு 50 ரூபாயும் கட்டணம். தொழிநுட்பப் பணிகள் முழுமையாக முடிந்து நவம்பர் மாதத்தில் பொதுமக்கள் பார்வையிட தயாராகிவிடும். அரசுப் பூங்கா ஒன்றில், இந்தியாவின் முதல் ஆக்யூமென்ட்ரி ரியாலிட்டி திரையரங்கமாக இது இருக்கும். இது, குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கும் புது அனுபவத்தை அளிக்கும்'' என்று புன்னகைத்தார் பத்மா.

புலி, சிறுத்தை, அனகோண்டா, பெங்குயின், கங்காரு, டால்பின், ஒட்டகச்சிவிங்கி, டைனோசர் உள்ளிட்ட 10 விலங்குகள் இவ்வாறு திரையில் காட்சியாக வரும். அவற்றுடன் நாமும் த்ரில்லாக உலா வரலாம். அவற்றைத் தொட்டுப் பார்க்கலாம். அவற்றுடன் ஆடலாம்... ஓடலாம்... மகிழலாம். குழந்தைகளுக்குப் புதிய உலகத்திற்குள் சென்ற உணர்வு கிடைக்கும்.

த்ரில் பயணத்துக்கு உங்க பிள்ளைகளுடன் நீங்க ரெடியா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு