மற்ற எபிசோடுகள்
Published:Updated:

 கேபிள் கலாட்டா!

``வாயெல்லாம் புண்ணாகுற அளவுக்கு கரும்பு சாப்பிடப் பிடிக்கும்!ரிமோட் ரீட்டாபடங்கள்: எம்.உசேன், தி.ஹரிஹரன், ரா.வருண் பிரசாத்

'கேள்வி கேக்குறது ரொம்ப ஈஸி. ஆனா, பதில் சொல்றதுதான் கஷ்டம்!’

- யாருங்க இந்த டயலாக்கை கண்டுபிடிச்சது?

அவ்வ்வ்! கேள்வி கேக்குறது எவ்ளோ கஷ்டம்னு எனக்குதான் தெரியும். அதனால இந்த முறை, 'நோ கேள்வி. நீங்களே உங்களைப் பத்தின சுவாரஸ்யமான விஷயங்களைச் சொல்லுங்க!’னு கேட்டோம் நம்ம சேனல் ஸ்டார்ஸ்கிட்ட!

ஷூ... லவ்!

 கேபிள் கலாட்டா!

சன் டி.வி 'ஆனந்தம்' சீரியல் தொடங்கி, சில மாதங்களுக்கு முன்பு முடிந்த 'மருதாணி’ வரை முக்கியமான கதாபாத்திரத்தில் அசத்தும் கமலேஷ், ஒரு ஷூ பிரியர்.

''நான் நல்லா பாடுவேன். குறிப்பா, இளையராஜா சாரோட தீவிர விசிறி நான். எப்பவும் அவர் பாடல்களைத்தான் முணுமுணுத்துட்டே இருப்பேன். என் மனைவி சிந்து, ஃபேஷன் டிசைனர். பிரைடல் பிளவுஸ், டிரெஸ் டிசைனிங்னு அவங்க எப்போதும் ரொம்ப பிஸி.

சொல்ல மறந்துட்டேனே... நான் ஒரு ஷூ பிரியன் ரீட்டா. எங்கிட்ட கிட்டத்தட்ட 250 ஜோடி ஷூஸ் இருக்கு. இதுல ஸ்போர்ட்ஸ் ஷூஸ்தான் அதிகம். ஒருமுறை ஷூ வாங்கப் போனேன்னா... ஆறேழு ஷூஸ் வாங்கிடுவேன். அதேபோல மார்க்கெட்ல புதுசா எதாவது ஒரு வாட்ச் வந்துச்சுனா... உடனே வாங்கிடுவேன். அதுவும் கலர்ஃபுல் வாட்ச்னா அவ்வளவு இஷ்டம். எனக்கு கலர்ஸ் ரொம்பப் பிடிக்கும். கலர்ஃபுல்லாதான் டிரெஸ் பண்ணுவேன்!''

டிசைனரோட வீட்டுக்காரர் ஆச்சே!

 கேபிள் கலாட்டா!

கடலூர் பொங்கல்!

ஒரு பக்கம் சன் டி.வி, 'பொன்னூஞ்சல்’ சீரியல், இன்னொரு பக்கம் ரெண்டரை வயசாகும் வாலுப் பொண்ணு ஸ்ரீசாய் பிரியம்வதானு ஓடிட்டு இருக்காங்க வனஜா.

''எனக்குப் பொய் சொன்னா பிடிக்கவே பிடிக்காது ரீட்டா. சட்டுனு கோபம் வந்துரும். ஆனா, அடுத்த ரெண்டாவது நிமிஷமே அப்படி ஒரு சம்பவம் நடந்துச்சானு கேட்குற அளவுக்கு கூல் ஆகி சிரிச்சிடுவேன். அதனால எங்க வீட்ல என்னை எல்லோரும் 'ஸ்மைலி’னுதான் கூப்பிடுவாங்க.

என் ரொம்ப நாள் கனவான, ’ஃப்ரூட் அண்ட் சாட் ஷாப்' ஆசையை கொஞ்ச காலத்துக்கு மூட்டை கட்டி வெச்சுட்டு, இப்போ சென்னை, மாங்காடு பக்கத்துல 'குட்டி’ங்கற பேர்ல ஒரு ஸ்டேஷனரி  ஃபேன்ஸி ஷாப் ஆரம்பிச்சிருக்கேன்.

அப்புறம் இந்த வருஷப் பொங்கலுக்கு, கடலூர்ல இருக்கும் அம்மா வீட்டுக்குப் போற பிளான் இருக்கு. அங்க ரொம்ப பாரம்பர்யமா பொங்கல் கொண்டாடுவாங்க. சினிமாத் துறையில கோடைரக்டரா இருக்குற கணவரோட கால்ஷீட்டுக்காக வெயிட்டிங். சாரோட டைம் கிடைச்சா எங்க பொங்கல் கடலூரில்தான்!''

அம்மா வீடு!

 கேபிள் கலாட்டா!

பொங்கல் கரும்பு... டோஷிலா குறும்பு!

விஸ்காம் படிச்ச டோஷிலா, ஆறு வருஷம் 'ஆர்.ஜே’வா இருந்து, இப்போ புதுயுகம் சேனல்ல ‘வி.ஜே' புரமோஷன் வாங்கியிருக்காங்க. ''புதுயுகம்ல 'செலிப்பிரிட்டி கிச்சன்’, 'ஆறு டாக்டர்கள் ஆயிரத்தெட்டு கேள்விகள்’ நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குறேன். சூழ்நிலை காரணமா, எனக்குக் கிடைச்ச பி.டி.எஸ் வாய்ப்பைத் தவறவிட்டுட்டேன். எங்க சேனல்ல, 'டாக்டர்ஸ் ஷோ நீங்க பண்ணணும்’னு சொன்னதும் சந்தோஷமா இருந்தது. ஹெல்த் பத்தி நெட்ல தேடிட்டே இருப்பேன். லைவ்ல பேசிட்டு இருக்கும்போது லைன் கட் ஆகிட்டா, டைரக்டர் வந்து சொல்ற அளவுக்கு வெச்சுக்காம, நானே கேள்வி கேட்ருவேன்.

அப்புறம், எனக்கு டிராவல் பண்றதுனா ரொம்ப பிடிக்கும். அஞ்சு நிமிஷத்துல போற இடத்துக்கு, வேணும்னே ரூட்டை மாத்தி மாத்தி ஒரு மணி நேரம் சுத்திப் போவேன். த்ரில், ஜாலிக்காகவே வீக் எண்ட்ல டிராவலிங் கிளம்பிடுவேன். வாயெல்லாம் புண்ணாகுற அளவுக்கு கரும்பு சாப்பிடப் பிடிக்கும். அதுக்காகவே ஒவ்வொரு வருஷமும் பொங்கலுக்கு வெயிட் பண்ணுவேன்!''

டோஷிலாவுக்கு ஒரு கட்டு கரும்பு பார்சல்..!

வாசகிகள் விமர்சனம்

 ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 150

ஒற்றுமையின் ரகசியம்!

''ப்ரூக் பாண்ட் த்ரீ ரோஸஸ் டீ தூளுக்கான விளம்பரம் அது. கணவன்  மனைவி இருவரும் வீட்டுச் சாவியை மறந்துவிட்டு, பேக்கில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இதைப் பார்த்த பக்கத்து வீட்டு முஸ்லிம் பெண் தன் வீட்டுக்கு வந்து டீ அருந்தும்படி கூறுகிறாள்.

முதலில் மறுத்த அவர்களை, அவள் போட்ட டீயின் நறுமணம் சுண்டி இழுக்கிறது; அதிக நேரம் வெளியே நின்றால், மனைவிக்கு மூட்டு வலிக்கும் என்று சாக்கு சொல்லி, உள்ளே சென்று டீயை பருகுகின்றனர். அதோடு அவர்கள் வீட்டு டீ போலவே இருப்பதாக கூறி, இன்னொரு கப் டீ கேட்க, அவளும் தருவதாக அமைந்திருக்கிறது

அந்த விளம்பரம். இது, மனித நேயத்தையும், மத ஒற்றுமையின் ரகசியத்தையும் போற்றுவது போல அமைந்திருப்பது சிறப்பு'' என்று பாராட்டுகிறார் சென்னை, வேளச்சேரியில் இருந்து பி.ஆனந்தி.

உழைப்பின் அருமை!

''மெகா டி.வியில், 'மனிதனின் முன்னேற்றத்துக்கு பெரிதும் காரணமாக அமைவது அயராத உழைப்பா... அமைகின்ற வாய்ப்பா?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் ஒளிபரப்பப்பட்டது. இறுதியில் அயராத உழைப்புதான் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. நடுவரும் பேச்சாளர்களும் உழைப்பின் அருமையை சுவைபட கூறினார்கள். இதுபோன்ற பயனுள்ள நிகழ்ச்சிகளை பிற சேனல்களும் ஒளிபரப்ப வேண்டும்'' என்று வேண்டுகோள் வைக்கிறார் வேலூரில் இருந்து வி.பத்மாவதி.