
சந்தோஷ் நாராயணன்
''இன்னைக்கு ரெண்டு வாழ்க்கை வாழ்றாங்க. ஒன்று, நிஜ உலகில்; மற்றது ஃபேஸ்புக்கில். இதற்கான தீர்வு என்ன? இதுதான் உங்களுக்குத் தந்த புராஜெக்ட். அப்படித்தானே?' என்றான் மார்க்.
தலையை அசைத்த விவேகானந்த், ''இந்தியத் தத்துவங்களின்படி ஒன்று ஸ்தூல சரீரம்... அதாவது நிஜம். மற்றது சூட்சம சரீரம்... அதாவது வெர்ச்சுவலாக ஃபேஸ்புக்கில். இந்த எல்லைகளை அழித்து ஒரே வாழ்க்கையைத் தருவதுதான் என் ஆய்வின் முடிவு' என்றான்.
'எப்படி?’ என்பதுபோல பார்த்தான் மார்க்.

''புரோகிராமிங்கில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறேன். முதலில் நீங்களே லாக் இன் பண்ணுங்கள்'' என்றபடி லேப்டாப்பை நீட்டினான் விவேகானந்த்.
மார்க், லாக்இன் பண்ணி ஃபேஸ்புக்கில் நுழைந்தான். அவன் உடல் இப்போது வெளியில் இல்லை என்பதை அறிந்து ஒரு கணம் திகைத்தான். புரொஃபைல் பிக்சருக்குள் இருந்தபடி விவேகானந்தைப் பார்த்தான்.
விவேகானந்த் லேப்டாப்பை நோக்கிக் குனிந்தான். 'நீங்கள் லாக் இன் பண்ணும்போது உங்கள் ஸ்தூல சரீரத்துடன் உள்ளே நுழைந்துவிடுவீர்கள். அதாவது நிஜ உடலுடன்.''
''எப்படி வெளியே வருவது... இங்கே லாக் அவுட் ஆப்ஷனே காணாமே?'' என்றான் மார்க் உள்ளிருந்தபடி.
''லாக் அவுட் ஆப்ஷனை அழித்துவிட்டேன். இனி நீங்கள் வெளியே வரவே முடியாது. இந்தியத் தத்துவத்தில் இதை 'விதேக முக்தி’ எனச் சொல்வார்கள்'' என்றபடி லேப்டாப்பை மூடினான்!
ஓர் உலக சினிமா பட்டியல்
நண்பன் ஒருவன் உலக சினிமாக்கள் பற்றி அறியும் ஆவலுடன், 'உலக சினிமா பற்றிய குறிப்புகள் சில தர முடியுமா?’ என என்னிடம் கேட்டான். நானும் ஏதோ என்னால் முடிந்த ஒரு பட்டியலிட்டு அவனுக்குத் தந்தேன். இந்தப் பட்டியலில் இருந்த ஐந்தாவது படம் மிக முக்கியமான ஒன்று.
1. Who told i am a culprit (Italy/ Dir: Abramo Rafaello /1997) - இது மிகுந்த கவனம் ஈர்த்த இத்தாலி இயக்குநரான ஆப்ரமோவின் சிறந்த படங்களில் ஒன்று. சந்தர்ப்பவசத்தால் குற்றவாளியாக்கப்படும் ராஃபேல் என்கிற இளைஞனின் சுயகுரலில் விரியும் சினிமா, குற்றங்களின் உளவியலையும் சமூகப் பின்னணியையும் பேசுகிறது.

2. Under the coco trees (Venezuela/ Dir: Vashonne Carlose/ 2001) - வெனிசுலாவின் முக்கியப் படைப்பாளியான வாசனோ கார்லோஸின் விருதுபெற்ற சினிமாவான இது, கோகோ மரத்தோட்டங்களில் வேலைசெய்யும் தொழிலாளிகளின் வாழ்க்கை அவலத்தைச் சொல்கிறது. அழகான ஒரு காதல் கதையைப் பின்னணியில் இணைத்தும் இழைத்தும் நம்மால் என்றும் மறக்க முடியாத சினிமாவாக மனதில் நிறுத்துகிறார் வாசனோ.
3. Yamete (Stop it) (Japanese/ Dir:Tamaki Fukuyo/2006) ஜப்பானியப் பெண் இயக்குநரான தமாகி ஃபுகுயோவின் திரைப்படம் இது. காலங்காலமாக நிலவிவரும் 'யூஜோ’ என அழைக்கப்படும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை இன்றும் நிழல் உலகில் நடந்துவருவதைப் பற்றி அழுத்தமாகப் பதிவுசெய்த சினிமா 'யாமெடெ’. 'யாமெடே’ என்றால் 'நிறுத்துங்கள்’ எனப் பொருள்!
4.Chand salet hast? (Iran/ Dir:Ardeshir/1999) ஈரானின் ஒரு கிராமத்தில் ஃபார்சான் என்கிற ஒரு முதியவருக்கும் அங்கே வைத்தியம் பார்க்கவரும் ஓர் இளம் மருத்துவருக்கும் இடையேயான உறவைச் சொல்லும் சினிமா. 'சாந்த் சலே ஹாஸ்த்?’ என்றால் ஆங்கிலத்தில் 'பிஷீஷ் ஷீறீபீ ணீக்ஷீமீ ஹ்ஷீu?’ என அர்த்தம். முதியவரின் வாழ்க்கையையும் ஈரானிய அரசியல் வரலாற்றையும் பின்னிச்செல்லும் கதை, இளம் மருத்துவனின் மீது ஒரு பெரிய கேள்வியாகக் கவிகிறது!
5. All lies lead to the truth (korea/ Dir: Kyubok ‘‘http://www.babynamescountry.com/meanings/Kyubok.html’’ t’’_blank’’) க்யூபோக் அதிக அளவில் அறியப்படாத இயக்குநர். ஒரு விஷயத்தைப் பற்றி எதுவும் தெரியாவிட்டாலும், அதைப் பொய்களின் வழியாகக் கட்டமைக்க முனையும் ஒருவன், அந்தப் பொய்களின் வழியாக உண்மையை எப்படி நெருங்குகிறான் என்பதை தத்துவார்த்தமாகவும் நகைச்சுவையாகவும் அணுகியிருக்கிறார் க்யூபோக். இந்தச் சினிமாவில் வரும் முக்கியக்

கதாபாத்திரம் ஒன்று, சினிமா மீது ஆர்வம்கொண்டவன்; ஆனால் உலக சினிமாக்களைப் பார்க்காதவன். ஒருமுறை தன் நண்பன் உலக சினிமாக்கள் பற்றி கேட்கும்போது, தனக்கு உலக சினிமா பற்றி எதுவும் தெரியாது எனச் சொல்லாமல், அவனாகவே கற்பனையாக சில சினிமா பெயர்களை உருவாக்கி போலியாக ஒரு பட்டியலிடும் இடம் படத்தில் மிக முக்கியமான தவறவிடக் கூடாத காட்சி! :)
'செய்கூலி உங்களுக்கு இல்லவே இல்லை’ என்றது விளம்பரம்.
''எப்படியும் 'சேதாரம்’ எங்களுக்குத்தானே?'' எனச் சிரித்தான் கார்ப்பரேட் சித்தன்.
ஜிம்மி நெல்சன். இங்கிலாந்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர். 'அவர்கள் அழியும் முன்’ (before they pass away) எனும் தலைப்பில் உலகம் முழுக்க அழியும் தருவாயில் இருக்கும் பழங்குடிகளை, புகைப்படங்களாகப் பதிவுசெய்வதில் ஆர்வம் காட்டுகிறார்.

'ட்ரைபல் போட்டோகிராபி’ என்பதில் பல கலைஞர்கள் ஆர்வம் காட்டினாலும், ஜிம்மி நெல்சனின் புகைப்படங்களில் பழங்குடிகள் கிட்டத்தட்ட விளம்பர மாடல்கள்போல் போஸ் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் புகைப்படங்களில் ஜிம்மி, பழங்குடிகளை நிலங்களின் பின்னணியுடன் கம்போஸ் செய்திருக்கும் விதம், ஒளி மற்றும் வண்ணங்களைப் பயன்படுத்தியிருக்கும் நுட்பம், புகைப்பட ரசிகர்களால் ஒரு பக்கம் கொண்டாடப்பட, இன்னொரு பக்கம் விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கிறது.

'சர்வைவல் இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பைச்சேர்ந்த மனிதவியல் அறிஞரான ஸ்டீபன் கோரி, ஜிம்மின் புகைப்படங்களை 'பழைமையின் மீதான தவறான பார்வை’ என விமர்சிக்கிறார். அதற்கு அவர் உதாரணமாக ஈக்வடார் பழங்குடிகளான 'வாரோனி இந்தியன்’ குழுவை ஜிம்மி புகைப்படம் எடுத்திருக்கும் விதத்தைச் சுட்டிக்காட்டுகிறார். 'வாரோனி இந்தியன் பழங்குடிகள், இன்று ஆடைகள் உடுக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் ஜிம்மி, அவர்களைக் கிட்டத்தட்ட வலிந்து நிர்வாணமாகவே படம் பிடித்திருக்கிறார்’ என்கிறார் கோரி. இந்தோனேஷிய பாப்புவா பழங்குடிகள் தலைவரான பென்னி வெண்டாவும் இதுபோலவே குற்றம்சாட்டுகிறார்.

ஜிம்மி நெல்சன் தங்கள் பழங்குடிகளை 'ஹெட் ஹன்ட்டர்ஸ்’ (தலைகளை வேட்டையாடுபவர்கள்) என, தன் புகைப்படக் குறிப்புகளில் குறிப்பிடுவதையும் அவர் கண்டிக்கிறார். 'உண்மையில் ஹெட் ஹன்ட்டர்ஸ் என்பது, பழங்குடி மக்கள் அல்லர்; பழங்குடிகளை அழிக்கும் இந்தோனேஷிய ராணுவம். அது மட்டும் அல்ல... ஜிம்மி குறிப்பிடுவதுபோல நாங்கள் அழிந்துகொண்டிருப்பவர்கள் அல்ல; அழிக்கப்பட்டுக்கொண்டிருப்பவர்கள். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு’ என்கிறார்.
'என் அழகியல் பார்வை, பழங்குடிகள் மீதான அன்பு சார்ந்து மட்டுமே இதைப் பதிவுசெய்திருக்கிறேன்’ என்று பதில் சொல்கிறார் ஜிம்மி நெல்சன். ஒரு பழங்குடி குட்டிப்பாப்பாவைத் தோளில் வைத்துக்கொண்டு அவர் கேமராவைக் கையாள்வதைப் பார்த்தால் அதுவும் உண்மைதான் என்றே தோன்றுகிறது!