மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மந்திரி தந்திரி ! - 2

மந்திரி தந்திரி
News
மந்திரி தந்திரி ( விகடன் டீம் )

கேபினெட் கேமராபுதியது அதிருதுvவிகடன் டீம், ஓவியங்கள்: ஹாசிப் கான், கண்ணா

மந்திரி தந்திரி ! -  2
மந்திரி தந்திரி ! -  2

சைக்கிள் ஸ்டாண்டைப் போட்டுவிட்டு போஸ்டரில் விறுவிறு எனப் பசையைத் தடவுகிறார். சுவரில் பரபரவென கச்சிதமாக போஸ்டர் ஒட்டிவிட்டு, அடுத்த சுவரைத் தேடி வண்டியை மிதிக்கிறார். 80-களில் சினிமா போஸ்டர் ஒட்டிவந்த ராஜேந்திரன், ராஜேந்திர பாலாஜியான பிறகு சினிமா துறையையே நிர்வகிக்கும் அமைச்சரானார். அரசியலில் யாரும் உச்சாணிக்குப் போகலாம் என்பதற்கு நடமாடும் நிஜம்... அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி! 

அருப்புக்கோட்டைக்கு அருகே உள்ள குருந்தமடம்தான் ராஜேந்திர பாலாஜியின் பூர்வீகம். தச்சு தொழிலாளி தவசிலிங்கம், தன் மகன் ராஜேந்திரன் மற்றும் மூன்று மகள்களுடன் பிழைப்பு தேடி திருத்தங்கலுக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு வருகிறார். திருத்தங்கல் எஸ்.ஆர்.என் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு, போஸ்டர் ஒட்டும் வேலைக்குப் போகிறார் ராஜேந்திரன். அவருடைய சகோதரிகள் தீப்பெட்டித் தொழிற்சாலையில் காடி அடுக்கும் வேலையில் சேர்ந்து, குடும்பத்தின் பாரத்தைக் குறைத்தார்கள். குறுக்குப் பாதை ஏரியாவில் இருந்த 'தங்கவேல் சைக்கிள் கடை’யில் வாடகை சைக்கிளை எடுத்துக்கொண்டு பெயின்டர் வேலையையும் கூடுதலாகச் செய்தார் ராஜேந்திரன்.

சிறுவயதில் இருந்து எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான ராஜேந்திரனுக்கு, அ.தி.மு.க-வின் மீது பாசம் வந்ததில் ஆச்சர்யம் இல்லை. அ.தி.மு.க-வில் ஐக்கியமான பிறகு, எல்லா பொதுக்கூட்டங்களிலும் தவறாமல் தலைகாட்டினார். கட்சி போஸ்டர்கள் ஒட்டும் பணியும் கிடைக்க, அதீத உற்சாகத்துடன் கட்சி போஸ்டர் களை சுவர்கள்தோறும் மின்னச் செய்தார். பிறகு, அ.தி.மு.க பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் தொடர்பான அறிவிப்பை ஆட்டோவில் சென்று ஊர் ஊராக அறிவிக்கும் 'அறிவிப்பாளர்’ அவதாரமெடுத்தார். ஆட்டோவில் முதல்முறையாக 'மைக்’ பிடித்த பிறகு, அரசியல் ஆசை மனதில் தொற்றிக் கொண்டது.

மந்திரி தந்திரி ! -  2

எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் திருத்தங்கல், சிவகாசி ஊர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் அ.தி.மு.க அமைச்சர்களை, கட்சியினர் மேளதாளத்துடன்  வரவேற்பார்கள். அந்த வரவேற்பு வைபவத்தில் வேட்டியை மடித்துக் கட்டி முன்னால் 'குத்தாட்டம்’ போட்டபடியே வருவார் ராஜேந்திரன். அப்போது சிவகாசி ஏரியா அ.தி.மு.க-வில் வி.ஐ.பி அந்தஸ்துடன் வலம் வந்தவர் பாலகிருஷ்ணன். சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ-வாக பாலகிருஷ்ணன் இருந்தபோது, அவரிடம் அரசியல் அரிச்சுவடியைக் கற்க ஆரம்பித்தார் ராஜேந்திரன். லோக்கல் அரசியலில் இன்னொரு பிரபலமாக இருந்தவர் பாலகங்காதரன். இந்த இருவரிடமும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து நெருக்கத்தை வளர்த்துகொண்டார். பாலகிருஷ்ணனுக்கு பணிவிடைகள் செய்வது, வீட்டுக்கு காய்கறிகள் வாங்கிப் போவது... என எடுபிடியாக இருந்து பிறகு அவருக்கே நெருக்கமானார். பாலகிருஷ்ணன் விருதுநகர் மாவட்டச் செயலாளரானது ராஜேந்திரனுக்கு அரசியலில் ஏறுமுகத்தைக் கொடுத்தது. 1990-ம் ஆண்டு திருத்தங்கல் அ.தி.மு.க நகரச் செயலாளர் ஆனார் ராஜேந்திரன். அதன்பிறகு அரசியலில் அவருக்கு ஏறுமுகம்தான். உள்ளாட்சி தேர்தலில் ஜெயித்து திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்ஆனார். 1996-ம் ஆண்டு அதே பஞ்சாயத்தின் துணைத் தலைவர். திருத்தங்கல், நகராட்சியாக மாறியபோது நகராட்சி துணைத் தலைவராகப் பதவி வகித்தார்.

படிப்படியாக அரசியல் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கியபோது 'பட்டாசு’ கை கொடுத்தது. பட்டாசு நகரமான சிவகாசியில் புதிது புதிதாக பட்டாசு ஆலைகள் உருவாகிக்கொண்டே இருக்க, அது திருத்தங்கல் வரை கடை பரப்பியது. பட்டாசு ஆலைகள் புதிதாகத் தொடங்க, உள்ளாட்சி அமைப்புகளிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். உள்ளாட்சிப் பிரதிநிதியாக இருந்ததால் பட்டாசு ஆலை அதிபர்களை நேரடியாகவே சந்தித்து தடையில்லா சான்றிதழ் பெற்றுத்தருவது முதல் மற்ற பல வேலைகளையும் செய்து தன்னை வளப்படுத்திக்கொண்டார் ராஜேந்திரன்.

சிவகாசி யூனியன் சேர்மனாக இருந்த ராதாகிருஷ்ணன் மாவட்டச் செயலாளரானதும் அவருடன் ஒட்டிக்கொண்டார் ராஜேந்திரன். தன் மனம் அறிந்து குணம் அறிந்து செயல்பட்ட ராஜேந்திரனை, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளராக்கினார் ராதாகிருஷ்ணன். மாவட்டச் செயலாளராக முன் ஸீட்டில் ராதாகிருஷ்ணன் இருக்க, பின் ஸீட்டில் அமர்ந்து வந்தவர் ராஜேந்திரன். ஆனால் இன்றோ, நிலைமை தலைகீழ். (ஆனாலும் அந்தப் பழைய நன்றிக் கடனுக்குத்தான், மாவட்டச் செயலாளர் பதவியை இழந்து நின்ற ராதாகிருஷ்ணனுக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸீட் வாங்கிக் கொடுத்து எம்.பி ஆக்கினார் ராஜேந்திரன்).

மந்திரி தந்திரி ! -  2

குபீர் வளர்ச்சி நியூமராலஜி!

அரசியலில் அடுத்தகட்ட குபீர் வளர்ச்சிக்கு ராஜேந்திரன் கையில் எடுத்த ஆயுதம்... நியூமராலஜி. திருத்தங்கல் பெருமாள் கோயில், நியூமராலஜிக்கு மிகவும் பிரசித்தம். 'உங்கள் பெயரில் 'பாலாஜி’யைச் சேர்த்துக் கொண்டால் 'சைரன்’ காரில் பறக்கலாம்’ என ஜோதிடர்கள் சொல்ல, ராஜேந்திரன், ராஜேந்திர பாலாஜியாக மாறினார். ஆச்சர்யம்... பெயர் மாற்றின நேரமோ என்னமோ கார்டனின் கடைக்கண் பார்வை பட்டது. முதல்முறையாக சட்டசபைத் தேர்தலில் சிவகாசி தொகுதிக்கு ஸீட் கிடைத்து, எம்.எல்.ஏ ஆனார். அடுத்த இரண்டே மாதங்களில் மாவட்டச் செயலாளர், அதற்கு அடுத்த இரண்டாவது மாதத்தில் அமைச்சர் என மேலே... உயரே... உச்சியிலே அமர்த்தி அழகு பார்க்கப்பட்டார் ராஜேந்திர பாலாஜி. அநேகமாக, எம்.எல்.ஏ., அமைச்சர், மாவட்டச் செயலாளர் என முக்கியமான மூன்று பொறுப்புகளும் ஒரே ஆண்டில் கைக்குக் கிட்டியது இவருக்கு மட்டுமாகத்தான் இருக்கும். ஆனால், இதை எப்படிச் சாதித்தார்?

அ.தி.மு.க-வில் குபீர் வளர்ச்சிக்கு உதவும் சசிகலா சேனல்தான் இவருக்கும் கை கொடுத்தது. இப்போது அமைச்சராக இருக்கும் ஆர்.பி.உதயகுமார் மூலம்தான் சசிகலா வட்டத்துக்குள் நுழைந்தார். டாக்டர் வெங்கடேஷ், மகாதேவன், ராவணன் ஆகியோரின் அறிமுகம் கிடைக்க... அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். தீபாவளி தவறாமல் அவர்களின் வீட்டுக்கே பட்டாசுகள் கொண்டுபோய்க் கொடுத்து நட்பை உருவாக்கிக்கொண்டார். இது சிவகாசியின் 'மக்கள் பிரதிதிநி’யாக ராஜேந்திர பாலாஜியை உயர்த்த, அடுத்து மந்திரி பதவிக்காக மன்னார்குடி பிரமுகர் ஒருவரை முதல் முறையாகச் சந்திக்கச் சென்றபோதே வெயிட்டான தங்கச் சங்கிலியும் கையுமாகச் சென்று அவரைத் திக்குமுக்காட வைத்தார். மந்திரி சபையில் இடம் கிடைத்தது.

விவகாரம் ஆரம்பம்!

சிவகாசி குறுக்குப்பாதை வார மாட்டுச்சந்தையில் நடந்த ஒரு விவகாரத்தில்தான் ராஜேந்திர பாலாஜியின் பெயர் முதன்முதலில் அடிபட்டது.

அமைச்சரான பிறகு எழுந்த சொத்துக்குவிப்பு புகார், நீதிமன்றப் படியேறியதோடு கருணாநிதியே அறிக்கை விடும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தது. 'சட்டசபைத் தேர்தலில் ராஜேந்திர பாலாஜி போட்டியிட்டபோது வேட்புமனுவில்

50 லட்சம் ரூபாய் சொத்தும், 1.39 லட்சம் ரூபாய் கடனும் இருப்பதாகச் சொல்லியிருந்தார். ஆனால், அமைச்சரான பிறகு ராஜபாளையம் தேவதானத்தில் பல ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கியிருக்கிறார். விற்பனைப் பத்திரத்தின்படி, சொத்தின் மதிப்பு, பல லட்சம் ரூபாய். சந்தை மதிப்பு பல கோடி ரூபாய்; ராஜேந்திர பாலாஜிக்கு இந்தச் சொத்து வாங்க ஏது பணம்?’ எனப் புகார் கிளப்பிய மதுரை ஆனையூரைச் சேர்ந்த ராஜா, உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். புகாரில் முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசுக்கு வலியுறுத்தியது உயர் நீதிமன்றம். ஆனால், பிறகு அந்த வழக்கு தள்ளுபடி ஆனது.

கிரிமினல் பின்னணி!

மந்திரி தந்திரி ! -  2

ராஜேந்திர பாலாஜி மீது அவரது சொந்த கட்சிக்காரர்கள் வைக்கும் குற்றச்சாட்டு, அவர் 'வில்லங்கமான’ சில ஆட்களுக்கு ஆதரவாக இருக்கிறார் என்பதுதான்.

கடந்த தி.மு.க ஆட்சியில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ம.தி.மு.க பிரமுகர் முருகன் படுகொலை செய்யப்பட்டார். அதில் தி.மு.க-வைச் சேர்ந்த ஆத்திப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் யோக வாசுதேவனுக்குத் தொடர்பு இருப்பதாக சர்ச்சை கிளம்பியது. அந்த வழக்கு முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் ஜெயலலிதாவே அந்த விவகாரத்தை சட்டசபையில் தொட்டார். 'முருகன் கொலை வழக்கில் குற்றவாளிகளை இந்த அரசு கண்டிப்பாகக் கண்டுபிடித்துத் தண்டிக்கும்’ என்றார். அதோடு வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸுக்கு மாற்றினார். இப்படிப்பட்ட சூழலில்தான் யோக வாசுதேவன் தி.மு.க-வில் இருந்து விலகி, ராஜேந்திர பாலாஜி மூலம் அ.தி.மு.க-வில் ஐக்கியமானார். அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ வைகைச்செல்வன் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும், ராஜேந்திர பாலாஜி அலட்டிக்கொள்ளவில்லை. இந்த விஷயத்தை கட்சிப் புள்ளிகள் புகாராக தலைமைக்கு அனுப்பியும் ராஜேந்திர பாலாஜியை அசைக்க முடியவில்லை.

துறையில் சாதித்தது என்ன?

செய்தி விளம்பரம், எழுதுபொருள், அச்சு மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை என ஒன்றுக்கு மேற்பட்ட துறைகள் ஒருவருக்கு வழங்கப்பட்டாலே அவருக்கு கார்டனில் பாசம் அதிகம் என்பது வெட்டவெளிச்சம். ஆனால், அப்படி அள்ளி வழங்கப்பட்ட அதிகாரத்தால் விளைந்த நன்மை எதுவும் இல்லை. தனக்கு அளிக்கப்பட்ட துறைகளிலும் ராஜேந்திர பாலாஜி பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, லேப்டாப்கள்... போன்றவற்றை வழங்கும் பொறுப்பு, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை வசம்தான். அந்தப் பணி மட்டுமே செவ்வனே செய்யப்படுகின்றன.

விருது லேது!

சிறந்த படங்கள், சிறந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள்... என தமிழ்த் திரைப்படங்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் தமிழக அரசின் சார்பில் விருதுகளை செய்தித் துறைதான் வழங்குகிறது. ஆனால், 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான ஆறு ஆண்டுகளுக்கான விருதுகளை வழங்கக்கூட நேரம் இல்லாமல் கோயில் கோயிலாக ஓடிக்கொண்டிருக்கிறார் ராஜேந்திர பாலாஜி.

சினிமா விருதுகள் மட்டும் அல்ல, திரைப்படக் கல்லூரி மாணவர்கள் விருது, திரைப்படங்களுக்கு அரசு மானியம், சின்னத்திரை விருது... என எதையும் செய்யாமல் கும்பகர்ணத் தூக்கம் போடுகிறார். 2009, 2010-ம் ஆண்டுகளுக்கான சினிமா விருதுகளையும், 2008, 2009, 2010-ம் ஆண்டுகளுக்கான அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கான விருதுகளையும் தேர்வுசெய்வதற்காக முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் தலைமையில் தேர்வுக் குழு ஒன்று, முந்தைய தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்டது. விருதுக்கு உரியவர்களின் பட்டியலையும் அந்தக் குழு, அரசுக்கு சமர்பித்துவிட்டது. ஆனாலும் அவற்றை அறிவிக்காமல் வைத்திருக்கிறார் ராஜேந்திர பாலாஜி. குறைந்த முதலீட்டில் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தரமான திரைப்படங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏழு லட்சம் ரூபாய் மானியமாக அரசு வழங்கிவருகிறது. இதுவும் 2007-ம் ஆண்டில் இருந்து வழங்கப்படவில்லை. சின்னத்திரையில் வெளிவரும் தொடர்களுக்கும் நடிகர்களுக்கும் 2009-ம் ஆண்டில் இருந்து விருதுகள் வழங்கவில்லை.

இவையெல்லாம் போகட்டும்.

அ.தி.மு.க சார்பில் வென்ற ராஜேந்திர பாலாஜிக்கு, அண்ணா விருதும் எம்.ஜி.ஆர் விருதும் மறந்தேபோய்விட்டது. அரசின் சினிமா விருதுகளுடன் அறிஞர் அண்ணா, கலைவாணர், ராஜாசாண்டோ, எம்.ஜி.ஆர்., கவிஞர் கண்ணதாசன், சிவாஜி கணேசன், தியாகராஜ பாகவதர் பெயர்களில் வழங்கப்படும் விருதுகளையும் கண்டுகொள்ளாமல் பரணில் தூக்கிப் போட்டுவிட்டார்!

அதைக் காட்டிலும் கொடுமையாக இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை முடிந்தவரை சொதப்பலாக நடத்தினார்கள். இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்கு அரசு 10 கோடி ரூபாய் கொடுத்தது. அதனால் அழைப்பிதழ் தொடங்கி விளம்பரம் வரையில் ஜெயலலிதா புகழ்தான் பிரதானமாக இருந்தது. குடியரசுத் தலைவர் கையால் ஜெயலலிதாவுக்கே விருதும் கொடுத்துக் கொண்டாடினார்கள். ரஜினி, கமல் போன்றவர்களுக்கு உரிய மரியாதை இல்லை, முக்கியமானவர்களுக்கு அழைப்பிதழ்கள் இல்லை என ஏக களேபரங்கள். கலை விழா நிகழ்ச்சிகளை கவர்செய்ய ஜெயா டி.வி-க்கு மட்டுமே அனுமதி. அதை தீபாவளி அன்று ஒளிபரப்பி டி.ஆர்.பி அள்ளிக்கொள்ள, அரசின் நிதி உதவி மறைமுகமாக ஜெயா டி.வி-யின் வளர்ச்சி நிதியாக மாறியது!

விளம்பரத்தில் சாதனை!

மந்திரி தந்திரி ! -  2

விளம்பரத்தால், திரைப்படங்களை ஓட்டலாம்; அரசாங்கத்தை ஓட்ட முடியுமா? 'முடியும்’ என நம்புகிறது அ.தி.மு.க அரசு. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் ஓராண்டு சாதனையைக் கொண்டாடினார்கள். 'நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை’ என்ற பெயரில் நடந்த கொண்டாட்டத்தில் விளம்பரத்துக்குக் கொட்டப்பட்ட அரசுப் பணம் 29 கோடியைத் தாண்டியது. இதில் செய்தித் துறை சார்பில் மட்டும் வழங்கப்பட்ட விளம்பரத் தொகை 18 கோடியே 18 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய். இது ஓர் ஆண்டுக்கு மட்டுமே. இப்படி மூன்று ஆண்டுகள் வரை கொண்டாடிய பணம் இதைவிட அதிகம். நிதி நெருக்கடியில் அரசு தள்ளாடியபோதும், அ.தி.மு.க அரசின் விளம்பரத்துக்கு மட்டும் பணம் பஞ்சம் இல்லாமல் பாய்ந்தது. அந்த விளம்பரங்களுக்கான கமிஷன் கைமாறிய வகையிலேயே சிலர் கொழுத்த கடாக்களாக மாறினர்.

அம்மா புகழ் புத்தகங்கள்!

அ.தி.மு.க வெளியிடவேண்டிய புத்தகங்களை எல்லாம் செய்தித் துறை வெளியிட்டு பணத்தை விரயமாக்கிய கொடுமையும் அரங்கேறியது. 100 நாள் சாதனை மலர், ஓராண்டு சாதனை, ஈராண்டு சாதனை என ஆண்டுக்கு ஒரு மலரை வெளியிட்டனர். பல்வேறு இடங்களில் ஜெயலலிதா பேசிய பேச்சுக்களை எல்லாம் பளபள பேப்பரில் புத்தகங்களாகப் போட்டார்கள். 'அம்மாவின் எழுச்சிமிகு உரைகள்’, 'அம்மாவின் அமுதமொழிகள்’, 'அம்மாவின் முத்தான கதைகள்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் ஜெயலலிதாவின் புகழ் பாடின. சட்டசபை 110 விதியின் கீழ் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகளை எல்லாம் சேர்த்து புத்தகம் போடப்பட்டிருக்கின்றன. இந்த அறிவிப்புகளில், பலவும் 'பஞ்சர்’ ஆகி இருக்கின்றன. நிறைவேறாத திட்டங்களுக்கு ஒரு புத்தகம் போட்டு அதிலும் கரன்சியை வீணடித்திருக்கிறார்கள்.

குடியரசு நாள் விழாவில், புது டெல்லியில் ஒவ்வொரு மாநிலத்தின் சார்பிலும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும். கடந்த ஆண்டு அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி, முதன்முறையாக இரண்டாம் பரிசு பெற்றது. ஆனால், இந்த முறை அலங்கார ஊர்திக்கே அனுமதி இல்லை. ஆனால், அதைக் கவனிக்க நம் அமைச்சருக்கு எங்கே நேரம் இருக்கிறது? அவர் தங்கத் தலைவிக்காக தங்கத்தேர் இழுப்பதுதான் முக்கியம் என ஊர் ஊராகச் சென்று வடம் பிடித்துக்கொண்டிருக்கிறார்!

மந்திரி தந்திரி ! -  2

பான் கார்டு ரகசியம்!

அமைச்சராவதற்கு முன்பு நிலங்களை வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் தொழில் பார்த்த ராஜேந்திர பாலாஜிக்கு, பான் கார்டுகூட இல்லை. தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் பான் கார்டு இல்லை என வேட்புமனுவில் தெரிவித்திருக் கிறார் ராஜேந்திர பாலாஜி. கோடிகள் புரளும் ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர், எப்படி பான் கார்டு இல்லாமல் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்? அமைச்சரான பிறகு சிக்கல் ஒன்று எழுந்தபோதுதான் பான் கார்டு வாங்கினார்!

'அம்மா’ புகழ் டீம்!  

செய்தித் துறையின் செயலாளர் மூ.இராசாராம் எதைச் சொன்னாலும் தவறாமல் தலை

மந்திரி தந்திரி ! -  2

ஆட்டுகிறார் ராஜேந்திர பாலாஜி. துறைரீதியாக

இராசாராம் சொல்லும் விஷயம்தான் நடக்கும். மொத்தத்தில் டிபார்ட்மென்ட்டில் ராஜேந்திர பாலாஜி டம்மியாகத்தான் வலம்வருகிறாராம். அதிலும் தன் செயலாளர் இராசாராமை 'அண்ணே... அண்ணே...’ என சொல்லி உருகுவாராம் அமைச்சர். எத்தனையோ ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டபோதும் இராசாராமை, அந்தத் துறையில் இருந்து அசைக்க முடியவில்லை. இன்னொரு பக்கம் செய்தித் துறை கூடுதல் இயக்குநராகப் பதவி வகிக்கும் எழில் என்கிற எழிலழகனின் வளர்ச்சியைப் பார்த்து, வாயடைத்துப்போயிருக்கிறார்கள் துறை அதிகாரிகள். ஓய்வுக்குப் பிறகும் எழில் இப்போது பணி நீட்டிப்பில் தொடர்கிறார். அம்மா புகழ்பாடும் மூவர் அணியாக ராஜேந்திர பாலாஜி, இராசாராம், எழில் டீம் உள்ளது!

'எனக்கு என்ன குடும்பமா... குட்டியா?’

ராஜேந்திர பாலாஜி அமைச்சரான பிறகு, அவர் மீது பல புகார்கள் குவிந்தாலும், அவரை அசைக்க முடியாததற்கு காரணம் என்ன?

மந்திரி தந்திரி ! -  2

''ராஜேந்திர பாலாஜி ஓ.பன்னீர்செல்வத்திடம்தான் அடைக்கலம் ஆகியிருக்கிறார். அவருடைய தீவிர ஆதரவாளராக மாறிய பிறகு, ஓ.பி-யிடம் இருந்து போன் வந்தாலே எழுந்து நின்று பவ்யமாகத்தான் பேசுவார். ஒருமுறை அமைச்சர் பன்னீர்செல்வத்திடம், 'அண்ணே எனக்கு என்ன குடும்பமா... குட்டியா..? பிரம்மசாரி வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கேன். இப்படியே மந்திரியா இருந்தா போதும்ணே’ என உருகி சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்தாராம். பணிவுக்குப் பெயர்போன பன்னீர்செல்வமே, 'ஆளு ரொம்ப விசுவாசமா இருக்கானே...’ என நெகிழ்ந்துவிட்டாராம். இதனாலேயே சிக்கல் வரும்போதெல்லாம் ராஜேந்திர பாலாஜியைப் பற்றி 'அம்மா’விடம் சொல்லி அவரைக் காப்பாற்றி வருகிறாராம் ஓ.பி.எஸ். சொத்துக்குவிப்பு புகார், கிரிமினல் பின்னணியினரை கட்சியில் சேர்த்தது, கோஷ்டி மோதல்... என ஏகப்பட்ட பிரச்னைகள் இருந்தும் அவரைக் காப்பாற்றிக் கரை சேர்ப்பது ஓ.பி.எஸ்-தான்'' என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!

சூப்பரோ சூப்பர் மார்க்கெட்!

மந்திரி தந்திரி ! -  2

விருதுநகர் மாவட்டத்தையே வாய் பிளக்க வைத்த விவகாரம் இது. ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்குக்கூட அவ்வளவு விளம்பரங்கள் பத்திரிகையில் வந்தது கிடையாது. சமீபத்தில் சிவகாசியில் திறக்கப்பட்ட 'கோல்டன் சூப்பர் மார்க்கெட்’ திறப்பு விழாவுக்கு பத்திரிகைகளில் 40 பக்க விளம்பரங்கள். ராஜேந்திர பாலாஜியின் அக்கா மகன் ரமணாவுக்குப் பெண் தேடுகிறார்களாம். மாப்பிள்ளைக்கு ஏதாவது தொழில் இருந்தால் நல்லது என நினைத்தார் ராஜேந்திர பாலாஜி. சிவகாசியில் பஸ் ஸ்டாண்டுக்கு அருகே புது ரோட்டில் 'கோல்டன் ஸ்டோர்ஸ்’ என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் ஒன்று முளைத்தது. ராஜேந்திர பாலாஜி திறந்துவைத்த அந்த சூப்பர் மார்க்கெட்டின் பளபள விளம்பரங்கள்தான் தொகுதியில் பலரின் கண்களை உறுத்தின!