Published:Updated:

இந்திய வானம் - 13

இந்திய வானம்
பிரீமியம் ஸ்டோரி
News
இந்திய வானம்

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யா

டந்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில், சிற்றூர்களில் திரைப்படம் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு திரைப்பட அரங்கமும் ஒருவிதம். நிறைய தூண்கள்கொண்ட பெரிய அரங்கு, அரண்மனை போன்ற முகப்புகொண்ட அரங்கு, நீரூற்றுகளும் அகலமான படிக்கட்டுகளும்கொண்ட அரங்கு, உயர உயரமான இருக்கைகள்கொண்ட அரங்கு, ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்ட டூரிங் டாக்கீஸ், நான்கு மாடிகள்கொண்ட திரையரங்கு, தீப்பெட்டி சைஸில் உள்ள அரங்கு... என பெரியதும் சிறியதுமான திரைப்பட அரங்குகள் என்னை வியக்கவைத்திருக்கின்றன. 

மல்ட்டிபிளெக்ஸ் வருகையின் பின்பு இந்தியா முழுவதும் திரையரங்குகள் ஒன்றுபோலவே இருக்கின்றன. திரையரங்குக்கு என்றே இருந்த தனியான அழகு, இருக்கைகளின் அமைப்பு, படம் போடுவதற்கு முன்பு ஒலிக்கும் பாடல், இடைவேளையில் விற்கப்படும் நொறுக்குத்தீனிகள், குளிர்பானங்கள் யாவும் மாறிவிட்டன.

பெருநகரங்களில் ஒரே வளாகத்துக்குள் பத்து பன்னிரண்டு தியேட்டர்கள் உருவாகிவிட்ட பிறகு, சினிமா தியேட்டர் பற்றிய மனப்பிம்பம் முற்றிலும் மாறிவிட்டது. பல நேரங்களில் எந்த ஊரில், எந்த தியேட்டரில் நாம் படம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல் போய்விடுகிறது.

பல நகரங்களில் புகழ்பெற்ற தியேட்டர்கள் இடிக்கப்பட்டுவிட்டன. ஆனால், அந்த தியேட்டர்களின் பெயர்களை காலத்தால் அழிக்க முடியவில்லை. இன்றும் அந்த அடையாளத்தைத்தான் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

இந்தியா முழுவதும் அரசாங்கத்தின் நிதி உதவியால் கட்டப்பட்ட பெரிய கலை அரங்குகள் உள்ளன. கொல்கத்தாவில் உள்ள 'நந்தன்’,  இதற்குச் சிறந்த உதாரணம். புத்ததேவ் பட்டாச்சார்யாவால் 1980-ம் ஆண்டு அரங்கப்பணி ஆரம்பிக்கப்பட்டு, 1985-ம் ஆண்டில் சத்யஜித் ரேவால் தொடங்கி வைக்கப்பட்டது. கேரள அரசின் திரைப்படக் கழகம் 'கைரளி’ என்ற திரைப்பட வளாகத்தை திருவனந்தபுரம், கோழிக்கோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடத்துகிறது.

இந்திய வானம் - 13

எனது பதின்வயதில் குற்றால சீஸனுக்குச் செல்லும்போது, பூங்காவை ஒட்டிய குன்றில் இருந்த அரசாங்க தியேட்டருக்குச் சென்று படம் பார்த்திருக்கிறேன். சீஸன் நேரங்களில் மட்டுமே அது செயல்பட்டது. வெறும் 30 காசுகள் கட்டணம். ஊட்டியிலும் அப்படி அரசாங்க தியேட்டர் ஒன்று இருந்தது. குற்றாலத்தில் இருந்த தியேட்டரில் காற்றோட்டமாக இரவுக் காட்சி பார்ப்பது மிகுந்த சந்தோஷம் தரக்கூடியது. ஆனால், இன்று அரசாங்கம் நடத்தும் சினிமா தியேட்டர் என ஒன்றுகூட தமிழ்நாட்டில் இல்லை.

ஒருமுறை மேற்குவங்கத்துக்குச் சென்றிருந்த போது கௌராவில் உள்ள 'நவபாரத்’  திரையரங்குக்கு இரவுக் காட்சி காணச் சென்றிருந்தேன். வங்காள மொழிப் படம் ஓடிக்கொண்டிருந்தது. என்ன படம் எனத் தெரியாமலேயே டிக்கெட் எடுத்து உள்ளே சென்றேன். படம் தொடங்கிய சில நிமிடங்களில் அது தமிழில் வெளியான 'காதல்’ திரைப்படத்தின் ரீமேக் எனத் தெரிந்தது. பார்வையாளர்கள் ஆரவாரமாக ரசித்துப் பார்த்தார்கள்.

யோசித்துப்பார்த்தால் வியப்பாக இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான தமிழ் சினிமாவின் வெற்றிப் படங்களில் பெரும்பான்மையானவை வங்கமொழிப் படங்களின் மறு உருவாக்கமே. இதற்காக ஸ்டுடியோக்கள் தங்கள் பிரதிநிதி ஒருவரை கொல்கத்தாவில் வீடு பார்த்து, குடியிருக்க வைத்திருந்தன. ஒவ்வொரு வங்கப் படம் வெளியாகும்போதும் உடனே அதைப் பார்த்து உரிமை வாங்கி, தமிழில் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். இன்று நிலைமை தலைகீழ். தமிழில் வெற்றிகரமாக ஓடும் திரைப்படங்களை வங்காளத்தில் மறுஉருவாக்கம் செய்ய போட்டிபோடுகின்றனர்.

முதன்முதலாக எந்தப் படத்தைப் பார்த்தோம், எந்தப் படத்தை காதலியோடு பார்த்தோம், திருமணத்துக்குப் பிறகு மனைவியுடன் பார்த்த முதல் படம் எது, எந்தப் படத்தை அதிகத் தடவைப் பார்த்திருக்கிறோம் என ஒவ்வொருவர் மனதிலும் ஒரு பட்டியல் இருக்கிறது. திருமணத்துக்குப் பிறகு புதுமணத் தம்பதிகள் திரைப்படம் பார்க்கச் செல்வது என்பது தமிழர் பண்பாட்டின் பகுதியாக உருமாறிவிட்டிருக்கிறது.

திரையரங்குகள் குறித்த நினைவு இல்லாத மனிதர்களே இல்லை. வரிசையில் காத்திருந்து, டிக்கெட் கிடைக்காமல் ஏமாந்துபோனது,  குடும்பத்துடன் படம் பார்த்துவிட்டு வந்து அதைப் பற்றி வீட்டில் மணிக்கணக்கில் பேசிச் சிரிப்பது, தீபாவளி-பொங்கலுக்கு கூட்டம் அலைமோத முதல் காட்சி பார்த்தது,  படத்தின் பாட்டுப் புத்தகம் வாங்கிவந்து பாடல்களை மனப்பாடம் செய்தது, ஒலிச்சித்திரம் எப்போது வரும் எனக் காத்திருந்து ரேடியோ கேட்டது, 'பேசும்படம்’, 'பொம்மை’ பத்திரிகைகள் வாங்கி சினிமா செய்திகளை ஆசைஆசையாகப் படித்தது போன்றவை இன்றும் பலருக்கு அழியாத நினைவுகள்.

ஒருமுறை 'படிக்காதமேதை’ படத்தின் தயாரிப்பாளர் பாலா மூவிஸ் கிருஷ்ணசாமியை கே.கே. நகரில் சந்தித்தேன். இவர் தமிழ்நாட்டில் முதன்முறையாக திறந்தவெளி சினிமா தியேட்டரை உருவாக்கியவர். இன்றுள்ள பிரார்த்தனா திரையரங்கு போன்றதன் முன்னோடி முயற்சி அது. சென்னையை அடுத்த சோமங்கலம் என்ற கிராமத்தில் இவர் திறந்தவெளித் திரையரங்கை அமைத்தார்.

வயல்வெளியின் நடுவே மிகப் பெரிய களம் போன்ற இடம். அங்கே சிறிய மர பெஞ்சுகள். ஒரு பக்கம் பெரிய திரை. இவ்வளவே அரங்கின் அமைப்பு. மிகவும் குறைவான கட்டணம். மிகக் குறைந்த காலமே இந்த அரங்கம் செயல்பட்டிருக்கிறது. பின்பு, அரங்குக்கான வரி அதிகமாக போடப்பட்டதன் காரணமாக, அரங்கம் முடக்கப்பட்டுவிட்டது.

என் சிறுவயதில் பீடி கம்பெனிகள் தங்களின் விளம்பரத்துக்காக இலவசமாக படங்களை

இந்திய வானம் - 13

திரையிடுவார்கள். மாலையில் பீடி கம்பெனி வேன் ஊருக்குள் வந்து விளம்பரம் செய்யும். பின்பு களத்தில் ஒரு திரை கட்டி எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களை திரையிடுவார்கள். 'எங்க ஊர் ராஜா’ என்ற திரைப்படத்தை மட்டும் 100 முறை போட்டிருப்பார்கள். எத்தனை முறை திரையிட்டாலும் ஊரே திரண்டுவந்து படம் பார்த்து அழுது செல்லும். ஒருமுறை 'குப்பத்துராஜா’ என்ற படம் போட்டபோது பாதியில் ரீல் அறுந்துபோய்விட்டது. சரிசெய்து முதலில் இருந்து படத்தை போட்டபோது காலை7 மணி. அப்போதும் கூட்டம் கலையவில்லை.

கோயில் விழாக்களில் நடைபெற்றுவந்த நாடகங்கள், கலைநிகழ்ச்சிகளுக்கு மாற்றாக தினமும் சினிமா போடுகிற பழக்கம் 1980-களில் உருவானது. 16 எம்.எம் புரொஜெக்டர் மூலம் ஒவ்வொரு கோயிலிலும் ஒரு நாளைக்கு மூன்று படங்கள் வீதம் திரையிடப்பட்டன. அதில் ஒருநாள் பக்திப் படம், ஒருநாள் எம்.ஜி.ஆர் படம், ஒருநாள் காமெடிப் படம் எனப் பிரித்திருப்பார்கள்.

சினிமா அரங்குகள் எத்தனை பசுமையாக மனதில் தங்கியிருக்கிறதோ, அதற்கு நிகராகவே தியேட்டர் ஆபரேட்டர்களும் அபூர்வமான மனிதர்களாக மனதில் பதிந்துபோயிருக்கிறார்கள். ஆபரேட்டர்களுடன் நெருங்கிப் பழகினால்தான் அடுத்து என்ன படம் வெளியாகிறது எனத் தெரிந்துகொள்ள முடியும்; கூட்ட நேரங்களில் டிக்கெட் வாங்க முடியும் என்பதற்காக, சினிமா தியேட்டர் ஆபரேட்டரைச் சுற்றி வரும் பையன்கள் நிறைய இருந்தார்கள். அதில் என் நண்பன் முத்துவும் ஒருவன். அவனுக்கு தெரியாத சினிமா தியேட்டர் ஆபரேட்டர்களே கிடையாது. வீடு வரை தெரிந்துவைத்திருப்பான். எல்லா ஊர்களிலும் தியேட்டர் ஆபரேட்டரின் மனைவி, பிள்ளைகள் சினிமா பார்க்க விருப்பமற்றவர்களாக இருப்பது பொது விதி போலும்.

முத்துவின் அப்பா கறிக்கடை வைத்திருப்பவர் என்பதால், ஞாயிறுதோறும் ரகசியமாக ஆட்டு ஈரலை இலையில் சுற்றி எடுத்துக்கொண்டு போய் ஆபரேட்டர் வீட்டில் கொடுத்துவருவான்.  தீபாவளி, பொங்கல் நாட்களில் ஆபரேட்டர் வீட்டுக்கே வர முடியாது என்பதால், அவருக்கான சாப்பாடு, பலகாரங்கள் அனைத்தையும் தியேட்டருக்குக் கொண்டுபோய்க் கொடுக்க வேண்டும். முத்து, அப்படித்தான் தியேட்டருக்குள் நுழைவான். சினிமா ஆபரேட்டர்கள் எந்தப் படத்தைப் பற்றியும் வெளிப்படையாகப் பேசிக்கொள்ள மாட்டார்கள். அரங்கம் நிரம்பி வழியும் நாட்களில்கூட, 'வசூல் நல்லா இருக்கு’ என்ற ஒற்றை வார்த்தைதான் சொல்வார்கள்.

சினிமா தியேட்டர் ஆபரேட்டர்கள் இடம் மாறுவது இல்லை. அரிதாக ஆழ்வார் என்ற ஆபரேட்டர், ஒரு தியேட்டரைவிட்டு வேறு தியேட்டர் மாறியதை மக்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. படத்தின் ரீல் எங்காவது அறுபடும் போது 'ஆழ்வாரு... ஒழுங்கா வேலையைப் பாருடா’ எனக் கத்துவார்கள்.

முத்து, சினிமா தியேட்டர் ஆபரேட்டர்கள் மட்டுமின்றி, மேனேஜர், டிக்கெட் கொடுப்பவர், முறுக்கு விற்பவர், சைக்கிள் ஸ்டேண்ட் ஆசாமி வரை பழகிவைத்திருந்தான். அதனால், எந்தப் படத்தையும் முதல் நாளே எளிதாக அவனால் பார்த்துவிட முடிந்தது.

தியேட்டரில் முக்கியமான பிரமுகர்களுக்கு என பாஸ் வழங்குவார்கள். அந்த பாஸ், எல்லோருக்கும் எல்லா நாளும் கிடைத்துவிடாது. அப்படி பாஸ் கொடுப்பதற்கான உரிமை மேனேஜருக்கு மட்டுமே உண்டு. பாஸை சீல் போட்டுக் கொடுப்பதற்கு டிக்கெட் கொடுப்பவரைத்தான் அழைப்பார்கள். சில வேளை ஓசி பாஸ் முத்துவுக்குக் கிடைத்துவிடும். அதைப் பொறுப்பாக தனது அய்யாவிடம் தந்து அவரையும் அம்மாவையும் சினிமா பார்க்க அழைத்துப் போவான். பால்யத்தின் பெரும்பான்மை நினைவுகள் கறுப்பு-வெள்ளையாக எஞ்சியிருக்கின்றன. ஆனால் வண்ணப்படங்களாக இருப்பது, சினிமா பார்த்த நினைவுகள் மட்டுமே.

'டு ஈச் ஹிஸ் ஓன் சினிமா’ (To Each His Own Cinema)  என்ற திரைப்படத் தொகுப்பு, சினிமா தியேட்டர்களையும் சினிமா பார்க்கும் அனுபவத்தையும் கொண்டாடும்விதமாக உருவாக்கப்பட்டது. 34 குறும்படங்களின் தொகுப்பு, ஒவ்வொன்றும் மூன்று நிமிடங்கள், கேன்ஸ் திரைப்பட விழாவின் 60-வது ஆண்டு விழாவைச் சிறப்பிக்கும்வண்ணம் உலகின் மிகச்சிறந்த இயக்குநர்கள் இணைந்து இந்தக் குறும்படத் தொகுப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.

இதில் சீன இயக்குநர் ஷாங் இமு இயக்கிய 'மூவி நைட்’ என்ற குறும்படம் அற்புதமானது. மலைக் கிராமம் ஒன்றில் சினிமா போடுவதற்காக ஒரு குழு வருகிறார்கள். திறந்தவெளியில் திரை கட்டி, ஸ்பீக்கர் அமைத்து, படம் போட ஆயத்தப் பணிகள் நடக்கின்றன. ஓட்டைப்பல் சிறுவன் ஒருவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சினிமா பார்க்கப்போகும் சந்தோஷத்தில் கத்துகிறான்; ஆடுகிறான்; திரை கட்டுவதை நெருங்கி வேடிக்கை பார்க்கிறான்.

எங்கே அமர்ந்து படம் பார்க்கவேண்டும் என பெஞ்சு கொண்டுவந்து போட்டு இடம் பிடிக்கிறான். சூரியன் மறைந்து இரவு வந்த பிறகு சினிமா போடுவார்கள் என்பதால், சிறுவர்கள் ஆசையாக இரவு வரக் காத்திருக்கிறார்கள். திரை அமைப்பு சரியாக உள்ளதா எனப் பரிசோதனை செய்யப்படுகிறது. அப்போது சிறுவர்கள் திரையை நோக்கிப் பாயும் ஒளிக்கற்றையின் ஊடே கைவிரல்களைக் காட்டி நிழல் உருவங்களை திரையில் ஆட வைக்கிறார்கள். ஓட்டைப்பல் சிறுவன் ஒரு கோழியை ஒளிக்கற்றையின் ஊடே தூக்கி வீசுகிறான். திரையில் அதன் நிழல் தெரியும்போது மக்கள் கைதட்டிச் சிரிக்கிறார்கள். முடிவில் திரைப்படம் தொடங்குகிறது. இவ்வளவு நேரம் ஆசையாகக் காத்திருந்த சிறுவன் படம் தொடங்கிய அடுத்த நிமிடம் உறங்கிப்போய்விடுகிறான்.

இந்திய வானம் - 13

இந்தக் குறும்படத்தைக் காணும்போது எங்கோ ஒரு சீனச் சிறுவனுக்கு நடந்த விஷயங்கள் யாவும் எனக்கும் நடந்திருக்கின்றன என்பது வியப்பாக இருந்தது. உலகம் முழுவதும் சினிமா பார்க்கும்போது மனிதர்கள் ஒன்றுபோலவே நடந்துகொள்கிறார்கள். இனம், மொழி, தேசம் கடந்து சினிமா, பார்வையாளர்களை ஒன்றிணைப்பதைத் துல்லியமாக உணர முடிகிறது.

இயக்குநர் மிருணாள் சென் சினிமா பற்றிய உரையொன்றில் சில முக்கிய விஷயங்களை சுட்டிக்காட்டுகிறார்.

சந்தைதான் இன்று சினிமாவை முடிவு செய்கிறது. உலகம் முழுவதும் சந்தைப்படுத்தப்படுகின்ற படங்களை மட்டுமே ஹாலிவுட் தயாரிக்கிறது. இதன் காரணமாக அறிவியல் புனைகதைகளைக்கொண்ட படங்கள், ஆக்ஷன் படங்கள், பிரமாண்டமான ஃபேன்டசி படங்கள் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்படுகின்றன. யதார்த்தமான வாழ்க்கையைக் கூறும் படங்களை உலக அளவில் சந்தைப்படுத்த முடியவில்லை. காரணம், அது பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே பாப்புலர் சினிமா புகழ்பெற்று விளங்குகிறது.

சினிமாவுக்குள் பிரசாரம் இருக்கிறது; அரசியல் இருக்கிறது; கலை நுட்பங்கள் இருக்கின்றன; பண்பாட்டுச் சிக்கலை சினிமா பேசுகிறது; மத ஒற்றுமையை, சகிப்புத்தன்மையை வலியுறுத்துகிறது. பார்வையாளர்களை சந்தோஷப்படுத்துவதற்காக கீழ்த்தரமான விஷயங்களை சினிமாவில் காட்சிப்படுத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. பார்வையாளர்கள் சினிமாவின் வழியே சிந்திக்கவும் விழிப்பு உணர்வுகொள்ளவும் வேண்டும்.

இன்று யதார்த்தமாக ஒரு படம் எடுக்கப்பட்டால், 'ஏன் டாக்குமென்டரி போல எடுத்திருக்கிறீர்கள்?’ எனக் கேட்கிறார்கள். அந்த அளவு பாப்புலர் சினிமா யதார்த்தத்தை விலக்கி வைத்திருக்கிறது. யதார்த்தமான கலைப்படைப்புகள்தான் சினிமாவை அடுத்த நிலைக்குக் கொண்டுபோகின்றன. வணிகம், சினிமாவைப் பயன்படுத்த மட்டுமே செய்கிறது. ஆகவே அது தொழில்நுட்பத்தை மட்டுமே சாதனையாகப் பேசுகிறது. சினிமா, நம் காலத்தின் வலிமையான ஊடகம். அதை எப்படிக் கையாள்வது என்பதுதான் இயக்குநரின் முதன்மையான சவால்.

மிருணாள் சென் சொன்னது நிஜம். சினிமா பார்ப்பது வெறும் பொழுதுபோக்காக இருக்கலாம். ஆனால், அதைப் புரிந்துகொள்வது ஒரு கலை. அதற்கு நாம் சினிமா ரசனையை வளர்த்துக்கொள்ள வேண்டும். சினிமாவை ஒரு பாடமாக கல்விப்புலங்களில் கற்பிக்க வேண்டும். எது நல்ல சினிமா என்பதைப் பற்றிய மதிப்பீடு சாமானிய மனிதனுக்கு ஏற்பட வேண்டும். அப்போதுதான் சினிமா அடுத்த நிலையை நோக்கி உயரும்!

- சிறகடிக்கலாம்...