அவள் 16
Published:Updated:

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

இளசுகளின் இன்ஸ்பிரேஷன் தொடர் Season 2 , episode 1

"நல்லதை மட்டுமில்ல... கெட்டதையும் தெரிஞ்சிக்கணும்!'

‘ஒரே படத்தில் ஓஹோனு வாழ்க்கை’ கொடுப்பினை கிடைச்சவங்க, பூர்ணிமா ராமசுவாமி. காஸ்ட்யூம் டிசைனரா தான் வேலை பார்த்த முதல் படமான ‘பரதேசி’யிலேயே, ‘சிறந்த ஆடை வடிவமைப்பாள’ருக்கான தேசிய விருதை வாங்கினவங்க. இப்போது கோலிவுட்டின் ஃபேவரைட் காஸ்ட்யூம் டிசைனர். இளம் பட்டாளத்துக்கு இன்ஸ்பிரேஷன் ஆகி இருக்கும் பூர்ணிமா, ‘அவள் 16’-க்காக தன் கதை சொல்ல வர்றாங்க. நம்ம காலேஜ் ஸ்டூடன்ட்ஸ், ‘செல்ஃபி ப்ளீஸ்!’னு கேட்ட செகண்டில், கேம்பஸ் குதூகலம் பத்திக்கிச்சு பூர்ணிமாவை!

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

‘‘பிரபல ‘நாயுடு ஹால்’ ஜவுளிக்கடையின் உரிமையாளர் ராமசுவாமிதான் என் அப்பா. எங்க வீட்டுல நான், அண்ணன்னு ரெண்டு பசங்க. சின்ன வயசுல வீட்டுக்கு வந்த விருந்தினருக்கு எங்களை அறிமுகப்படுத்தும்போது அண்ணனை ‘என் மூத்த பையன்’னு சொல்லிட்டு, என்னை ‘என் இளைய பையன்’னு சொல்லுவாரு. அந்தளவுக்கு அண்ணனுக்கான அத்தனை சுதந்திரத்தையும் எனக்கும் கொடுத்து, போல்டா வளர்த்தார். அவருக்கு நான்னா ரொம்ப பிரியம். இல்ல இல்ல... ரொம்ப ரொம்ப ரொம்ப பிரியம்.

அம்மா சுசிலாவுக்கு சின்ன வயசில் என்னை மேய்க்கிறதுதான் மேஜர் டாஸ்க். அந்தளவுக்கு நான் சுட்டி! எப்பவும் பசங்க மாதிரி கட் பனியன், ஷார்ட்ஸ்தான் என் காஸ்ட்யூம். ரொம்ப வருஷமா பாய் கட்தான் என் ஹேர் ஸ்டைலும்கூட! ஏறிக் குதிச்சு விளையாடுறதுல எப்பவும் வீட்டில் ஏதாச்சும் பொருட்கள் பூர்ணிமாவால உடைஞ்சுட்டே இருக்கும். அம்மா முறைச்சாலும், அப்பா ரசிப்பாரு. சைல்டுஹுட் மெமரீஸ் ஸோ ஸ்வீட்ல..?! அதை எனக்கு ஞாபகப்படுத்தின ‘அவள் 16’-க்கு ஒரு தேங்க்ஸ். சரி, தொடர்ந்து பேசுவோம்.

எங்க அண்ணன் அர்விந்த், அப்படியே எனக்கு ஆப்போஸிட். வீடு, எங்க ஷோ ரூம், ஸ்கூல், காலேஜ்னு இதைத் தவிர வேறெங்கயும் போக மாட்டாரு. அநியாயத்துக்கு நல்லவரா இருப்பாரு. அவர் எனக்கு வெச்ச பெட் நேம், ‘பொம்பள ரௌடி’! என்னைப் பார்த்தாலே விலகி ஓடிருவாரு. அந்தளவுக்கு ஃபுல் ஃபார்ம்ல இருந்தேன்.

‘ஸ்டாப் ஸ்டாப்... நீங்க அவ்ளோ குறும்பா? பார்த்தா அப்படித் தெரியலையே?’னு கேட்கிறீங்கதானே? நானெல்லாம் அப்போ மட்டும்தான் அப்புடி. அப்புறம் ரொம்ப மாறிட்டேன். நானும் அண்ணனும் தைரியமா இருக்கணும்னு அப்பா சொல்லிட்டே இருப்பாரு. எனக்கு எட்டு வயசு அப்போ. திடீர்னு என்னையும், அண்ணனையும் தனியா சென்னையில ஃப்ளைட் ஏத்தி, சிங்கப்பூர்ல இருக்கிற எங்க ரிலேஷன் வீட்டுக்கு அனுப்பி வெச்சுட்டாரு. டீன் வயதுக்கு வந்ததும், என்னையும் எங்க அண்ணனையும் டிஸ்கோ, பார்ட்டினு எல்லா இடத்துக்கும் கூட்டிட்டுப் போனார். ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர் அப்பா. ஆனா, எங்கிட்டயும் அண்ணன்கிட்டயும், ‘நல்லதை மட்டுமில்ல... இந்த உலகத்துல இருக்கிற கெட்டதையும் தெரிஞ்சுக்கணும். அப்போதான் அதில் இருந்து விலகி இருக்க முடியும்’னு சொல்வார்.

பார்ட்டி, டிஸ்கோவில் என்னை நிக்க வெச்சு, ‘உனக்கு இதெல்லாம் பிடிச்சிருந்தா கன்டினியூ பண்ணு. இல்லைன்னா, இன்னியோட இதையெல்லாம் மறந்துடு’னு சொன்னார். இந்த அனுபவத்தை சீனியரான எங்க அண்ணனுக்கும் அப்பா கொடுத்திருக்க, ஏற்கெனவே ரொம்ப நல்ல பையனான எங்க அண்ணன், ‘வேண்டவே வேண்டாம்ப்பா!’னு கும்பிடு போட்டுட்டுடாரு. இப்போ என் டர்ன். எங்கப்பா கூட நின்னு நான் பார்த்தப்போ, இந்த பார்ட்டி, டிஸ்கோ எல்லாம் நம்ம குடும்பத்துக்கு சுத்தமா செட் ஆகாதுன்னு தோணுச்சு. பார்த்த முதல் நாளிலேயே அது எல்லாம் வேண்டாம்னு மனசுல ஆழப் பதிஞ்சு போற அளவுக்கு, எங்களை அழகா பேரன்ட்டிங் பண்ணினார் அப்பா. எங்களுக்கு எவ்ளோ சொத்து இருந்தாலும், அது நிரந்தரம் இல்ல. எங்கப்பா கத்துக்கொடுத்த வேல்யூஸைதான் உண்மையான சொத்தா நினைக்கிறேன். ஐ லவ் மை அப்பா! மிஸ் யூ பா!

அப்பா பத்தி பேசினாலே எமோஷன்ஸ்தான். சரி, என்னோட சண்டைக்கோழி எபிசோட் கொஞ்சம் பேசுவோம். பாண்டிபஜார், ஹோலி ஏஞ்சல் கேர்ள்ஸ் ஸ்கூல்லதான் படிச்சேன். பக்கத்து கிளாஸ் பொண்ணு வீணாவுக்கும் எனக்கும் வாய்க்கா வரப்புத் தகராறு அளவுக்கு நிலவரம் எப்பவும் கலவரமாதான் இருக்கும். ரெண்டு பேரும் ‘அக்னி நட்சத்திரம்’ பிரபு, கார்த்திக் அளவுக்கு முறைச்சுக்கிட்டே திரியுற விஷயம் ஸ்கூலுக்கே தெரியும். ஸ்கூல் பீப்பிள் லீடர் எலெக்‌ஷன் வந்தது. வீணா கேண்டிடேட்டா நின்னா! விடுவோமா... அவளைத் தோற்கடிக்கவே நான் என் ஃப்ரெண்ட் ஒருத்தியை நாமினேட் செய்ய வெச்சு, ஸ்கூல் முழுக்க போஸ்டர் எல்லாம் ஒட்டி ஓட்டுக் கேட்டேன். எங்க டீம்தான் ஜெயிச்சது. `ஹிப்ஹிப் ஹுர்ரே’தான்!

இதுல என்ன சுவரஸ்யம்னா, வீணாவும் நானும் இப்போ க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். டான்ஸ் மாஸ்டர் பிரசன்னாவோட சொந்த சிஸ்டர்தான் இந்த வீணா. எனிமீஸா இருந்த நாங்க, ஃப்ரெண்ட்ஸ் ஆன கதை என்னன்னா... டென்த் வரைக்கும் முறுக்கிட்டு இருந்த எங்களை, `ப்ளஸ் ஒன்’-ல ஃபிரெஞ்ச் எடுத்ததால, ஒரே கிளாஸில் உட்கார வெச்சது காலம். அப்படியும் ஒரே `முறைப்ஸ்’தான்! அந்த வருஷம் ‘வேலன்டைன்ஸ் டே’ வந்துச்சு. ‘வேலன்டைன்ஸ் டே’-க்கு டீச்சர், ஃப்ரெண்ட்ஸுக்கு கார்டு, கிஃப்ட் கொடுக்கிறது எங்க ஸ்கூல் வழக்கம். ‘நாமளும் எத்தனை நாள்தான் ஆக்‌ஷன் ஸீனே ஓட்டுறது..?’னு திருந்தி, நான் வீணாவுக்கு கார்டு கொடுத்தேன். அவ ரிப்ளை கார்டு கொடுக்க, கட்டிப்பிடிச்சு சமாதானம் ஆயிட்டோம். அன்னியில இருந்து இப்போ வரைக்கும் நாங்க பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். வீணா இப்போ அமெரிக்காவில் இருக்கா. நான் அங்க போனாலோ, அவ இங்க வந்தாலோ... ஒரு சூப்பர் மீட்டிங்கை போட்ருவோம்!

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

‘உங்க நட்புக் கதை எதுக்கு எங்களுக்கு?’னு கேட்குற கேர்ள்ஸ் அண்ட் கைஸ்... ஸ்கூல், கேம்பஸ்ல ‘அவளை/அவனை எனக்குப் பிடிக்கவே பிடிக்காதுப்பா’னு யாரையாச்சும் நீங்களும் ரிமார்க் பண்ணி வெச்சிருப்பீங்கதானே..? வேண்டாம் டியூட்ஸ். லைஃப் இஸ் பியூட்டிஃபுல். இந்தக் கொண்டாட்ட வயசுல நமக்கு எதுக்கு கோபம், ஈகோ எல்லாம்? அது எவ்ளோ நாள் பகையாவும் இருக்கட்டும்... ஃபுல்ஸ்டாப் வைக்க ஒரு நொடி போதும். டக்குன்னு ஃபேஸ்புக்ல ஒரு ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் அனுப்பி, பிரச்னையை முடிச்சுருங்க. சந்தோஷம் பெருகும்!

எங்கப்பாவோட நண்பர்களா, வீட்டுக்கு நிறைய வி.ஐ.பி-க்கள் வருவாங்க. ஆனா, எனக்கு அவங்களை அப்பாவோட ஃப்ரெண்டா மட்டும்தான் தெரியும், சொசைட்டியில அவங்களுக்கு இருக்கிற ஸ்டேட்டஸ் எல்லாம் தெரியாம அவங்க மடியில உட்கார்ந்து, பேசி, சிரிச்சு, விளையாடினு இருந்திருக்கேன். ‘ரொம்ப பில்டப் கொடுக்காதீங்க... யாரெல்லாம் அந்த வி.ஐ.பி-க்கள் சொல்லுங்க...’னு உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது... ரஜினி அப்பா! ரஜினி அப்பா வீட்டுல நான்தான் மூத்த பொண்ணு. நான் எப்போ அங்க போனாலும், ‘என் மூத்த பொண்ணு வந்துட்டா!’னுதான் லதா அம்மா வாய் நிறையக் கூப்பிடுவாங்க.

ரஜினி அப்பா, சிவகுமார் அப்பாவோட எல்லாம் அழகான என் பால்யம், எங்க ‘நாயுடு ஹால்’ ஷோரூம்லயே நான் வேலை பார்த்து, சம்பளம் வாங்கின அனுபவம், கோ எட் காலேஜ்ல சேர்ந்து ஃபீல் பண்ணின சோகம், தியேட்டரில் நான் பார்த்த முதல் படமான ‘தளபதி’ தந்த வியப்பு... எல்லாம் சொல்றேன். டிசம்பர் 15-ம் தேதி வர்ற ‘அவள் 16’ல!

லெட்ஸ் டேக் எ ஷார்ட் பிரேக்!’’

கு.ஆனந்தராஜ், கோ.இராகவிஜயா, தா.நந்திதா  படங்கள்:எம்.உசேன்