தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தபோது முரட்டு வில்லன்களாக இருந்த சில நடிகர்கள், காலப்போக்கில் காமெடிப் படங்களுக்கு மார்க்கெட்டும் மவுஸும் கூடிக்கொண்டிருப்பதை அறிந்து அந்த ட்ராக்கில் பயணிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி முரட்டு வில்லன் டு காமெடியன்களாக மாறியவர்கள் யார் யார்? ஒரு சின்ன அலசல்!
`நான் கடவுள்' ராஜேந்தர்:

சமீபகாலமாக `இவரிடம் கால்ஷீட் வாங்குவதே அபூர்வமாக உள்ளது' என, பல இயக்குநர்கள் தங்களது பேட்டியில் தெரிவித்துள்ளனர். சினிமா துறையில் இவர் முதலில் ஸ்டன்ட்மேனாகத்தான் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார். அதற்குப் பிறகு `நான் கடவுள்' படத்தின் மூலம் தாண்டவன் எனும் டெரர் வில்லனாக நடித்தார். தற்போது வெளியாகிவரும் எல்லா கமர்ஷியல் படங்களிலும் காமெடிக் கதாபாத்திரங்களில் கலக்கிவருகிறார். கோலிவுட்டுக்கு என்ட்ரியான புதிதில் சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். `பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் காமெடி வில்லனாக நடித்த பிறகு ஏராளமான படங்களில் முழு நேர காமெடியனாகவும், வித்தியாசமான பல கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.
சமீபத்தில் வெளியான `குலேபகாவலி' படத்தில் இவரது ஸ்க்ரீன் பிரசென்ஸ் கொஞ்ச நேரமே என்றாலும், இடம்பெற்ற காமெடி வேற லெவலில் அமைந்து ரசிகர்களிடம் அப்லாஸையும் அள்ளியது. மக்களுக்கும் இதுதான் பிடித்திருக்கிறது என்பதை உணர்ந்து, தொடர்ந்து இதுபோன்ற கதாபாத்திரங்களிலேயே விரும்பி நடித்துவருகிறார்.
ஆனந்தராஜ்:

ஆனந்தராஜின் அப்பாவுக்கு இவரை காவல் துறையில் சேர்ப்பதே கனவாக இருந்தது. ஆனால், சிறு வயதிலிருந்தே ஆனந்தராஜின் கவனம் முழுக்க சினிமாவின் பக்கம் இருந்தது. தன் சினிமா ஆசைக்கு வீட்டில் பச்சைக்கொடி காட்டிய பிறகு, சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் தன் படிப்பைத் தொடங்கினார். பல தடங்கல்களைச் சந்தித்த இவருக்கு, `ஒருவர் வாழும் ஆலயம்' எனும் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் வில்லனாகவும் அரசியல்வாதியாகவும் நடித்து, நிரந்தர வில்லனாகவே தமிழ் சினிமாவைக் கலக்கிக்கொண்டிருந்தார். சமீபத்திய ட்ரெண்டை உணர்ந்த இவர், காமெடி ரோல்களையும் கையில் எடுக்கத் தொடங்கிவிட்டார். `நானும் ரெளடிதான்', `தில்லுக்கு துட்டு', `மரகத நாணயம்', `குலேபகாவலி' போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இவரின் `நானும் ரெளடிதான்' பட மீம் டெம்ப்ளேட் இன்னமும் ட்ரெண்டில் உள்ளது.
மன்சூர் அலிகான்:

ஆனந்தராஜோடு சேர்ந்து இவரும் தமிழ் சினிமாவில் ஒரு தனி ட்ராக்கைப் பிடித்து பயணிக்கத் தொடங்கிவிட்டார். தன் நடிப்புப் பாதையை `சுபயயாத்ரா' எனும் மலையாளப் படத்தின் மூலம் ஆரம்பித்தார். அதன் பிறகு விஜயகாந்த் நடிப்பில் வெளியான `கேப்டன் பிரபாகரன்' படம் மூலம் தன்னை சிறந்த வில்லன் கதாபாத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அடையாளம் காட்டினார். சில நெகட்டிவ் ரோல்களை கையில் எடுத்த இவர், பல படங்களில் வில்லனாக நடித்து கலக்கிவந்தார். அவ்வப்போது சில குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலும் நடித்துவந்தார். தற்போது ஆனந்தராஜைப்போல் இவரும் காமெடிக் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இவரின் பேசும் ஸ்லாங்தான் இவரின் ப்ளஸ். அதை வில்லத்தனங்களுக்குப் பயன்படுத்திய இவர், தற்போது காமெடி கவுன்ட்டர்களுக்குப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.
`தளபதி' தினேஷ்:

`தளபதி' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தினேஷ். ரஜினி நடித்த பல படங்களில் இவரை ஏதாவது ஒரு ரோலில் பார்த்துவிடலாம். `பாட்ஷா' பாயின் பாடிகாட்களுள் இவரும் ஒருவர். பல படங்களில் வில்லனின் கையாளாகவும் வில்லனாகவும் நடித்திருக்கிறார். இவரும் சமீபத்தில் சில காமெடிக் கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கிறார். ரஜினிகாந்தில் ஆரம்பித்து சந்தானம், வடிவேலு என எல்லோரோடும் நடித்துவருகிறார் `தளபதி' தினேஷ்.
ரவி மரியா:

இவர் நடிகர் மட்டுமல்லாது `ஆசை ஆசையாய்', `மிளகா' என இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார். நடிப்புக்கு வந்த பிறகு `சண்டை', `கோரிப்பாளையம்', `மாயாண்டி குடும்பத்தார்' என சில படங்களில் நெகட்டிவ் ரோல்களைத் தேர்ந்தெடுத்து நடித்துவந்தார். அதன் பிறகு `தேசிங்குராஜா' படத்தில் வில்லத்தனம் கலந்த இவரது காமெடி ரோல் மக்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. அதே ட்ராக்கைப் பிடித்து தொடர்ந்து அதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். `அன்னிக்கு காலையில ஆறு மணி இருக்கும்...' எனும் எபிக் காமெடி மூலம் இன்னும் ஃபேமஸ் ஆகிவிட்டார் ரவி மரியா. `சரவணன் இருக்க பயமேன்', `துப்பறிவாளன்', `ஹரஹர மகாதேவகி', `இப்படை வெல்லும்' போன்ற படங்களில் குணச்சித்திரம் மற்றும் காமெடிக் கதாப்பாத்திரங்களில் நடித்துவருகிறார்.