அவள் 16
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

இளசுகளின் இன்ஸ்பிரேஷன் தொடர் Season 3, episode 1

'ரவுடி' ரவி... 'சமர்த்து' ராஜா!

`மோகன்' ராஜா என்ற பெயரை, ‘தனி ஒருவன்’ ராஜா என லேட்டஸ்டாக மாற்றி எழுதி, தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார், இயக்குநர் ராஜா. தன் ரீமேக் அடையாளத்தைத் தூக்கி எறிந்து, சமூக அக்கறை சார்ந்த தன் ‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து தனித்து நிற்கும் ராஜா, தன் வெற்றிக்கதை சொல்ல வருகிறார், நம் ‘இளசுகளின் இன்ஸ்பிரேஷன்’ தொடரில்...

ஹாய் டியர் யங்க்ஸ்டர்ஸ்! சின்ன வயசுல ராஜா - ராணி கதை கேட்டிருப்பீங்க.இது, ராஜா கதை! 

என் ஆரம்பம் என்பதே, எங்கப்பாவோட தொடர்ச்சிதான். தயாரிப்பாளரும், எடிட்டருமான மோகன்தான் என் அப்பானு உங்களுக்குத் தெரியும். மதுரை, திருமங்கலத்தில் வசதியான வாழ்க்கை இருந்தும், சினிமா மேல இருந்த ஆசையாலும் பற்றாலும் 12 வயசுல சென்னைக்கு வந்தவர் அப்பா. சினிமாவில் சின்னச் சின்ன வேலைகள் செஞ்சு, 16 வயசுலயே எடிட்டரா வேலை பார்க்க ஆரம்பிச்சார். வாகன வசதி குறைவான அந்தக் காலத்துல, பல கிலோமீட்டர் தூரம் நடந்தே வேலைக்குப் போவார். அப்பவும் சரி, இப்பவும் சரி... எடிட்டிங் என்பது ரொம்பக் கஷ்டமான வேலை. ஆனா, அதுக்கான அங்கீகாரம் குறைவுதான். இருந்தாலும், டெக்னாலஜி வளராத தன் காலத்துல திறமையான எடிட்டர்னு பெயர் வாங்க 100 பர்சன்ட் உழைப்பைக் கொடுத்தார். சினிமாவில் தனக்குனு ஒரு இடத்தையும், வருமானத்தையும் ஏற்படுத்திக்க அவர் ரொம்பக் கஷ்டப்பட்டார்; கஷ்டம் தெரியாம எங்களை வளர்த்தார்.

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

எங்கம்மா வரலட்சுமி, அவங்க திருமணத்தப்போ பி.ஏ பட்டதாரி. மூத்தவனான நான் பிறந்தப்போ தமிழில் எம்.ஏ முடிச்சவங்க, என் தங்கை ரோஜா பிறந்த நேரத்துல இங்கிலீஷ்ல எம்.ஏ முடிச்சாங்க. பெண்கள் ஒரு டிகிரி வாங்கிறதே அரிதான அந்தக் காலத்துல எங்கம்மா டபுள் எம்.ஏ படிச்சிருந்தாலும் எங்களைக் கவனிச்சுக்கிறதுக்காகவே, வந்த லெக்சரர் வாய்ப்பையும் வேண்டாம்னு சொல்லிட்டாங்க.

வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த அம்மாவும் அப்பாவும் காதல் திருமணம் செய்துகிட்டதால, பெரும்பாலான உறவுகளை இழந்தாங்க. அதனாலயே ரெண்டு பேரும் நமக்கு நாமதான்னு வாழ ஆரம்பிச்சாங்க. அவங்களோட சொந்தம், சந்தோஷம் எல்லாமே நான், என் தங்கை ரோஜா, தம்பி ரவிதான். அதனால, எங்களோட பிறந்தநாளை எல்லாம் ஒவ்வொரு வருஷமும் ரொம்ப கிராண்டா கொண்டாடுவாங்க.

வடபழனியில ஒரு வீட்டு மாடியில இருந்த ஓலைக்கீற்று கொட்டகை வீட்டில்தான் நான் பிறந்து வளர்ந்ததா அம்மா - அப்பா சொல்வாங்க. ஓலைக்கீற்று கொட்டகை வீட்டுல இருந்து என்னோட மூணு வயசுல, கோடம்பாக்கத்துல ஒரு ஓட்டு வீட்டுக்குக் குடியேறினோம். அந்த வயசுல இருந்து நடந்த சம்பவங்கள் எல்லாமே எனக்கு ஞாபகம் இருக்கு. அந்தத் தெருவில் இருந்த எல்லா வீடுகளுமே எங்க வீடு மாதிரிதான். அந்த அளவுக்கு அங்க எல்லாருமே ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பா பழகினோம். வசதி வாய்ப்புகள் குறைவா இருந்தாலும், ஒரு நடுத்தரக் குடும்பத்துச் சந்தோஷங்களுக்கு குறைவே இல்லாம வளர்ந்தோம். தெருப்பசங்களோட சேர்ந்து கிரிக்கெட், கில்லி, கபடி, டயர் வண்டி விளையாடியதுனு, சந்தோஷமான நாட்கள் அவை!

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

அசோக் நகர், ஜவஹர் வித்யாலயா சி.பி.எஸ்.இ ஸ்கூல்ல எல்.கே.ஜி-யில இருந்து டென்த் வரை படிச்சேன். ஒண்ணாவது படிக்கிற வரைக்கும், எங்கப்பாதான் தினமும் என்னையும், ரோஜாவையும் சைக்கிள்ல கூட்டிட்டுவந்து ஸ்கூல்ல விட்டுட்டு வேலைக்குப் போவார். சாயங்காலம் அம்மா வந்து கூட்டிட்டுப் போவாங்க.

அமைதியான பையனான என்னை ஒரு பையன் அன்னிக்கு வம்பிழுத்துட்டே இருந்தான். வராத கோபமெல்லாம் சேர்ந்து வந்து, என் லன்ச் பாக்ஸை அவன் மேல தூக்கிப் போட்டுட்டேன். எதிர்பாராதவிதமா அது அவன் மூக்குல பட்டு ரத்தம் கொட்டி, அவன் வெள்ளைச் சட்டை சிவப்புச் சட்டை ஆயிருச்சு. என் கெட்ட நேரம், அன்னிக்குனு பார்த்து, சாயங்காலம் அப்பா என்னைக் கூப்பிட வர, அவர் முன்னாலேயே பிரின்சிபால் என்னைத் திட்டி வார்ன் பண்ணி அனுப்பினார். வீட்டுக்கு வந்தா, ‘ரவுடித்தனம் பண்றியா?’னு எங்கப்பா என்னை அடிச்ச அடியில், அமைதியான பையனான நான், இன்னும் கொயட் ஆயிட்டேன்.

நான், ரோஜா, ரவி மூணு பேரும் படிப்பைத் தாண்டி எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ்லயும் திறமையா இருக்கணும்னு எங்கம்மா ரொம்ப விருப்பப்படுவாங்க. அதுலயும் முதல் பையனான நான், எல்லா விதத்துலயும் பெஸ்டா இருக்கணும் அவங்களுக்கு! என் கூச்ச சுபாவத்தால், மேடை, போட்டிகளில் இருந்தெல்லாம் விலகி இருந்த என்னை, வற்புறுத்தி பெயர் கொடுக்க வைப்பாங்க. அப்படித்தான் நான் ஏழாவது படிக்கிறப்போ, ஸ்கூல் ஆண்டு விழாவில் ‘விஸ்வநாதன் வேலை வேணும்’ பாட்டுக்கு டான்ஸ் ஆடவேண்டியதா போச்சு. குள்ளமா இருந்ததால, என்னை முதல்ல நிக்க வெச்சுட்டாங்க. கூட்டத்தைப் பார்த்துப் பதற்றமான நான், எனக்குப் பின்னாடி நின்ன பையனுக்கு அஞ்சு ரூபாய் கொடுத்து அவனை முன்னாடி நிக்க வெச்சுட்டேன்.

`இப்படிப்பட்டவன், தனி ஒருவனா?'னு கேட்கத் தோணுதுல்ல!

இப்போ நாங்க இருக்கிற இந்த வீடு, அப்பாவுக்கு மிகப்பெரிய மைல் ஸ்டோன். சென்னைக்குத் தனி ஆளா வந்து, சினிமாவில் கஷ்டப்பட்டு, இந்த வீட்டை ரசிச்சு ரசிச்சுக் கட்டினார். இதைக் கட்டும்போது எனக்கு 12 வயசு. நான் ஸ்கூலுக்குப் போயிட்டு வந்து, என்னால முடிஞ்ச கட்டுமான வேலைகளைப் பார்ப்பேன். அதனால இந்த வீடு, எனக்கும் ரொம்ப ஸ்பெஷல். அப்பா பட்ட கஷ்டங்களையும், குடும்பத்தோட கஷ்ட சூழ்நிலைகளையும் கண்கூடாகப் பார்த்து வளர்ந்ததால நான் எப்பவுமே எதுக்கும் அதிகமா ஆசைப்பட மாட்டேன்... இப்போ வரைக்கும்.

எனக்கு ஆறு வயசு இருக்கும்போது மூணாவது குழந்தையா அம்மா வயித்துல ரவி இருந்த நேரம். வேலைப்பளுவாலும், உடம்பை சரியா கவனிச்சுக்காம விட்டதாலயும் அப்பாவுக்குத் திடீர்னு வாதம் வந்து கை, கால் செயல்படாம போயிடுச்சு. அப்போ கர்ப்பிணியா இருந்த எங்கம்மா, அதுவரை நாங்க பார்த்திருக்காத இரும்பு மனுஷியா தன்னை வெளிப்படுத்தி, அந்தச் சூழலைக் கையாண்டு, அப்பாவையும், தன்னையும், எங்களையும் பார்த்துக்கிட்டாங்க. ரவி பிறந்த நேரம், அப்பாவுக்கும் வாதம் சரியாயிடுச்சு. எங்க சொந்தபந்தமும் எங்களோட சேர ஆரம்பிச்சாங்க. அதனாலேயே ரவி எங்களுக்கெல்லாம் செல்லப்பிள்ளையா ஆயிட்டான்.

ரோஜாவுக்கும் எனக்கும் 11 மாசம்தான் வித்தியாசம். ஆனா, எனக்கும் ரவிக்கும் 6 வயசு வித்தியாசம். அதனால அந்தக் கடைக்குட்டியை நானும் ரோஜாவும் அப்படிக் கொண்டாடுவோம். ஒவ்வொரு வருஷமும் குடும்பத்தோட பொருட்காட்சிக்குப் போவோம். அங்க கொழுகொழு குழந்தைகளுக்கான போட்டியில ரவியை நிக்க வெச்சுடுவோம். தொடர்ந்து மூணு வருஷமா ரவிதான் முதல் பரிசு வாங்கினான். அவ்ளோ பப்ளியா, க்யூட்டா இருப்பான். பார்க்கிறவங்க எல்லோரும் அவனைத் தூக்கிக் கொஞ்சுவாங்க.

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

என் தங்கை ரோஜாவும், ரவியும் ரொம்பவே குறும்பு. எப்போ பார்த்தாலும் ஒருத்தரோட ஒருத்தர் சண்டை போட்டுட்டே இருப்பாங்க. ரோஜாவோட முடியை அடிக்கடி இழுத்து ரவி குறும்பு பண்ணிட்டே இருப்பான். அதிலும் ரவி, அப்பாவை ‘வாடா போடா’, டீச்சரை ‘வாடி போடி’னு பேசுற அளவுக்குச் சேட்டை. அதனால அம்மா அவனை ‘டேய் ரவுடி’னு அதட்டினா, ‘நான் ரவிடீ’னு சொல்லுவான். கடைக்குட்டி என்பதால கொஞ்சம் அதிக சுதந்திரம்னாலும், அதைத் தப்பாப் பயன்படுத்தினது இல்ல. கொஞ்சம் வளர்ந்ததுக்கு அப்புறம், ரவி ரொம்ப அமைதியா மாறினது எங்களுக்கெல்லாம் சர்ப்ரைஸ்.

நானும், ரவியும் எங்க தெரு பசங்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவோம். பக்கத்துல, ஃபைட் மாஸ்டர் விக்ரம் தர்மா சார் வீடு. மாஸ்டரைப்  பார்த்தாலே அப்போ எங்களுக்குப் பயமா இருக்கும். பந்து அவர் வீட்டுக்குள்ள விழுந்ததுன்னா, அடுத்த ரெண்டு, மூணு வாரத்துக்கு விளையாடவே மாட்டோம். அதேமாதிரி, விளையாடி எங்க வீட்டுக் கண்ணாடியை உடைச்சுட்டா, அப்பா வர்றதுக்குள்ள அம்மா கார்பென்டரை வரவழைச்சு, புதுக் கண்ணாடியை மாத்தி, எங்களை காப்பாத்திடுவாங்க. அதனாலயே எங்களுக்கு அப்பான்னா பயம்; அம்மான்னா செல்லம்.

இன்னும் சுவாரஸ்யங்கள் நிறையவே இருக்கு... பிப்ரவரி 9-ம் தேதி வர்ற `அவள் 16'-ல தொடர்ந்து பகிர்ந்துக்கிறேன்.

அதுவரைக்கும் பை பை!

கு.ஆனந்தராஜ், படங்கள்:எம்.உசேன்

மோகன் ராஜாவின் கலகலப்பான பேட்டியை அருகில் இருக்கும் QR Code-ஐ ஸ்கேன் செய்தோ, கீழே இருக்கும் வீடியோ லிங்க்கை க்ளிக் செய்தோ பார்க்கலாம்.

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!