
“எங்க வீட்ல மூணு ஹீரோயின்கள்!”
சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ரஜினி முருகன்’ படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ், எண்பதுகளில் கலக்கிய நடிகை மேனகாவின் மகள்.அம்மாவையும், பெண்ணையும் சேர்த்துப் பிடித்த ஒரு சுவாரஸ்ய சந்திப்பு...
‘‘சீனியர் முதல்ல பேசட்டும்...’’ என்று கீர்த்தி குறும்பாகச் சிரிக்க, அவரைச் செல்லமாகத் தட்டிவிட்டு நம் பக்கம் திரும்பினார் மேனகா.
‘‘மலையாளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடிச்சிருந்தாலும், தமிழில் ‘நெற்றிக்கண்’ மாதிரி செலக்டிவ்வான 10 படங்களில்தான் நடிச்சிருப்பேன். காரணம்... ஒரு பாட்டு, குறைவான ஸீன்கள்னு நடிக்கிற படங்கள்தான் வந்துச்சு. ஆனா, பல வருஷம் கழிச்சு என் பிள்ளைங்களோட உட்கார்ந்து பார்க்கும்படியான நல்ல கதைகளையே தேர்வு செய்ய விரும்பினதால, லிமிட்டடாதான் கமிட் ஆனேன். தயாரிப்பாளர் சுரேஷ்குமாரை திருமணம் செய்தபிறகு, புரொடக்ஷன் வேலைகளில் கவனம் செலுத்தினேன். ரேவதி, கீர்த்தினு ரெண்டு பெண் குழந்தைகளோட அழகானது வாழ்க்கை.
திருமணமாகி ஒன்பது வருஷம் கழிச்சு, மம்முட்டி சார் தூர்தர்ஷன் சேனல்ல தயாரிச்ச ஒரு சீரியலில் நடிக்க என்னை வற்புறுத்திக் கேட்டதால ஒப்புக்கிட்டேன். ஆனாலும் அப்போ என் பொண்ணுங்களுக்கு சின்ன வயசா இருந்ததால, அதோட நடிப்பை டிராப் செய்துட்டேன். அவங்க ரெண்டு பேரும் வளர்ந்து, நான் அவங்களுக்கு அதிகமா தேவைப்படாத நேரம் வந்தப்போ, ரெண்டு சீரியலில் நடிக்க சம்மதிச்சேன். அதுவும் திருவனந்தபுரத்துக்குள்ளேயே, காலையில போனா, மாலை வீடு திரும்புற மாதிரியான ஷெட்யூல்தான். தொடர்ந்து, பிடிச்ச கதையம் சம் உள்ள படங்களில் மட்டும் நடிச்சிட்டு இருக்கேன்’’ என்ற மேனகாவை, ‘‘அம்மா... நானும் கொஞ்சம் பேசிக்கட்டுமா?!’’ என்று இடைமறித்து என்ட்ரி கொடுக்கிறார், ஜூனியர்.

‘‘என்னோட சின்ன வயசில் திலீப் சாரின் வளர்ப்பு மகளா நடிச்ச ‘குபேரன்’ படம் உட்பட, எங்க அப்பா தயாரிப்பில் மூன்று படங்களில் குழந்தை நட்சத்திரமா நடிச்சிருந்தேன். தொடர்ந்து நடிக்க ரொம்ப ஆசைப்பட்டாலும், ‘முதல்ல படி’னு கண்டிப்பா சொன்னங்க அம்மா. நடிகைக்கு மகளா பிறந்தும் என் நிலைமையைப் பார்த்தீங்களா..?!’’ என்று கீர்த்தி கண்ணடிக்க, அதை ரசித்தபடியே தொடர்ந்தார் மேனகா.
‘‘நடிப்பெல்லாம் இல்ல... நான் என் பிள்ளைங்களை நல்லா படிக்க வைக்கணும்னு தான் ஆசைப்பட்டேன். கீர்த்தி ஒன்பதாவது படிக்கும்போது இருந்தே அவளுக்கு சினிமா வாய்ப்புகள் வந்தாலும், படிப்புதான் முக்கியம்னு கண்டிப்போட மறுத்துட்டோம். என் கணவரோட நெருங்கிய நண்பரான டைரக்டர் பிரியதர்ஷன், ‘என்னோட அடுத்த படத்துக்கு ஒரு நடிகை வேணும்’னு கேட்க, நாங்க பல பெண்களை பரிந்துரைத்தும் அவருக்குப் பிடிக்கல. ஒருநாள் எங்க வீட்டுக்கு வந்த அவர், ‘நான் என் கதைக்கு ஒரு பொண்ணப் பார்த்து வெச்சிருக்கேன்; ஆனா, அவங்க அப்பா ஒப்புக்குவாரான்னு தெரியலை’னு சொல்ல, ‘யாரா இருந்தாலும் நான் சம்மதம் வாங்கித்தர்றேன்’னு சொன்னார் என் கணவர். ‘கீர்த்தி!’னு அவர் சொல்ல, நாங்க ஷாக் ஆகிட்டோம்.
எனக்குக் கீர்த்தியை திரைத்துறைக்கு அனுப்ப ரொம்பவே தயக்கம். ஏன்னா, எங்க பீரியட் மாதிரி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தர்ற படங்கள் எல்லாம் இப்போ வர்றதில்லை. இவ ஆசைக்காக நடிக்க வந்து, சில படங்களிலேயே இண்டஸ்ட்ரியைவிட்டுக் காணாமப் போயிட்டா ரொம்ப சங்கடம். இருந்தாலும், பிரியதர்ஷன் சார்கிட்ட மறுக்க முடியாம சம்மதிச்சோம். அப்போ சென்னை பியர்ல் இன்ஸ்டிட்யூட்ல, பி.ஏ., ஃபேஷன் டிசைனிங் மூணாவது வருஷம் படிச்சிட்டு இருந்த கீர்த்தி, இன்டர்ன்ஷிப்காக லண்டன் போயிருந்தா. போனில் விஷயத்தைச் சொன்னதும், பொண்ணுக்கு ஒரே குஷி!’’ எனும்போது, மேனகாவின் குரலிலும் சந்தோஷம்.
‘‘பிரியதர்ஷன் சார் இயக்கிய, என்னோட முதல் படமான ‘கீதாஞ்சலி’ ஹிட் ஆகி, எனக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தாலும், காலேஜ் முடிக்கிற வரைக்கும் வேற எந்தப் படத்துலயும் என்னைக் கமிட் ஆக விடலை அம்மா. அந்தளவுக்கு இவங்க ஸ்ட்ரிக்ட். படிப்பை முடிச்சிட்டு ‘ரிங் மாஸ்டர்’ படத்தில் நடிச்சேன். ‘குபேரன்’ படத்தில் திலீப் சாருக்கு பொண்ணா நடிச்சிட்டு, ‘ரிங் மாஸ்டர்’ படத்தில் அவருக்கு ஜோடியா நடிச்சது, சுவாரஸ்யமான அனுபவமா இருந்தது. அடுத்து பிரியதர்ஷன் சாரின் அசோஸியேட்டா இருந்த ஏ.எல்.விஜய் சார் ‘இது என்ன மாயம்’ படத்துக்குக் கேட்டார்.

‘உனக்குக் கதை பிடிச்சிருந்தா நடி’னு சொன்னாங்க அம்மா. ‘ஸ்ட்ரிக்ட் அம்மா... இப்படி ஸ்வீட் அம்மா ஆகிட்டீங்களே?!’னு நான் சர்ப்ரைஸ் ஆக, ‘இதுக்கு முந்தின படங்களில் நடிச்சப்போ உனக்கு வயசும், அனுபவமும் போதாது. அதனால நானும் சேர்ந்து உன் முடிவுகளை எடுத்தேன். ஆனா, இப்போ நீ ஒரு ஹிட் ஆக்ட்ரஸ். இனி உனக்குள்ள பொறுப்புகளையும் நீ சமாளிக்கக் கத்துக்கணும்’னு சொன்னாங்க. அதுதான் அம்மா!’’ என்று மேனகாவின் கன்னங்கள் கிள்ளிச் சிரிக்கும் கீர்த்திக்கு, ‘பாம்புச் சட்டை’, தனுஷ் உடன் ஒரு படம், ஒரு தெலுங்குப் படம் என்று தொடர்கின்றன வாய்ப்புகள்.
‘‘எங்க வீட்டுல இன்னொரு ஹீரோயினும் இருக்காங்க. ஆனா அவங்க ஆஃப் ஸ்கிரீன் ஹீரோயின்!’’ என்று தன் மூத்த பெண் ரேவதி பற்றிப் பேச ஆரம்பித்தார் மேனகா. ‘‘ரேவதி 17 வருஷமா பத்மா சுப்ரமணியம்கிட்ட நடனம் கத்துக்கிட்டா. சின்ன வயசில் இருந்தே நடிப்பைவிட டெக்னிக்கல் சைடுலதான் அவளுக்கு ஆர்வம். அமெரிக்காவில் அனி மேஷன், விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சுட்டு வந்து ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ மற்றும் ‘க்ரிஷ் 3’ படங்களில் வொர்க் பண் ணினா. இப்போ கேரளாவில் ‘ரேவதி கலா மந்திர் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்’டை நடத்திட்டு வர்றா. அதில் நடிப்பு, போட்டோகிராஃபி, டைரக்ஷன், எடிட்டிங்னு எல்லா பயிற்சிகளும் வழங்கப்படுது. வீட்டில் நாங்க நாலு பேருமே கலைத்துறையில் இருக்கிறதால, எல்லோருமே க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்போல எல்லா விஷயங்களையும் ஷேர் பண்ணிக்குவோம்’’ என்றபோது, மேனகாவின் முகத்தில் அம்மாவின் நிறைவு!
கு.ஆனந்தராஜ்