மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திரைத்தொண்டர் - 1

திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம்
News
திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம் ( திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம் )

புதிய தொடர் ஆரம்பம்!பஞ்சு அருணாசலம்

ஞ்சு அருணாசலம்... தமிழ் சினிமாவில் ஸ்கிரீன்ப்ளே டாக்டர். கவிஞர் கண்ண தாசனிடம் 12 ஆண்டுகள் சுமார் 600 படங்களுக்கு உதவியாளராகப் பணியாற்றியவர்; பத்திரிகையாளர். திருமண வீடுகளின் தேசியகீதமான, ‘மணமகளே மருமகளே வா... வா...’ பாடலை எழுதியவர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு என இவர் விளையாடிய களங்கள் அதிகம்.

‘எல்லா கதைகளும் நல்ல கதைகள்தான். அதை சினிமாவுக்கான மொழியில் சொல்வதில்தான் அதன் வெற்றி அடங்கியிருக்கிறது’ என்பார். அப்படிப்பட்ட கதைகளை திரை மொழியாக்குவதில் வல்லவர். தங்கள் படங்களின் கதையை எப்படிக் கொண்டுசெல்வது எனத் தெரியாமல் திணறுபவர்களுக்கு ‘இப்படி மாற்றினால் சரியாக இருக்கும்’ என, கதையின் சிக்கலை அவிழ்க்கும் உத்தி அறிந்த `திரைத்தொண்டர்'.

அப்போது வெளி கம்பெனிகளின்  படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிக்கொண்டிருந்தேன். பிறகு சொந்தமாக `உறவுசொல்ல ஒருவன்’, `ஆண்பிள்ளை சிங்கம்’... ஆகிய இரு படங்களைத் தயாரித்தேன். இரண்டும் சரியாகப் போகவில்லை. அந்தச் சமயத்தில் `எனக்கு ஏதாவது உதவி செய்’ என்று கேட்ட என் தம்பிக்காக அவரின் பெயரில்
`எஸ்.பி.டி ஃபிலிம்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன். அந்த பேனரில்தான் ‘ப்ரியா’, ‘கவிக்குயில்’ போன்ற படங்களை எடுத்தேன். `ப்ரியா' வெற்றி பெற்றாலும், `கவிக்குயில்' தோல்வியடைந்தது.

திரைத்தொண்டர் - 1
திரைத்தொண்டர் - 1

பார்ட்னர்ஷிப்பில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால், என் பெயரிலேயே `பி.ஏ ஆர்ட்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினேன். முதல் படமே பிரமாண்ட வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இந்தியில் அப்போது `ஷோலே' வெளியாகி, சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தது. அப்போது வளர்ந்துகொண்டிருந்த ரஜினியையும் கமலையும் வைத்து, அதேபோல பிரமாண்டமான ஒரு படம் பண்ணலாம் என்ற ஆர்வம் வந்தது.

ரஜினிக்கு ‘காயத்ரி’, ‘பைரவி’, ‘ப்ரியா’ போன்ற படங்களும், கமலுக்கு ‘குரு’ தொடங்கி ஏகப்பட்ட படங்களும் அடுத்தடுத்து ஹிட். பாலசந்தர் சார் இயக்கத்தில் `அவர்கள்’ படத்திலும், வாள் சண்டைகளும் பிரமாண்ட அரங்குகளும்கொண்ட `அலாவுதீனும் அற்புத விளக்கும்’ என்ற படத்திலும் நடித்துக்கொண்டி ருந்தனர். அப்போது இருவரிடமும் கால்ஷீட் கேட்டேன். உடனே கொடுத்தனர். ஆனால், அவர்கள் ஏற்கெனவே ஒப்புக்கொண்டிருந்த படங்களை முடிக்க ஒரு வருடம் ஆனது.

அந்த ஒரு வருடத்தில் இருவரும் சேர்ந்து நடித்த ‘அவர்கள்', ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘நினைத்தாலே இனிக்கும்’ அனைத்துமே எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இருவருக்குமே சங்கடமாகிவிட்டது. ‘ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்ச படங்களே ஓடலைனா, தனித்தனியா நடிச்சா வியாபாரம் இன்னும் பாதிக்குமே’ என விநியோகஸ்தர்கள் சோர்ந்துபோயிருந்தனர். `இனி சேர்ந்து நடிக்கத்தான் வேண்டுமா?’ என இருவரும் யோசிக்கத் தொடங்கினர்.

‘இப்படிச் சேர்ந்தே பண்ணிட்டு இருந்தோம்னா உங்களுக்கும் பாதிக்கும்; எனக்கும் பாதிக்கும். என்ன பண்ணலாம்?’ என ரஜினியிடம் கமல் கேட்டார். ‘நீங்களே சொல்லுங்க’ என ரஜினி சொல்ல, அப்போது ‘இருவருக்கும் தனி ஸ்டைல் உண்டு. ரசிகர்களும் இருக்கிறார்கள். இப்ப தனித்தனியா நடிச்சாதான், நாம வளர முடியும். ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சா, அது உங்க படமும் இல்லாம என் படமும் இல்லாம ரெண்டுங் கெட்டானாப் போய், ரசிகர்கள் குழம்ப வாய்ப்பு இருக்கு’ எனச் சொல்லியிருக்கிறார் கமல். `இனி நாம் சேர்ந்து நடிக்க வேண்டாம்' என இருவரும் சேர்ந்து முடிவெடுத்தனர்.

திரைத்தொண்டர் - 1
திரைத்தொண்டர் - 1

அந்தச் சமயத்தில் அவர்கள் ஒன்றாக நடிக்க ஒப்புக்கொண்டிருந்த ஒரே கம்பெனி என்னுடையது தான். அவர்கள் நடிக்கும் படத்தின் கதையை முடிவு செய்து, ஸ்கிரிப்ட் எழுதிக்கொண்டிருந்தேன். `பஞ்சு அண்ணன் என்ன நினைப்பாரோ!' என இருவருமே என்னிடம் பேசத் தயங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் இருவருக்குள் ஏதோ பிரச்னை என நான் நினைத்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தனர்.

எஸ்பி.முத்துராமனை அழைத்து, ‘நீங்க பஞ்சு அண்ணன்கிட்ட எங்களைவெச்சு தனித்தனியா படம் பண்ணச் சொல்லுங்க, பண்றோம்’ எனச் சொல்லி அனுப்பியிருந்தார்கள். முத்துராமன் வந்து விஷயத்தைச் சொன்னபோது நான் வருத்தப்படவில்லை. ‘ரெண்டு பேருமே கெட்டிக்காரங்க. ரெண்டு பேரையும் சேர்த்து வெச்சுத்தான் எனக்கு கதை எழுதத் தெரியுமா... தனித் தனியா நடிக்கணும்னாலும் கதை எழுதத் தெரியும்’ என்றேன்.

‘இப்ப அவர் எழுதியிருக்கிற கதை கமலுக்கு சரியா இருந்தா, அவரை வெச்சு எடுக்கட்டும். ரஜினியை வெச்சு, அடுத்த படம் பண்ணிக்கலாம். இல்லை, ரஜினிக்கு சரியா இருந்தா கமலுக்கு அடுத்து படம் பண்ணலாம்’ என அவர்களின் கருத்தை முத்துராமன் நினைவுபடுத்தினார்.

எனக்கு அது சரி எனப் படவில்லை. இருவரில் ஒருவரைத் தேர்வுசெய்தால், இன்னொருவர் தவறாக நினைக்க வாய்ப்பு இருப்பதாகத் தோன்றியது. `ரெண்டு பேரும் `சேர்ந்துதான் நடிக்க மாட்டேன்'னாங்களே தவிர, `என் படத்துல நடிக்க மாட்டேன்'னு சொல்லலை. ரெண்டு பேரையும் கால்ஷீட் கொடுக்கச் சொல்லுங்க. நான் தனித்தனியா ரெண்டு படங்கள் எடுக்கிறேன். அதுவும் ஒரே சமயத்தில்'’ என்றேன்.

``முடியுமா?'’ - தயங்கினார் முத்துராமன்.

`‘நீங்க ஒத்துழைச்சா முடியும்!'’ என்றேன்.

‘`நான் என்ன ஒத்துழைக்கணும்?’'

`‘ரெண்டு படங்களையுமே நீங்க டைரக்ட் பண்ண முடியாது. ஒரு படம் நீங்க டைரக்ட் பண்ணுங்க. இன்னொரு படத்தை யார் டைரக்ட் பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க.'’
அப்போதுதான் `இயக்குநர் ஸ்ரீதர், பாரதிராஜா மற்றும் பாலசந்தரின் உதவி இயக்குநர்கள் எல்லாம் `இயக்குநர்கள்' ஆகிக்கொண்டிருந்தார்கள். ஆனால், தன் உதவி இயக்குநர்கள் யாரும் இயக்குநர் ஆகவில்லையே' என்ற வருத்தம் முத்துராமனுக்கு இருந்தது.

`‘என் உதவி இயக்குநர்கள் முத்து அல்லது ஜி.என்.ரெங்கராஜன் ரெண்டு பேர்ல யாருக் காவது ஒருத்தருக்கு ஒரு படத்தை இயக்க சான்ஸ் கொடுங்க. இன்னொரு படத்தை நானே பண்றேன்’' என்றார். ‘களத்தூர் கண்ணம்மா’ தொடங்கி கமலுக்கு ரெங்கராஜன் நெருக்கம் என்பதால், அவரைத் தேர்வுசெய்தேன். நான் தயார் செய்திருந்த அந்த ஸ்கிரிப்ட்டை ஓரமாக வைத்துவிட்டு, இருவருக்கும் தனித்தனியாக கதை பண்ணலாம் என யோசித்தேன். அப்போது கமலுக்கு ஏ கிளாஸ் ரசிகர்கள் அதிகம். அவர் படம் ரிலீஸ் ஆனால், மோட்டார் சைக்கிள், கார்களில் வருபவர்கள்தான் அதிகம். 2 ரூபாய் 25 பைசா டிக்கெட் கிடைக்காது. படம் அட்வான்ஸ் புக்கிங்கில் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால், முதல் நாள் முதல் காட்சிக்கே 60 பைசா டிக்கெட் எளிதாகக் கிடைக்கும்.

திரைத்தொண்டர் - 1

ரஜினி அப்படியே நேர் எதிர். 60 பைசா டிக்கெட் பிளாக்கில் கிடைக்கும். 2 ரூபாய் 25  பைசா டிக்கெட் எளிதாகக் கிடைக்கும். காரணம், அப்போது அவர் படங்களுக்கு குடும்பங்களும் பெண் ரசிகைகளும் வருவது குறைவு. ஆயிரம் பேர் வந்தால், அதில் 50 பெண்கள் வருவதே அபூர்வம்.

‘கையைச் சுத்துறது, சிகரெட்டைத் தூக்கிப்போட்டுப் பிடிக்கிறது... இதெல்லாம் பத்து பதினைஞ்சு படங்களுக்குத்தான் தாக்குப்பிடிக்கும். அப்புறம் அவ்வளவுதான்ப்பா’ என ரஜினி படங்களைப் பற்றி பேசுவார்கள். ஆனால், அவருக்குள் மிகச் சிறந்த ஒரு நடிகன் இருக்கிறான் என்பதில் நான் தெளிவாக இருந்தேன். சண்டையோ, இரட்டை அர்த்த வசனங்களோ, பிரமாண்டமான அரங்குகளோ, எந்தவித ஸ்டைலும் இல்லாமல், குடும்பப்பாங்கான ஒரு கதையை எழுதினேன். இன்னும் சொல்லப்போனால், என் வாழ்க்கையில் நான் அனுபவித்த சில விஷயங்களையும் சேர்த்து அந்தக் கதையை எழுதியிருந்தேன்.

60 பைசா டிக்கெட்டுக்கு ரசிகர்கள் முட்டிமோதக்கூடிய அளவுக்கு, கமலுக்கு செம லோக்கலான ஒரு கமர்ஷியல் படம்... ரஜினிக்கு பெண் ரசிகைகள் குடும்பம் குடும்பமாக வருவதுபோல ஒரு குடும்பப் படம். இந்த கான்செப்ட்டை மனதில் வைத்து ஒரு வாரத்துக்குள் இருவருக்கும் தனித் தனியாகக் கதைகளைத் தயார்செய்தேன். அந்த இரு கதைகளுமே ஏற்கெனவே ஐடியாவாக இருந்தவை. எப்போதும் 10, 20 கதைகள் வெறும் ஐடியாவாக இருக்கும். தேவைப்படும்போது அதை டெவலப் செய்தால், ஸ்கிரிப்ட்டாகிவிடும்.

ரஜினி படத்துக்கு இயக்குநர் எஸ்பி.முத்துராமன்; கமல் படத்தை இயக்குவது அவரின் உதவி இயக்குநர் ரெங்கராஜன். ‘பஞ்சு அண்ணன், சீனியர் எஸ்பி.முத்துராமனை ரஜினி படம் பண்ண அனுப்புறார். நமக்கு புது ஆளை அனுப்புறாரே. சரியா வருமா?’ என கமல் ஒரு நிமிஷம்கூட யோசிக்கவில்லை. சந்தோஷமாக ஒப்புக்கொண்டார்.

எளிமையான ஆர்ட்டிஸ்ட், சிம்பிள் புரொடக்‌ஷன் என ஒரு பக்கம் ரஜினி படம், டபுள் ஆக்‌ஷன் ஹீரோ, ஸ்ரீதேவி, செந்தாமரை, தங்கவேலு, தேங்காய் சீனிவாசன், மனோரமா, மேஜர் சுந்தர்ராஜன், விஸ்.எஸ்.ராகவன் என பெரிய ஆர்ட்டிஸ்ட் பட்டாளத்துடன் இன்னொரு பக்கம் கமல் படம் என பரபரப்பாக ஷூட்டிங் முடித்து வெளியிட்டோம். இரண்டுமே சில்வர் ஜூப்ளி ஹிட்ஸ். அந்த கமல் படம் ‘கல்யாணராமன்’, ரஜினி படம், ‘ஆறிலிருந்து அறுபதுவரை’. அந்த இரு படங்களுக்கும் இசை, இசைஞானி இளையராஜா. இந்த இரண்டு படங்களின் வெற்றி விழாக்களையும் தலைமையேற்று நடத்தியவர் கவிஞர் கண்ணதாசன். 

`கதை படிப்பதே காவாலித்தனம்' என நினைத்த குடும்பத்தில் இருந்து வந்த நான், பின்நாட்களில் என் சித்தப்பாவும் பிரபல கவிஞருமான கண்ணதாசனிடமே உதவியாளராகச் சேர்வேன் என்றோ, கதாசிரியன் ஆவேன் என்றோ, இந்திய சினிமாவே வியக்கும் கமல், ரஜினியுடன் அதிகப் படங்கள் பணியாற்றுவேன் என்றோ, ஆயிரம் படங்களைக் கடந்துள்ள இசைஞானி இளையராஜாவை அன்று ‘அன்னக்கிளி’யில் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்றோ நினைத்துகூடப் பார்த்தது இல்லை.

- தொண்டு தொடரும்...