
பாலிவுட் சர்ப்ரைஸ்வெள்ளித்திரை
மணப்பெண் கழுத்தில் மாப்பிள்ளை தாலி கட்டுவதுதான் இந்தியத் திருமணம். ஆனால், மாப்பிள்ளை கழுத்தில் மணப்பெண் தாலி கட்டினால் என்ன நடக்கும்? ‘கி அண்ட் கா' (அவனும் அவளும்) பாலிவுட் படம் தருகிறது இந்தக் கேள்விக்கான சுவாரஸ்யமான, சிந்திக்கவைக்கும் பதில். ஆண், பெண் யாராக இருந்தாலும் சம்பாதிக்கும் ஒருவர் சம்பாதிக்காத தன் இணையின் மீது ஆதிக்கம் செலுத்துவார், இதில் பாலின வேறுபாடு இல்லை என போகிறபோக்கில் பெரிய உண்மையைச் சொல்கிறது பால்கியின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்த ஹிந்தி திரைப்படம்.

கியா (கரினா கபூர்), கபீர் (அர்ஜுன் கபூர்) இருவரும் காதல் தம்பதி. கபீருக்கு வேலைக்குச் செல்லப் பிடிக்கவில்லை. தாயின் இழப்பால் வாடும் அவன், தன் தாயைப்போலவே ‘ஹோம் மேக்கர்’ ஆக வாழ விரும்புகிறான். அவனைப் புரிந்துகொண்டு கணவனாக ஏற்றுக்கொள்கிறாள் கியா. இதற்கு கியாவின் அம்மா ஒப்புதல் கொடுக்க, கபீரின் தந்தை, சம்பாதிப்பதே ஆண்களுக்கு அழகு என்று சொல்லி வேலைக்குப் போகாத தன் மகனை வெறுக்கிறார். அப்பாவின் ஒப்புதல் இல்லாமலேயே கியாவுக்கும் கபீருக்கும் திருமணம் நடக்கிறது. கபீரின் கழுத்தில் கியா தாலி கட்டுகிறாள்.
மார்க்கெட்டிங் துறையில் வேலைபார்க்கும் கியா தினமும் வேலைக்குச் செல்ல, கபீர் முழு நேர இல்லத்தரசனாக இருக்கிறான். தன் அம்மாவை ஒரு ஆர்ட்டிஸ்ட் என்று சொல்லும் கபீர், ‘நீ வெட்டியாதானே வீட்ல இருக்கே?’ ‘ஹவுஸ் வைஃப்தானே?’ என்றெல்லாம் பெண்களை ஏளனமாகப் பேசும் இந்த சமூகத்தில், வீட்டை ஒழுங்குபடுத்தும் ஒவ்வொரு பெண்ணும் ஆர்ட்டிஸ்ட்தான் என தன் அம்மாவுக்குப் பெருமை சேர்க்கிறான். தன்னையும் ஆர்ட்டிஸ்ட் என்றே அடையாளப் படுத்திக் கொள்கிறான்.
கியாவின் கம்பெனியில் சமையல் எண் ணெயின் மார்க்கெட்டிங்கை கூட்டுவதைப் பற்றி டிஸ்கஷன் நடக்கிறது. பலரும், ‘30% டிஸ்கவுன்ட் கொடுக்கலாம்’ என்று சொல்ல, ‘50% கொடுக்கலாம். ஆனால், ஒரு நிபந்தனை. கடையில் ஆண்கள் வந்து எண்ணெய் வாங்கினால் மட்டுமே இந்தச் சலுகை. அப்போதுதான் ஆண்கள் கடைக்கு வருவார்கள், அதே நேரத்தில் தங்கள் சுமைகளில் ஒரு துளியேனும் பங்குஎடுக்க வைத்த நம் நிறுவனத்தின் மீது பெண்களுக்கும் அபிமானம் கூடும்’ என்று கியா சொல்ல, நிறுவனமும் அதை ஏற்று நடைமுறைப்படுத்துகிறது. இந்த ஐடியாவை திரையில் கொடுத்த பால்கிக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்!
இதற்கிடையில், வீட்டுச் செலவுகள் தாறு மாறாக எகிற, கபீர் தன் பக்கத்து வீட்டுப் பெண்களுக்கு உடல் எடையைக் குறைக்க தன் வீட்டிலேயே உடற்பயிற்சி அளிப்பது, டயட் உணவுகள் கொடுப்பது என அதன் மூலமாக வருமானம் ஈட்டுவதுடன், மக்கள் மத்தியில் பிரபலமும் அடைகிறான். அதுவரை எந்த வகையிலும் கபீர் மீது பொறாமையோ, ஈகோவோ கொள்ளாத கியாவுக்கு, இந்தப் புள்ளியில் ஈகோ முளைக்கிறது. அந்த ஈகோ நாளடைவில் பெரிதாக வெடித்து, கபீரை கியா வெறுத்துப் பிரியும் அளவுக்குச் செல்கிறது.

இதனிடையே, கபீர், அமிதாபச்சன் வீட்டுக்குச் செல்ல, அங்கே அவர் மனைவி ஜெயாபச்சன் கியாவுக்கு ஒரு பரிசை கொடுத்தனுப்புகிறார். அந்த பரிசை திறந்து பார்க்கும் கியா, அதற்குள் இருக்கும் கடிதம் கண்டு வியக்கிறாள். ‘உன்னைப்போல் ஒரு பெண்ணை, ஓர் ஆண் திருமணம் செய்துகொள்வது ஆச்சர்யம் அல்ல. வேலைக்குச் செல்லாத கணவனை ஊர் என்ன சொல்லும் என்று யோசிக்காமல், பணத்துக்காக அல்லாமல், அவன் அன்புக்காக அவனை ஏற்றுக்கொண்ட நீயே சிறந்தவள்’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பார் ஜெயாபச்சன்.
இறுதியில் வெல்வது காதலா, ஈகோவா? இல்லத்
தரசன் கான்செப்ட் வொர்க்அவுட் ஆகுமா? கவிதையாகச் சொல்கிறார்கள் க்ளைமாக்ஸில்!
ஆண் - பெண் சமநிலை ஏன் தேவை? ஆண், பெண்ணின் வேலையை எடுத்துச்செய்ய முன் வந்தால் இந்த சமூகம் பார்க்கும் பார்வை மாறுமா? அழகான காதல் முடிச்சுகளால் தெளிவான சிந்தனைப் பாடம் எடுக்கிறார்கள் கியும் காவும்!
மனைவியை நேசிக்கும், கணவனை நேசிக்கும் அனைவருக்கும் இந்தப் படம் 50 - 50 ட்ரீட் சர்ப்ரைஸ்!
பொன்.விமலா, எம்.உசேன்