மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திரைத்தொண்டர் - 2

திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம்
News
திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம் ( திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம் )

பஞ்சு அருணாசலம்

சிவகங்கை மாவட்டம், சிறுகூடல்பட்டி சாத்தப்பச் செட்டியார் - விசாலாட்சி ஆச்சி தம்பதிக்கு என் தகப்பனாரையும் சேர்த்து மூன்று ஆண்கள், ஆறு பெண்கள் என மொத்தம் ஒன்பது பிள்ளைகள். அதில் ஐந்தாவதாகப் பிறந்த என் தகப்பனார் கண்ணப்பன், வீட்டுக்கு மூத்த மகன். ஆறாவது மகன் ஏ.எல்.சீனிவாசன். எட்டாவது மகன் முத்தையா. இவர்தான் பின்னாளில் கவியரசு கண்ணதாசன் எனப் புகழ்பெற்றார்.

நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தில், சுவீகாரம் கொடுப்பதும் எடுப்பதும் அன்று முதல் இன்று வரை தொன்றுதொட்டுத் தொடரும் வழக்கம். அப்படி தன் சிறு வயதிலேயே காரைக்குடியில் இருந்த கிருஷ்ணன் செட்டியார் குடும்பத்துக்கு என் தகப்பனார் சுவீகாரமாக வந்தார்.மலேசியா பினாங்கு நகரில் வட்டிக்கடை நடத்துவதுதான் அவர்களின் குடும்பத் தொழில். அது நல்ல வசதியான குடும்பம்.
என் தகப்பனார் சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ படித்தவர். படிக்கும்போதே கல்யாணம் முடிந்துவிட்டது. வசதியான குடும்பத்தில் பிறந்த எங்கள் அம்மா தேனம்மை ஆச்சி, ஏகப்பட்ட தங்க-வைர நகைகளோடும் பணம் பொருட்களோடும் திருமணமாகி வந்தவர். அவர்களுக்குப் பிறந்த முதல் குழந்தை இறந்துவிட்டது. இரண்டாவதாக நான். எனக்குப் பிறகு நான்கு தம்பிகள், இரண்டு தங்கைகள் என நாங்கள் மொத்தம் ஏழு பேர். எனக்கு விவரம் தெரிந்தவரை என் தகப்பனார் வேலைக்குப் போவதில் விருப்பம் இல்லாதவராக இருந்தார். சம்பளத்துக்கு வேலைசெய்வதை அவமானமாகக் கருதினார்.

திரைத்தொண்டர் - 2
திரைத்தொண்டர் - 2

பொள்ளாச்சி மகாலிங்கம், எஸ்.ஏ.பி.அண்ணாமலை, கருமுத்து தியாகராஜ செட்டியாரின் மகன் சுந்தரம் செட்டியார்... இப்படி அப்பாவுக்கு நிறைய நண்பர்கள். அவர்களில் பொள்ளாச்சி மகாலிங்கம், சுந்தரம் செட்டியார் இருவரும் அப்பாவை அவர் களுடைய கம்பெனியில் பணியாற்றும்படி விரும்பி அழைத் தார்கள். ‘நான் சம்பளத்துக்கு எல்லாம் வேலைசெய்ய மாட்டேன்’ என, அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டார். புத்திசாலியான அப்பா ஏன் அப்படி முரட்டுக் குணத்துடன் இருந்தார் என்பது, எங்களுக்கு இன்று வரை புதிர்.

இதற்கு இடையில் பெரியவர் கிருஷ்ணன் செட்டியார் மறைந்ததும், குடும்பத்துக்குள் இருந்த அன்னியோன்னியம் குறைந்தது. சொத்தில் அப்பாவுக்கு வரவேண்டிய பங்கும் வரவில்லை. எவ்வளவுதான் செல்வச்செழிப்பு என்றாலும் செலவு மட்டுமே செய்துவந்தால் மலை அளவு செல்வமும் குறையும்தானே! அதுவும் எங்கள் அப்பா நல்ல செலவாளி. நாட்கள் செல்லச் செல்ல, என் அம்மாவின் நகைகள், வெள்ளிப் பொருட்கள் அனைத்தும் ஒவ்வொன் றாக அடகுக்கடைக்குப் போக ஆரம்பித்தன. வைர, தங்க நகைகளை அடகுவைக்க அப்பாவிடம் அம்மா  கழற்றித்தருவதை நானே பலமுறை பார்த்திருக்கிறேன். அப்போது தங்கம் விலை வெகு குறைவு. 100 பவுன் அடகுவைத்தால்  5,000 ரூபாய் கொடுப்பார்கள். அதை வைத்து ஒரு வருஷத்துக்கான குடும்பச் செலவைக் கவனித்துக்கொள்ளலாம்.

எங்கள் அப்பா, காரைக்குடி நகராட்சி கவுன்சிலராக சில காலம் இருந்தார். அந்தச் சமயத்தில்தான் காரைக்குடி நகராட்சிப் பள்ளியை ஆரம்பித் தார்கள். ஏட்டுப் பள்ளிதான். நான்கு வயதில் அந்தப் பள்ளியில் சேர்ந்தேன். எங்கள் செட்டியார் சமூகத்தில், பள்ளிப்படிப்பு ஓரளவுக்கு இருந்தால் போதும். ஆனால், கணக்குத் தெரிந்திருப்பது அவசியம். காரணம், வட்டிக்கு விட்டு வாங்கும் குடும்பத் தொழில். காலணா வட்டி என்றால் எவ்வளவு, அரையணா, முக்காலணா, ஓரணா வட்டி என்றால் எவ்வளவு... இப்படி வட்டிக் கணக்குத் தெரிந்தாலே போதும் என நினைத்த காலம். அப்படி ஓரளவுக்கு பள்ளிப்படிப்பும் அனுபவமும் வந்த பிறகு, மலேசியா, சிங்கப்பூரில் உள்ள உறவினர்கள் வீட்டு வட்டிக் கடைகளுக்கு வேலைக்கு அனுப்புவார்கள். அதற்கு எங்கள் செட்டிநாட்டுப் பக்கம் ‘கை பழகுவது’ எனச் சொல்வார்கள். அதாவது அப்ரன்டிஸ் பயிற்சிபோல.

அப்படி என்னை மலேசியாவுக்கு அனுப்புவதாக வீட்டில் ஓர் எண்ணம் இருந்தது. ஆனால், என் அப்பாவுக்கு அதில் விருப்பம் இல்லை. நான் மேற்கொண்டு படிக்க வேண்டும் என நினைத்தார். நான் அப்போது நன்றாகப் படித்தாலும் எப்போதும் வீட்டுக் கவலையாகவே இருப்பேன். காரணம், வீட்டை படிப்படியாகச் சூழ்ந்த வறுமை. வீட்டுப் பிரச்னைகளை எப்படித் தீர்ப்பது என்ற யோசனை. அம்மா ஒவ்வொரு நகையையும் கழற்றிக் கொடுத்துவிட்டு அழுவதைப் பார்க்கும்போது, ‘நம்மால் எதுவும் செய்ய முடியவில்லையே’ என வருத்தப்படுவேன்.

அதனால்தானோ என்னவோ பசங்களோடு சேர்ந்து விளையாடுவது, சிறுவயதுக்கே உரிய குறும்புத்தனங்கள் என எதுவும் என்னிடம் அப்போது கிடையாது. நண்பர்களும் வெகு சிலரே. அந்தச் சிறுவயதிலேயே வாசிக்கத் தொடங்கியதற்கு அந்தத் தனிமையும் ஒரு காரணம். நான் நிறையப் படிப்பதைப் பார்த்துவிட்டு, ‘பிஞ்சிலேயே பழுத்தவன்’ என்றுகூட பலரும் திட்டுவார்கள்.

என் நண்பர்களில் முக்கியமானவன் எல்.வெங்கடாசலம் என்கிற சீனு. என் அத்தை பையன். வீட்டுக்கு ஒரே பையன்; வசதியானவன். எனக்குப் படிப்பது எப்படி இஷ்டமோ, அப்படி சீனுவுக்குக் கதை கேட்பது பிடிக்கும். அதுவும் நான் கதைசொல்லக் கேட்பது, அவனுக்கு இன்னும் பிடிக்கும். என் வாசிப்பு ஆர்வத்துக்கு சீனியும் ஒரு முக்கியமான காரணம்.

புத்தகங்கள் வாங்க எங்கள் வீட்டில் பணம் கேட்டால், நயா பைசா தர மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை கதை படிப்பது, சினிமா பார்ப்பது, கதை எழுதுவது... இவை எல்லாம் காவாலித்தனம். அதனால் எனக்கு என்னென்ன புத்தகங்கள் தேவை என்பதை சீனுவிடம் சொல்லிடுவேன். அவன் வீட்டில் ‘பரீட்சைக்குப் பணம் கட்டணும். மூன்று ரூபாய் கொடுங்க’ எனக் கேட்டால் கொடுத்துவிடுவார்கள். சீனுவின் அப்பா-அம்மா இருவருமே படிக்காதவர்கள். இவன் என்ன சொன்னாலும் நம்பிவிடுவார்கள். தவிர, ‘ஸ்கூல் ஆண்டு விழாவுக்குக் கேட்டாங்கனு கேளுடா... நோட் புக் வாங்கணும்னு வாங்கிட்டு வாடா...’ என எப்படி பொய் சொல்லி காசு வாங்கவேண்டும் என்பதையும் நானே சொல்லித்தருவேன்.

திரைத்தொண்டர் - 2
திரைத்தொண்டர் - 2

என் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டியதில், காரைக்குடி நூலகத்துக்கு முக்கியப் பங்கு  உண்டு. நேரம் கிடைக்கும்போது எல்லாம் நூலகத்திலேயே இருப்பேன். என் வயதுக்கு மீறிய வாசிப்பைப் பார்த்துவிட்டு, ‘டேய், நீ நிஜமாவே இதெல்லாம் படிக்கிறியா... இல்லை படிக்கிற மாதிரி நடிக்கிறியா?’  எனக் கிண்டலடிப்பார்கள். ஆனால், ‘யாரும் படிக்காததை இந்தப் பையனாவது படிக்கிறானே’ என லைப்ரரியனுக்குச் சந்தோஷம். காண்டேகர், சரத் சந்திரர், டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியரின் அத்தனை காவியங்கள்... என நிறைய நிறைய எழுத்துக்கள் அங்குதான் எனக்கு அறிமுகம்.

அந்தக் கதைகள், பெரும்பாலும் நடுத்தர- ஏழைக் குடும்பங்கள், ஜமீன்தார்கள் என அந்தக் காலச் சூழலை வைத்தே எழுதப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட அதே மாதிரியான வீட்டுச்சூழல்தான் எங்கள் வீட்டிலும். அந்தப் புத்தகங்களைப் படிக்கும்போது எப்படியாவது முன்னேறி நம் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற வைராக்கியம் வரும். நம்பிக்கையையும் யதார்த்தத்தை மீறிய தைரியத்தையும் அந்த வாசிப்புதான் எனக்கு வழங்கியது. அதோடு தொடர்ந்து பார்த்த திரைப்படங்கள், விரும்பிக் கேட்ட பாடல்கள்... எதற்கு எது ஆதாரம் எனச் சொல்லமுடியாத அளவுக்கு என் ரசனை என்னை அறியாமலேயே மேம்பட்டது.

அந்தச் சமயத்தில் என் சித்தப்பா ஏ.எல்.சீனிவாசன், சென்னையில் இருந்தார். மதுரை, கோவையில் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனிகளில் மேனேஜர் வேலை. சிலரின் உதவியோடு மெட்ராஸ் வந்து படங்களை வாங்கி விநியோகிப்பது, தயாரிப்பது... என அவர் சினிமாவில் ஓர் அளவுக்கு செட்டிலாகியிருந்த சமயம். ‘ஏ.எல்.எஸ் நம் சித்தப்பா. அவர் சினிமா  படங்களை வாங்கி ரிலீஸ் பண்ற வேலைசெய்கிறார்’ என்ற அளவே எனக்கு அவரைப் பற்றித் தெரியும். ஒருமுறை தன் தம்பி ஏ.எல்.எஸ்-ஸைப் பார்க்க சென்னை கிளம்பிய அப்பா, என்னையும் அழைத்துப்போனார்.

முதல்முறையாக அப்படிவந்த எனக்கு, சென்னை பிடித்துவிட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் முழு ஆண்டு விடுமுறைக்கு வந்த நான், ஓரிரு மாதங்கள் தங்கத் தொடங்கினேன். காரைக்குடியில் இருந்து சென்னைக்கு ரயிலில் வர, அப்போது டிக்கெட் 7 ரூபாய் 50 பைசா. அம்மாவிடம் அடம்பிடித்து 10 ரூபாய் வாங்கிக்கொண்டு ரயில் ஏறிவிடுவேன். லீவு முடிந்து சென்னையில் இருந்து காரைக்குடிக்குக் கிளம்பினால், ஏ.எல்.எஸ் 25 ரூபாய் கொடுப்பார். அப்போது 25 ரூபாய் என்பது பெரிய பணம். அதில் மூன்று ரூபாய்க்கு இரண்டு டஜன் கேக்குகள், இன்னொரு மூன்று ரூபாய்க்கு காஷ்மீர் ஆப்பிள் ஒரு டஜன், ரயிலுக்கு ஏழரை ரூபாய் போக, மீதிப் பணத்தை அம்மாவிடம் கொடுப்பேன். இந்தக் காரைக்குடி-சென்னை பயணத்தால், என் கல்லூரிப் படிப்பில் இருந்த ஆர்வம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது.

சென்னைக்கு வந்தால், சும்மா இருக்க மாட்டேன். ஏ.எல்.எஸ் ஆபீஸ், ஷூட்டிங், ரிக்கார்டிங், டப்பிங்... என சுற்ற ஆரம்பித்துவிடுவேன்.

1956-ம் ஆண்டில் சிவாஜி-பானுமதி நடித்த ‘அம்பிகாபதி’ எடுத்துக்கொண்டிருந்தார் ஏ.எல்.எஸ். என்னை, ‘இந்தப் பையன்... ஏ.எல்.எஸ் அண்ணன் பையன்’ என சிவாஜியிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். ‘என்னடா, என்ன படிக்கிற... நல்லா படிடா...’ என்றார் சிவாஜி. அப்போது, ‘சிவாஜியைப் பார்த்தேன் என்ற சந்தோஷத்தைவிட, அப்படிச் சொன்னால் பள்ளியில் நண்பர்கள் நம்ப மாட்டார்களே...' என்ற வருத்தம்தான் அதிகம் வந்தது.

‘பி.ஏ., எம்.ஏ-னு படிச்சா, தம்பி-தங்கைகளை எப்படிப் படிக்கவைப்பது? படித்து முடித்துவிட்டு பேங்க் வேலைக்கே போனால்கூட அதிகபட்சம் மாசத்துக்கு 100 ரூபாய் வரும். அதைவைத்து குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுவது?’ என அந்தச் சமயங்களில் என் யோசனை அனைத்தும் பணமும் பணம் சார்ந்ததும்தான். லைப்ரரியில் புத்தகங்களைப் படிக்கும்போதுகூட அதன் விலையைப் பார்ப்பேன். ஒரு புத்தகம் 2 ரூபாய் 50 பைசா என இருந்தால், ‘அப்ப தமிழ்நாடு பூரா ஒரு லட்சம் புத்தகம் வித்தா... எழுதினவருக்குப் பாதியாவது கிடைக்கும். அப்படின்னா ஒரு வருஷத்துக்கு ஒரு லட்சம் கிடைக்குமே. ஒரு லட்சம் கிடைச்சா, நம்ம மொத்த வாழ்க்கைக்கும் போதுமே. தம்பி-தங்கைகளைப் படிக்கவெச்சு, அவங்களுக்குக் கல்யாணம் பண்ணி, மெட்ராஸ்ல வீடு வாங்கி...’ என கற்பனையிலேயே வாழ ஆரம்பித்தேன்.

திரைத்தொண்டர் - 2
திரைத்தொண்டர் - 2

எஸ்.எஸ்.எல்.சி முடித்துவிட்டு காரைக்குடி அழகப்பா காலேஜில் பியூசி முதல் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சமயம். அப்போது வீட்டில் ஒரு பிரச்னை. ‘நீங்கதான் எல்லாத்தையும் கெடுத்துக் குட்டிச்சுவர் பண்ணிட்டீங்களே...’ என, அப்பாவை என்றுமே எதிர்த்துப் பேசாத நான் அன்று கோபப்பட்டுக் கொதித்துவிட்டேன்.

அது பரீட்சை நேரம் வேறு. கல்லூரிப் படிப்பை நிறுத்தவும் பணம் சம்பாதிக்கத் தொடங்கவும் இதுதான் சரியான தருணம் என நினைத்தேன். அந்தக் கோபத்தைப் பயன்படுத்திக்கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். அம்மாவிடம் அழுது புலம்பி, 10 ரூபாய் வாங்கிக்கொண்டு காரைக்குடிக்கும் காலேஜுக்கும் டாட்டா சொல்லிவிட்டு சென்னைக்கு ரயில் ஏறினேன்.

- தொண்டு தொடரும்...