முதன்முதலில் பிரபு, குஷ்பு ஜோடியாக நடித்து வெள்ளிவிழா கண்ட 'சின்னத்தம்பி' படத்தைத் தயாரித்தவர், கே.பாலு. பிரபுவை வைத்து எட்டுப் படங்களையும், சத்யராஜை வைத்து ஏழு படங்களையும், சரத்குமார் நடித்த மூன்று படங்களையும், விஜயகாந்த் நடித்த ஒரு படத்தையும் தயாரித்து இருக்கிறார். ஒருமுறை தீபாவளிப் பண்டிகையின்போது ஒரேநாளில் பிரபு, மதுபாலா, விஜயகுமார், வடிவேலு நடித்த 'பாஞ்சாலங்குறிச்சி' படத்தையும், சத்யராஜ், ஶ்ரீவித்யா, சுகன்யா, செளந்தர்யா, கவுண்டமணி, செந்தில், மணிவண்ணன், ஆனந்தராஜ் நடித்த 'சேனாதிபதி படத்தையும் ரிலீஸ் செய்தவர். கடந்த 22 வருடங்களுக்கு முன்பு தனது தயாரிப்பில் நடிப்பதற்காக நடிகர் கார்த்திக்கிற்கு 22 லட்சம் பணம் கொடுத்ததாகவும், இன்றுவரை அந்தப் பணத்தைத் திருப்பித்தரவில்லை என்றும் அந்தப் பணத்தை கார்த்திக்கிடம் இருந்து வாங்கித் தருமாறு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்து இருக்கிறார், கே.பாலு. இந்த விவகாரம் குறித்து கே.பாலுவிடம் பேசினோம்.
''கார்த்திக்கை ஹீரோவாக ஒப்பந்தம் செய்து 'சின்ன ஜமீன்', ' மருமகன்' என இரண்டு படங்களைத் தயாரித்து இருக்கிறேன். அடுத்து மம்முட்டி நடித்த 'மறுமலர்ச்சி', விஜயகாந்த் நடித்த 'கள்ளழகர்' படங்களை இயக்கிய பாரதி என்னிடம் ஒரு கதை சொன்னார். அந்தப் படத்தில் நடிப்பதற்காக 1995-ஆம் ஆண்டு கார்த்திக்கை ஒப்பந்தம் செய்தேன். அப்போதே நான்கு லட்சம், ஐந்து லட்சம் என சில தவணையாக மொத்தம் 22 லட்சம் ரூபாயை அட்வான்ஸ் பணமாக வாங்கிக்கொண்டார், கார்த்திக். புதுப் படத்துக்கான படப்பிடிப்பு தேதியைக் குறித்துக்கொண்டு ஷூட்டிங் புறப்படும் தேதியைச் சொல்வதற்காக நானும், டைரக்டரும் கார்த்திக்கை பார்க்கப்போனோம். மது அருந்தி கீழே விழுந்ததால் அவருக்குக் கை கால்கள் எல்லாம் வீங்கி இருந்தன. 'என்னால் படப்பிடிப்புக்கு வர முடியாது' என்று கை விரித்தார். 'நீங்கள் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளும் நிலையில் இல்லை என்று பார்த்தாலே தெரிகிறது!" என்று சொல்லிவிட்டு, பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று வந்துவிட்டேன்.
ஒருமுறை தனியார் ஹோட்டல் ஒன்றில் நீண்ட நாள்களாகத் தங்கியிருந்தார், கார்த்திக். தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு அவர் பில் செட்டில் செய்யாமல் இருந்ததால் கோபமான ஹோட்டல் நிர்வாகம், கார்த்திக்கின் அறைக்கதவை வெளிப்புறமாகப் பூட்டி சிறை வைத்துவிட்டது. கார்த்திக் தவிப்பதைக் கேள்விப்பட்டு, நான்தான் ஓடிப்போய் அவர் செலுத்த வேண்டிய 3 லட்சம் ரூபாயைக் கட்டிவிட்டு கார்த்திக்கை ஹோட்டல் அறையில் இருந்து மீட்டுக்கொண்டு வந்தேன். பிறகு கார்த்திக்கை நேரில் சந்தித்து, 'என் புதுப்படத்தில் நடிப்பதற்காக உங்களுக்குக் கொடுத்த 22 லட்சம் ரூபாய் முன்பணம் என்னுடைய சொந்தப் பணமல்ல, ஃபைனான்ஸியரிடம் வட்டிக்குக் கடனாகப் பெற்றுக் கொடுத்தேன். எனவே, தயவுசெய்து உங்களுக்குக் கொடுத்த பணத்தைத் திருப்பித் தாருங்கள்' என்று மன்றாடிக் கேட்டேன். அன்றுமுதல் இன்றுவரை நான் கொடுத்த பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து கார்த்திக் சினிமாவில் நடிக்கவே இல்லை.
2000-த்தில் இருந்து இன்றுவரை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு ஆயிரம் தடவை போயிருப்பேன். ஒருமுறைகூட அவரைப் பார்க்க முடியவில்லை. நான் எப்போது போனாலும் அவரது வீட்டில் இருப்பவர்கள் 'கார்த்திக் இல்லை' என்றே சொல்லி வந்தனர். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக கேயார் இருந்தபோது, 'என் தயாரிப்பில் நடிப்பதற்காக கார்த்திக் அட்வான்ஸ் வாங்கினார். என் படத்திலும் நடிக்கவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை' என்று புகார் கொடுத்தேன். அப்போது நடந்த செயற்குழுக் கூட்டத்திலும் எனது புகார் குறித்து விவாதிக்கப்பட்டது, அந்த விவாதம் பதிவும் செய்யப்பட்டது. அப்போது, 'அப்பாவின் சொத்து எப்படி மகனுக்குச் சொந்தமாகிறதோ, அதுபோல அப்பாவின் கடனையும் மகன்தான் அடைக்க வேண்டும்' என்று சுப்ரீம் கோர்ட் சொல்லியிருக்கிறது. அதைப் பின்பற்றி தற்போது சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும் கார்த்திக்கின் வாரிசு கெளதமிடம் இருந்து என்னுடைய கடன் பணத்தை வசூலித்துக் கொடுக்க வேண்டும் என்று என் தரப்பில் உள்ள நியாயத்தைக் கேட்டேன்.
அதன்பிறகு சூர்யா நடித்து வெளிவந்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் கார்த்திக் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டு, கார்த்திக் மீது மீண்டும் கவுன்சிலில் புகார் கொடுத்தேன். அதன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, "கார்த்திக்குக்குப் பேசிய சம்பளம் அனைத்தையும் கொடுத்தாச்சு. ஆனால், பாக்கி எட்டு லட்சம் இருக்கிறது, அதைக் கொடுத்தால்தான் டப்பிங் பேச வருவேன்' என்று சொல்கிறார். இந்த நிலைமையில் அந்தப் பணத்தை உங்களிடம் கொடுத்துவிட்டால், எங்களுக்கு தர்மசங்கடமாகிவிடும்" என்று சொன்னார். அவரது சூழ்நிலையை உணர்ந்து நானும் எதுவும் பேசாமல் வந்துவிட்டேன். இப்போது திரு இயக்கத்தில் தனஞ்செயன் தயாரித்துவரும் 'மிஸ்டர்.சந்திரமெளலி' படத்தில் கார்த்திக், கெளதம் கார்த்திக் இருவரும் சேர்ந்து நடிப்பதை அறிந்தேன். 'கார்த்திக்கிற்கு தரவேண்டிய சம்பளப் பணத்தில் எனக்குச் சேரவேண்டிய 22 லட்சம் ரூபாயை வாங்கிக் கொடுங்கள்' என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறேன். 'மிஸ்டர்.சந்திரமெளலி' படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் கவுன்சிலுக்கு வந்தார், 'நான் கார்த்திக்கிற்கு 5 லட்சம் மட்டுமே தர வேண்டியிருக்கிறது. கவுன்சில் கேட்டுக்கொண்டால், அந்தப் பணத்தைத் தருகிறேன்' என்று பதில் சொல்லியிருக்கிறார். கார்த்திக்குக்கு 22 லட்சம் கொடுத்துவிட்டுத் திருப்பிக் கேட்காமல் இருப்பதற்கு, நான் ஒன்றும் அம்பானி வாரிசு அல்ல, ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் பேரனும் அல்ல. 'எனது சம்பளம் 40 லட்சத்தில் 22 லட்சம் பணத்தை முன்பணமாக வாங்கியிருக்கிறேன்' என்று கார்த்திக் கைப்பட எனக்கு எழுதிய கடிதத்தைப் பத்திரமாக வைத்திருக்கிறேன். ஒரு நல்ல தயாரிப்பாளர் உருவாவதற்கு நடிகரும் இயக்குநரும் மட்டுமே காரணமல்ல, அழிவதற்கும் அவர்கள்தான் காரணம். என் பணத்தை எப்படியும் கார்த்திக்கிடம் இருந்து வாங்கித்தருகிறோம் என்று கவுன்சிலில் எனக்கு உறுதிமொழி கொடுத்திருக்கிறார்கள். நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்!" என்று தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார், தயாரிப்பாளர் பாலு.