மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திரைத்தொண்டர் - 3

திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம்
News
திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம் ( திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம் )

பஞ்சு அருணாசலம்

சென்னைக்குச் சென்று பத்திரிகை வேலையில் சேர்வது என முடிவெடுத் திருந்தேன். அந்தச் சமயத்தில் ஏற்பட்ட அப்பாவுடனான சண்டையைப் பயன்படுத்திக் கொண்டு, காரைக்குடியில் இருந்து சென்னைக்கு ரயில் ஏறினேன். நேராக ராயப்பேட்டையில் இருந்த சித்தப்பா ஏ.எல்.எஸ் வீட்டுக்கு வந்தேன். நான் வருவதற்கு முன்பே என் அப்பா ட்ரங்க் கால் புக் பண்ணி, ‘பஞ்சு கோவிச்சுக்கிட்டு அங்கே வர்றான். பரீட்சை வேற நடக்குது. அடுத்த ட்ரெய்னுக்கே அவனை அனுப்பிவெச்சுடு’ எனச் சொல்லியிருக்கிறார்.

திரைத்தொண்டர்
திரைத்தொண்டர்

நான் அப்போது அவர் வீட்டில் இருப்பது ஏ.எல்.எஸ்ஸுக்கே தெரியாது. பிறகு என்னைக் கூப்பிட்டு `வீட்டில் என்ன பிரச்னை' என்பது குறித்து விசாரித்தார்.

‘`இங்கே விவேகானந்தா காலேஜ் பிரின்சிபல் என் ஃப்ரெண்ட்தான். அவர்கிட்ட சொல்லி சேர்த்துவிடுறேன். நீ இங்கேயே தங்கிப் படி’’ என, என்னை கல்லூரியில் சேர்க்க முயன்றார்
ஏ.எல்.எஸ்.

‘`கதையெல்லாம் எழுதுவேன். என்னை ஏதாவது பத்திரிகையில சேர்த்துவிடுங்க’’ என்றேன்.

ஏ.எல்.எஸ்ஸுக்குக் கடும் கோபம். ‘`டேய்... எனக்கு எல்லா பத்திரிகை முதலாளிகளையும் தெரியும். நான் கேட்டா யாரும் மறுக்காம உனக்கு வேலை கொடுப்பாங்க. ஆனா, உனக்கு என்ன சம்பளம் கொடுப்பாங்க? மிஞ்சிமிஞ்சிப் போனா 75 ரூபா, 100 ரூபா கொடுப்பாங்க. அதை வெச்சுக்கிட்டு நீ என்ன பெருசா முன்னுக்கு வந்துட முடியும்? ஒரு கதைக்கு 5 ரூபாயோ, 10 ரூபாயோ கொடுப்பாங்க. அப்படியே ஒரு நாவலே எழுதினாலும் 500 ரூபா அட்வான்ஸ். அப்புறம் புஸ்தகம் விற்க விற்க மாசாமாசம் ராயல்டி கொடுப்பாங்க. 3,000 காப்பி போட்டாங்கனா, அது விற்க ஒரு வருஷம் ஆகிடும். அப்புறம் நீ எந்தக் காலத்துலயும் தரித்திரத்திலேயே சுத்தணும்’’ - கிளிப்பிள்ளைக்குச் சொல்வதுபோல் அறிவுரை சொன்னார்.

திரைத்தொண்டர்
திரைத்தொண்டர்

நாம் ஒரு முடிவு எடுத்த பிறகு பெரியவர்கள் என்ன சொன்னாலும், அது நம்மை சமாதானப் படுத்துவதற்காகச் சொல்கிறார்கள் என்றே நமக்குத் தோன்றும். அன்றும் எனக்கு அப்படித்தான் தோன்றியது. அவர் என்ன சொன்னாலும் கல்லூரிக்குப் போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன்.

ஏ.எல்.எஸ்ஸுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘கதை எழுதினீன்னா பேரும் புகழும் கிடைக்குமே தவிர, வேற ஒரு ...யிரும் கிடைக்காது’ - அவரிடம் இருந்து வந்த இந்த வார்த்தைகள் அவரது கோபத்தை உணர்த்தின. ஆனால், அவரே என் வழிக்கு இறங்கிவந்தார்.

`‘ஓ.கே. இப்போதைக்கு பேசாம நம்ம ஸ்டுடியோவுல வேலை செய். டைரக்டர், மியூஸிக் டைரக்டர், கேமராமேன், எடிட்டர்னு சினிமாவுல இருக்கிற எல்லாரும் ஐக்கியமாகிற இடம் ஸ்டுடியோதான். இங்கே சகல விஷயங்களையும் கத்துக்கலாம். பிறகு உனக்கு எதுல ஆர்வம் இருக்கோ, அந்தத் துறைக்குள்ள வந்துரலாம். உனக்கும் உன் குடும்பத்துக்கும் தேவையான அளவு சம்பாதிக்க இங்கே வாய்ப்புகள் இருக்கு’’ என்றார்.

எனக்கும் அவர் சொல்வது `சரி’ எனப்பட்டது. ஏ.எல்.எஸ் ஸ்டுடியோவில் செட் அசிஸ்டன்ட் வேலையில் சேர்ந்தேன். மாதம் 125 ரூபாய் சம்பளம். செட் போடுவதற்கான பொருட்களை ஸ்டோர் ரூமில் இருந்து எடுத்துத் தருவது, பிறகு வேலை முடிந்ததும் வாங்கிவைக்கும் வேலை. நான் அங்கு வேலைக்குச் சேர்ந்தபோது பி.ஆர்.பந்துலுவின் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ ஷூட்டிங் முடிகிற நேரம். அவரின் பெரும்பாலான படங்கள் ஏ.எல்.எஸ் ஸ்டுடியோவில்தான் நடைபெறும்.

மேஸ்திரி கேட்பதை எடுத்துக் கொடுத்து விட்டால் போதும், வேலை தானாக நடக்கும். மற்ற நேரம் எல்லாம் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு பொழுதுபோக்கணும்.ஆனால், அப்படி சும்மா உட்காராமல் ஸ்டுடியோவைச் சுற்ற ஆரம்பித்தேன். சினிமாவில் எந்தத் துறையில் நமக்கு சந்தர்ப்பம் வந்தாலும், அந்தத் துறைக்குள் போய்விட வேண்டும் என்ற ஆர்வத்தில் சினிமாவுக்கான அடிப்படை விஷயங்களை அங்கு தெரிந்துகொண்டேன்.

ராயப்பேட்டையில் லாயிட்ஸ் ரோட்டுக்கு அடுத்த ரோட்டில்தான் ஏ.எல்.எஸ் ஆபீஸ். அவரின் வீடும் அதே பகுதியில்தான். நான் அவரின் ஆபீஸ் மாடி அறையில் தங்கியிருந்தேன். அங்கு இருந்து காலை 9 மணிக்குக் கிளம்பினால், 10 மணிக்குள் கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்டுடியோவுக்கு வந்துவிடுவேன். அப்போது ஏவி.எம்., விஜயாவாஹினி, ஏ.எல்.எஸ்., பரணி, மெஜஸ்டிக், கோல்டன், சாரதாஸ், பிரசாத்... என ஸ்டுடியோக்கள் அனைத்துமே இருந்தது கோடம்பாக்கத்தில்தான். பெரிய நடிகர், நடிகைகள் வீடுகள் அனைத்தும் ஸ்டுடியோவுக்கு வந்து போக வசதியாக, பக்கத்திலேயே மாம்பலம் ஏரியாவில். ஆனால் சத்யா (அப்போது அதன் பெயர் ஜூபிடர்) வீனஸ், நெப்டியூன் உள்ளிட்ட சில ஸ்டுடியோக்கள் மட்டும் கோடம்பாக்கத்துக்கு வெளியில் இருந்தன.

ஸ்டுடியோவில் வேலையை முடித்துக்கொண்டு மாலை 5 மணிக்குக் கிளம்பி 6 மணிக்குள் மவுன்ட் ரோடில் உள்ள கவிஞர் கண்ணதாசனின் `தென்றல்' ஆபீஸுக்குப் போய் விடுவேன். மவுன்ட் ரோடில் அமெரிக்கத் தூதரக பஸ் நிறுத்தத்தில் இறங்கி சிறிது தூரம் நடந்தால் கவிஞர், கலைஞர், நெடுஞ்செழியன், மதியழகன், ஆசைத்தம்பி ஆகியோரின் அலுவலகங்கள் வரிசையாக இருக்கும்.
கவிஞர் ‘தென்றல்’, கலைஞர் ‘முரசொலி’, நெடுஞ்செழியன் ‘மன்றம்’, மதியழகன் ‘தென்னகம்’, ஆசைத்தம்பி ‘தனியரசு’ ஆகிய இதழ்களை நடத்திக்கொண்டிருந்தனர். இந்த ஐவரும் ஒருவருக் கொருவர் நன்றாகப் பேசிக்கொள்வார்கள். ஆனால், கவிஞரும் கலைஞரும்தான் நெருக்கம். அவர்களுக்குள் சண்டையும் சமரசமும் சகஜம். இவர்கள் நடத்திய ஐந்து இதழ்களில் `தென்றல்’ இதழுக்கும் `முரசொலி’ இதழுக்கும்தான் போட்டி. இரண்டும் பரபரப்பாக விற்பனையாகும்.

ஏ.எல்.எஸ் ஸ்டுடியோவில் இருந்து கிளம்பி மாலை 6 மணிக்கு `தென்றல்’ அலுவலகம் போனால், இரண்டு மணி நேரம் அங்கு இருப்பேன். அப்போது தென்றலில் தென்னரசும் தமிழ்ப்பித்தனும் உதவி ஆசிரியர்கள். இதில் தென்னரசு, கவிஞர்... கலைஞர் இருவருக்குமே வேண்டப்பட்டவர். சம்பத்துடன் சேர்ந்து கவிஞர் தமிழ்த் தேசிய கட்சி ஆரம்பித்தபோது, ‘கவிஞரே எனக்கு இதில் உடன்பாடு கிடையாது. நான் கலைஞருடன் போறேன்’ என்றார் தென்னரசு. ‘மனசாட்சிக்கு விரோதமா எதையும் செய்யக் கூடாது தென்னரசு. நீ கலைஞர்கிட்ட போறதா இருந்தா தாராளமாப் போகலாம்’ என்று கவிஞரும் அவரை அனுப்பிவைத்தார்.

திரைத்தொண்டர்
திரைத்தொண்டர்

பின்னாளில் தென்னரசு திருப்பத்தூர் எம்.எல்.ஏ-வாக இருந்தார். உயிரோடு இருந்திருந்தால், மந்திரியாகியிருப்பார். ஆனால், குறைந்த வயதிலேயே இறந்துவிட்டார். இன்னோர் உதவி ஆசிரியர் தமிழ்ப்பித்தனுக்கு, கட்சியைப் பற்றி எந்தத் தனிப்பட்ட கருத்தும் இல்லை. ‘கவிஞரே, நீங்க எங்கே இருக்கீங்களோ... அங்கே இருக்கேன். ‘தென்றல்’ல அரசியல் பகுதிகளை நீங்க பார்த்துக்கங்க. இலக்கியம் தொடர்பான விஷயங்களை நான் பார்த்துக்கிறேன்’ என ஒதுங்கியே நிற்பார். நல்ல தமிழ் பண்டிட் போல ஆழ்ந்த தமிழ் அறிவு உள்ளவர். கவிஞரின் மீது அபாரமான அன்பு கொண்டவர். `தென்றல்’ இதழை மூடிய பிறகு, அவர் வெளியே போய்விட்டார்.

அது கவிஞர் சினிமாவில் வளர்ந்துகொண்டிருந்த நேரம். அப்போது அவர் பாடல் எழுதிய படங்கள் குறைவு. பெரும்பாலும் தி.மு.க கூட்டங்களில் கலந்து கொள்வதுதான் அதிகமாக இருக்கும். அதனால் கவிஞர் `தென்றல்’ அலுவலகத்துக்கு எப்போதாவதுதான் வருவார். குறிப்பாக தலையங்கம் எழுதித் தர தவறாமல் வந்துவிடுவார். கவிஞர், தென்றலில் ஈற்றடி கொடுத்து ஒரு வெண்பா போட்டி வைப்பார். பலர் பாட்டு எழுதி அனுப்புவார்கள். அதில் சிறந்த வெண்பா ஒன்றைத் தேர்வுசெய்து, 10 ரூபாய் பரிசு கொடுப்பார்கள். அதைத் தேர்வு செய்வது மிகவும் கடினமான காரியம். ஏனெனில், வெண்பாவுக்கான இலக்கணம் நுணுக்கமானது; கடினமானது. வெண்பாவில் சிறிய தவறு இருந்தால்கூட, அதை புலமைக்கு இழுக்காகப் பார்ப்பார்கள்.

அப்படி மிகவும் கடினமான அந்த வெண்பாவை எல்லாம் நானே படித்துப்பார்த்து, பிழை இல்லாமலும் நன்றாகவும் இருப் பதைத் தேர்வுசெய்து கொடுப் பேன். இந்த வெண்பா பரிச்ச யத்துக்கு காரைக்குடி நாட்கள் தான் காரணம். அப்போதே வெண்பா இலக்கணங்களைக் கற்றுக்கொண்டேன். புலவர் குழந்தை உள்பட, அதற்கு என ஏகப்பட்ட பேர் புத்தகம் எழுதுவார்கள். அவற்றை எல்லாம் வாங்கிப் படித்ததால், வெண்பாவில் பரிச்சயமும் ஆர்வமும் உண்டானது.

அப்போது ‘தென்றல்’ 12 பக்கங்கள் அல்லது 16 பக்கங்கள் வரும். திடீரென `ஒரு பக்கம், அரை பக்கத்துக்கு மேட்டர் போதவில்லை’ என்பார்கள். அந்தச் சமயங்களில் நான் எழுதிவைத்திருக்கும் கவிதைகள், கதைகளில் இருந்து ஒன்றை டக்கென எடுத்து நீட்டுவேன்.

`‘நல்லா இருக்குடா. கொஞ்சம் அரைப் பக்கத்துக்கு மேலே வரும். நான் சரி பண்ணிக் கிறேன்’’ என்று தென்னரசு உற்சாகப்படுத்துவார்.

‘`என்ன பேர்டா போடலாம். பாரதிதாசன், கண்ணதாசன் மாதிரி... நீயும் ஒரு `தாசன்'னு வெச்சிக்கிறியாடா?’’ எனச் சிரித்தபடி கேட்டார்.

`‘அதெல்லாம் வேணாம்ணே. அப்படி ஏகப்பட்ட ‘தாசன்’கள் இருக்காங்க. என் பேர் அருணாசலம். அதனால ‘அருணன்’னு போட்டுக்கங்க’’ என்றேன். அப்படி ‘அருணன்’ என்ற பெயரில் தென்றலில் சில கதைகள் பிரசுரமாகின. எனக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.

நான் ‘தென்றல்’ பத்திரிகைக்கு வந்து போவது கவிஞருக்குத் தெரியும்.

‘`என்னடா, என்ன பண்ற?’’ - ரிலாக்ஸான ஒரு சமயம் கவிஞர் என்னிடம் கேட்டார்.

‘`ஸ்டுடியோவுலதான் வேலைசெய்றேன். பத்திரிகை வேலை பிடிக்கும்கிறதால கத்துக்க லாம்னு இங்கே வந்து போயிட்டு இருக்கேன்.’’

`‘ம்... நல்லதுதான். கத்துக்க... கத்துக்க. என்னல்லாம் படிச்சிருக்கேடா?’’

`‘நாவல்கள் நிறையப் படிச்சிருக்கேன்.’’

‘`அதான்டா... யார் யார் நாவல்கள் படிச்சிருக்கே, அதுல உனக்கு யாரை ரொம்பப் பிடிக்கும்?’’ - நான் வழக்கமான வாசகனாக இருப்பேன் என நினைத்துக் கேட்கிறார் என்பது, அவர் கேட்ட தொனியில் இருந்தே புரிந்தது.

இளைஞர்கள், மாணவர்கள் என அப்போது, ‘உங்களுக்குப் பிடிச்ச எழுத்தாளர் யார்?’ என யாரிடம் கேட்டாலும், ‘கல்கி, மு.வ., கலைஞர், அண்ணாதுரை, கண்ணதாசன்’ என இந்த ஐந்து பேர்களின் பெயர்களைத்தான் ஆர்டரை மாற்றி மாற்றிச் சொல் வார்கள். அவரும் என்னிடம் அந்தப் பதிலைத்தான் எதிர் பார்த்திருந்தார் என நினைக் கிறேன்.

‘`மாபஸான், லியோ டால்ஸ்டாய், சரத் சந்தர், பக்கிங் சந்திர சாட்டர்ஜி, தாகூர், காண் டேகர்...’’ என நோபல் பரிசு வாங்கிய எழுத்தாளர்களின் பெயர்களைச் சொன்னேன்.

அவர் முகத்தில் ஆச்சர்யம். அவர் எதிர்பார்த்திருந்த ஐந்து பேரின் பெயர்களைச் சொல்லாமல் விட்டவன் நான் ஒருவனாகத்தான் இருக்கும்போல் இருக்கிறது. அது வஞ்சப் புகழ்ச்சியோ, அவர் பெயரைச் சொல்லாவிட்டால் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று எல்லாம் நான் நினைக்கவில்லை. எனக்கும் தோன்றவில்லை, அதனால் நான் சொல்ல வில்லை. தவிர இவர்களின் எழுத்து பிடிக்காது என்றும் கிடையாது.  கவிஞர், கலைஞர் உள்பட அனைவரின் வசனங்களையும் அன்று கைதட்டி ரசித்திருக்கிறேன். `ஆஹா ஓஹோ’ எனப் புகழ்ந்திருக்கிறேன்.

`‘டேய், இதெல்லாம் நீ படிச்சிருக்கியா... இல்லை பேர் எல்லாம் மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கிறியா?’’ - கவிஞர் சிரித்தபடியே கேட்டார்.

திரைத்தொண்டர்
திரைத்தொண்டர்

‘`இல்லை இல்லை... படிச்சிருக்கேன்...’’ - நான் பேசப்பேச `‘அப்படியா... அப்படியா!’’ என்று ஆச்சர்யமாகவும் ஆர்வமாகவும் கேட்டு கொண்டி ருந்தார். இப்படி அவ்வப்போது கவிஞருக்கும் எனக்கும் சின்னச்சின்ன சந்திப்புகள், உரையாடல்கள். அவை எல்லாம்தான் என் மேல் கவிஞருக்குப் பிரியம் ஏற்பட காரணமாக அமைந்ததாக நினைக்கிறேன்.

ருமுறை கவிஞரின் தலையங்கத்துக்காக தென்னரசும் தமிழ்ப்பித்தனும் காத்திருந்தார்கள். காரணம், ‘தென்றல்’ அன்று  இரவுக்குள் பிரின்ட்டுக்குச் சென்றாக வேண்டும். காலையில் வரவேண்டியவர் வரவில்லை. மாலை வருவதாகக் கூறியிருந்தார். காத்திருந்தோம்.

`‘பஞ்சு... பக்கத்துல போயிட்டு வந்துடுறோம். கவிஞர் வர்றதுக்குள்ள வந்துடுவோம். அதுக்குள்ள வந்துட்டார்னா விஷயத்தைச் சொல்லு’’ எனச் சொல்லிவிட்டு தென்னரசுவும் தமிழ்ப்பித்தனும் ஏதோ அவசர வேலையாகப் போயிருந்தனர்.

அவர்கள் போன அந்த நேரத்தில் கவிஞர் வந்துவிட்டார்.

`‘என்னடா ரெண்டு பேரும் எங்கே?’’

`‘உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருந் தாங்க. பக்கத்துலதான் போயிருக்காங்க, வந்துடுவாங்க.’’

‘`டேய்... நான் 7 மணிக்கு காலேஜ்ல ஒரு மீட்டிங்குக்குப் போகணும். இப்பவே மணி 6:15. அவங்க வந்து, நான் எழுதிட்டுப் போறதுக்கு லேட்டாயிடும்...’’  - யோசித்தார்.

‘`நான் சொல்லச் சொல்ல நீ எழுதுறியாடா?’’  - சினிமாவுக்குப் பாடல் எழுதுவதாக இருந்தாலும் சரி, பத்திரிகைக்கு எழுதுவதாக இருந்தாலும் சரி... கவிஞர் சொல்லச் சொல்ல மற்றவர்கள் எழுதுவது வழக்கம்.

`‘ம்... எழுதுறேன்.’’

அந்த வாரம் அவர் எழுதவேண்டிய தலையங்கத்தை கிடுகிடுவெனச் சொன்னார். அவர் சொல்லச் சொல்ல, நான் எழுதினேன். ஆனால், ஒருமுறைகூட ‘என்ன சொன்னீங்க?’ எனத் திரும்பக் கேட்கவில்லை. கவிஞரும் மற்றவர்களுக்குச் சொல்வதைவிட எனக்காகக் கொஞ்சம் நிதானமாகவே சொன்னார்.

சொல்லி முடித்ததும், `‘டீ சொல்றா’’ என்றார். அவருக்கு பக்கத்துக் கடை டீ ரொம்ப இஷ்டம். டீ வந்தது. ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தார். அந்த சிகரெட்டையும் டீயையும் அவர் முடிப்பதற்குள், அவர் சொன்ன தலையங்கத்தை வேறு பேப்பரில் அழகாக திரும்ப எழுதி, காப்பி எடுத்துத் தந்தேன்.

படித்தார்... ஆங்காங்கே சில திருத்தங்கள். `‘டேய் உன் எழுத்து ரொம்ப அழகா இருக்குடா’’ - கவிஞர் சொன்னதும் உள்ளுக்குள் ஏக சந்தோஷம்.

`‘உன் எழுத்து முத்து முத்தா அழகா இருக்குடா. ஆனா, என் எழுத்து கோழி சீய்ச்சா மாதிரி இருக்கும்டா’’ - பின்னாளில் கவிஞர் தன் கையெழுத்து பற்றி இப்படி அடிக்கடி  சொல்வார்.
கவிஞர் கிளம்பும் நேரத்தில் தென்னரசு வந்துவிட்டார். `‘பஞ்சு எழுதிட்டான்’’ என்ற கவிஞரிடம், `‘வெண்பாகூட அவன்தான்  செலெக்ட் பண்றான்’’ - தென்னரசு என்னைப் பற்றி கவிஞரிடம் நல்லவிதமாகச் சொல்வார். இதெல்லாம் கவிஞருக்கு ஏதோ ஒருவகையில் என் மீது பிரியம் வரவைத்திருக்கிறது.

`‘என்ன வேலைடா பார்த்துட்டிருக்க?’’

நான் ஏ.எல்.எஸ்ஸிடம் வேலைசெய்கிறேன் என்பது தெரியும். ஆனால், என்ன வேலை செய்கிறேன் என்பது கவிஞருக்குத் தெரியாது.

`‘செட் அசிஸ்டன்ட்’’ என்றேன்.

‘`லூஸாடா நீ... உன் ஆசைக்கும் அதுக்கும் என்னடா சம்பந்தம்? சரி... சரி... நாளையில இருந்து நீ என்கூட வந்துடு’’ என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. அப்படியே நின்றேன்.

‘`நீ என்ன பண்ற... நாளைக்கு காலையில 8:30 மணிக்கு என் வீட்டுக்கு வந்துடு. ஆமாம்... நீ வீட்டுக்கு வந்தது இல்லைல்ல? அட்ரஸ் குறிச்சிக்க. நம்பர் 11, கிரசென்ட் பார்க் ஸ்ட்ரீட். தி.நகர். நீ ராயப்பேட்டையில் இருந்து 11-ம் நம்பர் பஸ்ல ஏறி, பனகல் பார்க்ல இறங்கிடு. அங்கே இருந்து இந்த அட்ரஸைக் கேட்டீன்னா, யார் வேணும்னாலும் சொல்வாங்க.’’

என் பதிலை எதிர்பார்க்காமல் கவிஞர் என்னை கமிட் செய்துவிட்டார்.

` `டேய், முத்துவே கஷ்டப்படுறான். அவன் கூப்பிடுறான்னு போனா, நீயும் சிரமப்படுவ. போகாத’ என ஏ.எல்.எஸ் சொல்லிவிட்டால் என்ன செய்வது?' என எனக்குள் ஏகப்பட்ட குழப்பம். அந்தக் குழப்பச் சூழலில் நான் எடுத்த முடிவுதான் பின்னாளில் கதாசிரியனாக, வசனகர்த்தாவாக, பாடலாசிரிய னாக, இயக்குநராக, தயாரிப்பாளராக என்னை உயர்த்தும் என அப்போது நான் அறிந்திருக்க வில்லை.

- தொண்டு தொடரும்...