மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திரைத்தொண்டர் - 4

திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம்
பிரீமியம் ஸ்டோரி
News
திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம் ( திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம் )

பஞ்சு அருணாசலம், படங்கள் உதவி: ஞானம்

திரைத்தொண்டர் - 4
திரைத்தொண்டர் - 4

‘நாளையில இருந்து நீ என்கூட வந்துடு’ -  கவிஞர் சொல்லிவிட்டு என் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் போய்விட்டார். கவிஞரிடம் உதவியாளராகச் சேர எனக்கும் விருப்பம்தான். ஆனால், இந்த விஷயத்தை ஏ.எல்.எஸ்-ஸிடம் எப்படிச் சொல்வது? அப்போது ஏ.எல்.எஸ்-கவிஞர் இருவருக்கு இடையேயும் எந்தச் சண்டையும் கிடையாது. ஆனால், ‘நல்லா வர வேண்டியவன் இப்படி கட்சி, கிட்சினு சுத்துறான். கடவுள் இல்லைனு பேசுறான்’ என்ற ஒரு சின்ன மனவருத்தம்.

திரைத்தொண்டர் - 4
திரைத்தொண்டர் - 4

கவிஞருக்கோ தொடர்ந்து படங்கள் எடுத்து வரும் ஏ.எல்.எஸ், தனக்கு எப்போதாவதுதான் வாய்ப்பு தருகிறார் என்ற வருத்தம். அப்போது ஏ.எல்.எஸ்., சிவாஜி நடிப்பில் ‘அம்பிகாபதி’ ஆரம்பித்திருந்தார். கவிஞன் சம்பந்தப்பட்ட கதை என்பதால், தன்னைக் கூப்பிட்டு திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதச் சொல்வார் என நினைத்திருந்தார் கவிஞர். ஆனால் அதில், ‘கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளம் மானே...’ என்ற ஒரே ஒரு பாடல் எழுத மட்டு்மே வாய்ப்பு தந்தார் ஏ.எல்.எஸ்.

அப்போது எம்.ஜி.ஆர்., சிவாஜியின் பல படங்களுக்கு கவிஞர்தான் பாடல்கள் எழுதிவந்தார். அதில், எம்.ஜி.ஆர் படங்களே அதிகம். ஆனாலும் கவிஞர் அப்போது பெரிய அளவில் பிரபலம் ஆகவில்லை. காரணம், அந்தச் சமயத்தில் தஞ்சை ராமையாதாஸ் நிறையப் பாடல்கள் எழுதிக் கொண்டிருந்தார்.  கவிஞர்,  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கே.டி.சந்தானம், கு.மா.பாலசுப்ரமணியம், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, உடுமலை நாராயணகவி போன்றோர் எல்லாம் அவருக்கு அடுத்ததாகத்தான்.

கவிஞர், சில படங்களுக்கு மொத்தப் பாடல்கள், சில படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், சில படங்களுக்கு ஓரிரு பாடல்கள் எனக் கிடைக்கும் வாய்ப்புகளில் எழுதிவந்தார். அப்போது ஒரு பாட்டுக்கு 200 ரூபாய் கொடுப் பார்கள். கதை, வசனம் எழுதினால், 3,000 ரூபாய். பிரமாதமாக எழுதுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய். ஏனென்றால் அப்போது எம்.ஜி.ஆருக்கே 35 ஆயிரம் ரூபாய்தான் சம்பளம். சிவாஜி 30 ஆயிரம் வரை வாங்கினார். அந்தச் சமயத்தில் முதல்முறையாக ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியவர் கே.பி.சுந்தராம்பாள். ‘ஔவையார்’ படத்தில் நடித்ததற்காகக் கொடுத்தவர் ஜெமினி எஸ்.எஸ்.வாசன். இந்த விவரங்கள் எல்லாம் பின்நாட்களில் நான் கேள்விப்பட்டவை.

திரைத்தொண்டர் - 4
திரைத்தொண்டர் - 4

கவிஞருக்கு அப்போது பெரிய கஷ்டமும் இல்லை; வசதியும் கிடையாது... நடுத்தரம். அதேபோல பெரிய சேமிப்பும் இல்லை. வாடகை வீடுதான். இரண்டு வீட்டுச் செலவு, ‘தென்றல்’ பத்திரிகைச் செலவு... அதனால் கவிஞருக்கு வருமானம் போதவில்லை. நான் அவரிடம் சேரும் வரை இந்தப் பண விஷயங்கள், அவரின் வசதிவாய்ப்பு உள்ளிட்ட எந்த விஷயங்களும் எனக்குத் தெரியாது.

இவற்றை எல்லாம் நினைத்துதான் கவிஞர் ‘மாலையிட்ட மங்கை’ படத்தைத் தயாரித்தார்.  அந்தப் படத் தயாரிப்பில் கவிஞர் உள்பட நான்கு பேர் பார்ட்னர்கள். அதில் ஒருவர் ஜி.ஆர்.நாதன். முதலில் மிலிட்டரியில் வேலைசெய்த அவர், பிறகு மாடர்ன் தியேட்டரில் கேமரா அசிஸ்டன்ட்டாக இருந்ததார். கவிஞர் அங்கு எழுதச் செல்லும்போது நாதன் பழக்கம். ‘நீ எவ்வளவு நாளைக்கு அசிஸ்டன்டாவே இருப்ப. மெட்ராஸ் வா. ஆளுக்கு 10 ஆயிரம் ரூபாய்  போட்டு ஒரு கம்பெனி ஆரம்பிப்போம்’ என்று நாதனைக் கூப்பிட்டுவந்தார். கவிஞர், நாதன் உள்பட நான்கு பேர் ஆளுக்கு 10 ஆயிரம் தந்து 40 ஆயிரம் ரூபாயில் ‘மாலையிட்ட மங்கை’ படத்தைத் தொடங்கினர். படத்துக்கு டைரக்‌ஷன், கேமரா ஜி.ஆர்.நாதன். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் கவிஞர்.

`மாலையிட்ட மங்கை’ பெரிய குடும்பக் கதை. நிறையக் கதாபாத்திரங்கள். ஹீரோவாக டி.ஆர்.மகாலிங்கத்தை புக் பண்ணலாம்’ என்று கவிஞர் சொல்ல அவரின் யோசனையை மற்ற பார்ட்னர்கள் ஏற்கவில்லை. காரணம், மகாலிங்கம் அப்போது தோல்வியின் நாயகன். டி.ஆர்.மகாலிங்கம் அப்போது ‘சுகுமார் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற பெயரில் சொந்த கம்பெனியில் படங்கள் எடுத்துவந்தார். அந்த கம்பெனிக்கு பி.ஆர்.பந்துலுதான் மேனேஜர். தான் தயாரித்த ‘மச்சரேகை’ உள்பட சில படங்களால் மகாலிங்கத் துக்குப் பெருத்த நஷ்டம். அதைச் சமாளிக்க தன் பங்களா உள்பட அனைத்தையும் விற்றுவிட்டு அடையாறில் வாடகை வீட்டில் குடியிருந்தார். அதன் வாடகையைக்கூட கட்ட முடியாமல், மனைவியின் தாலியை அடகுவைத்திருக்கிறார். பாப்புலாரிட்டி போனதால் வழக்கமாக வரும் வெளியூர் கோயில் கச்சேரிகள்கூட வரவில்லை.

ஆனாலும் தன் பார்ட்னர் களைச் சமாளித்து, மகாலிங்கத்தை புக்செய்தார் கவிஞர். அப்போது அவருக்கு 1,000 ரூபாய் அட்வான்ஸ் தந்திருக்கிறார்கள். அது இன்றைய பல லட்சங்களுக்கு சமம். ‘நீங்க எனக்கு மறுவாழ்க்கை கொடுத் திருக்கீங்க. சந்தோஷம்’ என கவிஞரின் கைகளைப் பிடித்துக் கலங்கியிருக்கிறார் மகாலிங்கம்.

திரைத்தொண்டர் - 4
திரைத்தொண்டர் - 4

பல சிரமங்களுக்கு மத்தியில் கவிஞர் அந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கிறார். ஆனால், அவரால் அந்தப் படத்தை விற்க முடியவில்லை. ‘கடன் வாங்கிப்போட்டு பண்ணிட்டோம். செலவான பணத்தை மட்டும் கொடுத்துட்டு நீங்களே ரிலீஸ் பண்ணுங்க’ -  ஏ.எல்.எஸ்-ஸிடம் கவிஞர் கேட்டிருக்கிறார். ஆரம்பத்தில் ரிலீஸ் பண்ண யோசித்த ஏ.எல்.எஸ் பிறகு, ‘விஸ்வநாதன்-ராமமூர்த்தி மியூஸிக் நல்லா இருக்கு. கவிஞரின் பாடல்களும் பிரமாதம். ரெண்டரை லட்ச ரூபாய் பெரிய விலையும் கிடையாது. பண்ணித்தான் பார்ப்போமே’ என்று ரிலீஸ் பண்ணியிருக்கிறார்.

படம் மிகப் பெரிய ஹிட். அப்போது தி.மு.க வளர ஆரம்பித்திருந்த நேரம். ‘திராவிடப் பொன்னாடே’ பாட்டு வரும்போதே தியேட்டரில் பயங்கர கிளாப்ஸ். மகாலிங்கத்துக்குப் பெரிய பெயர். அடுத்த இரண்டு வருடங்களில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து நன்றாகச் சம்பாதித்து சொந்த ஊர் சோழவந்தானில் ஏகப்பட்ட நிலம், பங்களா வாங்கி மகாலிங்கம் செட்டிலானார்.

மனோரமா அதில்தான் அறிமுகம். ‘எத்தனையோ நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். 10 படங்களுக்கு கதாநாயகியா இருந்தால்கூட சந்தோஷம்தான். என்னைப் போய் காமெடி ரோல்ல நடிக்கச் சொல்றீங்களே...’ கவிஞரிடம் சொல்லி அழுதிருக்கிறார். காரணம், அப்போது காமெடிக்கு சம்பளமும் குறைவு; மரியாதையும் குறைவு.

‘பருவம் இருக்கும் வரைதான் கதாநாயகிக்கு மவுசு. நகைச்சுவை பண்ணினா, நீ சாகுற வரை நடிச்சிட்டே இருக்கலாம்’ என நிதர்சனத்தை உணரவைத்து மனோரமாவை நடிக்கவைத்திருக்கிறார் கவிஞர். அவர் சொன்னதுபோலவே அந்தப் படத்தின் காமெடி பெரிதாகப் பேசப்பட்டது... மனோரமாவும் தன் வாழ்வின் கடைசி வரை நடித்தார்.

அந்தப் படத்தில் எதிர்பார்த்ததுபோலவே எம்.எஸ்.வி-க்குப் பெரும் புகழ் கிடைத்தது. கவிஞருக்கு ஏற்கெனவே இருந்த பெயர், புகழ் இன்னும் அதிகரித்தன. ‘செந்தமிழ் தேன்மொழியாள்...’ உள்பட எல்லா பாடல்களுமே சூப்பர்ஹிட். தெருத்தெருவாகப் பாடினார்கள். ஜி.ஆர்.நாதனுக்கும் மிகப் பெரிய மரியாதை. இந்தப் படம் ரிலீஸ் ஆகும்போது நான் காரைக்குடியில் இருந்தேன். இவை எல்லாம் மெட்ராஸ் வந்து ஏ.எல்.எஸ் ஸ்டுடியோவில் வேலைசெய்யும்போது கேள்விப்பட்டவை.

பிறகு கவிஞர் ‘சிவகங்கைச் சீமை’ என்ற படம் எடுத்தார். ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ ரிலீஸ் சமயத்தில்தான் ‘சிவகங்கைச் சீமை’ படமும் ரிலீஸ். எனக்கு `கட்டபொம்மனை’விட `சிவகங்கைச் சீமை’தான் பிடிக்கும். காரணம், கவிஞரின் அற்புதமான வசனங்கள், பாடல்கள். ஆனால் `சிவகங்கைச் சீமை’ படம் சரியாகப் போகவில்லை. ‘கட்டபொம்மன்’ படத்தில் இருந்த பிரமிக்கவைக்கும் சிவாஜியின் நடிப்பு, பிரமாண்டம் அதில் இல்லை.

அந்தப் படம் சரியாப்போகாததால் கவிஞருக்கு நஷ்டம். ஆனாலும் `சிவகங்கைச் சீமை’க்கு ஃபைனான்ஸ் தந்த வி.டி.எல்.எஸ் கம்பெனியே(பிற்காலத்தில் `வருவான் வடிவேலன்’, `நிறம் மாறாத பூக்கள்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர்கள்) கவிஞரின் அடுத்தப் படத்துக்கும் ஃபைனான்ஸ் தர முன்வந்தது. படம் ‘கவலை இல்லாத மனிதன்’. சந்திரபாபு ஹீரோவாக அறிமுகம். அதற்கு முன்னர் வரை அவர் காமெடியன்தான்.

எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, ராஜசுலோச்சனா உள்பட ஏகப்பட்ட ஆர்ட்டிஸ்ட். 3,000 அடி கிட்டத்தட்ட எடுத்து முடித்திருந்தனர். அந்தச் சமயத்தில்தான் கவிஞர் என்னை தன்னிடம் உதவியாளராகச் சேரும்படி அழைத்தார்.

‘நாளைக்கு எட்டரைக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடுடா’ - அப்போது தி.நகரில் அவர் குடியிருந்த வீட்டு அட்ரஸையும் எழுதித்தந்தார். முதல் நாள் இரவு எட்டு மணிக்குச் சொன்னார். மறுநாள் காலை எட்டரைக்குப் போயாக வேண்டும்.

நான் ஏ.எல்.எஸ் ஸ்டுடியோவில் வேலைசெய்த அந்த ஒன்றரை வருடமும் அவரின் ஆபீஸ் மாடியில்தான் என் ரூம். அப்போது என்னுடன் தங்கியிருந்தவர் ராமநாதன். ஏ.எல்.எஸ்-ஸின் பெர்சனல் செகரட்டரி. எனக்கும் அவருக்கும் ஒரே வயது.

திரைத்தொண்டர் - 4
திரைத்தொண்டர் - 4

‘முத்தண்ணன் என்னை வரச்சொல்லி இருக்கிறார். காலையில் போகலாம்னு இருக்கேன்.’ (சின்ன வயதில் இருந்தே கவிஞர் எங்களுக்கு ‘முத்தண்ணன்’தான். குடும்பத்தைப் பொறுத்தவரை அவர் முத்து) ராமநாதனிடம் சொன்னேன்.

‘அடேய் அறிவுகெட்டவனே... நீ இங்க இருந்தீன்னா, பெரிய டைரக்டர்கள்ட்ட ஏ.எல்.எஸ்ஸே பேசிச் சேர்த்துவிடுவார். முத்தண்ணனே கஷ்டப்படுறார். பெரிய குடும்பம் வேற. நீ அவரோட போய் என்ன பண்ணப்போற? யோசிச்சுக்கப்பா.’ ராமநாதன் பேசியது ஏ.எல்.எஸ்ஸே நேரில் வந்து புத்திமதி சொன்னதுபோல் இருந்தது.

ஏ.எல்.எஸ் அப்போது ஆபீஸில் இல்லை. வீட்டுக்குப் போய்விட்டார். மறுநாள் அவர் வந்த பிறகு சொல்லிவிட்டும் போக முடியாது. ஏனென்றால், கவிஞர் எட்டரைக்கே தன் வீட்டுக்கு வரச்சொல்லியிருக்கிறார். அந்த வயதில் யோசிப்பதற்கான புத்தியும் எனக்குக் கிடையாது. ‘எழுத்தாளனாகணும்னு ஆசைப்பட்ட நீ, கவிஞர் மாதிரியான எழுத்தாளர்கிட்ட உதவியாளனா இருந்தால்தானே பெரிய ஆளா வர முடியும். சந்தனம் விக்கணும்னு நினைச்சா சந்தனக் கடைக்குத்தானே போகணும். எழுத்தாளன் ஆகணும்னா, ஸ்டுடியோவுல இருந்து என்ன பண்ணப்போற? கவிஞர்கிட்ட இருந்தா, அவர் சொல்லச்சொல்ல எழுதலாம். அனுபவம் கிடைக்கும். பத்திரிகையில் எழுதலாம். சினிமா ஆட்களைச் சந்திக்கலாம். அவரோட போறதுதான் நியாயம்.’

அது எப்படி அப்படி ஒரு முடிவு எடுத்தேன் என்று தெரியவில்லை. அது கடவுள் செயலாகத்தான் இருக்க வேண்டும். கவிஞர் எனக்கான சரஸ்வதியாகத் தெரிந்தார்.

மறுநாள் காலையில் வழக்கத்தைவிட முன்னதாகவே கிளம்பி, ‘ஸ்டுடியோவுக்குப் போறேன்’ என்று ராமநாதனிடம் பொய் சொல்லிவிட்டு, தி.நகருக்கு பஸ் பிடித்தேன். பனகல் பார்க் வந்து இறங்கி, கவிஞர் எழுதித்தந்த விலாசத்தைக் கேட்டு வீட்டைத் தேடிப்பிடித்து, அரை மணி நேரம் தாமதமாக ஒன்பது மணிக்குப் போய் சேர்ந்தேன்.

‘வாப்பா... அவர் எட்டு மணிக்கே ரெடியா கிட்டார். ‘பஞ்சுவை வரச்சொல்லியிருக்கேன். அவனைக் கூட்டிட்டுப் போகணும்’னு சொல்லி இவ்வளவு நேரம் உனக்காகத்தான் உட்கார்ந் திருந்தார்.’ சித்தி என்னை வரவேற்றார்.

‘கம்பெனியில் இருந்து கார் வந்துடுச்சு. மத்தவங்க எல்லாம் வந்துடுவாங்க. நான் போறேன். அவன் வர்றானா, வர மாட்டானானு தெரியலை. ஒருவேளை ஏ.எல்.எஸ் போக வேணாம்னு சொல்லி யிருக்கலாம். அவன் வந்தா, இந்த அட்ரஸுக்கு வரச் சொல்லு.’ கவிஞர் தன் கைப்பட எழுதித் தந்திருந்த அட்ரஸை சித்தி எடுத்துத் தந்தார்.

இரண்டு பஸ் மாறி ஒன்றரை மணி நேரம் தாமதமாக பத்தே முக்காலுக்குப் போனேன். அது, ராதாகிருஷ்ணன் சாலைக்குப் பின்னால் உள்ள தெரு. அங்குதான் பத்மினி வீடு, எம்.எல்.வசந்தகுமாரி வீடு எல்லாம் இருந்தன. கம்போஸிங்குக்குத் தயாராக இருந்தார்கள். என் அதிர்ஷ்டம் எம்.எஸ்.விஸ்வநாதன் அன்று தாமதமாக வந்தார். ‘கவலை இல்லாத மனிதன்’ படத்துக்கு பாட்டு எழுதத்தான் கவிஞர் அங்கு வந்திருக்கிறார் என்பது தெரிந்தது.

‘வாடா... உனக்காகத்தான் வீட்ல அவ்வளவு நேரம் காத்திருந்தேன். ஏன் லேட்? வீண் அலைச்சல்தானே... சீக்கிரம் வந்திருந்தா என்கூட கார்லயே வந்திருக்கலாம்ல. சரி சரி உட்கார்' என்ற கவிஞர், `இவன் என் அண்ணன் பையன்’ - எம்.எஸ்.வி-யிடம் அறிமுகப்படுத்தினார்.

‘இன்னையில இருந்து என்னோட வொர்க் பண்றான்’ - கவிஞர் சந்தோஷமாகச் சொன்னார்.

‘டேய்... உனக்கு பாட்டு எழுதத் தெரியுமா?’ - எம்.எஸ்.வி-க்கு ஆச்சர்யம்.

‘படிச்சிருக்கேன். கவிஞர் சொல்லச் சொல்ல எழுதுவேன்’ - என்னிடம் இருந்து பயமும் பவ்யமுமாகப் பதில்கள் வந்தன.

‘பரவாயில்லை கவிஞரே... உங்களுக்கு வாரிசு தயாராகிடுச்சு. இப்ப ட்யூனும் ரெடியாகிடுச்சு’ - நல்ல ட்யூன் அமைந்துவிட்ட சந்தோஷம் எம்.எஸ்.வி-யிடம்.

திரைத்தொண்டர் - 4
திரைத்தொண்டர் - 4

கம்பெனி உதவியாளர் என்னிடம் ஒரு நோட் பேட் தந்தார். ‘பஞ்சு எழுதிக்க...’ கவிஞர் சொல்லச் சொல்ல எழுதினேன். அவ்வளவு வேகமாகச் சொல்கிறார். நானும் கிடுகிடுவென எழுதினேன்.
‘டேய்... உன் கையெழுத்து முத்து முத்தா இருக்குடா...’ - எம்.எஸ்.வி சொன்னபோது ஏதோ அந்தப் பாடலை கவிஞருக்குப் பதிலாக நானே எழுதியதுபோல் சந்தோஷம்.

தவறு இல்லாமல் எழுதிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதியதால், அந்தப் பாடலின் கருத்தை அப்போது அவ்வளவாக நான் உள்வாங்கிக் கொள்ளவில்லை என்றே சொல்வேன். பிறகு நிதானமாகப் படிக்கும்போது ‘ட்யூனைக் கேட்டவுடன் எப்படி இப்படியான வரிகள் கவிஞரிடம் இருந்து உடனுக்குடன் வருகின்றன?’ எனக்கு பெரும் வியப்பு. ஆனாலும் அது காலத்தால் அழிக்க முடியாத தத்துவப் பாடலாக இருக்கும் என நான் அப்போது நினைக்கவில்லை. ‘வாசிப்பும் வாழ்வியல் அனுபவமும் சேரும் புள்ளியில்தான் அவரின் பாடல்கள் உருவாகின்றன’என்று பின்னர் நான் உணர்ந்துகொண்டேன்.

ஆம். கவிஞரிடம் உதவியாளராகச் சேர்ந்து அவர் சொல்லச்சொல்ல நான் எழுதிய அந்த முதல் பாடல், ‘பிறக்கும்போதும் அழுகின்றாய்... இறக்கும்போதும் அழுகின்றாய்...’

- தொண்டு தொடரும்...