மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திரைத்தொண்டர் - 5

திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம்
பிரீமியம் ஸ்டோரி
News
திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம் ( திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம் )

பஞ்சு அருணாசலம்

விஞரிடம் உதவியாளராகச் சேர்ந்து விறுவிறுவென வேலைகள் செய்ய ஆரம்பித்தேன். காலை 10 மணியில் இருந்து மதியம் 1:30 மணி வரை கம்போஸிங். மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு ஓய்வு. மாலை
6 மணியில் இருந்து இரவு 8:30 மணி வரை மீண்டும் வேலை. இதுதான் எங்களின் வேலைத் திட்டமிடல். எந்தப் பிரச்னையும் இல்லாமல் வேலைகள் சுமுகமாக நடந்தன. `இந்தக் குறுகிய வேலை நேரத்துக்குள் கவிஞர் எப்படி அத்தனைப் பாடல்களையும் எழுதினார்?!' என, இப்போதைய தலைமுறையினர் பலரும் ஆச்சர்யப்படலாம். அவரின் வேகம் அப்படி. ட்யூன் சொல்லி முடிப்பதற்குள், பாட்டு எழுதிக் கொடுத்துவிடுவார். அவரின் கற்பனை வளமும் சொல் வளமுமே அந்த வேகத்துக்குக் காரணம். உண்மையிலேயே அது கடவுள் கடாட்சம்தான். கவிஞருக்கு அடுத்து அதே கடாட்சம் பெற்றவராக நான் பார்த்து வியந்த மனிதன் இளையராஜா. (ராஜா பற்றி, பிறகு சொல்கிறேன்.)

கவிஞரின் அந்த மதிய ஓய்வு நேரங்கள், இரவில் அவர் தூங்கச் சென்ற பிறகான பொழுதுகள்தான் எனக்கான நேரம். அப்போது நான் நிறைய வாசிப்பேன். கதைகள் சொல்வேன் என்பது என்னை அறிந்தவர்களுக்குத் தெரியும். அந்தச் சமயங்களில் மற்றவர்களின் படங்களின் கதை விவாதத்துக்குச் செல்வேன். அது கவிஞருக்கும் தெரியும். அதேபோல ஒரு சினிமா விட மாட்டேன். எல்லா மொழிப் படங்களையும் பார்த்துவிடுவேன். பெரும்பாலும் நைட் ஷோதான். அப்படி படங்கள் பார்க்கும்போது, ‘நாமும் எதிர்காலத்துல இந்த மாதிரி எழுதணும்’ என நினைத்துக்கொள்வேன். அப்போது வீட்டில் கம்பெனி கார், சொந்த கார் என நான்கைந்து கார்கள் நிற்கும். அந்த கார்களில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொண்டுதான் சினிமாவுக்குப் போவேன். கவிஞரும் 50, 100 ரூபாய் செலவுக்குக் கொடுப்பார். அது அன்று பெரிய தொகை. காரணம், சினிமா டிக்கெட்டே அப்போது இரண்டே கால் ரூபாய்தான்.

திரைத்தொண்டர் - 5
திரைத்தொண்டர் - 5

இது, அண்ணன் மகன் என்ற அன்பினால் எனக்கு மட்டும் கிடைத்த சிறப்புச் சுதந்திரம் கிடையாது; ஏற்கெனவே அவரிடம் இருந்த உதவி யாளர்களிடமும் அப்படித்தான் கவிஞர் அன்போடு நடந்துகொண்டிருக்கிறார். அவிநாசிமணி, அய்யாப்பிள்ளை, புகழேந்தி... இவர்கள் எனக்கு முன்னர் கவிஞரிடம் உதவியாளராக இருந்தவர்கள். அவிநாசிமணியை, பிறகு கவிஞரே எல்.வி.பிரசாத்திடம் உதவியாளராக வேலைக்குச் சேர்த்துவிட்டிருக்கிறார். அவரிடம் நீண்டநாள் உதவியாளராக இருந்து, பிறகு தனியாக வந்து ‘அதிர்ஷ்டம் அழைக்கிறது’ உள்பட நிறையப் படங்களை அவர் இயக்கினார். ‘அதிர்ஷ்டம் அழைக்கிறது’ கே.ஆர்.ஜி தயாரித்த படம். அதில் பாரதிராஜா உதவி இயக்குநராக வேலைசெய்தார் என்பது கூடுதல் செய்தி.

புகழேந்தியை, ஏ.சி.திருலோகசந்தரிடம் சேர்த்துவிட்டார். அய்யாப்பிள்ளை, நன்றாக கதை-வசனம் எழுதுவார். காமெடி அவரின் ஸ்பெஷல் ஏரியா. கவிஞர்-எம்.ஜி.ஆர்-சின்னப்பா தேவர் இந்த மூவர் கூட்டணியில் வந்த முதல் படம் ‘தாய்க்குப்பின் தாரம்’. தேவர், படத்தின் கதையைச் சொல்லி கவிஞரிடம் ஸ்கிரிப்ட் எழுதச் சொன்னபோது முக்கியமான சீன்களை கவிஞர் எழுதிக்கொடுத்துவிட்டு, ‘யோவ்... அய்யாப்பிள்ளை காமெடியா நல்லா எழுதுவான்யா’ எனக் கவிஞர் அவருக்கு ஸ்பேஸ் ஏற்படுத்தித் தந்திருக்கிறார். அந்தப் பட டைட்டில் கார்டில்கூட, ‘கதை: சின்னப்பா தேவர், திரைக்கதை-வசனம்: கண்ணதாசன், அய்யாப்பிள்ளை’ என வரும். இப்படி தன் உதவியாளர்கள் விரும்பியதைச் செய்துகொடுப்பார். ‘உதவியாளர்னா நீ என்கூடவே இருக்கணும். வெளியே எங்கேயும் போகக் கூடாது’ என ஒருபோதும் அழுத்தம்கொடுக்க மாட்டார். அப்படித்தான் எனக்கும்.

திரைத்தொண்டர் - 5
திரைத்தொண்டர் - 5

இப்படி உள்ள மனிதரிடம் ‘சம்பளம்’ என்று எப்படிக் கேட்க முடியும்? ஆனால், என் குடும்பச் சூழல் பற்றி கவிஞருக்கு நன்கு தெரியும். அவரே அவ்வப்போது, ‘என்னடா, பணம் எதுவும் வேணுமா?' என்பார். ‘எனக்கு வேணாம். தம்பிங்க ரெண்டு பேரையும் ஸ்கூல்ல சேர்த்துவிட்டிருக்கேன். அவங்களுக்கு ஹாஸ்டலுக்குப் பணம் அனுப்பணும். அப்புறம் வீட்டுக்குக் கொஞ்சம் பணம் அனுப்பணும்’ என்பேன். ‘சரி 300 ரூபாய் எடுத்துக்க’ என்பார். அப்போது அவரின் பணம் பெரும்பாலும் என்னிடம்தான் இருக்கும்.

இதற்கிடையில் கவிஞரின் திட்டமிடப்படாத சினிமா வேலைகள், சமயங்களில் பலரை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கிவிடும். ஒரே நாளில், ஒரே நேரத்தில் நான்கைந்து கம்பெனிகளுக்கு புரோகிராம் தந்துவிடுவார். அது அவர் தெரிந்தே செய்வது அல்ல, ஏதோ ஒரு யோசனையில் சொல்லிவிடுவார். அந்த நான்கைந்து கம்பெனிகளின் கார்களும் காலையில் வீட்டுவாசலில் அணிவகுத்து நிற்கும். அதைப் பார்த்த பிறகுதான் ‘எல்லாரையும் ஒரே நேரத்துல வரச்சொல்லிவிட்டோம்’ என்பதை உணர்வார். ஆனாலும் அலட்டிக்கொள்ளாமல் எந்த கார் முதலில் வந்ததோ அதில் ஏறி போய்விடுவார்.

‘வரலைங்கிற விஷயத்தைக்கூட கவிஞர் சொல்ல மாட்டங்கிறாரே பஞ்சு’ - பல கம்பெனிகள் போன்செய்து என்னிடம் வருத்தப்படுவார்கள். அதை நான் கவிஞரிடம் சொல்வேன். ‘அதுக்கு என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு’ - அந்தக் கேள்வியை என்னிடமே திருப்பிவிட்டார். ‘இனிமேல் சினிமா சம்பந்தமான புரோகிராம்களை நான் பார்த்துக்கிறேன். அரசியல் சந்திப்பு, பொதுக்கூட்டங்களை நீங்க கவனிச்சுக்கங்க’ - என் மனதில் இருந்ததை வெளிப்படையாகச் சொன்னேன். ‘ஓ.கே., அப்படின்னா ஒண்ணு பண்ணலாம். இனி திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை சினிமாவுக்கு. சனி, ஞாயிறு கட்சிக்கு. அந்த ஐந்து நாட்கள் புரோகிராம்களை நீ பார்த்துக்க. இந்த ரெண்டு நாட்களையும் நான் பார்த்துக்கிறேன். என்கிட்ட யாராவது பேசினாலும் பஞ்சுகிட்ட கேட்டுக்கங்கனு சொல்லிடுறேன்’ - தான் கவிதை எழுதுவதைப்போலவே உடனடியாக ஐடியா பிடித்தார்.

இப்படி கவிஞரின் புரோகிராம்களை ஒழுங்குபடுத்திக்கொண்டு இருந்தபோது, ‘எல்லா கம்பெனிகளும் பேசுகிறார்கள். ஆனால், சிவாஜி படம் சம்பந்தப்பட்ட கம்பெனிகளில் இருந்து மட்டும் யாரும் பேசுவதே இல்லையே ஏன்?’ என்று கேள்வி எழுந்தது. `ஏதாவது கட்சித் தகராறால் வர்றது இல்லைபோலிருக்கு' என நினைத்தேன். ஒருநாள் கவிஞரிடமே அதைக் கேட்டுவிட்டேன். அப்போதுதான் தனக்கும் சிவாஜிக்குமான அந்தப் பிரச்னையைப் பற்றி கவிஞர் கூறினார்.

விக்ரம் ஸ்டுடியோ அதிபர் பி.எஸ்.ரங்கா, ஒளிப்பதிவாளர், இயக்குநர், தயாரிப்பாளர். கன்னடத்துக்காரர். இவர், சிவாஜியை வைத்து `தெனாலிராமன்’ படம் தொடங்கியிருந்தார். அதற்கு திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதியது கவிஞர்தான்.

திரைத்தொண்டர் - 5
திரைத்தொண்டர் - 5

அப்போது சிவாஜி-எம்ஜி.ஆர்-கவிஞர் மூவரும் தி.மு.க-வில் இருந்தனர். கட்சியிலும் சினிமாவிலும் அவர்கள் வளர்ந்துகொண்டிருந்த நேரம். அந்தச் சமயத்தில் சிவாஜி ‘சம்பூர்ண ராமாயணம்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ‘ஒரு பகுத்தறிவுப் பிரதிநிதி எப்படி புராணப் படத்தில் நடிக்கலாம்’ என தி.மு.க-வில் ஒரு பிரிவினர் சிவாஜியை எதிர்த்திருக்கின்றனர். ‘தொழில் வேறு... கட்சி வேறு’ - இது சிவாஜியின் வாதம். அதுமட்டும் அல்லாமல் அவர் தன் திருமணத்துக்குப் பிறகு திருப்பதிக்குப் போய் வந்ததும், கட்சிக்குள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘உங்களைக் கட்சியைவிட்டு விலக்குவோம்’ என்று சிலர் சொல்லவும், ‘நீங்க என்ன விலக்குறது, நானே விலகிக்கிறேன்’ என்று சிவாஜி தி.மு.க-வில் இருந்து விலகியிருக்கிறார்.

அந்தச் சமயத்தில் கவிஞர் ‘தென்றல் திரை’ என்ற பத்திரிகையில் சினிமா தொடர்பான கட்டுரைகளை எழுதிவந்தார். அதன் ஆசிரியர், பதிப்பாளர் கே.ஆர்.பாலன். பிறகு, அந்தப் பத்திரிகையையும் கவிஞரே விலைக்கு வாங்கி நடத்தினார் என்பது வேறு விஷயம்.

அது `தெனாலிராமன்' படம் ஷூட்டிங் முடிந்த சமயம். தெனாலிராமனை, மன்னர் ஒரு குழியில் புதைத்து யானையைவிட்டு சிரச்சேதம் செய்யச் சொல்லியிருப்பார். அப்போது அந்த வழியாக வரும் ஒரு கூனனிடம், ‘எனக்கு லேசாகக் கூன். இப்படிப் புதைந்திருந்தால் கூன் நிமிர்ந்துவிடும். வேண்டும் என்றால் என்னை வெளியே எடுத்துப் பார். நான் நேராகியிருப்பேன். பிறகு, அந்தக் குழிக்குள் நீ புதைந்திருந்தால் உன் கூனலும் நிமிர்ந்துவிடும்’ என்பார். அந்தக் கூனனும் இதை நம்பி சிவாஜியை விடுவித்துவிட்டு அவன் புதைந்துகொள்வான். இது படத்தின் ஒரு காட்சி. அந்தப் படக் காட்சி சம்பந்தப்பட்ட போட்டோ ஒன்றை `தென்றல் திரை' பத்திரிகையில் போட்டு, ‘சிவாஜி கணேசா... இதுதான் உன் எதிர்காலமா?’ என கவிஞர் எழுதியிருக்கிறார். பத்திரிகை வெளிவந்த பிறகு சிவாஜிக்கு, கவிஞர் மேல் கடும்கோபம்.

அந்தச் சமயத்தில் கவிஞர் ஒரு வேலையாக வாஹினி ஸ்டுடியோவுக்குப் போயிருக்கிறார். அங்கு ஒரு ஃப்ளோரில் என்.எஸ்.கே பட ஷூட்டிங்; இன்னொரு ஃப்ளோரில் சிவாஜி பட ஷூட்டிங். கவிஞர், வாஹினிக்கு வந்திருக்கிற விஷயம் சிவாஜிக்குத் தெரிந்திருக்கிறது. கோபமாக வெளியே வந்தவர் ‘டேய் கண்ணதாசா, நில்லுடா’ என்று கவிஞரைத் துரத்திச் சென்றிருக்கிறார். சிவாஜி திடீரெனத் துரத்திக்கொண்டு வருவதைப் பார்த்ததும் கவிஞருக்கு அதிர்ச்சி. கோபத்தில் அடிதடியாகி விட்டால் அசிங்கமாகிவிடுமே என யோசித்தவர், என்.எஸ்.கே இருந்த செட்டுக்குள் ஓடியிருக்கிறார்.

‘டேய்... டேய்... என்னடா பிரச்னை, ஏன்டா ஓடுறீங்க?’ என இருவரையும் என்.எஸ்கே தடுத்திருக்கிறார். அப்போது சினிமா உலகில் என்.எஸ்.கே-தான் மூத்தவர். அவரின் வார்த்தைக்கு, பெரிய மரியாதை உண்டு. ‘இன்னைக்கு இவனை அடிக்காம விட மாட்டேன். ஒரு அறையாவது அறையணும்ணே’ சிவாஜிக்குக் கடும்கோபம். ‘கணேசா, அறிவு இல்லாமப் பேசாத. என்ன விஷயம்னு சொல்லு...’ - இப்படி அடித்துக்கொள்கிறார்களே என என்.எஸ்.கே-வுக்கு வருத்தம். ‘என்னைப் பத்தி என்ன எழுதியிருந்தான்னு தெரியுமாண்ணே? என்னைக் குழியில வெச்சுப் புதைக்கப் பார்க்கிறான்ணே இவன்.

திரைத்தொண்டர் - 5
திரைத்தொண்டர் - 5

கட்சியில ஆயிரத்தெட்டுப் பிரச்னைகள் இருக்கலாம். அதுக்காக `புதைஞ்சுபோ’னு எழுதுறது என்னண்ணே நியாயம்?’ - சிவாஜிக்குக் கோபம் தீரவில்லை.

‘பத்திரிகையில் எழுதினதால உன் மதிப்பு குறைஞ்சிடுமா என்ன? உனக்கு தன்னம்பிக்கை இல்லையா? விட்டுக்கொடுத்துப் போ கணேசா’ - சிவாஜியை என்.எஸ்.கே சமாதானம்செய்து அனுப்பியிருக்கிறார். சிவாஜி போனதும், ‘நேரடியா கட்சியில் ஈடுபடலைனாலும் நானும் தி.மு.க-காரன்தான். சிலர் கட்சியில் தீவிரமாவும் சிலர் மிதமாவும் இருப்பாங்க. உனக்கு அவங்க கொள்கை பிடிக்கலைனா ஒதுங்கிப் போ. நீ பத்திரிகைகாரனா மட்டும் இருந்தா பிரச்னை இல்லை. ஆனா, நீ சினிமாவிலும் இருக்க. அவனை ஏன் பகைச்சுக்கிற? யாரைத் திட்டுறதா இருந்தாலும் அதை அவங்களே ரசிக்கிற மாதிரி திட்டு’ - கவிஞருக்கு அழகாக புத்திமதி சொல்லியிருக்கிறார் என்.எஸ்.கே. இவை எல்லாம் கவிஞர் சொல்லி நான் கேள்விப்பட்டவை.

அந்த விரட்டல், துரத்தல், சண்டை இன்றையச் சூழலில் நடந்திருந்தால், அவர்கள் இருவரும் காலத்துக்கும் சேராததுபோல் செய்திருப்பார்கள் இன்றைய சமூக வலைதளப் போராளிகள். ஆனால், அன்று எந்தப் பத்திரிகையிலும் அந்தச் செய்தி வரவில்லை. சினிமா உலகத்துக்கு மட்டும் தெரியும். ஆனால், ‘நான் சிவாஜி படங்களுக்கு எழுத மாட்டேன்’ எனக் கவிஞரோ, `என் படங்களுக்கு கண்ணதாசன் எழுதக் கூடாது’ என சிவாஜியோ சொல்லவில்லை. இருவருக்கும் பிடிக்காது என்பதால், சிவாஜி படங்களுக்கு எழுதச்சொல்லி கவிஞரை அழைக்க மாட்டார்கள்.

அந்தச் சமயத்தில் சிவாஜி படத்துக்குப் பாட்டு எழுத கவிஞரை அழைத்தார்கள். அது இயக்குநர் பீம்சிங் ஓஹோவென வந்திருந்த நேரம். பீம்சிங் எனக்கு ஏற்கெனவே அறிமுகம். நான் சென்னைக்கு வந்த புதிதில் என்னை உதவியாளராகச் சேர்த்துக்கொள்ளும்படி அவரிடம் கேட்டிருக்கிறேன். அப்போது அவர், ‘செந்தாமரை’ இயக்கிக் கொண்டிருந்தார். ‘இது எனக்கு முதல் படம். அதுவும் எப்ப ரிலீஸ் ஆகும்னு தெரியலை. இந்தப் படம் வரட்டும். பிறகு பார்ப்போம்’ எனச் சொல்லியிருந்தார். நான் கவிஞரிடம் சேர்ந்த பிறகும்கூட ‘நல்லா வாடா பஞ்சு’ என உற்சாகப்படுத்துவார். தொடர்ந்து அவர் கலைஞரின் கதை-வசனத்தில் ‘ராஜா ராணி’ இயக்கினார். அது ஓஹோவென ஓடியது. பிறகு, எம்.எஸ்.வி., சோலைமலை, வேலுமணி ஆகியோருடன் சேர்ந்து ‘புத்தா பிக்சர்ஸ்’ என்ற கம்பெனியைத் தொடங்கினார்கள். அந்த நால்வரில் வேலுமணி, புரொடக்‌ஷன் மேனேஜராக இருந்து முன்னுக்கு வந்தவர். ஒருங்கிணைப்பதில் கெட்டிக்காரர். ‘சிவாஜியும் ஜெமினியும் நடிச்சா நல்லா இருக்கும். ரெண்டு பேரும் ஒப்புக்குவாங்களா?’ என பீம்சிங் யோசித்தால், ‘பீம் பாய், உங்களுக்கு சிவாஜி, ஜெமினி ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கணும். அவ்வளவுதானே... நான் பார்த்துக்கிறேன், விடுங்க.’ இப்படி என்ன சொன்னாலும் ‘என்கிட்ட விட்ருங்க’ என்பதாகத்தான் இருக்கும் வேலுமணியின் பதில். இவர்கள் தயாரித்த முதல் படம் ‘பதிபக்தி’. பீம்சிங் இயக்கினார். எல்லா பாடல்களையும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார். படம், மிகப் பெரிய வெற்றி.

இதற்கிடையில் ‘எங்களுக்கு சினிமா தயாரிப்பில் ஆர்வம் இல்லை’ என எம்.எஸ்.வி-யும் சோலைமலையும் ‘பதிபக்தி’ லாபத்தில் தங்கள் பங்கைப் பெற்றுக்கொண்டு கம்பெனியில் இருந்து விலகிவிட்டனர். அந்தச் சமயத்தில் வேலுமணியும் பீம்சிங்கும் சேர்ந்து சிவாஜியை வைத்து ‘பாகப்பிரிவினை’ படத்தைத் தொடங்கியிருந்தனர். ஓர் இக்கட்டான சூழலில் அந்தப் படத்துக்கு, கவிஞர் பாட்டெழுத வேண்டும் என்பது பீம்சிங்கின் விருப்பம். ஆனால், கவிஞர்தான் சிவாஜியின் படத்துக்கு எழுத மாட்டாரே? வழக்கம்போல் வேலுமணி, ‘இந்தப் படத்துக்கு கவிஞர் பாட்டு எழுதணும் அவ்வளவுதானே... விட்ருங்க, நான் பார்த்துக்குறேன்’ என்றார். ஆனால் எவ்வளவோ முயன்றும் கவிஞரை அவரால் சம்மதிக்கவைக்க முடியவில்லை.

சிவாஜி படத்துக்கு எழுதவே முடியாது என்று மறுத்த கவிஞரை ‘பாகப்பிரிவி’னைக்கு பாட்டெழுத நான் சம்மதிக்கவைத்த அந்தத் தருணம், என் வாழ்க்கையின் பெரும் பாக்கியம்.

- தொண்டு தொடரும்...