
பஞ்சு அருணாசலம்

‘‘‘சாரதா’வில் நான் எழுதிய ‘மணமகளே மருமகளே வா வா...’ பாடல் பெரிய ஹிட். திரையிசை ரசிகர்கள் பலரும், அந்தப் பாட்டை கவிஞர்தான் எழுதியதாக நினைத்தார்கள். சினிமாவில்கூட சிலர் அதை கவிஞரின் பாட்டு என்றே எண்ணினர். கவிஞர் எழுதியதாக நினைக்கும் அளவுக்கு அந்தப் பாடல் நன்றாக வந்ததில் எனக்கும் மகிழ்ச்சி. பிறகு, இரண்டு மாத இடைவெளியில் ‘நானும் ஒரு பெண் என்ற படத்தில் ஏவி.எம்.சரவணன் கூப்பிட்டு ஒரு பாட்டு எழுதச் சொன்னார். அதுதான் ‘பூப்போல பூப்போல பிறக்கும்... பால்போல பால்போல சிரிக்கும்...’ பாடல்.

‘தெய்வத்தின் தெய்வம்’ படத்துக்குப் பாட்டு எழுத இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கவிஞரிடம் காட்சிகளை விளக்கிக் கொண்டிருந்தார். திருமணம் முடிந்து கணவன்-மனைவி இருவரும் தேன்நிலவுக்குப் போகிறார்கள். அப்படிப் போகும் வழியில் ஒரு விபத்தில் கணவன் இறந்துவிடுகிறான். அந்தத் துக்கத்தில் மனைவி பாடுவதாக ஒரு பாட்டு... ‘இந்த சிச்சுவேஷனுக்கு, ஒரு நாடகத்துல பஞ்சு ஒரு பாட்டு எழுதியிருக்கான். அது பிரமாதமா பொருந்தும். அதையே வெச்சுக்கடா’ என்றார். ‘பாட்டுப் பாட வாயெடுத்தேன் ஏலேலோ... அது பாதியிலே நின்னுபோச்சே ஏலேலோ...’ என்ற அந்தப் பாடலை கவிஞர் நினைவுவைத்திருந்ததில் எனக்கு மகிழ்ச்சி.
நான் பேசுவது, பழகுவது, பல ஆங்கிலக் கதைகளைப் பற்றி டிஸ்கஸ் பண்ணுவதைப் பார்த்துவிட்டு, `டிஸ்கஷனுக்கு வர்றீங்களா?’ என நட்புரீதியாக இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் கேட்பார்கள். அப்படி எனக்கு முதலில் வாய்ப்பு தந்தவர், என்.எஸ்.மணியன். பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்தவர். ஜெய்சங்கரை வைத்து ‘பொன்வண்டு’ என்ற படம் எடுத்தார். அவரிடம் இரண்டு, மூன்று படங்களில் வேலைசெய்தேன். அப்போதுதான் ஜெய்சங்கரிடம் நெருங்கிப் பழக வாய்ப்பு அமைந்தது. நான் சீன் சொல்லச் சொல்ல ‘பிரமாதமா சொல்றீயே... நல்லா இருக்கு, நல்லா இருக்கு’ என ஜெய்சங்கர் பாராட்டுவார்.
‘பஞ்சு, நீ ஒரு நல்ல கதை ரெடி பண்ணு. நான் கம்பெனி பார்த்துச் சொல்றேன்’ - பார்க்கும்போது எல்லாம் ஜெய்சங்கர் சொல்லிக்கொண்டே இருப்பார். அதேபோல வி.சி.குகநானும், அவரது படங்களில் பணிபுரிய அழைத்தார். காலை 10 மணிக்கு கவிஞருடன் செல்ல வேண்டும் என்பதால், அதிகாலையிலேயே வீட்டுக்கு வந்து அழைத்துச் சென்றுவிடுவார்.
இப்போது உள்ளதுபோல் டிஸ்கஷனுக்காக ஹோட்டலில் ரூம் போடும் வழக்கம் அன்று இல்லை. நான், அவருடைய அசிஸ்டென்ட், அவர் மூவரும் அடையாறு காந்தி மண்டபத்துக்குச் சென்று கதைகளை விவாதிப்போம். பிறகு, நான் என் ஐடியாக்களைச் சொல்வேன். இப்படி கதையை விவாதித்துவிட்டு, எடுத்து வந்திருக்கும் டிபனைச் சாப்பிட்டுவிட்டு கிளம்பிவிடுவோம். அந்தச் சமயத்தில் ‘பெத்தமனம் பித்து’ என்ற தன் சொந்தப் படத்தில் எஸ்பி.முத்துராமனை இயக்குநராக அறிமுகப்படுத்தினார். படம் பிரமாதமாகப் போனது.

பிறகு, நான் குகநாதனிடம் உதவியாளராக இருந்தபோது `காசி யாத்திரை', `அன்புத்தங்கை' உள்பட சில படங்களின் டிஸ்கஷனில் இருந்தேன். அவரின் சில படங்களுக்குப் பாடல்களும் எழுதிக்கொடுத்தேன்.
அப்போது பெரிய தொழிலதிபர்கள் சிலர், சினிமாக்களுக்கு மீடியேட்டர்கள் மூலம் ஃபைனான்ஸ் செய்துவந்தனர். அதில் முக்கியமானது ஜே.எல்.ஃபிலிம்ஸ். சேதுராமன் முக்கியமான மீடியேட்டர். கவிஞர் எடுத்த பல படங்களுக்கு மீடியேட்டராக இருந்து ஃபைனான்ஸ் ரெடி பண்ணித் தந்தவர். எனக்கும் பழக்கம். அந்தச் சமயத்தில் சேதுராமனிடம் ஜே.எல்.ஃபிலிம்ஸ் நிறுவனத்தினர், `நல்ல கதை இருந்தால் படம் தயாரிக்கலாம்' எனச் சொல்லியிருக்கிறார்கள். எங்கள் மூவரின் விருப்பமும் ஒன்று சேர, மூன்றே நாட்களுக்குள் கிடுகிடுவென முழு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணினேன்.
நான் எப்போதும் நிறைய ஐடியாக்கள் வைத்திருப்பேன். தயாரிப்பாளர்களுக்கு எந்த ஐடியா பிடித்திருக்கிறதோ உடனே விறுவிறுவென அதை ஸ்கிரிப்டாக்கித் தந்துவிடுவேன். அப்போது சிவாஜி உள்பட பலர் ஹெவி சப்ஜெக்ட் பண்ணிக்கொண்டிருந்த நேரம். நான் தங்கக் கடத்தலை மையமாக வைத்து காமெடி ஸ்கிரிப்ட் எழுதினேன். கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரித்தனர். ஜெமினி, சரோஜாதேவி, சோ, சந்திரபாபு உள்பட ஏகப்பட்ட பெரிய நட்சத்திரங்கள் சேர்ந்தனர். டைரக்டர் கோபிநாத், தெலுங்குக்காரர். (‘பன்னீர் புஷ்பங்கள்’ சுரேஷின் அப்பா) நான் சொல்லி சங்கர்-கணேஷை இசையமைப்பாளராகப் போட்டனர்.
‘என்னடா இது... சின்னப் படமாக ஆரம்பித்து பெரிய புராஜெக்ட்டாக ஆகிவிட்டதே. ஹெவி சப்ஜெக்ட்ஸ் ஓடிட்டு இருக்கிற இந்த நேரத்துல இந்த காமெடி ஸ்கிரிப்ட் எடுபடுமா... ஓடுமா?’ என பயந்தேன். அந்தச் சமயத்தில் நகைச்சுவையில் டாப்பில் இருந்தவர் சோ. எனக்குப் பெரிய பழக்கம் இல்லை. ஆனால், ஓரளவுக்குத் தெரியும். `என் கதையைக் கேட்டு அபிப்பிராயம் சொல்ல முடியுமா?' என அவரிடம் கேட்டேன். பெருந்தன்மையோடு அவரும் அவரின் டீமில் இருந்த நீலுவும் வந்தனர். அவர்களிடம் கதையைச் சொல்லி கருத்துக் கேட்டேன். ‘வித்தியாசமா பண்ணியிருக்க பஞ்சு. கமர்ஷியலா நல்லா வரும், தைரியமா பண்ணு’ என ஊக்கப்படுத்தியவர், ஆங்காங்கே சில பன்ச்சஸ் சேர்த்தார்.
பாடல்கள் ரிக்கார்டிங் எல்லாம் வேகமாக நடைபெற்று இரண்டு மாதங்களில் படமே முடிந்துவிட்டது. படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.
‘ஆல் நெகட்டிவ் ரைட்ஸ் எங்களுக்கு எழுதிக் கொடுத்துடுங்க. லாப-நஷ்டம் எங்களையே சேரும். எல்லாரையும் ஒருங்கிணைச்சு, கூட இருந்து பண்ணிக் கொடுத்திருக்கீங்க. உங்களுக்கு என்ன வேணுமோ கேளுங்க தர்றோம்’ என சேதுராமன் தரப்பினரிடம் ஜே.எல்.ஃபிலிம்ஸார் பேசியிருக்கிறார்கள். ‘நாங்க சம்பளத்துக்காக வேலைபார்க்கலை. ஃபிஃப்ட்டி ஃபிஃப்ட்டி ஷேர் கொடுத்துடுங்க’ என சேதுராமன் தரப்பில் சொல்ல... இரு தரப்புக்கும் கருத்து வேறுபாடு.
`பங்கு எப்படி கொடுக்க முடியும்? சம்பளம் வேணும்னா கேட்டு வாங்கிக்குங்க. ரைட்ஸை எழுதிக் கொடுங்க’ என்றது ஜே.எல்.ஃபிலிம்ஸ். ‘பஞ்சுவைக் கூட்டிட்டு வந்தது, ஆர்ட்டிஸ்ட் ஃபிக்ஸ் பண்ணினது எல்லாம் நாங்க. உங்களுக்கு எப்படி முழு ரைட்ஸையும் தர முடியும்?’ என்றது சேதுராமன் தரப்பு.

‘நாங்க பார்த்துவெச்ச பசங்க. எங்ககிட்டயே சட்டம் பேசுறானுங்களா? அவனுங்களா இறங்கி வந்தா வரட்டும். அந்தப் படம் ரிலீஸ் ஆகலைன்னாலும் பரவாயில்லை...’ என அவர்கள் பிடிவாதமாக இருந்தனர். கடைசி வரை அந்தப் படம் ரிலீஸ் ஆகவே இல்லை. அந்தச் சயமம் அவர்களுக்கு யோசனை சொல்லவோ, புத்தி சொல்லவோ எனக்கு வயதும் கிடையாது; அனுபவமும் இல்லை. `முதல் வாய்ப்பு நமக்கு அவ்வளவுதான்' என மனதைத் தேற்றிக்கொண்டேன்.
` `பஞ்சு நல்லா எழுதுறான்’னு சொல்லுங்கண்ணே. சான்ஸ் தர்றாரானு பார்ப்போம்’ என ஏ.எல்.எஸ் ஸ்டுடியோவில் வேலைசெய்த சின்ன அண்ணாமலை உள்பட சிலரிடம் சொல்வேன். அவர்களும் அவரிடம் பேசுவார்கள். ‘வாய்ப்பு வரும்போது சொல்றேன்’ என்பார். காரணம், பீம்சிங், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், மாதவன்... என பலருக்கும் ஏ.எல்.எஸ்-தான் முதல் வாய்ப்பு தந்தவர்.
இதற்கு இடையில் கே.எஸ்.கோபாலகிருஷ் ணனின் அசோசியேட்டுகள் இருவர் ராம்நாத் - பிரான்சிஸ். இவர்களுக்கு வாய்ப்பு தரும்படி கோபாலகிருஷ்ணனும் ஏ.எல்.எஸ்-ஸிடம் கேட்டிருந்தார். ‘சரி பண்ணட்டும். பஞ்சுவைக் கூப்பிட்டு கதை எழுதச் சொல்லுங்க’ என ஏ.எல்.எஸ் சொல்லிவிட்டார். ‘ஏ.எல்.எஸ் ஸ்டுடியோ பிரச்னை இல்லாத கம்பெனி. கண்டிப்பாகப் படம் வந்துவிடும்’ என எனக்கு சந்தோஷம்.
விறுவிறுவென கதை, திரைக்கதை, வசனம் எழுதித் தந்தேன். ரவிச்சந்திரன்-சரோஜாதேவி காம்பினேஷன். பூஜை முடிந்து நான்கு நாட்கள் ஷூட்டிங் நடந்தது. டைட்டிலுக்கு நான்கைந்து சாய்சஸ் எழுதித் தந்தேன். ‘கொஞ்சம் ஷூட்டிங் போகட்டும். என்ன தலைப்புனு பிறகு சொல்றேன்’ என்றார் ஏ.எல்.எஸ். ஆனால், அடுத்த ஷெட்யூல் ஷூட்டிங் தள்ளிப்போனது. ஒரு மாதத்துக்குப் பிறகு அனைவரும் கால்ஷீட் தந்திருந்தனர்.
இதற்கு இடையில் பிரபல ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து, கலைஞர் கதை-வசனத்தில் ‘தங்கத்தம்பி’ என்ற படத்தைத் தொடங்கினார். அவர் எம்.ஜி.ஆர் படங்களின் ஆஸ்தான ஆர்ட் டைரக்டர். ஒரு படம் தொடங்கினால் தடங்கள் இல்லாமல் படப்பிடிப்பு நடத்தி முடித்து ரிலீஸ் செய்துவிடுவார். ஒரே மாதத்தில் ஒட்டுமொத்த படத்தையும் முடிக்கும் திட்டத்தில் இருந்தார். அந்தப் படத்தை இயக்க ராம்நாத்- பிரான்சிஸை அழைத்தார். ‘ஒரு மாதத்துக்குள் இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்த மாதம் ஏ.எல்.எஸ் படத்துக்குப் போய்விடலாம்’ என நினைத்து அந்தப் படத்தை இயக்க அவர்கள் ஒப்புக்கொண்டுவிட்டனர்.
‘தங்கத்தம்பி’க்கான முழுப்பக்க பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்து ஏ.எல்.எஸ் கொதித்துவிட்டார். ‘சான்ஸ் தாங்கனு கெஞ்சினாங்க. மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தை சொல்லாமப் போயிட்டாங்களே’ என அவருக்குக் கோபம். பிறகு, அவர்கள் இருவரும் தன்னைச் சந்திக்க வந்தபோது மறுத்துவிட்டார். ‘அந்தப் படத்தை முடித்துவிட்டு நம்ம படத்தைத் தொடங்கிவிடலாம்’ என முன்னரே சொல்லியிருந்தால் ஏ.எல்.எஸ் பெருந்தன்மையாக விட்டுக்கொடுத் திருப்பார். காரணம், கலைஞர் அவரின் நண்பர். அந்தக் கோபத்தால் ‘அந்தப் படத்தை அப்புறம் பார்த்துக்கலாம்’ எனச் சொல்லிவிட்டார். அந்தப் படமும் நின்றுபோனது.
பிறகு, ‘பஞ்சுவைக் கூப்பிட்டு ஒரு சின்ன பட்ஜெட் படத்துக்கான கதையை எழுதித் தரச் சொல்லுங்க’ என்றார் ஏ.எல்.எஸ். ஒரு ஜப்பானிய படத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு கதை எழுதினேன். ஜெய்சங்கர், சோ இருவரும் அடுத்தடுத்த வீட்டுக்காரர்கள். இருவரும் திருமணம் ஆனவர்கள். இருவரின் பெயர்களும் ராமநாதன். அப்போது ஒரு குழந்தை, சோ வீட்டுக்கு வரும். அது யாருடைய குழந்தை என்ற சஸ்பென்ஸ் கடைசியில் உடையும். பெயர் குழப்பம் உள்பட நிறைய விஷயங்களை வைத்து காமெடியாகவும் சென்டி மென்டாவும் எழுதியிருந்தேன். பக்கத்து பக்கத்து வீடு. அந்த இரண்டு வீடுகளுக்குள் கதை முடிந்துவிடும். ஒரு வாரம் ஷூட்டிங் நடந்தது. படம் பிரமாதமாக வந்திருந்தது. படத்தின் பெயர் ‘இரண்டு சிட்டுக்கள்’.
ஷூட்டிங் முடிந்தவரை படத்தைப் போட்டுப ்பார்த்த ஏ.எல்.எஸ். ‘படம் ரொம்ப எளிமையா இருக்கே, இது ஓடாது’ என முடிவுசெய்துவிட்டார். காரணம், அப்போது `பாவமன்னிப்பு', `பாசமலர்' என ஹெவியான படங்கள் வந்துகொண்டிருந்த நேரம். ‘இந்தப் படத்தை இதோடு விட்டுடுங்க’ எனச் சொல்லிவிட்டார். அந்தப் படமும் பாதியில் நின்றது.
அப்போது தென்இந்திய சினிமா இண்டஸ்ட்ரி மிகச் சிறியது. தமிழில் வருடத்துக்கு அதிகபட்சம் 40 முதல் 50 படங்கள் வரும். அதற்கு அடுத்து தெலுங்கில் 30 படங்கள், மலையாளத்தில் 10 படங்கள், கன்னடத்தில் நான்கைந்து படங்கள் வரும். அதனால் இண்டஸ்ட்ரிக்குள் எது நடந்தாலும் அனைவருக்கும் தெரிந்துவிடும். சினிமா அன்றும் இன்றும் சென்டிமென்டுகளுக்குப் பஞ்சம் இல்லாத துறை. ‘பஞ்சு எழுதிய படங்கள் எதுவும் பாதியைத் தாண்டியது இல்லை’ என்ற என் அதிர்ஷ்டத்தைப் பரப்பிக்கொண்டிருந்தனர் என் நண்பர்கள். வாழ்க்கையே வெறுத்துப்போனது.
அதேபோல என் நண்பன் திருமாறன் என்னை எங்கு பார்த்தாலும் உரிமையாகவும் கிண்டலாகவும் அழைத்த அந்தப் பெயரே திரைத்துறையில் அப்போது என் பட்டப்பெயரானது. அது என்ன பெயர் தெரியுமா?
‘பாதிக் கதை பஞ்சு!’
- தொண்டு தொடரும்...