மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திரைத்தொண்டர் - 8

திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம்
பிரீமியம் ஸ்டோரி
News
திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம் ( திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம் )

பஞ்சு அருணாசலம்

ன் `பாதிக் கதை ராசி’ தொடர்ந்தது.

கோதண்டபாணி, தெலுங்குப் பட இசையமைப்பாளர். இவர்தான் நம் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு முதல் வாய்ப்பு வழங்கியவர். (பின்னாளில் அவரின் நினைவாகத்தான் ‘கோதண்டபாணி ரிக்கார்டிங் ஸ்டுடியோ’வை எஸ்.பி.பி தொடங்கினார்.) கோதண்டபாணி, தெலுங்கில் பிரபலமாக இருந்தாலும் தமிழில் அவருக்கு சரியான வாய்ப்பு அமையவில்லை. தமிழ்ப் படங்களில் பணிபுரிவது, அப்போது பெரிய அங்கீகாரம். அதனால் தீவிரமாக வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார். அப்போது அனைத்து தென்இந்திய மொழி சினிமாக்களும் சென்னையில் இருந்து இயங்கியதால், எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வோம். அந்தவகையில் கோதண்டபாணி எனக்கு நல்ல அறிமுகம்.

திரைத்தொண்டர் - 8

‘கே.வி.மகாதேவன் மாமா, எம்.எஸ்.வி மாதிரியான ஜீனியஸ்கள் பெரிய படங்களுக்கு மியூஸிக் பண்ணட்டும். நீங்க கவிஞரோட நிறைய கம்பெனிகளுக்குப் போறதால, உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே... அப்படி சின்னப் படங்கள் வரும்போது எனக்கு சான்ஸ் வாங்கித்தாங்க’ என்பார்.  நானும் கதை எழுத முயற்சித்துவருகிறேன் என்பது அவருக்குத் தெரியும்.

அப்படி ஒருமுறை சந்தித்தபோது, ‘பஞ்சு, நீ எனக்கு சான்ஸ் வாங்கித் தர்றியோ இல்லையோ, நான் உனக்கு சான்ஸ் வாங்கிட்டு வந்திருக்கேன். பவநாராயணானு தெலுங்குல பெரிய தயாரிப்பாளர். தமிழ் சினிமா பண்ணணும்னு ஆர்வமா வந்திருக்கார். போ... போய் கதை சொல்லு’ என அவரைச் சந்திக்கச் சொன்னார்.

திரைத்தொண்டர் - 8

அந்த பவநாராயணாதான் கோதண்ட பாணிக்கே முதல் வாய்ப்பு தந்தவர். ராஜ்பாபு, வாணிÿ இருவரையும், நகைச்சுவை ஹீரோ ஹீரோயினாக தெலுங்கில் அறிமுகப்படுத்தியவர். (ராஜ்பாபு பின்நாட்களில் நம் நாகேஷ்போல அங்கு வளர்ந்தார். வாணிÿ தமிழ், தெலுங்கில் பிரபல ஹீரோயின் ஆனார்.) இதேபோல என்.டி.ஆர்., சோபன்பாபு உள்பட அன்றைய தெலுங்கு ஹீரோக்களைவைத்து புராண, வரலாற்றுப் படங்கள் எடுத்தவர். தெலுங்கு சினிமா உலகின் மரியாதைக்கு உரிய தயாரிப்பாளர்.

பவநாராயணாவைச் சந்திக்கப் போனேன். ‘செப்பன்டி குட் ஸ்டோரி’ - தெலுங்கு, ஆங்கிலம், தமிழ் என மும்மொழி கலந்து பேசினார். ‘நிறையக் கதைகள் வெச்சிருக்கேன் சார். யார் ஆர்ட்டிஸ்ட்?’ - எனக்கு அவர் அறிமுகம் இல்லாதவர் என்பதால், எந்தவித பயமும் இல்லாமல் பேசினேன். தவிர, அவர் பெரிய ஆள் என்பது அப்போது எனக்குத் தெரியாது. ‘நுவ்வே... அதெல்லாம் உனக்கு எதுக்கு. இட்ஸ் மை ப்ராப்ளம். யூ ஆர் தி ஸ்டோரி ரைட்டர். டெல் த ஸ்டோரி’ என்றார்.

‘யார்னு சொன்னீங்கன்னா, அவங்களுக்கு தகுந்த கதை சொல்வேன்’ என்றேன்.

`எம்.ஜி.ஆர்., சிவாஜி ரெண்டு பேரும் பெத்தவாடு. பட் சிவாஜி ஈஸி அப்ரோச். அதனால அவருக்கே செப்பு’ என்றார். எனக்கு சந்தோஷம். காரணம், எந்த நடிகருக்கு எப்போது வேண்டுமானாலும் கதை கேட்கலாம் என்பதால், நான் சிவாஜிக்கும் கதை பண்ணிவைத்திருந்தேன். அதைச் சொன்னேன்.

உடனே அருகில் இருந்த தன் தெலுங்கு ரைட்டரை அழைத்து, ‘யோவ்... நீயெல்லாம் என்னய்யா கதை சொல்ற. பாரு சின்ன வாடு. செப்பின்டாரு ஒரு ஸ்டோரி. சூப்பரு’-  வெளிப்படையாகப் பாராட்டினார். இப்படி சிலர்தான் பாராட்டுவார்கள். கிட்டத்தட்ட சின்னப்பா தேவரும் அப்படித்தான். ‘டேய், என்னா கதை சொல்லிட்டடா’ எனக் கொண்டாடுவார். கதை நன்றாக இல்லை என்றால், ‘ச்சீ த்தூ... .... மாதிரி இருக்கு’ என முகத்துக்கு நேராகச் சொல்வார். தேவர் படிக்காதவர்; பவநாராயணா படித்தவர். அவ்வளவுதான் வித்தியாசம்.

அவருக்கு கதை பிடித்துவிட்டது என்பதே எனக்கு சந்தோஷம். உடனே அருகில் இருந்த தன் மைத்துனர் ஒய்.வி.ராவை அழைத்து 1,001 ரூபாய்க்கு செக் எழுதித் தந்தார். இன்னும் சந்தோஷம். அவரின் கால்களைத் தொட்டுக் கும்பிட்டபடி வாங்கிக்கொண்டேன். அழுதுவிடும் அளவுக்கு சந்தோஷம். கண்கள் கலங்கின. என் மகிழ்ச்சியைப் புரிந்துகொண்டவர், அப்படியே என்னைக் கட்டியணைத்து, ‘நீ ரொம்பப் பெரிய ஆளா வருவ, டோன்ட் வொர்ரி, நான் உனக்கு சப்போர்ட்டிவ்வா இருப்பேன்’ என அவர் தெலுங்கில் சொன்னது புரிந்தது. அப்படி இளைஞர்களை உற்சாகப்படுத்த தனி மனம் வேண்டும். அவரை இப்போது நினைத்தாலும் கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது.

‘நாளைக்குக் காலையில அந்த செக்கை உன் அக்கவுன்ட்ல போட்டுக்க’ என்றார் ஒய்.வி.ராவ். ‘சார், எனக்கு பேங்க் அக்கவுன்ட் இல்லை’ என்றேன். கவிஞருக்காக எத்தனையோ செக் வந்திருக்கின்றன. அவற்றை அவரின் அக்கவுன்டில் போட்டு மாத்தியிருக்கிறேன். ஆனால், எனக்கென தனியாக அக்கவுன்ட் ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றியதே இல்லை. அதற்கான தேவையும் ஏற்பட்டது இல்லை.

‘என்ன... அக்கவுன்ட் இல்லையா?’ பவநாராயணா ஆச்சர்யமாகப் பார்த்தவர், ‘வா போலாம்’ என என்னை தன் காரில் அழைத்துக்கொண்டு நேராக பாண்டிபஜார் ஆந்திரா பேங்கில் இறங்கினார். அவரைப் பார்த்ததும் பேங்கில் உள்ள அனைவரும் எழுந்து நின்று வணக்கம் சொன்னார்கள். மேனேஜர் தன் ரூமில் இருந்து ஓடிவந்தார். பவநாராயணா விவரம் சொன்னார். அக்கவுன்ட் தொடங்கும் ஃபார்ம் கொண்டுவந்து கொடுத்தார்கள். கையெழுத்து போட்டேன். அவர் சாட்சிக் கையெழுத்து போட்டார். அப்போது எல்லாம் அக்கவுன்ட் ஆரம்பிக்க ஆரம்பப் பணமாக 100 ரூபாய் தந்தாலே பெரிய விஷயம். ஆனால், குறைவான பணம் தருவது தனக்கு அவமானம் என நினைத்தாரோ என்னவோ... 1,000 ரூபாய் எடுத்துக் கொடுத்தார். நம் `பாதிக் கதை ராசி’ இதோடு போனது என நினைத்துக்கொண்டேன்.

பிறகு, அவர் சிவாஜி வீட்டுக்குப் போய் அவரின் தம்பி சண்முகத்தைப் பார்த்துப் பேசியிருக்கிறார். சிவாஜியின் கால்ஷீட், சம்பளம் உள்ளிட்ட விஷயங்களை சண்முகம்தான் கவனிப்பார். ‘யார் பஞ்சுவா? நல்லா தெரியுமே, நம்ம பையன். வரச்சொல்லுங்க, கேட்ருவோம்’ எனச் சொல்லியிருக்கிறார். இதற்கு இடையில் படத்தின் இயக்குநராக கே.எஸ்.பிரகாஷ்ராவை முடிவுசெய்தனர். அவர் தெலுங்கில் மிகப் பெரிய இயக்குநர். (நடிகை ஜி.வரலட்சுமியின் கணவர். பிரகாஷ் ஸ்டுடியோ உரிமையாளர். அவர், மகன்கள் அனைவரும் இயக்குநர், ஒளிப்பதிவாளர் என சினிமா குடும்பம். சிவாஜி, வாணிÿ நடித்த ‘வசந்தமாளிகை’யை இயக்கியவர்.)

கதை சொல்ல சிவாஜி வீட்டுக்குப் போனேன். சிவாஜி புரொடக்‌ஷனில் அப்போது கதை கேட்க சண்முகம் உள்பட நான்கைந்து பேர் இருந்தனர். எனக்கு என்றைக்கும் இல்லாத பதற்றம். காரணம், பவநாராயணா பெரிய தயாரிப்பாளராக இருந்தாலும் அறிமுகம் இல்லாதவர். அவரிடம் பயம் இல்லாமல் கதை சொல்லிவிட்டேன். ஆனால், கவிஞருடன் செல்கையில் சண்முகம் எனக்கு நல்ல அறிமுகம். என்ன சொல்வாரோ என்ற தயக்கம். உதவியாளராக இருந்த பையனை திடீரென கதாசிரியனாக உட்காரச் சொன்னால்? கதை கோர்வையாக வரவில்லை. நான் நினைத்ததுபோலவே உணர்ச்சியுடன் என்னால் கதையைச் சொல்ல முடியவில்லை. ‘இல்லண்ணே இதுக்கு அப்புறம்தான் அது, அதுக்கு அப்புறம்தான் இது’ - நான் சொதப்பியது எனக்கே தெரிந்தது.

‘சரி பஞ்சு, நான் புரொடியூசர்கிட்ட பேசுறேன்’ என்ற சண்முகம், பிறகு பவநாராயணாவிடம் பேசியிருக்கிறார். ‘நீங்களும் முதன்முதல்ல தமிழுக்கு வர்றீங்க. ஹெவி சப்ஜெக்ட்டா எடுத்து பண்ணலாம். பஞ்சு சொன்ன கதை,  அண்ணணுக்கு சரியா வருமானு சந்தேகமா இருக்கு’ எனச் சொல்லியிருக்கிறார். பின்நாட்களில் நான் வளர்ந்த பிறகு, அந்தக் கதையின் ஒரு பகுதியை ஜெய்சங்கரையும் ÿகாந்தையும் வைத்து ‘உன்னைத்தான் தம்பி’ எழுதினேன். இன்னொரு பகுதியைக் கொஞ்சம் மாற்றி ரஜினியை வைத்து ‘ராஜா சின்ன ரோஜா’ எழுதினேன். ஏவி.எம் தயாரித்த அந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனது. இன்று உள்ள அனுபவத்தில் சொல்கிறேன்... அன்று அந்தக் கதையை சிவாஜி பண்ணியிருந்தால் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும்.

சண்முகத்துக்கு கதை பிடிக்கவில்லையே என பவநாராயணா வருத்தப்படவும் இல்லை, சிவாஜிக்காக வேறு கதாசிரியரை அனுப்புவோம் என்பதற்காக அவர் என்னை மாற்றவும் இல்லை. ‘வேற எடுப்போம். வேற யாரை நடிக்கவைக்கலாம்னு நீயே சொல்’ என்றார். நிறைய ட்விஸ்ட், காமெடி, சென்டிமென்ட், ஆக்‌ஷன் கலந்த டபுள் ரோல் கதையை ஜெய்சங்கரை மனதில் வைத்து சொன்னேன். பிடித்துவிட்டது. ஒரு ஜெய்சங்கர் திருமணம் ஆனவர், அவருக்கு ஜோடி ஜெயந்தி. இன்னொரு ஜெய்சங்கர் பேச்சுலர். அவரின் லவ்வர் ஜெயலலிதா மேடம்.

ஜெய்சங்கர், டி.எஸ்.பாலையா, ஓ.ஏ.கே.தேவர், நாகேஷ் ஆகியோரை நானே ஃபிக்ஸ்செய்து கொடுத்தேன். ‘உனக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவோம்டா வாடா’ என ஜெய்சங்கர் ஆர்வமாகிவிட்டார். பவநாராயணா, பணத்தை அள்ளி இறைப்பார். ‘இன்னைக்கு இவ்வளவு, நாளைக்கு மீதி’ என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. மொத்தமாகத் தருவார். தெலுங்கில் இரண்டு படங்கள், தமிழில் இந்தப் படம் என ஒரே சமயத்தில் ஃபேக்டரிபோல ஷூட்டிங் நடத்திக்கொண்டிருந்தார். இரண்டு மாதங்களில் 10 ஆயிரம் அடி எடுத்துவிட்டோம்.

திரைத்தொண்டர் - 8

இதற்கு இடையில் தெலுங்கில் என்.டி.ஆர் டபுள் ரோலில் நடித்துக்கொண்டிருந்த படத்தை பவநாராயணா தயாரித்துக்கொண்டிருந்தார். அதில் ஒரு என்.டி.ஆருக்கு ராஜÿயும், இன்னொரு என்.டி.ஆருக்கு ஜெயலலிதா மேடமும் ஜோடி. அந்தப் படம் ரிலீஸ் ஆனது. பிரமாண்ட வெற்றி. ஆனால், ஆந்திரா பத்திரிகைகள் அந்தப் பட விமர்சனத்தில், ‘ராஜÿக்கு முக்கியமான கேரக்டர். ஜெயலலிதா மேடத்துக்கு கிளாமர் கேர்ள் கேரக்டர். நடிக்க ஸ்கோப் இல்லை. வந்து போகும் கேரக்டர்’ என்பதுபோல எழுதிவிட்டார்கள்போல் இருக்கிறது. `வளர்ந்துவரும் நேரத்தில் இப்படி விமர்சனம் எழுதியிருக்கிறார்களே' என ஜெயலலிதாவின் அம்மாவுக்கு வருத்தம்.

எங்கள் படம் முக்கால்வாசி முடிந்திருந்தது. இன்னும் 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் படம் முடிந்துவிடும். அந்தச் சமயத்தில் பவநாராயணாவிடம் சந்தியாம்மா பேசியிருக்கிறார். ‘தெலுங்குப் படத்துல ராஜÿக்கு நல்ல கேரக்டர் தந்து என் பொண்ணுக்கு பேர் வராமப் பண்ணிட்டீங்க. இப்ப எடுக்கிற தமிழ்ப் படத்துலயும் ரெண்டு ஹீரோயின்கள். என் பொண்ணுக்கு முக்கியத்துவம் இருக்குமானு தெரியலை. இனி கதையைக் கேட்டுட்டுத்தான் கால்ஷீட் தருவேன்’ எனச் சொல்லியிருக்கிறார். ஆனால், படத்தில் எல்லா டூயட்களுமே ஜெயலலிதா மேடத்துக்குத்தான். ஜெயந்திக்கு பாட்டே கிடையாது.

‘என்னது... என் கம்பெனியில் கதை கேட்பதா? என்.டி.ஆரே கதை கேட்க மாட்டார். நீங்க எப்படி கதை கேட்கலாம்?’ என சந்தியாம்மாவுக்கும் அவருக்கும் போனிலேயே வாக்குவாதம். ‘நீங்க கதை சொல்லலைனா நான் கால்ஷீட் தர மாட்டேன்’ எனச் சொல்லிவிட்டு சந்தியாம்மா போனை வைத்துவிட்டார். ‘நான் போய் சொல்றேன்’ என்றேன். ‘அவங்களா கால்ஷீட் தந்தா தரட்டும், இல்லைனா வேணாம்’ என்றார் பவநாராயணா.

பிறகு, ‘நல்ல கதைதான். எனக்கும் முக்கியத்துவம் இருக்கிறது’ என ஜெயலலிதா மேடம் சொல்லியிருக்க வேண்டும். சந்தியாம்மா கால்ஷீட் கொடுத்துவிட்டார். அந்தச் சமயத்தில் படத்தில் நடித்துக்கொண்டிருந்த டி.எஸ்.பாலையா எதிர்பாராவிதமாக இறந்துவிட, என்ன செய்வது என்றே தெரியவில்லை. வேறு ஒருவரைப் போட்டு எடுத்தால் இதுவரை எடுத்த படத்தை ரீஷூட் செய்ய வேண்டும். காரணம், பாலையாவுக்கு ஜெயலலிதா மேடமின் அப்பா கேரக்டர். சமாளிப்போம் என முடிவெடுத்து யோசித்து சில மாற்றங்கள் செய்து கதையைச் சரிசெய்து முடித்தேன்.

ஷூட்டிங் கிளம்பும் சமயத்தில் இன்னோர் இடி, வில்லனாக நடித்த ஓ.ஏ.கே.தேவர் இறந்துவிட்டார். ‘சகுனமே சரியில்லை. எனக்கு தமிழ் சினிமாவே வேண்டாம்’ எனக் கூறி பவநாராயணா தன் தமிழ் சினிமா முயற்சியைக் கைவிட்டார். `நம் முயற்சிகள் அனைத்தும் முட்டுச்சந்தில் போய் முடிகிறதே’ என நம்பிக்கை இழந்துவிட்டேன். சொன்னால் நம்புவது சிரமம்...தற்கொலை செய்துகொள்ளலாம் என்றுகூட நினைத்தேன். அதில் இருந்து என்னைக் காப்பாற்றியது எது?

- தொண்டு தொடரும்...