
பஞ்சு அருணாசலம்

தொடர் தோல்விகளோடு வறுமையும் சேர்ந்திருந் தால் எக்கச்சக்கமான பிரச்னைகளைச் சந்தித்திருப்பேன். ஆனால், அப்போது எனக்கு கவிஞர் பக்கபலமாக இருந்ததால் குடும்பத்துக்குத் தேவையான வருமானம் கிடைத்தது. கவிஞரிடம் உதவியாளராக இருந்து அவர் சொல்லச்சொல்ல எழுதிய பாடல்களும் என் கவலையை மறக்க காரணமாக இருந்தன. ‘நமக்கான வாழ்க்கை தாமதமாகத் தொடங்கும்போல் இருக்கிறது’ என நினைத்து ‘இனி யாரிடமும் கதைகள் சொல்லக் கூடாது’ என முடிவெடுத்தேன்.

இதற்கு இடையில் வீட்டில் திருமணப் பேச்சு எடுத்தார்கள். ‘நிரந்தர வருமானம் இல்லை. தம்பி, தங்கைகள், அப்பா, அம்மா... என பெரிய குடும்பம். கல்யாணம் செய்தால், இரண்டு குடும்பங்களாகும். வருமானமும் போதாதே’ என யோசித்தேன். ‘டேய்... நான் கல்யாணம் பண்ணினப்ப, மாசம் என்ன வருமானம்னு எனக்கே தெரியாது. ஆனாலும் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதுவும் ரெண்டு. மரம் வெச்சவன் தண்ணி ஊத்த மாட்டானா?’ என்பார் கவிஞர். ‘நீ லேட் பண்ண லேட் பண்ண... உன் தம்பி, தங்கச்சிகளுக்குத்தான் கெடுதல். நம்ம ஊர் வழக்கப்படி மூத்தவனுக்கு கல்யாணம் ஆகலைனா பொண்ணு கொடுக்கவோ, பொண்ணு எடுக்கவோ வர மாட்டாங்க. முதல்ல நீ கல்யாணம் பண்ணு’ என்றார். எனக்கும் அவர் சொல்வது `சரி' எனப்பட்டது.

1969-ம் ஆண்டு என் திருமணம் நடந்தது. என் திருமணத்துக்கு முன்னர், 1958-ம் ஆண்டில் இருந்து 1969-ம் ஆண்டு வரை கவிஞர் வீட்டு மாடியில்தான் தங்கியிருந்தேன். திருமணத்துக்குப் பிறகு, மாம்பலம் மூசா தெருவில் உள்ள ஒரு வீட்டில் தனிக்குடித்தனம் போனோம். அந்தச் சமயத்தில் 1973-ம் ஆண்டு எனக்கு ஒரு திருப்பம் கிடைத்தது. சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தி, நல்ல வருமானம் உள்ள மருந்து கம்பெனி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தவர். அவருக்கு சினிமா ஆசை உண்டே தவிர, சினிமா பற்றி எதுவும் தெரியாது. நிறையப் படங்கள் பார்த்து படம் எடுக்க வந்தவர். கவிஞரால் அறிமுகப்படுத்தப்பட்ட தாதா மிராசி என்கிற இயக்குநரை வைத்து ஜெமினி கணேசன், சரோஜா தேவி நடித்த ‘ஓடும் நதி’ என்ற படத்தைத் தயாரித்தவர். அந்தப் படத்துக்கு கவிஞர் பாட்டு எழுதச் செல்லும்போது எனக்கு கிருஷ்ணமூர்த்தி பழக்கம். அந்த ‘ஓடும் நதி’ படம் தோல்வியடைந்தது.
அப்போது கிருஷ்ணமூர்த்தியின் அலுவலகம் என் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தது. இருவரும் அடிக்கடி சந்திப்போம். ‘ஹெவி லாஸ் பஞ்சு. மறுபடியும் படம் எடுத்து, விட்டதைப் பிடிச்சாத்தான் பிழைக்க முடியும். என்ன பண்ணலாம் சொல்லு?’ என்றார். ‘ரிஸ்க் எடுக்காம சின்ன பட்ஜெட்ல நாகேஷை வைத்து ஒரு நகைச்சுவைப் படம் பண்ணுங்க. மூணு வாரம் போனாலே லாபம்தான்’ என்றேன். ‘நமக்குத்தான் `பாதிக் கதை ராசி' எங்கே போனாலும் துரத்துதே!' என நினைத்து, ஐடியா மட்டும் சொன்னேன். கதை இருக்கு எனச் சொல்லவில்லை.
பிறகு, அவரும் என்னைத் தொடர்புகொள்ள வில்லை. ஆனால், நான் சொன்னதுபோலவே நாகேஷை வைத்து படத்தை முடித்தார். படம் ரிலீஸானது. படம் வெற்றி. நல்ல வருமானம். ‘யப்பா, இந்த ஒரு படத்துல பாதிக் கடன் அடைஞ்சுடுச்சுப்பா’ என சந்தோஷப்பட்டார்.
‘அடுத்த படத்துக்கு கதைகள் கேட்டுட்டு இருக்கேன் பஞ்சு. உன்கிட்ட கதை ஏதாவது இருந்தா சொல்லு’ என்றார். ‘சொல்லித்தான் பார்ப்போமே’ என ஓர் ஆசை. ஒரு கதை சொன்னேன். அவருக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. ‘நாகேஷையே ஹீரோவா போடலாம்’ என்றேன். ஒரு ரிவெஞ்ச் சப்ஜெக்ட்ல காமெடி. `ரொம்ப நல்லா இருக்கே’ எனப் பாராட்டினார். பிறகு கூப்பிட்டு, ‘நாகேஷைப் பார்த்து அட்வான்ஸ் கொடுத்துட்டேன். என்ன தலைப்பு வைக்கலாம்?’ என்றார். நிறைய சாய்ஸ் எழுதித் தந்தேன். அதில் இருந்து அவர் தேர்ந்தெடுத்ததுதான், ‘ஹலோ பார்ட்னர்’.

அவரே இயக்கினார். அவர் உள்பட இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர்... என அனைவருமே அறிமுகங்கள். சின்ன பட்ஜெட் என்பதால், அனைவரையும் குறைவான சம்பளத்துக்குப் பேசி கமிட் பண்ணினார். ‘எந்த அளவுக்கு சீப்பா எடுக்கிறோமோ, அந்த அளவுக்கு லாபம்’ என்ற முடிவுக்கு வந்திருப்பார்போல, விறுவிறுவெனப் படத்தை முடித்துவிட்டார்.
அந்தப் படத்தின் ரிலீஸுக்கு முன்னரே, ‘அடுத்த படமும் நாம சேர்ந்து பண்றோம். கதை சொல்லு' என்றார். இன்னொரு காமெடி கதையைச் சொன்னேன். அதுவும் அவருக்குப் பிடித்துவிட்டது. ‘இதில் நாகேஷ் மட்டும் இல்லாம, இன்னொரு ஹீரோவையும் போட்டுக்கலாம்’ என்றேன். ‘உன் இஷ்டம். யாரை வேணும்னாலும் ஃபிக்ஸ் பண்ணிக்க’ என்றார்.
பிறகு ‘ஹலோ பார்ட்னர்’ஐ எனக்கு போட்டுக் காட்டினார். படத்தைப் பார்த்த எனக்கு, தலை சுற்றிவிட்டது. அந்த அளவுக்கு படத்தை குப்பையாக எடுப்பார் என நினைக்கவில்லை. ஆனாலும் நாகேஷ் இருந்ததால் படம் மூன்று, நான்கு வாரங்கள் ஓடியது. நஷ்டமும் இல்லை பெரிய லாபமும் இல்லை. ஆனால், ‘ஏற்கெனவே `பாதிக் கதை பஞ்சு'னு சொல்லிட்டு இருந்தவங்க, இனி ‘பஞ்சு எழுதினால் ஓடாது’னு சொல்ல ஆரம்பிச்சா தப்பாகிடுமே'னு பயம் வந்தது. ‘இனி அவருக்கு எழுதக் கூடாது’ என முடிவெடுத்தேன்.
இதற்கு இடையில் நான் ஏற்கெனவே சொன்ன கதைக்காக ஜெய்சங்கரிடம் கிருஷ்ணமூர்த்தி கால்ஷீட் கேட்டிருக்கிறார். அதற்கு ஜெய்சங்கர், ‘என் மேனேஜர் பாலகிருஷ்ணன், மேக்கப்மேன் மாணிக்கம், அக்கவுன்ட்டன்ட் காமாட்சி இவங்க மூணு பேருக்கும் ஒரு படம் பண்ணலாம்னு இருக்கேன். அவங்க தயாரிப்பாளரா இருக்கட்டும். நீங்க ஃபைனான்ஸ் பண்ணி டைரக்ட் பண்ணுங்க. ஒருங்கிணைப்பை எல்லாம் அவங்க பார்த்துப்பாங்க’ எனச் சொல்லியிருக்கிறார். இந்த டீலிங், கிருஷ்ணமூர்த்திக்குப் பிடித்துவிட்டது. இப்படி என் கதையை வைத்து அவர்களுக்குள் பேசி முடித்த விஷயம் எனக்குத் தெரியாது.
கிருஷ்ணமூர்த்தி என்னிடம் விஷயத்தைச் சொன்னார். ‘நீங்களே டைரக்ட் பண்றீங்களா?’ என்றேன். ‘ஆமா... ஜெய்சங்கரே என்னை பண்ணச் சொல்லிட்டார்’ என்றார். ‘யோசிச்சு சொல்றேன்’ என வந்துவிட்டேன். பிறகு, பல முறை அழைத்தார். நான் சந்திக்கவில்லை. இதனால், பிரபல கதாசிரியர்களை அழைத்து வேறு கதைகளைக் கேட்டிருக்கிறார்கள். எந்தக் கதையும் கிருஷ்ணமூர்த்திக்குப் பிடிக்கவில்லை. ‘எடுத்தா, பஞ்சு சொன்ன கதையைத்தான் எடுப்பேன். இல்லைன்னா படமே வேணாம்’ எனச் சொல்லிவிட்டார். பிறகு அவரைச் சந்திக்க என்னை அழைத்துச் சென்றார்கள். நான் அன்று வெளிப்படையாகப் பேசினேன். ‘உங்களுக்கு இந்தத் தொழில் இல்லைன்னாக்கூட வேற தொழில் இருக்கு. ஆனால், எனக்கு இந்தத் தொழில்ல முன்னுக்கு வரலைன்னா வாழ்க்கையே அவ்வளவுதான். நான் சொன்ன கதையை ஒழுங்கா எடுத்து படம் ஓடலைன்னா, அது என் தவறு. ஒழுங்காவே எடுக்கலைன்னா, நான் என்ன பண்ண முடியும்?’ என்றேன். என் சூழலை அவர் புரிந்துகொண்டார்.
`நீ சொல்றது கரெக்ட். இப்ப நான் என்ன பண்ணணும்கிறே?’ என்றார். ‘மியூசிக் டைரக்டர், கேமராமேன், எடிட்டர்னு திறமையான ஆட்களைப் போடுங்க. உங்ககூட நல்ல உதவி இயக்குநர்களை வெச்சுக்கங்க’ என்றேன். ‘அப்படின்னா எல்லாரையும் நீயே அரேஞ்ச் பண்ணு.
நீ சொல்றபடி நான் எடுத்துத்தர்றேன்’ என்றார்.
அப்போது கே.எஸ்.கோபால கிருஷ்ணன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்த தத், தமிழில் இசையமைக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த விஜயபாஸ்கர்... என திறமையான ஆட்களைத் தேடித்தேடி ஒருங்கிணைத்தேன். அசோசியேட்டாக வேலைசெய்ய திறமையான, தெரிந்த நண்பர்களாக இருந்தால் நல்லது என நினைத்தேன். பாஸ்கர் கிடைத்தார். அப்போது அவர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநராக இருந்தார். இந்த பாஸ்கர்தான் பின்னாளில் ‘பௌர்ணமி அலைகள்’ உள்பட பல படங்களை எடுத்தவர்; ரஜினி நடித்த `பைரவி' படத்தை இயக்கியவர்.
‘கல்யாணமாம் கல்யாணம்’ பட வேலைகள் தொடங்கி நடந்துவந்தன. இதற்கு இடையில் நாகேஷ் `கதை கேட்கணும்' எனச் சொல்லியிருக்கிறார். கவிஞர் எடுத்த ‘ரத்தத்திலகம்’ படத்தில் நடித்ததின் மூலம் நாகேஷ் எனக்கு ஏற்கெனவே பழக்கம். படத்தின் கதையைச் சொன்னேன். கதை கேட்டவர், ஒரு இடத்தில்கூட சிரிக்கவில்லை, எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. ‘ஏதோ சொல்ற சொல்லு’ என்பதுபோலவே கேட்டுக்கொண்டிருந்தார். பிறகு, ‘கதை நல்லாத்தான் இருக்கு பஞ்சு. ஆனா, காமெடிங்கிறது தனிக்கலை. அது எல்லாருக்கும் வராது. போன படம் ‘ஹலோ பார்ட்னர்’கூட நல்ல கதைதான். ஆனால், உனக்கு காமெடி எழுதத் தெரியலை. அதனாலதான் படம் ஓடலை’ என்றார். கிருஷ்ணமூர்த்தி சரியாக இயக்காததுதான் படம் ஓடாததற்குக் காரணம் என்பதைப் புரிந்துகொள்ளாமல் என் மேல் குறை கூறினார். ‘இந்தக் கதைக்கு ஏ.எல்.நாராயணன் ஸ்கிரிப்ட் எழுதட்டும். நீ கதை மட்டும் கொடு’ என்றார். ‘புரடியூஸர்கிட்ட பேசிக்கங்க’ எனச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
பாலகிருஷ்ணனையும் கிருஷ்ணமூர்த்தியையும் கூப்பிட்டு ஏதோ நானே படத்தைத் தயாரிப்பதுபோல ‘இந்தப் படத்துல நாகேஷ் வேணாம்’ என்றேன். ‘என்ன பஞ்சு திரும்ப கோவம். நீதானே நாகேஷைப் போடணும்னு சொன்ன’ என்றனர். பிறகு விவரம் சொன்னேன். அவர்களும் நாகேஷ் வேண்டாம் எனச் சொல்லிவிட்டனர். (அப்போது `நாகேஷ் இல்லாமல் காமெடி படம் எடுக்க முடியாது' என்பார்கள். ஆனால் அதன் பிறகு நான் நிறைய காமெடி படங்கள் எழுதியிருக்கிறேன். எதிலும் நாகேஷ் கிடையாது. பிறகு, ‘மைக்கேல் மதன காமராஜ’னில் அவரே கேட்டு நடித்தார்). ‘சரி வேறு யாரை வெச்சு பண்ணலாம்?’ என்றனர். ‘சோ’ என்றேன். ‘அவர்தான் வெளியூர் ஷூட்டிங்குக்கு வர மாட்டாரே’ என்றனர். ‘நான் கேட்கிறேன் சார்’ என்றேன்.
‘அவுட்டோர் ஷூட்டிங் ரொம்பக் கஷ்டம். வெளியூர் வந்தேன்னா என் எல்லா வேலைகளும் கெட்டுடும் பஞ்சு’ என எங்கள் படத்தில் நடிக்க தயங்கினார் சோ. நான் விடுவதாக இல்லை. ‘இது எனக்கு லைஃப் பிரச்னை. 12 வருஷமா போராடுறேன். நான் நிக்கணும்னா இந்தப் படம் நீங்க பண்ணியே ஆகணும்’ என்றேன். பிறகு, யோசித்துவிட்டு கதையைக்கூட கேட்காமல், ‘உனக்காக வர்றேன்’ என்றார். தங்கமான மனிதர்.
ஜெய்சங்கர், சோ, தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாந்த், ஜெயசித்ரா உள்பட ஏகப்பட்ட ஆர்ட்டிஸ்ட்டுகள். பாஸ்கர் அந்த டீமின் கேப்டன் மாதிரி. தான் நினைத்தது வரும் வரை விட மாட்டார். விறுவிறுவென படப்பிடிப்பு நடத்தி முடித்தோம். படம் ரிலீஸ் ஆனது. முதல் நாள் முதல் காட்சி பார்க்க, பதற்றத்துடன் சீனிவாசா தியேட்டர் சென்றேன். எண்ணி 30 பேர்தான் இருந்தனர். ஆனால், நான் எங்கே எல்லாம் சிரிப்பார்கள் என நினைத்தேனோ அங்கே எல்லாம் அந்த 30 பேரும் துள்ளிக்குதித்துக் கைதட்டி ரசித்தனர். அப்போதே இந்தப் படம் ஹிட் என நினைத்தேன். நான் நினைத்ததுபோலவே படம் பிக்கப்பாகிவிட்டது. எல்லா தியேட்டர்களிலும் பெரும்கூட்டம். கிளாப்ஸ் பொறி பறந்தது. படம் மிகப் பெரிய வெற்றி.
என் பாதிக்கதை ராசி பொய்த்துப்போனதில் சந்தோஷம். அதன் பிறகு நான் தொட்டவை அனைத்தும் துலங்கின. என் 12 வருடக் கனவை நனவாக்கி எனக்கான வாசலைத் திறந்துவைத்த கிருஷ்ணமூர்த்தி இன்று இல்லை. அவரை நன்றியோடு நினைவுகூர்கிறேன். அந்தப் படத்துக்குப் பிறகு நடந்தவற்றைச் சொன்னால், நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள்.
- தொண்டு தொடரும்...