
பஞ்சு அருணாசலம்

‘கல்யாணமாம் கல்யாணம்’ படத்தின் வெற்றி அந்தச் சமயத்தில் பிரமாதமாக பேசப்பட்டது. காரணம், அப்போது தமிழ்த்திரை உலகம் மிகப்பெரிய சரிவில் இருந்தது. சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்கள், பீம்சிங், ஸ்ரீதர்... போன்ற இயக்குநர்களின் பங்களிப்புடன் 60-களில் ஏகப்பட்ட சில்வர் ஜூப்ளி படங்களை தந்து உச்சத்துக்குப்போன தமிழ்த்திரை உலகம் 70-களுக்குப்பிறகு சரிய ஆரம்பித்தது. சிவாஜி, தன் வயதுக்குரிய கேரக்டர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார். எம்.ஜி.ஆர் கிட்டத்தட்ட சினிமாவில் இருந்து விலகி, அரசியலில் முழுக் கவனம் செலுத்தத் தொடங்கியிருந்தார். ஏவி.எம் போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், சினிமா தயாரிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தன. பலரும் ‘நாலு வாரங்கள் ஓடுனா போதும்’ என்று மிகக் குறைந்த பட்ஜெட்டில் படங்கள் எடுத்துக்கொண்டு இருந்தனர். இப்படி தொய்வாக இருந்த இண்டஸ்ட்ரிக்கு, ‘கல்யாணமாம் கல்யாணம்’ படத்தின் வெற்றி ஒரு சின்னத் திருப்புமுனை. அந்த மாற்றத்துக்கு நான் ஆரம்பப்புள்ளியாக இருந்தேன் என்பதில் எனக்கு திருப்தி.

அந்த வெற்றிச் செய்தி சினிமா இண்டஸ்ட்ரி முழுவதும் பரவியது. ஆனால், கிருஷ்ணமூர்த்திக்கு மட்டும் கோபம். ‘சொந்த பேனர்ல நானே பண்றேன்னு சொன்னேன். நீதான் வேணாம்னு சொல்லிட்ட. பாரு... லாபத்துல பெரும் பங்கு அவங்களுக்குப் போயிடுச்சு’ என்று வருத்தப்பட்டார். ‘ஜெய்சங்கரே, ‘பாலகிருஷ்ணன் டீம் பண்ணட்டும். நீங்க ஃபைனான்ஸ் மட்டும் பண்ணுங்க’னு உங்ககிட்ட சொன்னதால, என்னால எதுவும் தப்பாயிடக்கூடாதுனுதான் அப்படிச் சொன்னேன். ஓ.கே விடுங்க, அடுத்த படத்தை நாம ஆரம்பிச்சிடுவோம்’ என்று அவருக்கு ஒரு கதையைச் சொன்னேன். அதுதான், ‘தொட்டதெல்லாம் பொன்னாகும்’ படம். அந்தப் படத்துக்கான ஸ்கிரிப்ட்டை எழுதிக்கொண்டு இருக்கும்போதே பாலகிருஷ்ணனும் வந்தார். ‘நாம அடுத்த படம் ஆரம்பிக்கணும். உடனே கதை சொல்லு பஞ்சு’ என்றார். அவர்களுக்கும் ஒரு கதை சொன்னேன். அது, ‘உன்னைத்தான் தம்பி’. அந்த இரு படங்களுக்கான ஸ்கிரிப்ட்டையும் கிளப் ஹவுஸில் ரூம்போட்டு எழுதிக்கொண்டு இருந்தேன்.
இதற்கிடையில் வி.சி.குகநாதனால் அறிமுகப்படுத்தப்பட்ட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், ‘பெத்தமனம் பித்து’, ‘அன்புத்தங்கை’ ஆகிய படங்களை இயக்கி, நல்ல பெயருடன் இருந்தார். அதே குகநாதனிடம் புரொடக்ஷன் மேனேஜராக இருந்தவர் பாஸ்கர். அவரின் தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கும் படத்துக்கான கதையைத் தேடிக்கொண்டு இருந்தனர். அவர்களும் நான் தங்கியிருந்த அதே கிளப் ஹவுஸில் தங்கி, ஏகப்பட்ட கதாசிரியர்களிடம் கதைகள் கேட்டுக்கொண்டு இருந்தனர். ஆனால், அவர்களுக்கு எந்தக் கதையும் பிடிக்கவில்லை. அந்தச் சமயம் நானும் அங்கேயே தங்கியிருப்பது அவர்களுக்கு தெரியவந்தது. ‘பஞ்சண்ணன்ட்ட ஏதாவது கதையிருந்தா கேட்போம்’ என்று முத்துராமன் சொல்ல, அவர்கள் என்னை வந்து சந்தித்தனர்.

‘ரெண்டு படங்களுக்கான கதைகள் எழுதிட்டு இருக்கேன். நாலு நாள்ல முடிச்சிடுவேன். முடிச்சிட்டுச் சொல்றேனே...’ என்றேன். ‘சும்மா ஐடியா மட்டுமாவது சொல்லுங்க. எங்களுக்கு ஓ.கேன்னா, நீங்க டைம் எடுத்துக்கூட பிறகு எழுதித்தரலாம்’ என்றனர். இரண்டு நாள் நேரம் கேட்டு வாங்கினேன். அப்போது என்னிடம் உதவியாளராக இருந்தவர் செல்வராஜ். (பின்னாட்களில் பிரபல கதாசிரியராக உயர்ந்தவர்). ‘எல்லாரும் பழிவாங்கும் கதையை சீரியஸா சொல்வாங்க. ஆனா, நாம அதேமாதிரியான கதையை நகைச்சுவையா பண்ணுவோம்’ என்று செல்வராஜ் சொன்ன அந்த லைன் எனக்கு பிடித்திருந்தது. அந்தக் கதையை கொஞ்சம் மாற்றி, என் பாணியில் டெவலப் செய்து பாஸ்கரிடம் சொன்னேன். அவருக்கும் கதை பிடித்துவிட்டது. அந்தப் படம்தான் ‘எங்கம்மா சபதம்’. முத்துராமன், சிவகுமார், விதுபாலா, ஜெயசித்ரா, தேங்காய் சீனிவாசன், அசோகன்... அந்தப் படத்தில் பெரிய டீம்.
இந்தப் படங்கள் முடிந்ததும் சேலத்தில் இருந்து ஒரு பெரிய தயாரிப்பாளர் வந்தார். ‘ரொம்பப் பெரிய செலவுல எஸ்.பி.முத்துராமன் டைரக்ஷன்ல ஜெய்சங்கரைவெச்சு ஒரு படம் எடுக்கப்போறேன். எனக்கு ஒரு நல்ல கதை சொல்லுங்க’ என்றார். ‘கலர்ல எடுக்குறீங்க. நல்ல கதை, நல்ல டைரக்டர் முக்கியம். பஞ்சு சார் ‘எங்கம்மா சபதம்’ல சூப்பரா எழுதியிருந்தார். அவர் கதை எழுதட்டும். எஸ்பிஎம் டைரக்ட் பண்ணட்டும்’ என்று ஜெய்சங்கர்தான் சொல்லியிருக்கிறார். அந்தத் தயாரிப்பாளர் சேலத்தில் பட்டுநூல் வியாபாரி. ‘முத்துராமன்... செலவைப் பற்றி நீங்க கவலைப்படாதீங்க. படம் பெருசா, சூப்பரா எடுக்கணும். அதுதான் முக்கியம். நீங்க எவ்வளவு வேணும்னாலும் செலவு பண்ணிக்கங்க’ என்பார். நானும் கதையை எழுதிக்கொடுத்துவிட்டேன். அந்தப் படத்தை, `தமிழில் வந்த முதல் நிழல்உலக தாதா பற்றிய படம்’ என்று சொல்லலாம். சைனீஸ் குங்ஃபூ ஃபைட், காமெடி... என பொழுதுபோக்கு அம்சங்களைக் கலந்து கலவையாக எழுதியிருந்தேன். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி. ஜெய்சங்கர் தன் வாழ்க்கையில் அப்படி ஒரு வெற்றியை அதற்கு முன் பார்த்திருக்க மாட்டார் என்றே சொல்லலாம். அந்தப் படத்துக்குப் பிறகுதான் ஜெய்சங்கருக்கும் எங்களுக்கும் பெரிய மார்க்கெட் உருவானது. அந்தப் படம் ‘துணிவே துணை.’
எப்போதும் சினிமாவில் வெற்றிக்கூட்டணியை பிரிக்க யோசிப்பார்கள். ‘கல்யாணமாம் கல்யாணம்’ ஹிட் ஆனதால், அதைத் தொடர்ந்து நான் எழுதிய எல்லா படங்களுக்கும் இசை விஜயபாஸ்கர்தான். பாடல்கள் கவிஞர்தான். ‘காஞ்ச மாடு கம்புல விழுந்தமாதிரி’ என்று கிராமத்தில் சொல்லும் பழமொழிபோல, கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக்கொண்டேன். ஆனால், ‘படங்களும் ஓடணும். நடித்தவர்களுக்கும் பெயர் வரணும். தயாரிப்பாளர்களும் சம்பாதிக்கணும். கூடவே நானும் என் பெயரைக் காப்பாத்திக்கணும்’ என்பதால், நிறையப் படங்கள் வந்தாலும் நான் நிதானம் தவறவில்லை. அவ்வளவு வேகமாக நான் எழுத, என் வாசிப்பும் சேர்த்துவைத்திருந்த அனுபவமும் கைகொடுத்தன.
நமக்கு ஒரு படம் கிடைக்காதா என ஏங்கியிருந்த காலம்போய், ஒவ்வொரு மாதமும் என் இரண்டு படங்கள், மூன்று படங்கள் ரிலீஸாகத் தொடங்கின. அனைத்தும் சக்சஸ். படங்களும் ஹிட், பாடல்களும் ஹிட். ‘நல்லா ஓடுதாம்டா. கேள்விப்பட்டேன்’ என்று கவிஞர் சந்தோஷமாக விசாரிப்பார். என் வெற்றியில் அவருக்கு அவ்வளவு சந்தோஷம். ஜெய்சங்கர், சோ, முத்துராமன், சிவகுமார், தேங்காய் சீனிவாசன்... என நடிகர்கள், கிருஷ்ணமூர்த்தி, முக்கியமாக எஸ்.பி.முத்துராமன் போன்ற இயக்குநர்களின் உதவி இல்லையென்றால், என் வெற்றி சாத்தியமாகியிருக்காது. அவ்வளவு சீக்கிரம் படங்களையும் எடுத்திருக்கவும் முடியாது. இந்தத் தொடர் வெற்றியை மனதில்வைத்து சொந்தமாகவும் படம் எடுக்க ஆரம்பித்தேன். முதல் படம் ‘உறவு சொல்ல ஒருவன்’. அதுவும் நன்றாகவே போனது. அந்தப் படத்தில்தான் எனக்கும் அறிமுகமான இரட்டை இயக்குநர்கள் தேவராஜ்-மோகனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. (இவர்கள்தான் ‘அன்னக்கிளி’யை இயக்கினார்கள்) 1974, ஜனவரியில் ‘கல்யாணமாம் கல்யாணம்’ ரிலீஸ். அதைத் தொடர்ந்து 10 படங்கள் ஹிட். அதில் சொந்தப்படம் வேறு. இவ்வளவும் ஏதோ 10 வருடங்களில் பண்ணியதாகத் தெரியும். ஆனால், அனைத்தும் ஒன்றரை வருட இடைவெளியில் நடந்தவை. இந்தத் தொடர் வெற்றி சரிந்திருந்த தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியில் சின்ன மாற்றத்தை விதைத்தது. பலரும் புதிதாகப் படம் எடுக்க வந்தார்கள். ஆனால், அந்தச் சிறு திருப்பம்கூட என் மனதுக்குப் போதுமானதாக இல்லை. காரணம், தமிழ்நாட்டில் இந்திப் படங்களின் ஆதிக்கம். அப்போது நான் எழுதிய படங்களின் 75-வது நாள் வெற்றிவிழா, 100-வது நாள் விழாக்களைக் கொண்டாடுவார்கள். ஆனால், இப்போதெல்லாம் படம் ஒரு வாரம் ஓடினாலே மாபெரும் வெற்றி என்கிறார்கள். ‘வெற்றிகரமான 10-வது நாள்’ என்றெல்லாம் விளம்பரம் தருகிறார்கள். அப்போது 50-வது நாளைக் கடந்தால்தான் அந்தப் படம் ஓரளவுக்கேனும் வெற்றிபெற்றது என அர்த்தம். ஒரு படத்தின் 75-வது நாள், 100-வது நாள் வெற்றி விழாக்களை அப்போது வெவ்வேறு ஊர்களில் நடத்துவார்கள். டீமாக அந்த விழாக்களுக்குச் செல்வோம்.

‘எவ்வளவுக்கு வாங்குனீங்க... எவ்வளவு லாபம்?’ என்று தியேட்டர்காரர்களிடம் விசாரிப்பேன். ‘நல்ல ஷேர் சார். ஒன்றரை லட்சம் வந்துச்சு... ரெண்டைத் தாண்டிடும்’ என்பார்கள். ‘அடேங்கப்பா... என்னா லாபம்’ என நினைத்துக்கொள்வேன். ஆனால், அதே பகுதியில் வெவ்வேறு தியேட்டர்களின் போஸ்டர்களில் ‘ `ஆராதனா’ வெற்றிகரமான 20-வது வாரம்’ என்று ஒட்டியிருக்கும். ‘என்னது ஒரு இந்திப் படம் 20-வது வாரமா, அதுவும் கோயம்புத்தூரைத் தாண்டி உள்ள ஒரு சின்ன டவுன்ல இந்த ஓட்டம் ஓடுதே’ என்று அதிர்ச்சியாக இருக்கும். அந்த தியேட்டரில் விசாரித்தால், ‘நல்ல லாபம் சார். இதுவரை நாலு லட்ச ரூபாய்’ என மேலும் அதிர்ச்சி தருவார்கள். வேறொரு ஊரில், ‘இந்த தியேட்டர்ல ‘பாபி’ 150 நாட்களைக் கடந்து ஓடிட்டு இருக்கு’ என்பார்கள். இன்னொரு ஊரில் ‘யாதோன் கி பாரத்’, வேறொரு சிற்றூரில் ‘ஷோலே’... இப்படி தமிழ்நாடு முழுவதும் இந்தி சினிமாவின் ஆதிக்கம்.
தென்னிந்தியாவைத் தாண்டினால் எல்லா மாநிலங் களிலும் இந்தி பேசுபவர்கள் இருப்பதால் இந்தியாவில் பாலிவுட் படங்களுக்கு பெரிய மார்க்கெட். வேர்ல்டு மார்க்கெட்டும் பெரிது. ஆனால், தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடிய தமிழ்ப் படங்களைவிட இந்திப் படங்கள் நாலு மடங்கு அதிகமாக வசூலித்தன. சென்னையில்கூட ஓ.கே. தமிழ்நாடு முழுவதும் எப்படி அந்தப் படங்கள் ஓடின... அதில் மக்களுக்கு அப்படி பிடித்த அம்சங்கள் என்னென்ன? கதை ஓரளவுக்கு புரியும்; வசனம் புரியாதே. அந்த நடிகர், நடிகைகளும் அவர்களுக்கு பரிச்சயம் இல்லாதவர்கள். அப்புறம் எப்படி அவை பட்டிதொட்டி எங்கும் இப்படி ஓடுகின்றன? ஆச்சர்யமாக இருக்கும்.
விளையாட்டு மைதானங்கள், கல்யாண வீடுகள், திருவிழாக்கள்... இப்படி கிராமம், நகரம் வித்தியாசமின்றி எங்கும் இந்திப் பாடல்கள்தான் நீக்கமற நிறைந்து இருந்தன. தமிழ்ப் பாடல்களையே கேட்க முடியாது. அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. ஆர்.டி.பர்மன், எஸ்.டி.பர்மன், லக்ஷ்மிகாந்த் பியாரிலால்... என இந்தி சினிமாவில் இருந்த இசை அமைப்பாளர்களின் புதுமாதிரியான இசைதான் காரணம் எனத் தெரிந்தது. அதற்கு முன்னரும் இந்தியில் மிகப்பெரிய இசையமைப் பாளர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனாலும் அப்போது அவர்களை மீறி இங்கு தமிழ்ப் படங்கள் ஓட, தமிழ்ப் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கக் காரணம் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் என்ற இரு பெரும் இசை அரசர்களின் செல்வாக்கு. அப்படி செல்வாக்கோடு இருந்த இவர்களின் திறமை, இவர்களின் மீதான மரியாதை 70-களுக்குப் பிறகு குறைந்துவிட்டதா என்றால், இல்லை. ஆனால், அவர்கள் 60-களிலேயே தங்களின் உச்சத்தை அடைந்துவிட்டார்கள். அதனால் எத்தனைப் படங்களுக்கு இசையமைத்தாலும் கேட்டதையே திரும்பத் திரும்பக் கேட்பதுபோன்ற ஓர் உணர்வு.
ஆனால், இந்திப் பாடல்களில் இளமையான புதுப்புது சவுண்டுகளுடன் கூடிய இசை. அது இளைஞர்களை அலை அலையாக ஈர்த்தது. அதுதான் அவர்களை இந்திப் படங்களையும் பார்க்கத் தூண்டியது. ‘நம் ரசிகர்கள் ஏதோ ஒண்ணை புதுசா எதிர்பாக்குறாங்க’ என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது. ‘நம்மால் படமே எழுத முடியாது’ என்று நினைத்துக்கொண்டு இருந்த சமயத்தில் ‘கல்யாணமாம் கல்யாணம்’ ஓடி, ஒரு சின்னத் திருப்பத்தை ஏற்படுத்தியதுபோல ‘ஏன் ஒரு நல்ல இசையமைப்பாளரை கொண்டுவரக் கூடாது?’ என என் மனதுக்குத் தோன்றியது. அப்படி ஓர் இசையமைப்பாளர் வந்தால், தமிழ் சினிமாவில் பெரிய மாற்றத்தை, திருப்பத்தைப் பார்க்க முடியுமே என்ற பேராசை ஏற்பட்டது. அப்படியான பெரிய இசையமைப்பாளர் கிடைத்தால்தான் இங்கு ஓடும் இந்திப் படங்களைத் தாண்டி நாம் வெற்றி பெற முடியும், அதன் ஆதிக்கத்தைக் குறைக்க முடியும் என உறுதியாக நம்பினேன்.

நல்ல இசையமைப்பாளரைத் தேடத் தொடங்கினேன். ‘இது நான் புதுசா போட்ட கேசட்’ என்று இசை வாய்ப்புக்காக யார் வந்தாலும் அவர்களின் இசைக்குக் காது கொடுத்துக் காத்திருந்தேன். ‘நல்ல நேரம் வரும்போது எல்லாமும் நல்லதாகவே நடக்கும்’ என்பார்களே... அப்படி என் காத்திருப்புக்குப் பலன் கிடைத்தது. அந்த இளைஞன் வந்தான். ஆனால், அவன் இசையை வேறு எவரும் நம்பவில்லை, என்னைத் தவிர. ஆனால், அவன் இசை வெளிவந்த பிறகோ, அவனைத் தவிர வேறு எவரையும் நம்ப ரசிகர்கள் தயாராக இல்லை.
- தொண்டு தொடரும்...
தமிழ் சினிமா தாயில்லாக் குழந்தை!
‘தமிழ்த்திரை உலகம் தாயில்லாக் குழந்தை’ என்ற தலைப்பில் கவிஞர் கண்ணதாசன் ஓர் இதழில் எழுதியிருந்தது... ‘தமிழ்த்திரை உலகம் பெரும் வீழ்ச்சியுற்றிருப்பது உண்மை என்றாலும், இந்த வீழ்ச்சியில் ஒரு நன்மையும் அடங்கி இருக்கிறது.

இருபது வருடங்களுக்கு மேல் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி, கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துவிட்ட சில பெரிய நடிகர்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது இந்த வீழ்ச்சியால் கிடைத்த லாபமே.
நல்ல கதை, வசனம், பாடல்கள், டைரக்ஷன் இருந்தால் எந்தப் படமும் வெற்றி பெறும் என்பதற்குச் சில உதாரணங்களும் சமீபத்தில் தோன்றியுள்ளன. ஆனால், பெரிய சினிமா கம்பெனிகள் மூடப்பட்டுவிட்ட துர்ப்பாக்கியமும் நிகழ்ந்திருக்கிறது. அதற்குக் காரணம் அளவு கடந்த வரிச்சுமை மட்டுமின்றி, நடிகர்களின் ‘தர்பாரு’ம்கூடத்தான்.
இப்போது அந்த கம்பெனிகள் மீண்டும் தலை தூக்கலாம் என்றால், கையில் அரைக்காசும் இல்லை; கடன் கொடுப்பார் யாரும் இல்லை. சினிமாவுக்கு நிதி உதவுவோர் வெகுவாகக் குறைந்துவிட்டார்கள். வங்கிகள், சினிமாவுக்குக் கடன் கொடுப்பது இல்லை. விநியோகஸ்தர்கள் பலர், பெரும் தோல்விகளினால் தயாரிப்பாளர்களுக்கு முதலீடுசெய்ய முடியாமல் இருக்கிறார்கள்.
தலை தூக்கி நின்ற தமிழ்த்திரை உலகம், தலை குப்புற விழுந்துகிடக்கிறது. தமிழையே அண்டியிருந்த பலர், கன்னட, மலையாள, தெலுங்குப் படவுலகுக்குப் போய்விட்டார்கள். அந்த மூன்று மொழிப்பட உலகங்களும் இப்போது வசதியாக, வளமாக இருக்கின்றன. ‘தாயில்லாத குழந்தை’ தமிழ்த்திரை உலகம் மட்டுமே.
பட ஸ்டுடியோக்கள் கோதுமைக் கிடங்குகளாகி விட்டன. ‘அமைச்சரவை’ என்ற ஒன்று இல்லாத காரணத்தால், ‘யார் மூலம்’ இந்தத் திரையுலகுக்கு வாழ்வு தேடுவது என்பது பெரும் பிரச்னையாக இருக்கிறது. ஏராளமான தொழிலாளர்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
பொன் முட்டையிடும் இந்த வாத்தைக் காப்பாற்ற உடனடியாக மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டால், தொழிலாளர்களுக்கும் நல்லது. அரசாங்கத்துக்கும் நல்லது’.