
பஞ்சு அருணாசலம்

பாடல்களுக்காகவே வருடக்கணக்கில் ஓடும் இந்தி சினிமா. 75 நாட்கள் ஓடினாலே மிகப் பெரிய வெற்றி என நினைக்கும் நம் சினிமா... இதுதான் அன்றைய தமிழ் சினிமா சூழல். அதில் இருந்து தமிழ் சினிமா மீள, முற்றிலும் புதிய பாணியில் இசையமைக்கும் ஓர் இசையமைப்பாளர் தேவை என்பதில் உறுதியாக இருந்தேன். அதற்காக, ரூம் போட் டெல்லாம் இசையமைப்பாளரைத் தேர்வுசெய்ய வில்லை. என் வேலைகளைப் பார்த்துக்கொண்டே, வாய்ப்பு கேட்டு வரும் இசையமைப்பாளர்களின் பாடல்களை தொடர்ந்து கேட்டபடி இருந்தேன். ஆனால், யாரும் பெரிதாக ஈர்க்கவில்லை.

அவ்வளவு ஏன்... வித்தியாசமான இசை வேண்டும் என்றுதான் விஜயபாஸ்கரையே ‘கல்யாணமாம் கல்யாணம்’ படத்தில் அறிமுகப்படுத்தினேன். அவரும் நன்றாகவே இசையமைத்தார். நிறையப் பாடல்கள் ஹிட் கொடுத்தார். ஆனால், இந்திப் படங்களில் அப்போது இருந்த இசையமைப்பாளர்களின் புதுமையான இசையைத் தாண்டிய பாடல்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்தேன். அது அமையவில்லை. ‘அப்படி ஓர் ஆள் கிடைக்காமலா போய்விடுவான்?!’ எனக் காத்திருந்தேன். ஆனால், எந்த நம்பிக்கையில் அன்று அப்படிக் காத்திருந்தேன் என, இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.
‘நல்ல இசை’ எனத் தீர்மானிக்கும் அளவுக்கு நான் இசை கற்றவனோ, இசைக் குடும்பத்தில் பிறந்தவனோ கிடையாது. எங்கள் செட்டியார் சமூகத்தில் நிறையக் கல்வியாளர்கள் உண்டே தவிர கலைஞர்கள் எனப் பெரிதாக யாரும் வரவில்லை. தவறி வந்தவர்களில் கவிஞர் கண்ணதாசன் ஒருவர்தான் உச்சத்தைத் தொட்டார். வெவ்வேறு துறைகளில் வெற்றி பெற்ற பலரும் இருக்கிறார்கள். அதில் நான் கவிஞரை ஒட்டிவந்தவன். தவிர, சிறு வயதிலேயே எனக்கு திரையிசை மீது அபரிமிதமான ஈர்ப்பு இருந்தது. என் பள்ளி நாட்களிலேயே நௌஷத் போன்ற அன்றைக்குப் பிரபலமாக இருந்த பல இசையமைப்பாளர்களின் பாடல் களை விரும்பிக் கேட்டிருக்கிறேன். கவிஞரிடம் உதவியாளராகச் சேர்ந்த பிறகு கே.வி.மகாதேவன், மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் -ராமமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, வேதா, சலபதிராவ், ஏ.எம்.ராஜா... எனப் பல இசையமைப்பாளர்கள் கதையின் சூழலுக்குத் தகுந்தாற்போல் ட்யூன் போடுவதை அருகில் இருந்து கவனித்திருக்கிறேன். அவற்றுக்கு கவிஞர், பாடல் சொல்லச் சொல்ல நான் எழுதியதும் என்னை அறியாமல் அனுபவமாக, என் ஞாபக அடுக்குகளில் பதிந்திருந்தது.
கவிஞரிடம் உதவியாளராக இருந்தபோதே, இசையமைப்பாளர்களின் ட்யூன்களைக் கேட்ட மாத்திரத்தில், ‘இது பிரமாதம் பெரிய ஹிட்டாகும், இது சுமார், இது மோசம்’ என எனக்குள் நினைத்துக்கொள்வேன். படம் ரிலீஸ் ஆனதும் நான் நினைத்தது சரியாக இருக்கிறதா இல்லையா என்பதை, ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் மூலம் உறுதிப்படுத்திக்கொள்வேன். கிட்டத்தட்ட சரியாகவே இருக்கும். அந்த வெகுஜன ரசனை இருந்ததால், அன்றைய இசையில் இருந்து விலகி வித்தியாசமான இசை எப்படி இருக்க வேண்டும் என்பதை ஓரளவுக்குப் புரிந்துவைத்திருந்தேன். அன்றைய பிரபல இசையமைப்பாளர்களிடம் உதவியாளர்களாக இருந்தவர்களை, என் படத்துக்கு இசையமைக்கச் சொல்லி அணுகினேன். ஆனால், நான் எதிர்பார்த்த இசையை அவர்களால் தர முடியவில்லை.
அந்தச் சமயத்தில் ‘கல்யாணமாம் கல்யாணம்’ தொடங்கி கதாசிரியர் செல்வராஜ் என்கூடவே இருந்தார். அவர் கதை சொல்வதில் கில்லாடி. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழி சினிமாக்களுக்கும் கதை சொல்வார். ஒரு கம்பெனியில் ஒரு கதை சொல்லி ஓ.கே ஆகிவிட்டால், அடுத்து வேறு ஒரு கம்பெனி, வேறு ஒரு கதை... எனக் கிளம்பிவிடுவார். பிறகு அவர் சொன்ன கதையை வித்தியாசமான ட்ரீட்மென்ட், டயலாக், ஸ்கீரின்ப்ளே என வேறு யாராவது எழுதுவார்கள். இப்படி செல்வராஜ் கதை சொல்வதில் மன்னாதி மன்னன்.
‘அப்ப இசையமைப்பாளர்கள் காலங்களுக்குத் தகுந்த மாதிரி மாறிட்டு வந்துட்டே இருந்தாங்க. இந்தியிலகூட, நௌஷத்துக்குப் பிறகு யாரும் வர முடியாதுனு சொன்னப்ப, ராமச்சந்திரா வந்தார். பிறகு ஷங்கர் ஜெய்ஷிங், லஷ்மிகாந்த் பியாரிலால், சதிஷ் செளத்ரினு வெவ்வேறுவிதமான இசையமைப் பாளர்கள் வெவ்வேறுவிதமான இசையுடன் தொடர்ச்சியா வந்துட்டே இருந்தாங்க. ஆனால், `எம்.எஸ்.வி-க்குப் பிறகு இங்கே இப்ப பெரிய வெற்றிடமாகிப்போச்சே...’ - இப்படி செல்வராஜிடம் அவ்வபோது ஆதங்கத்தைப் பகிர்ந்துகொள்வேன்.
அன்றும் அப்படிப் பேசிக்கொண்டிருந்தேன். ‘எனக்குத் தெரிஞ்ச ஒரு பையன் இருக்காண்ணே. ராஜானு பேரு. சின்ன வயசுல இருந்தே ஹார்மோனியம் வாசிச்சுப் பழக்கப்பட்டவன். தன் அண்ணனோடு சேர்ந்து நிறைய ஊர்கள்ல கச்சேரிகள் பண்ணியிருக்கான். என் ஃப்ரெண்ட் பாரதிராஜா போட்ட நாடகங்களுக்கு மியூஸிக் போட்டிருக்கான். இப்ப ஜி.கே.வெங்கடேஷ்கிட்ட அசிஸ்டன்ட்டா இருக்கான். அவனுக்குப் படம் பண்ணணும்னு ஆசை இருக்கு. உங்களுக்கு ஓ.கே-ன்னா நான் கூட்டிட்டு வர்றேன்’ என்றார்.
‘ஊர்ஊரா சுத்தியிருக்கான்; நாடகங்களுக்கு மியூஸிக் போட்டிருக்கான்; கஷ்டப்பட்டிருக்கான்...நிச்சயமா ரசிகர்களின் பல்ஸ் தெரிஞ்சவனாத்தான் இருப்பான். கேட்டுப்பார்ப்போமே. யார் கண்டா... அமைஞ்சாலும் அமையும்’ - எனக்கு ஒரு பிடிமானம் கிடைத்தது. ‘சரி நாளைக்கே கூட்டிட்டு வா’ என்றேன்.
மறுநாள் காலை. கோடம்பாக்கம் பாம்குரோவ் ஹோட்டல் அறை. ‘திறமையான இளம் இசையமைப்பாளரைப் பார்க்கப்போறோம். இண்டஸ்ட்ரியே மாற்றம் காணப்போகுது'- ஒவ்வோர் இசையமைப்பாளரைச் சந்திக்கும்போது இப்படியான குதூகல மனநிலையில்தான் இருப்பேன். அன்றும் அப்படித்தான்.
செல்வராஜ் வந்தார். ‘அண்ணே... இவர்தான் ராஜா’ - அறிமுகப்படுத்திவைத்தார். இன் ஷர்ட் பண்ணிய ஒடிசலான தேகத்துடன் ஒரு பையன் வந்துநின்றான். தழையத்தழையக் கட்டிய வேட்டியும், நெற்றி நிறைய விபூதி குங்குமமுமாக இசையமைப்பாளர்களைப் பார்த்து பழகிய கண்களுக்கு, கவர்மென்ட் ஆபீஸ் குமாஸ்தாபோல இருந்த அந்த இளைஞனை, இசையமைப்பாளர் என என்னால் நம்ப முடியவில்லை. ஹார்மோனியம், கிடார் என ஏதாவது கையில் எடுத்து வந்திருந்தாலாவது நம்பியிருப்பேன். அதுவும் எடுத்து வரவில்லை. ‘ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன் இஸ் தி பெஸ்ட் இம்ப்ரஷன் என்பார்களே, ராஜா விஷயத்தில் அது பொய்த்துப்போனது.
‘வாப்பா... உட்கார்’ என்றேன். உட்கார்ந்தார். இன்றுபோல் அன்றும் ராஜா அதிகம் பேச மாட்டார். லேசாகச் சிரித்தபடி அமைதியாக அமர்ந்து இருந்தார். ‘செல்வராஜ் சொன்னாரு. ரொம்ப சந்தோஷம். தமிழ்ல நல்ல இசையமைப் பாளர் வரணும்னு ஆசை’ - நான்தான் ஆரம்பித்தேன்.
‘சினிமாவுக்கு இசையமைக்கணும்கிறது ரொம்ப நாள் ஆசை. முயற்சிபண்ணிட்டிருக்கேன்’ என்றார்.
‘உனக்கு என்ன அனுபவம்?’ என்றேன்.
‘அண்ணன்கூட இருந்திருக்கேன். ஓரளவுக்குத் தெரியும். நிறையப் பாட்டு எல்லாம் போட்டு வெச்சிருக்கேன்.’
எல்லா கேள்விகளுக்கும் இரண்டு, மூன்று வார்த்தைகளில் வந்துவிழுந்தன பதில்கள்.
‘சரி... அந்த ட்யூனை எல்லாம் கேட்டாத்தான் ஒரு முடிவுக்கு வர முடியும். நாளைக்கோ நாளான்னைக்கோ ஃபிக்ஸ் பண்ணிப்போம். வரும்போது ஹார்மோனியம், தபலானு அந்த மாதிரி செட்டப்போட ரெண்டு மூணு பேரா வந்துடுங்க’ என்றேன்.
‘எதுக்கு மத்தவங்க?’ என்றார்.
‘எந்த இன்ஸ்ட்ருமென்ட்ஸும் இல்ல. பாடுறதுக்கு யாரையும் அழைச்சிட்டும் வரலை. எப்படிப் பாடிக்காட்டுவ?’ என்றேன்.
‘நானே பாடுவேன். பாடவா?’ என்றார்.
எனக்கு ஷாக்... ‘ம்ம்... பாடு’ என்றேன்.
பக்கத்தில் சிறிய அறையில் இருந்த மேஜைக்கு இடம்பெயர்ந்தவர், அதில் தாளம் போட்டபடி பாட ஆரம்பித்தார்.
‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே...’, ‘மச்சானைப் பாத்தீங்களா..?’, ‘வாங்கோண்ணா... வாங்கோண்ணா...’ உள்பட பத்துக்கும் மேற்பட்ட பாடல்களின் இசைக்கோப்புக்கு முந்தைய வடிவமான தத்தகாரத்தில் பாட ஆரம்பித்தார்.
‘ஏதோ வித்தியாசமா இருக்கே...’ - அந்த ட்யூன்களைக் கேட்ட மாத்திரத்தில் என் மனதுக்குள் ஏற்பட்ட உணர்வு. ஆனால், எதுவும் சொல்லவில்லை. ‘இத்தனை பாடல்களைக் கேட்டாரு... ஒண்ணுமே சொல்லலையே...’ என நினைத்தாரோ என்னமோ தெரியவில்லை, ‘அப்ப நான் போயிட்டு நாளைக்கு வரட்டுமாண்ணே?’ - கிளம்பத் தயாரானார்.
‘கொஞ்சம் இரு. இன்னொரு தரம் பாடு’ என்றேன். அப்போதுதான் அவருக்குத் தைரியம் வந்தது. திரும்பவும் பாடினார்.
‘நல்லா இருக்கு. நான் சொல்லி அனுப்புறேன்’ என்றதும் கிளம்பிவிட்டார்.

ராஜாவை வழியனுப்பிவிட்டு வந்த செல்வராஜ், ‘எப்படிண்ணே இருக்கு?’ என்றார். ‘வித்தியாசமா இருக்கு. நான் நினைச்சதைவிட நல்லா வர்றதுக்கான சான்ஸ் இருக்கு. கொஞ்சம் ஆர்க்கெஸ்ட்ரா செட்டப் எல்லாம் வெச்சுக் கேட்டா, இன்னும் கொஞ்சம் நல்லா வரும்னு நினைக்கிறேன்’ என்றேன்.
‘அவன் நல்லா பண்ணுவாண்ணே’ என்றார் செல்வராஜ்.
அது ‘எங்கம்மா சபதம்’ ரிலீஸ் ஆகி ‘மயங்குகிறாள் மாது’ தொடங்கியிருந்த நேரம். இன்னும் இரண்டு மூன்று வெளி கம்பெனிகளுக்கு எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால், அந்த கம்பெனிகளுக்கு நான் ராஜாவை ரெஃபர் பண்ணவில்லை. காரணம், அவை இசைக்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லாத படங்கள். ‘இவனை கமிட் பண்ணணும்னா, அது முழுமையான மியூஸிக் பிக்சரா இருக்கணும். அப்பதான் ஓர் இசையமைப்பாளரை அறிமுகப் படுத்தும்போது, அந்தப் பலன் அவனுக்குக் கிடைக்கும். ‘இசையினால்தான் இந்தப் படம் பிச்சுக்கிட்டுப்போச்சு’ எனச் சொல்லக்கூடிய அளவுக்கு நான் நினைத்ததும் நடக்கும்’ என மனதுக்குள் உருவகம்பண்ணிக்கொண்டேன். ஆனால், என் அடுத்தடுத்த படங்களின் வேலைகளிலேயே ஒரு வருடம் கடந்தது. இன்னொரு பக்கம் ராஜாவுக்காக கதை யோசித்துக்கொண்டிருந்தேன். இவை எல்லாம் ராஜாவுக்குத் தெரியாது.
‘ராஜா போட்ட பாடல்களை வெச்சு மியூஸிக்கல் சப்ஜெக்ட் பண்ணலாம்’ என்ற யோசனை மனதுக்குள் ஒருபக்கம் ஓடிக்கொண்டே இருந்தது. அந்தச் சமயத்தில்தான் செல்வராஜ் ஒரு கதையின் அவுட்லைன் சொன்னார். ‘மொத்தமே பத்து வீடுகள் உள்ள ஒதுக்குப்புறமான ஒரு மலைக்கிராமம். அங்கு ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ள ஒரு பள்ளி. வெளியூரில் இருந்து வரும் அந்த ஓர் ஆசிரியர்தான் ஹீரோ. அதே ஊரில் `அன்னம்' என மருத்துவம் பார்க்கும் ஒரு பெண். ஊருக்கு எல்லாம் வைத்தியம்பார்க்கும் அவளுக்கு, குழந்தை இருக்காது...’ ‘மருத்துவச்சி’ என்ற தலைப்பில் இந்தக் கதையைச் சொன்னார்.
அவர் சொன்ன ஒட்டுமொத்தக் கதையும் என்னை ஈர்க்காவிட்டாலும் ராஜா போட்ட கிராமிய இசைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பண்ண, அந்தக் கிராமத்துக் களம் கைகொடுக்கும் என்பதால், அந்தக் கதைக்களம் என்னை ஈர்த்தது. அதேபோல ‘அன்னம்’ என்ற அந்தப் பெண், வாத்தியார் கேரக்டர்... மனதுக்கு நெருக்கமாக இருந்தன. ‘இதைவைத்து நாம டெவலப் பண்ணிக்கலாம்’ என முடிவுசெய்து கதையைத் தயார்செய்தேன். அதுதான், ‘அன்னக்கிளி’.
அப்போது எங்கள் ஆபீஸ் தி.நகர் பாரதி நகரில் இருந்தது. அது இயக்குநர் பி.வாசுவின் அப்பா பீதாம்பரத்தின் வீடுகளில் ஒன்று. கீழ் போர்ஷனை வாடகைக்கு எடுத்து ஆபீஸாக மாற்றியிருந்தோம். இதற்கு இடையில் ராஜாவையும் அவரது குழுவையும் ஒருநாள் வரச்சொன்னேன். ராஜாவின் அண்ணன் பாஸ்கர் தபலா, கங்கை அமரன் மாண்டலின், ராஜா ஹார் மோனியம். அவர்கள் வாசிக்க, அதை நான் ரிக்கார்ட் பண்ணிக் கொண்டேன்.
அப்போது எனக்கு டிரிங்க்ஸ் சாப்பிடும் பழக்கம் இருந்தது. ஷூட்டிங் முடித்து இரவு வீட்டுக்கு வந்ததும் 9 மணிக்கு மேல் லைட்டாக டிரிங்க்ஸ் சாப்பிட்டுவிட்டு, ரிக்கார்டு செய்த ராஜாவின் இந்தப் பாடல்களை ஓடவிட்டு, கண்களை மூடிக்கொண்டு தினமும் கேட்பதை வழக்கமாக வைத்திருந்தேன். அந்த ட்யூன்களைத் திரும்பத் திரும்பக் கேட்கக் கேட்க எனக்கு அந்த இசையின் மீது ஈடுபாடு அதிகமாகியது. பிறகு, அந்த ட்யூன்களுக்கு நானே பாடல்களை எழுதிவிட்டேன். ஆரம்பத்தில் அவர் போட்ட ட்யூன் இல்லாமல் அந்தப் படத்துக்காக நான் சிச்சுவேஷன் சொல்லிப் போட்ட ஒரு ட்யூன் ‘சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை...’ பாடல் மட்டும்தான். மற்றபடி ‘மச்சானைப் பாத்தீங்களா...’, ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே...’,
‘சுத்தச் சம்பா பச்சநெல்லு குத்தத்தான் வேணும்...’ உள்பட மற்ற அனைத்தும் அவர் ஏற்கெனவே போட்டிருந்த ட்யூன்களுக்கு நான் பாடல்கள் எழுதியவை.
அப்போது அதிகபட்சம் நாலரை நிமிடங் களுக்குள் இருந்தால், அது ஒரு பாடல் என்ற கணக்கு. அதற்கு மேல் போனால் இசைக் கலைஞர்கள், ரிக்கார்டிங் தியேட்டர் உள்பட அனைவருக்கும் டபுள் பேமென்ட் கொடுக்க வேண்டும். ராஜாவுக்கு அது முதல் படம், தவிர மியூஸிக்கல் சப்ஜெக்ட் என்பதால், ரிக்கார்டிங்குக்கு முன்னர் ரிகர்சல் செய்துகொள்ளலாம் என நினைத்தோம். ஏனெனில், அப்போது ராஜாவுக்கு என தனியாக குழு இல்லை. பல இசையமைப் பாளர்களிடம் வாசிப்பவர்களை வரச்சொல்லி நோட்ஸ் கொடுத்து வாசிக்கச் சொல்ல வேண்டும். சீனியர்களான அந்த இசைக்கலைஞர்கள் ராஜாவுடன் எந்த அளவுக்கு இணக்கமாகப் பணியாற்றுவார்கள் என்பது சந்தேகம். ஏனெனில், அப்போது அவர்கள் ராஜாவைப் பெரிதாக நினைத்திருக்க மாட்டார்கள். (அவர்களில் பலர் பின்னாட்களில் நிரந்தரமாக ராஜாவின் குழுவில் சேர்ந்தனர்.)
அப்போது பெரிய இசையமைப்பாளர்களிடமே பட்ஜெட் சொல்வோம். ‘சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்கள்னா, நீங்க என்ன வேணும்னாலும் பண்ணலாம். இது வேற ஆர்ட்டிஸ்ட்டை வெச்சு பட்ஜெட்ல பண்ற படம். ஆர்க்கெஸ்ட்ராவுக்கு 3,500 ரூபாய்க்கு மேல போகாமப் பாத்துக்கங்க’ என்போம். ஏனெனில், பாட்டு எழுதுகிறவர்களுக்கு 2,000, ரிக்கார்டிங் தியேட்டருக்கு 1,000, பாடுபவர்களுக்கு 2,000... என ஒரு பாட்டுக்கு 7,000 ரூபாய் செலவு என்றால், ஐந்து பாடல்களுக்கு 35 ஆயிரம் ரூபாய், ரீ-ரிக்கார்டிங்குக்கு 30 ஆயிரம் என பட்ஜெட் போட்டு மொத்தப் படத்தையே நாலரை, ஐந்து லட்சம் ரூபாய்க்குள் முடித்து விடுவோம். அதை ஆறரை, ஏழு லட்சம் ரூபாய்க்கு விற்றால், படம் வெற்றிபெற்றால் வட்டி போக அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். இதுதான் அப்போதைய லாப-நஷ்டக் கணக்கு.
ஆனால் நான் ராஜாவிடம், ‘இந்தப் படத்துக்கு பட்ஜெட்டே கிடையாது. எத்தனை இசைக் கருவிகள், கலைஞர்கள் வேணும்னாலும் வெச்சுக்க. அதேபோல நாலரை நிமிஷத்துக்கு மேல போனா, டபுள் சம்பளம் தரணுமேங்கிற மாதிரியான எந்தவிதமான எல்லைகளையும் மனசுல வெச்சுக்காம, பாட்டு நல்லா வரணும்கிற ஒரே நோக்கத்துல பண்ணு. உன் இஷ்டம்தான்’ என்று முழு சுதந்திரம் கொடுத்துவிட்டேன். முதல் படத்திலேயே அவ்வளவு சுதந்திரம் கிடைத்தது ராஜாவுக்குப் பெரிய சந்தோஷம்.
அப்போது தயாரிப்பு வேலைகளை என் தம்பிகள் கவனித்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு இசையமைப்பாளராக ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்துவதில் விருப்பம் இல்லை. ‘கே.வி.மகாதேவன், விஸ்வநாதன்னு பெரிய இசையமைப்பாளர்கூட பத்து, பன்னிரண்டு வருஷம் வொர்க் பண்ணியிருக்கீங்க. உங்களுக்கு எல்லாமே தெரியும். மியூஸிக் பிக்சர்னா அவங்கள்ல யாராவது ஒருத்தங்களைப் போட்டிருக்கலாம்ல’ என்பார்கள். என் நண்பர்கள் பலரும், ‘ஏன் ரிஸ்க் எடுக்குற?’ என அறிவுரை சொல்லிக்கொண்டே இருந்தனர். ஆனால், நான் ராஜாவைக் கூப்பிட்டுப் பேசியது, அவரின் ட்யூன்களைக் கேட்டது... என எதுவுமே அவர்களுக்கு விவரமாகத் தெரியாது. தவிர, இசைப் பரிச்சயம் இல்லாத ஆட்கள். ஆனால், எனக்குள்ளும் உள்ளுக்குள் ஒரு பயம் இருந்தது. காரணம், அப்போது கிட்டத்தட்ட நானும் புதுமுகம்தான். நிறையப் படங்களுக்குக் கதை வசனம் எழுதியிருந்தாலும், ஏற்கெனவே இரண்டு படங்கள் சொந்தமாக எடுத்திருந்தாலும்கூட ஆரம்பநிலையில்தான் இருந்தேன். இவற்றை எல்லாம் மீறி, ராஜாவின் இசை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தேன்.
முதல் நாள் ரிக்கார்டிங். எல்லோரும் தயாராக இருக்கிறார்கள். ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே...’ பாட்டை முதலில் ரிக்கார்டு செய்வதாகத் திட்டம். ஜானகிதான் பாடகி. ரிகர்சல் ஆரம்பமானது. வாசிப்பவர்கள், ஜானகி உள்பட அனைவருக்கும் நோட்ஸ் கொடுத்து சொல்லிக்கொடுத்தார் ராஜா. ரிகர்சலில் பெர்ஃபெக்ட்டாக வந்தது. ‘ஓ.கே. ஃபைனல் டேக் போலாம்’ என்றதும் ‘எஸ்.பி.டி ஃபிலிம்ஸ், அன்னக்கிளி, சாங் நம்பர் ஒன், டேக் நம்பர் ஒன் ஓ.கே’ என்றதும், ஜானகி ஹம் பண்ணத் தொடங்கிய அடுத்த நிமிடமே கரன்ட் ஆஃப்.
அனைவரும் அதிர்ச்சியில் பேய் அறைந்ததுபோல் உறைந்து நின்றனர். ‘ஒண்ணும் இல்லை... கரன்ட் இப்ப வந்துடும்’ என ஆசுவாசப்படுத்தினேன். ஆனால், கரன்ட் உடனடியாக வருவதாகத் தெரியவில்லை. இசைக் கலைஞர்கள் உள்பட பலர் வெளியில் வந்து கசமுசா எனப் பேசிக் கொண்டனர். ‘என்னப்பா எவ்வளவோ சொன் னோம்... முதல் படம் பண்றான். ஆரம்பிக்கும்போதே டொப்புனு கரன்ட் போயிடுச்சே. சகுனமே சரியில்லையே...’ இப்படி ஏதேதோ பேசிக் கொண்டனர். அந்தச் சூழலைக் கவனித்தபடி அதிர்ச்சியில் அமைதியாக அமர்ந்திருந்தார் ராஜா!
- தொண்டு தொடரும்...