தன்னம்பிக்கை
Published:Updated:

'இறைவி’ - ஆணின் அக்கப்போர்களை நியாயப்படுத்தும் சினிமா!

'இறைவி’ - ஆணின்  அக்கப்போர்களை நியாயப்படுத்தும்  சினிமா!
பிரீமியம் ஸ்டோரி
News
'இறைவி’ - ஆணின் அக்கப்போர்களை நியாயப்படுத்தும் சினிமா!

அலசல் ப்ரியா தம்பி

'இறைவி’ - ஆணின்  அக்கப்போர்களை நியாயப்படுத்தும்  சினிமா!

பெண்களின் கதை என்கிற பெயரில் ஆண்கள் தங்கள் கதையையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மனிதி, இறைவி என புதிது புதிதாக வார்த்தைகளை உருவாக்கி, பெண்களுக்கான படம் என்று தொடர்ந்து விளம்பரம் செய்யாவிட்டால், இந்தப் படத்தோடு ஒரு பிரச்னையும் இல்லை. `Wo’men’களின் கதை என தியேட்டருக்கு வரவைத்து தலையில் சுத்தியால் அடித்ததுதான் குரூரம்.

படம் முழுக்க ஆண்கள், குடி, ஆட்டம்.

எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி ஏற்று நடித்திருக்கும் இரண்டு கதாபாத்திரங்களின் வாழ்க்கையின் வழியே, அவர்கள் மனைவிகளின் துயரத்தைச் சொல்ல முயன்றிருக்கிறார்கள். இந்த ஆண்கள் சராசரி ஆண்களாக இருந்து, அறியாமையால் பெண்களை அப்படி நடத்துகிறார்கள் என்று சொல்லியிருந்தால்கூட அந்த முயற்சியை ஒப்புக்கொண்டிருக்கலாம். ஆனால், படத்தில் வரும் ஆண்கள் படம் முழுக்கக் குடித்துக் கூத்தடிக்கிறார்கள். பணத் தேவைக்காக கோயில்களில் சிலை திருடுகிறார்கள். கொஞ்சமும் அடிப்படை அறமற்ற இந்த கதாபாத்திரங்களிடம் படம் பார்ப்பவர்கள் எப்படி தங்களை ஒப்பிட முடியும்? அதைக்கூட விட்டுவிடலாம். இத்தனை அயோக்கியத்தனமும் செய்யும் இந்த ஆண்களின் மீது, ‘அய்யய்யோ, அந்தப் பொண்ணுங்களை இப்படி படுத்தறீங்களேடா’ என ஓர் இடத்திலாவது கோபம் வந்தால்கூட பரவாயில்லை. இவர்களின் ஒவ்வோர் அயோக்கியத்தனமும், கையாலாகாத்தனமும் படம் முழுக்க ஒவ்வோர் காட்சியிலும் நியாயப்படுத்தப்படுகிறது.

எஸ்.ஜே.சூர்யா பாவம்... அவர் இயக்கிய படம் வெளிவரவில்லை, அதனால் குடிக்கிறார். விஜய் சேதுபதி பாவம்... அவர் நம்பிய மலர் என்கிற பெண் ஏமாற்றிவிட்டாள், அதனால் அவரால் மனைவி அஞ்சலியோடு வாழ முடியவில்லை. இதுதான் பார்வையாளர்களால் புரிந்துகொள்ள முடிவது. படத்தில் மூன்றாவதாக வரும் பாபி சிம்ஹா கேரக்டர் இருப்பதிலேயே ஆபத்தானது. குடிக்கிறார், சிலை திருடும் கிரிமினல் வேறு. எல்லாம் போகட்டும்,  நண்பனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு, அவன் மனைவியோடு வாழ நினைக்கிறார். இந்த கேரக்டர்தான் படம் முழுக்கப் பெண்களுக்காக கண்ணீர் வடிக்கிறார். ‘கோவலன் வந்த மாதிரி கண்ணகி வந்தா ஏத்துப்பீங்களா?’ என ஃபெமினிசம் பேசுகிறார். சகிக்க முடியாத இடம் இதுதான்.

அப்புறம் விஜய் சேதுபதியின் காதலி மலர், தான் தோன்றும் நான்கு காட்சிகளிலும், ‘வெறும் படுக்கைக்காகத்தான் இந்த ரிலேஷன்ஷிப், லவ் இல்ல’ என அவரிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார். அவரோ அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார். ‘முடியாது, வேறு யாரையாவது திருமணம் செய்துகொள்’ என சொல்லிவிடுகிறார் மலர். குழப்பமாக உருவாக்கப்பட்ட பெண் கேரக்டர் இது. பெண் கேட்டு வந்த விஜய் சேதுபதியின் சித்தப்பாவிடம், ‘நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. உங்க பையன்கூட செக்ஸுக்காகதான் பழகுறேன், லவ்வெல்லாம் இல்ல’ எனச் சொல்கிறார்.

படம் பார்த்து சிலாகிக்கும் சிலரும், இதுதான் பெண்ணியம் என பாராட்டுகிறார்கள். உண்மையில், மலர் இப்படிப் பேசுவது தைரியத்தால் அல்ல. பெரியவர்களிடம் எப்படிப் பேச வேண்டும் என்று தெரியாத மடத்தனம் அது.

ஒரு பெண், ஆணிடம் எப்போதும் விரும்புவது... தன்னிடத்தில் வைத்துப்பார்த்து தன்னை அவன் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான். இதையே ஆணுக்கும் பொருத்திக்கொள்ளலாம். விஜய் சேதுபதி மலரோடு உறவு வைத்துக்கொண்டு, ‘வெறும் படுக்கைக்காகத்தான் இந்த ரிலேஷன்ஷிப்’ எனச் சொன்னால், நாம் எவ்வாறு புரிந்துகொள்வோம்? ‘பொறுக்கி’ என அவன் தலையில் ஆணி அடித்துவிட மாட்டோமா? திருமண உறவு, திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு என்பதெல்லாம் அந்த இருவர் சம்பந்தப்பட்டதுதானே தவிர, ஒருவர் தன் சித்தாந்தத்தில் நம்பிக்கையற்ற இன்னொருவரை ஏமாற்றுவது அல்ல. எல்லாம் தவிரவும், பெண்ணின் பிரச்னையோ, பெண்ணியமோ ஏன் படுக்கையறையில் இருந்தே இங்கே தொடங்கி வைக்கப்படுகிறது?

கிளைமாக்ஸில், ‘அய்யோ... சேதுபதி கேரக்டர் செத்துப் போய்விட்டாரே’, `எஸ்.ஜே.சூர்யா குடியைவிட்டு மனைவியோட வாழ நினைக்கும்போது அநியாயமா ஜெயிலுக்குப் போகப்போறாரே’ என இவர்கள் மீதுதான் பரிதாபம் வருகிறது.

‘மனிதி வெளியே வா’ என்கிற பாட்டைக் கேட்டு, ‘புரட்சிகரமான சினிமா போல’ என தியேட்டருக்குப் போனால், ஒரு மனிதி மகளோடு மறுபடியும் திருமணத்துக்குள் போகிறாள், இன்னொரு மனிதி வாழ ஒரு வழி தேடி மகளோடு ஊரைவிட்டுப் போகிறாள். இதில் எங்கே இருந்து அவர்கள் வெளியே வந்தார்கள்? இப்படியே இருக்கிறார்களே, இதெல்லாம் வேண்டாம் வெளியே வாருங்கள் என படம் சொல்ல நினைக்கிறதா? அப்படியெனில் எங்கே போக? பூமிக்கு வெளியேவா? படம் குறிப்பிட நினைக்கும் வெளி அதுவா?

குடும்பத்தில், பேருந்தில், சாலையில், அலுவலகத்தில் என தினம் தினம் பெண்கள் ஏதேனும் இடர்களை சந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள். பெண்ணின் துயர் என்றாலே திருமணம், கணவன் மட்டுமே என யோசிப்பதே போன நூற்றாண்டு சிந்தனைதான். ஆனாலும் அதையாவது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்களே என சிறிதுகூட ஆசுவாசப்பட முடியாத சினிமா, ‘இறைவி’.

 ``சுருக்கமாக, இது ஆணின் அக்கப்போர்களை மிக அழகாக நியாயப்படுத்தும், ஆணின் வாழ்க்கையை மூன்று மணிநேரம் நமக்குக் காட்சிப்படுத்தும் மற்றுமொரு சினிமா... அவ்வளவுதான்!