
வெள்ளித்திரை

சமீபத்தில் திரைக்கு வந்த ‘மருது’ திரைப்படத்தில் நடிகர் விஷாலின் அப்பத்தாவாக சிறப்பாக நடித்து பலரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறார், மலையாள நடிகை `கொளப்புள்ளி' லீலா. மல்லுவுட்டில் அவர் பிஸி. என்றாலும் நாம் பேட்டிக்குக் கேட்டதும், உடனடியாக நேரம் ஒதுக்கினார். மலையாளமும் தமிழும் கலந்த அந்தப் பேச்சு... தனி அழகு!
‘‘அஞ்சு வயசுலேயே மேடை நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். ஏழாம் வகுப்போட படிப்பை நிறுத்திட்டு, முழு நேரமா நடிக்க ஆரம்பிச்சு, நூற்றுக்கணக்கான நாடகங்கள்ல நடிச்சேன். ஒருமுறை என்னோட நாடகத்தைப் பார்த்த மலையாள இயக்குநர் கமல் சார், அவரோட ‘அயல் கதா எழுத்துக்கயனு’ படத்துல சான்ஸ் கொடுத்தார். அப்படியே துணை நடிகை, குணச்சித்திரம், காமெடி, வில்லி கேரக்டர்னு 350-க்கும் அதிகமான மலையாளப் படங்களில் நடிச்சேன். மம்முட்டி, மோகன்லால் எல்லாரோடயும் நடிச்சுட்டேன்.
கல்யாணத்துக்கு அப்புறம் நான் கொளப்புள்ளி என்ற ஊர்ல குடும்பத்தோடு செட்டில் ஆக, என்னோட பெயரும் ‘கொளப்புள்ளி’ லீலாவா மாறிடுச்சு. இந்த வருஷத்தோடு நான் நடிக்க ஆரம்பிச்சு 50 வருஷம் ஆகுது’’ என்று எளிமையாகப் பேசிய அந்த சீனியர், கோடம்பாக்க என்ட்ரி பற்றிப் பேசும்போது உற்சாகமாகிறார்.
‘‘நான் தமிழ்ல ‘கஸ்தூரிமான்’ உள்ளிட்ட சில படங்கள்ல சின்னச் சின்ன கேரக்டர்களில் நடிச்சிருக்கேன். டைரக்டர் முத்தையா சார், ‘கஸ்தூரிமான்’ படத்தைப் பார்த்திருக்கார். அதுல என்னோட நடிப்பு அவருக்கு ரொம்பவே பிடிச்சுப்போக, அவரோட ‘மருது’ படத்துல விஷாலின் அப்பத்தாவா என்னை நடிக்கவைக்க முடிவெடுத்திருக்கார். உடனடியா அவரோட அசிஸ்டன்ட் பாண்டி சார், ‘நீங்கதான் மருதுவோட அப்பத்தா, நாங்க முடிவு பண்ணிட்டோம்’னு எங்கிட்ட பேசினார். ‘அட, கதையைச் சொல்லுங்கப்பா’னு கேட்க... கதை, என் கேரக்டர் பத்தி எல்லாம் சொன்னார். எனக்குப் ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆனா, சென்னை தமிழ் கொஞ்சம் தெரியும், மதுரை தமிழ் எல்லாம் எனக்கு சுத்தமா தெரியாது என்பதால யோசிச்சேன். ‘அதெல்லாம் நீங்க செஞ்சிருவீங்க அப்பத்தா’னு ‘மருது’ டீம் எனக்கு நம்பிக்கை கொடுத்தாங்க’’ என்றவர், தன் நடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘படம் முழுக்கவே இருக்குற பவர்ஃபுல் கேரக்டர் எனக்கு என்பது சந்தோஷமா இருந்தது. ஆனா, முகபாவனையோட டயலாக் டெலிவரி செய்றது ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. ஆரம்பத்துல நிறைய டேக் வாங்கினேன். தமிழ் டயலாக் மறந்துபோய் நான் நிக்க, நடிகர் சூரி... என் டயலாக்கை மலையாளத்துல எழுதி அவரோட முகத்துல ஒட்டிவெச்சுக்கிறது, கையில எழுதிக் காட்டுறது, பின்னாடி நின்னு சிக்னல் கொடுக்கிறதுனு ரொம்ப அக்கறையா உதவி செய்வார். ஷூட்டிங்ல விஷால், சூரி ரெண்டு பேரும் என்னை ‘செல்லக்குட்டி’னு சொல்லி கிண்டல் பண்ணிட்டே இருப்பாங்க. மொத்த டீமும் எங்கிட்ட பொறுமையோட வேலைவாங்குவாங்க.
ஷூட்டிங் ஆரம்பிச்ச சில நாட்களிலேயே கேரக்டர்ல செட் ஆகி, டேக் வாங்குறதையும் குறைச்சுக்கிட்டேன். ‘எங்க தமிழ் சினிமாவுல ஆச்சி மனோரமாதான் இந்த மாதிரியான கேரக்டர்ல எல்லாம் அசால்டா நடிப்பாங்க. அவங்க ஆவி புகுந்த மாதிரி இருக்கு, இப்போ நீங்க நடிக்கிறதைப் பார்த்தா’னு சொல்லி முத்தையா சார் என்னைப் பாராட்டினப்போ, ரொம்பப் பெருமையா, சந்தோஷமா இருந்தது. ஆச்சி இடத்தை நிரப்ப நான் முயற்சி செய்வேன்’’ என்று பெரிய புன்னகை பூக்கும் லீலாவுக்கு, ஒரு வருத்தம் இருக்கிறது.
‘‘எனக்கு ஆச்சின்னா ரொம்பப் பிடிக்கும். ‘மருது’ படத்தில் கமிட் ஆனதுமே, ஷூட்டிங்குக்கு சென்னைக்குப் போகும்போது அவங்களைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்கணும்னு நினைச்சிருந்தேன். ஆனா, ஷூட்டிங் முழுக்க ராஜபாளையம், மதுரை வட்டாரத்துலயே நடந்ததால மனோரமாவைப் பார்க்க முடியல. ‘மருது’ ஷூட்டிங் ஆரம்பிச்ச கொஞ்ச நாள்ல, ஆச்சி இறந்துட்டாங்கனு செய்தி வர, கதறி அழுதுட்டேன். அந்தளவுக்கு ஆச்சி எனக்கு ஆதர்சம்’’ என்றவர்,

‘‘ ‘மருது’ படத்துல என் தலையில எண்ணெய் தேய்ச்சு ஊறவெச்சு, குளிர்ந்த தண்ணியில என்னை முக்கி எடுத்து, இளநீர் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவெச்சு, ஜன்னி வந்து நான் சாகும் அந்த கருணைக்கொலை காட்சிகளில் நடிக்கிறதுதான் எனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்தது. தலையில எண்ணெய் தேய்ச்சு வேகமா தட்டும் ஸீன்ல, பயங்கரமா வலிச்சது. அதோட தண்ணித் தொட்டியில கேமராவை வெச்சு, என் முகத்துல ரியாக்ஷன் சரியா வர்ற வரைக்கும் தண்ணிக்குள்ளேயே மூழ்கியிருக்கணும். ஒரு கட்டத்துல திணறி, ‘சார் டூப் யாரையாச்சும் வெச்சுக்கோங்க’னு முத்தையா சார்கிட்ட சொன்னேன். ‘உங்க கேரக்டருக்கான வெயிட்டுக்கு இதை நீங்களே செய்தாதான் நல்லாயிருக்கும். இப்போ என் மேல கோபப்பட்டாலும், படம் ரிலீஸானதுக்கு அப்புறம் உங்களுக்குக் கிடைக்கப்போற பாராட்டுகளில் நான் சொல்றது சரிதான்னு உங்களுக்குப் புரியும்’னு சொன்னார்.
உண்மைதான். படம் பார்த்த பலரும், ‘படம் முடிஞ்சு வெளிய வர்றப்போ அப்பத்தாதான் ஞாபகத்துல நிக்கிறாங்க’னு சொன்னதைக் கேட்டப்போ, ரொம்ப மகிழ்ச்சியா, நெகிழ்ச்சியா இருந்தது. ‘மருது’ படத்துக்குக் கிடைக்கிற பாராட்டுகள் எல்லாம், தேசிய விருது வாங்கின மாதிரி என்னை சந்தோஷப்பட வெச்சிருச்சு. தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆசையா இருக்கு!’’
- ‘செல்லக்குட்டி’ அப்பத்தாவுக்கு கருவிழிகள் உருள்கின்றன!
- கு.ஆனந்தராஜ்