
பிட்ஸ் பிரேக்

சர்வதேச பாடிபில்டிங் அமைப்பு முதன்முதலாக ஒரு இந்தியப் பெண்ணை `புரொஃபஷனல் அத்லெட்’ என்ற அடிப்படையில் அங்கீகரித்திருக் கிறது. இந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பவர் தீபிகா சௌத்ரி. அடிப்படையில் சயின்டிஸ்ட்டான தீபிகாவுக்கு உடற்பயிற்சிதான் தெய்வம்; ஜிம் தான் கோயில். `இந்தியப் பெண்கள், தண்ணீர்க் குடங்கள்் தூக்கிக்கொண்டும், சமைத்துக் கொண்டும்தான் இருப்பார்கள் என்றே இன்றும் வெளிநாடுகளில் நினைக்கிறார்கள். எனக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் இந்தியாவில் பாடிபில்டிங் பெண்களும் இருக்கிறார்கள் என உலகுக்குத் தெரியப்படுத்தும்’ எனச் சிலிர்க்கிறார் தீபிகா. உடலினை உறுதி செய்!
முதல் வகுப்பில் பயணிக்கும் வெளிநாட்டுப் பயணிகளைக் கவர் வதற்காக ஏர் இந்தியா விமானங்களில் பரிசுகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், என்ன பரிசு என்பதில் சர்ச்சை. மினி சைஸ் கண்ணாடித் தாமரைகள்தான் தருகிறார்கள். `பா.ஜ.க-வின் தேர்தல் சின்னத்தை எப்படிப் பரிசாகக் கொடுக்கலாம்?’ என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிக்க, `இந்தியாவின் தேசிய மலர் தாமரை. நம் நாட்டின் கலாசாரத்தை வெளிநாட்டினருக்குத் தெரிவிக்கவே நாங்கள் தாமரையைப் பரிசாகக் கொடுக்கிறோம்’ எனச் சமாளிக்கிறது ஏர்லைன்ஸ் நிர்வாகம். பூ வைக்கிறாங்கப்பா!



வாழ்க்கை முழுக்க சுற்றுலா போனால் எப்படி இருக்கும். அதைத்தான் குடும்பத்துக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறார் கேரட் கீ. தன் சொத்தை எல்லாம் விற்றதில் கிடைத்த மூன்று கோடி ரூபாய் பணத்துடன், `வாங்க ஆறு மாசம் ஜாலியாக ஊர் சுற்றலாம்’ என தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளோடு கிளம்பிவிட்டார் கேரட் கீ. ஆறு மாதங்கள் முடிந்த பின்னும் திரும்ப மனசே இல்லை. இன்னும் ஒரு வருடம் நீட்டித்துவிட்டார். `சொல்ல முடியாது பாஸ், வாழ்க்கை முழுக்கக்கூட இப்படியே சுற்றலாம்னு ஒரு ப்ளான் இருக்கு' என தன் வலைப்பக்கத்தில் எழுதுகிறார். https://www.instagram.com/thebucketlistfamily/ என்னும் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போடும் படங்களைப் பார்த்தால், அப்படியே கிளம்பிடலாமா எனத் தோன்றுகிறது. வர்றீங்களா!

கடுமையான மன உளைச்சலில் இருக்கிறார் மரியா ஷரபோவா. `மெலோடோனியம்' என்ற ஊக்கமருந்தைப் பயன்படுத்தினார் என இரண்டு ஆண்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள ஷரபோவா, அது ஊக்கமருந்து லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டது எனக்குத் தெரியாது எனக் கெஞ்சிப்பார்த்தும் கேட்பார் இல்லை. இந்த நிலையில் அவருக்கு ஸ்பான்சர் செய்து கொண்டிருந்த பல நிறுவனங்கள் தொடர்ந்து ஸ்பான்ஸர்ஷிப்பை விலக்க, `என் வாழ்க்கையில் இது மிகப்பெரிய சோதனை. இதில் இருந்து நான் மீள்வேனா என எனக்கே சந்தேகமாக இருக்கிறது’ என வேதனையில் தவிக்கிறார். எதுவும் கடந்து போகும்! மீண்டு வா ஷரபோவா

2016-ம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளின் வருமானம் எவ்வளவு தெரியுமா? 2,500 கோடி ரூபாய். இந்திய கிரிக்கெட் வாரியம் மட்டும் 250 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்திருக்கிறது. டெலிவிஷன் விளம்பரங்கள் மூலம் சோனி நிறுவனத்துக்கு 1,100 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இதேபோல் இந்த ஐ.பி.எல் தொடரில் விளையாடிய 8 அணிகளும் விளம்பரங்கள் மூலம் 230 கோடி ரூபாய் வரை சம்பாதித்துள்ளன. டிக்கெட் விற்பனை மூலம் மட்டும் 160 கோடி ரூபாய் வருமானம் பார்த்துள்ளார்கள்! கல்லா கட்டுது

மத்திய கல்வி அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கும், பீஹார் மாநில கல்வி அமைச்சர் அசோக் சௌத்ரிக்கும் இடையே நடந்த ட்விட்டர் சண்டைதான் கடந்த வார ஆன்லைன் வைரல். `டியர் ஸ்மிருதி இரானிஜி... புதிய கல்விக் கொள்கை எப்போது எங்களுக்குக் கிடைக்கும். உங்கள் கேலண்டரில் 2015-ம் ஆண்டு எப்போது நிறைவடையும்?’ என ஸ்மிருதியை டேக் செய்து கலாய்த்தார் அசோக். 2014-ம் ஆண்டு கல்வி அமைச்சர் ஆனவுடன் புதிய கல்விக் கொள்கை 2015-ம் ஆண்டு வெளியாகும் என தான் அறிவித்ததைக் கிண்டலடிக்கிறார் எனக் கடுப்பான ஸ்மிருதி, `டியர் என்று பெண்களை எப்போதில் இருந்து அழைக்க ஆரம்பித்தீர்கள்’ என பதில் போட, பீஹார் அமைச்சரோ, தொழில்முறை கடிதங்களில் டியர் என அழைப்பதுதான் வழக்கம். நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்கள் என திருப்பி பதில் அளித்தார். ` `வணக்கத்துக்குரிய' என அழைப்பதுதான் வழக்கம். கல்வி கொள்கை தொடர்பாக பீஹார் மாநில அரசின் கருத்து இன்னமும் கிடைக்கவில்லை. நீங்கள் மாநில அமைச்சர்கள் கூட்டத்தில் ஒரு முறையாவது பங்கேற்று ஆலோசனை சொன்னது உண்டா?’ எனக் கேட்க ட்விட்டரில் விடாது நடக்கிறது வார்த்தைப் போர்! சமாதானம்... சமாதானம்