
புதிய தொடர் - 2ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி, ஓவியம்: ஹாசிப்கான்

‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ எனும் கருத்தை ஆசான் திருவள்ளுவர் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார். `முன்னோர் எவ்வளவோ அறக் கருத்துகளை எழுதிச் சென்றிருக்கிறார்கள். அவை அனைத்திலும் முதன்மையானது ‘பல்லுயிர் ஓம்புதல்’. `ஓர் உயிரினத்தைப் பயன்படுத்திக்கொண்டே பாதுகாக்கவும் செய்வதுதான் ஓம்புதல்’ என இந்தச் சொல்லின் பொருளை எனக்கு முறையாக அறிமுகப்படுத்தியவர் தற்சார்பு வேளாண் வல்லுநர் பாமயன். மிக ஆழமான அர்த்தமுள்ள சொல்.
மரங்களை வெட்டிப் பயன்படுத்திக் கொண்டே, காடு வளர்க்க வேண்டும். கால்நடைகளை உணவுத் தேவைகளுக்கும் பிற தொழில்களுக்கும் பயன்படுத்திக்கொண்டே, அவற்றைப் பராமரித்துப் பெருக்க வேண்டும். இதுதான் ஓம்பும் வழிமுறை. `இருக்கும் வளங்களை சக மனிதருக்கும் பிற உயிரினங் களுக்கும் பகுத்துக்கொடுத்து வாழும் வழிமுறை தான், மற்ற அனைத்தைக் காட்டிலும் தலையானது’ என்ற நமது மரபுக் கொள்கை இந்தக் காலச் சிக்கல்களை ஒழிக்கும் வலிமையுடையது.
கூடியிருத்தல் என்பது உயிர்களின் அடிப்படை இயல்பு. உயர்ந்த வகை சத்துணவு கொடுத்து வழங்கப்படும் சரணாலயத்துப் புலியைவிட, இரை விலங்குகள் குறைவாக இருந்தாலும், காட்டுப் புலி வலுவாக வாழ்கிறது. வறுமையில் உழன்றாலும் உற்றார் உறவுகளோடு வாழும் மனிதர்கள், தனித்து வாழும் செல்வந்தர்களைக் காட்டிலும் நலமாக இருக்கிறார்கள். உணவும் உறைவிடமும் உயிர் நீடித்தலுக்கு அடிப்படைகள். சுற்றமும் சூழலும் வாழ்க்கையின் அடிப்படைகள். நீங்கள் வாழ்க்கையை வாழ வேண்டுமானால், சுற்றம் சூழலைப் போற்ற வேண்டும்.
கூடியிருக்கும்போது உயிர் இன்பம் அடைகிறது. உயிரின் ஒரே ஒரு குறிக்கோள் இன்பமாக இருப்பதுதான். பிறவி எடுப்பதே இன்பமாக இருக்கத்தானே! எல்லாக் கொள்கை களும் சமயங்களும் கண்டுபிடிப்புகளும் இன்பத்தை நோக்கிய பயணத்துக்கான வழித் துணைகள்தானே!
கடந்த நூற்றாண்டில் நமது சமூகத்தின்மீது திணிக்கப்பட்ட கருத்துகள் இதற்கு எதிரானவையாக இருந்தன. தனித்துச் செல்லுதல், தனித்து இயங்குதல் ஆகியவைதான் முன்னேற்றத்துக்குத் துணை செய்யும் குணங்கள் என்ற கருத்து பலவிதங்களில் பரப்பப்பட்டது. கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையின் மீது பெரும் கருத்துப் போர் தொடுக்கப் பட்டது. மூத்தோர் கருத்துகள் யாவும் ‘பழமைவாதம்’ எனும் முத்திரைக்குள் முடக்கப்பட்டன.
பெற்றோரும் பிள்ளைகளும் மட்டும் அல்ல, சகோதர உறவுகளும் மூத்தோரும் கூடிவாழ்ந்த குடும்பங்கள் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, நீக்கமற நிறைந்திருந்தன. கால்நடைகளுக்கும் பெயர்வைத்து உறவுகொண்டாடிய குடும்பங்கள் அப்போது எண்ணிக்கையில் மிகையாக இருந்தன. இந்தச் சமூக அமைப்பில் குழந்தை மற்றும் முதியோர் காப்பகங்கள், மருத்துவமனைகள், மனநல மையங்கள் குறைவாக இருந்தன. மிக முக்கியமாக, போதை அடிமைகளின் எண்ணிக்கை அப்போது குறைவு.
நமது கூட்டுக் குடும்பங்கள் சமூகத்தின் பொருளாதார உற்பத்திமையங்களாகவும் இருந்தன. ஒவ்வொரு குடும்பமும் ஏதோ ஒரு பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட்டது. வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, கைவினைத் தொழில்கள், நெசவு போன்ற தொழில்கள் யாவும் குடும்ப உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டன. இந்தக் குடும்பங்களில் வளர்ந்த பிள்ளைகள் இளம் பருவத்திலேயே தொழிற்கல்வியைக் கற்றுக் கொண்டனர். பொதுக் கல்விக்காக மட்டும், பள்ளி களுக்குச் சென்றனர்.
ஒருவரை ஒருவர் அரவணைக்கும் வாய்ப்பு அப்போது இருந்தது. நகரங்களின் உருவாக்கமும் நவீன தொழிற்பெருக்கமும் இந்தக் கூட்டு வாழ்க்கையைக் கேலிசெய்தன. `பொருளாதாரம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்’ என்ற மாயக் கருத்து கட்டமைக்கப்பட்டது.
பொருளாதாரத்துக்காக நகரங்களுக்குச் செல்லுதல் நாகரிகமாகச் சித்தரிக்கப்பட்டது. அறம் பிறழாத வாழ்க்கையை வாழ்வதுதான் நாகரிகம் எனப்படும். ஆனால், எல்லா அறங்களையும் சாய்த்துவிட்டு வளர்ந்த நவீனக் கட்டமைப்புக்கு `நாகரிகச் சமூகம்’ என்ற பெயர் சூட்டப்பட்டது.
தனித்துச் செல்லுதல் எனும் சிந்தனையைப் பொருளாதார ஆதாயம் நியாயப்படுத்தியது. தொடக்கத்தில் பெற்றோரைப் பிரிந்து பிள்ளைகள் சென்றனர். இப்போது கணவனும் மனைவியும் பிரிந்துகிடக்கின்றனர். இந்தப் பிரிவுகளும் அவை தரும் துயரங்களும் பொருளாதாரம் எனும் வரம் பெறுவதற்கான தவம்!
சேர்ந்து வாழும் மனிதர்கள் குறைந்துகொண்டே போகிறார்கள். ஒரே வீட்டில் இருந்தாலும் கணவன், மனைவி, பிள்ளைகள் ஆகிய மூன்று உறவு களுக்குமான இடைவெளி கூடிவிட்டது. விடிந்ததும் மூவரும் மூன்று திசைகளில் பயணிக்கின்றனர். இருட்டியதும் மூவரும் ஒரு வீட்டுக்குள் அடைகின்றனர். மூவருக்குமான இலக்குகள் வேறு, தடைகளும் வெற்றிகளும் வேறு. மூவருக்குமான உரையாடலில்கூட, தங்கள் இலக்குகளைப் பற்றிய சொற்களே நிரம்பியுள்ளன.
எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள். நவீனம் நடத்தும் பொருளாதாரப் பந்தயத்தில் ஓடுவதற்குச் சொந்த ஊர் சுமையாக இருந்தது... அதை உதறி வீசினார்கள். வேகம் மேலும் கூடியது. பந்தயம் மேலும் கடினமானபோது தாய்மொழி சுமையாக இருந்தது... அதையும் வீசினார்கள். வேகம் அதிகரித்தது. பின்னர், அறச் சிந்தனைகள் பெரும் சுமையாகின. அவை அனைத்தையும் உதறிவிட்டு ஓடினார்கள். இறுதியாக உறவுகள் யாவும் சுமையாகிப்போயின. அவற்றையும் கழற்றி வீசிவிட்டு பொருளாதாரப் பந்தயத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் நவீன மனிதர்கள். இப்போது, `பொருளாதாரம் மற்றும் வெற்றிகரமான வாழ்க்கை’ என்ற வெறி மட்டுமே விஞ்சியுள்ளது. இனி வீசி எறிய எதுவும் இல்லை.

குடும்பங்கள் யாவும் சிதறிக்கிடக்கின்றன. மடிக் கணினித் திரை வழியாக பேரப் பிள்ளைகளைக் கொஞ்சும் பெரியவர்கள் உருவாகிவிட்டார்கள். பிறந்த பிள்ளையின் பசிக்கு பால் ஊட்டவும், மலத்தைக் கழுவவும்கூட நேரம் இல்லாத இளம் அம்மாக்கள் உருவாகியுள்ளனர். மனைவி அடிவயிற்று வலியால் துடித்தாலும், அரவணைத்துத் தட்டிக்கொடுக்கும் பக்குவம் இல்லாத இளம் கணவர்கள் உருவாகியிருக்கிறார்கள். பல பெரியவர்களுக்குப் பிள்ளைகளைப் பார்க்காத ஏக்கத்திலேயே இதயம் வலிக்கிறது. பிள்ளைகளால் மருத்துவச் செலவுக்குப் பணம் அனுப்ப முடிகிறது; வந்து பார்க்க வழி இல்லை.
எல்லோருடைய நேரத்தையும் நிறுவனங்கள் விழுங்கிக்கொண்டுவிட்டன. நகரங்கள் விரிவடைந்துகொண்டே இருக்கின்றன. மனித மாண்பு வெகுவாகச் சுருங்கிவிட்டது. மூன்றே வயது நிரம்பிய பிள்ளைகள் மழலைக் காப்பகத்துக்கு அனுப்பப்படுகிறார்கள். இந்தக் காலக் கல்வி முறையில், பிள்ளைகள் முழுமையாக வீட்டில் இருப்பதே ஐந்து வயது வரைக்கும்தான். அதன் பின்னர் ஓடத் தொடங்கும் அவர்கள், வாழ்நாள் முழுவதும் நிற்பதற்கே வழி இல்லை. அந்த ஐந்து வயது வரைக்குமாவது பெற்றோருடனும் உறவினருடனும் வாழும் உரிமை குழந்தைகளுக்கு வழங்கப்படுவது இல்லை.
தொடக்கத்தில், கூட்டுக் குடும்பங்கள் தனிக் குடும்பங்களாகப் பிரிந்தன. இப்போது தனிக் குடும்பங்களின் உறுப்பினர்கள் தனித் தனியாகப் பிரிந்து இயங்குகிறார்கள்.
பெற்ற பிள்ளைகளை ஐந்தே ஐந்து ஆண்டுகள் கூட பார்த்துக்கொள்ள முடியாத சமூகத்துக்கு, மழையும் காற்றும் சீராக வழங்கப்படுமா என்ன?
சற்றே நிதானித்து, உங்கள் ஓட்டத்தைக் கொஞ்சம் இடைநிறுத்திவிட்டு உங்கள் குடும்பத் தினரின் நிலையைப் பாருங்கள். முதியோர், குழந்தைகள் ஆகிய இரு பிரிவினரும் நிம்மதியாக இருக்கிறார்களா எனக் கவனியுங்கள். இவர்களுக்காக பணம் செலவிடுவதைப் பற்றி பேசாதீர்கள். இந்த இரு பிரிவினர் இடையே அதிகரித்துள்ள மனநோய் மற்றும் உடல்நோய்களுக்கு உங்கள் அலட்சியமும் அறியாமையும் காரணம் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள்.
நீரிழிவு, முடக்குவாதம், இதயநோய், சிறுநீரக நோய்கள், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நலக் கேடுகள் யாவும் முதியோர் சமூகத்தைக் கொடூரமாகத் தாக்கிக்கொண்டுள்ளன என்பதை அறியாதிருக் கிறீர்களா? இந்த நோய்களுக்கும், மனநலப் பாதிப்பு களுக்கும் மிக நெருக்கமான உறவு உண்டு என்பதை எல்லா மருத்துவமுறைகளும் உரைக்கின்றனவே... அந்தச் சேதி உங்கள் செவிகளில் விழவே இல்லையா? மேற்கண்ட நோய்களை மருந்துகளால் தீர்க்க முடியாது, வாழ்க்கைமுறை மாற்றம்தான் ஒரே தீர்வு என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்.
சிறார் நீரிழிவு, சிறார் காமாலை ஆகியவை எல்லாம் இப்போது சரளமாகப் புழங்கும் சொற்களாகிவிட்டன என்பதை நீங்கள் அறியா திருக்கிறீர்களா? கண்ணாடி அணியும் பிள்ளைகள் பெருகிக்கொண்டே போகிறார்கள், உடல் பருத்த குழந்தைகள், அளவுக்கு அதிகமான சேட்டைகள் செய்யும் பிள்ளைகள், மூச்சிரைப்பால் அவதியுறும் குழந்தைகள் உங்களைச் சுற்றி அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். இவற்றுக்கு எல்லாம் காரணம் தேடாதிருக்கிறீர்களா... அல்லது காரணம் தெரிந்தும் ஒப்புக்கொள்ள மனம் இல்லா திருக்கிறீர்களா?
எவ்வளவு மனக் கசப்புகள் இருந்தாலும் அன்புக்கு உரியவர்கள் ஆரத் தழுவும்போது கிடைக்கும் இன்பத்தை ஒவ்வோர் உயிரும் விரும்புகிறது. இந்த நவீனம் உங்கள் அறிவுப் பசிக்கு இரை வழங்கலாம். உங்கள் உயிரின் வேட்கையை அதனால் ஒருபோதும் தணிக்க இயலாது. உங்கள் பெருமிதங்களுக்கு இந்த நவீனம் கோட்டை கட்டித் தரலாம். உங்கள் மனதின் சுகத்துக்கு அதனால் சிறு குடிலைக்கூட அமைக்க முடியாது. மனம் அமைதி அடைந்தால், உயிர் இன்பம் அடையும். உயிர் இன்பம் அடைந்தால், உடல் எப்போதும் உற்சாகத்துடன் இயங்கும்.
தனித்து இயங்கக் கிளம்பியவர்களால் நிறுவனங் களின் பொருளாதாரப் பெரும் பசி தணிந்துள்ளது. ஒரு கூட்டுக் குடும்பம் ஐந்தாகப் பிரிந்த பின்னர், ஐந்து வாகனங்கள் வாங்கப்படுகின்றன. ஐந்து குளிர்பதனப் பெட்டிகள், ஐந்து தொலைக்காட்சிப் பெட்டிகள் என எல்லா சாதனங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.
இவற்றுக்கு எல்லாம் மேலாக, கட்டுமானத் துறை பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கியது கூட்டுக் குடும்பங்களின் அழிவுக்குப் பின்னர்தான். ஒரு குடும்பத்தில் ஏழு பிள்ளைகள் என்றால், குறைந்தது ஏழு வீடுகள் கட்டப்படுகின்றன. நில வணிகம் அதிகரித்துள்ளது. வயல்வெளிகள் யாவும் வளைத்துப்போடப்படுகின்றன. கட்டப்படும் வீடுகளுக்கு ஆற்றையே சுரண்டி மணல் அள்ளப் படுகிறது. செங்கல் சூளைகளுக்காக பனைமரக் காடுகள் அழிக்கப்படுகின்றன. வீடுகளில் பதிக்கும் அழகுக் கற்களுக்காக பல மலைகள் வெட்டிக் கூறு போடப்படுகின்றன. இன்னும் இன்னும் பல வகைகளில் நவீனம் தனது `தொழிற்துறையை’ வளர்த்தெடுத்துள்ளது.

`பகுத்துண்டு வாழும்’ முறையை விட்டொழித்ததால், மனித உறவுகள் சிதைந்துபோயின. `பல்லுயிர் ஓம்பும்’ அறம் இல்லா தொழிந்ததால், இயற்கைக்கும் மனிதர்களுக்குமான இடைவெளி அதிகரித்தது. மனிதர்களும் இயற்கையின் அங்கங்கள். இயற்கையின் பிற உயிரினங்களைப்போல, நாமும் கூடிவாழ வேண்டும் என்ற சிந்தனையை இந்தக் காலத்தில் மீட்டெழுப்ப வேண்டும் என்பது என் விருப்பம்.
பல்லாயிரம் ஆண்டுகால ஆயுள்கொண்ட நமது மரபு வாழ்வியலை, நவீனச் சிந்தனை வெறும் 50 ஆண்டுகளில் வீசி எறிந்துள்ளது. கடந்த நூற்றாண்டில் பிறந்த நவீனம் எனும் அந்தச் சிறுபிள்ளையை ஏன் நம்மால் புறந்தள்ள முடியாது?!
- திரும்புவோம்