சினிமா
Published:Updated:

‘நாப்கின்’ கெட்டவார்த்தை இல்லை!

‘நாப்கின்’ கெட்டவார்த்தை இல்லை!
பிரீமியம் ஸ்டோரி
News
‘நாப்கின்’ கெட்டவார்த்தை இல்லை!

பா.விஜயலட்சுமி

‘நாப்கின்’ கெட்டவார்த்தை இல்லை!

கெட்டவார்த்தைகளை எழுதுவதும் பேசுவதும் இன்று சகஜமாகிவிட்டது. ஆனால் பீரியட்ஸ், நாப்கின், மாதவிடாய் பற்றி பேசுவதற்கும் எழுதுவதற்கும் இன்னமும் நம்மிடம் தயக்கம் இருக்கிறது. இன்றைக்கும் 50-ல் 30 பெண்களிடம் மாதவிடாய் குறித்த பயமும், ஆண்களிடம் சொல்லத்தவிக்கும் கூச்சமும் இருக்கத்தான் செய்கின்றன.

`இந்தியா வல்லரசு ஆகிறது’, `இந்தியா ஒளிர்கிறது’ எனச் சொல்லப்படும் இன்றைய ஹைடெக் காலத்திலும், சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் மாதவிலக்கின்போது விநோதமான முறைகள் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றன.

வட மாநிலங்களில், `அந்த’ நாட்களில் மாட்டுக்கொட்டகையில் தங்கவைக்கப்படுகின்றனர் பெண்கள். இன்னும் சில இடங்களில் மாதவிடாய் நேரத்தில் காட்டுப்பகுதிகளில் சென்று தங்கவேண்டும் என்ற மிகப் பழமையான பழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. தென்தமிழகத்தில் இன்றும் பெண்கள் `அந்த’ மூன்று நாட்களில் `முட்டு வீடு’ எனும் தனி வீட்டில் தங்கவைக்கப்படுகின்றனர்.

ஆண்கள்தான் இப்படி என்றால், மாதவிடாய் குறித்த தெளிவான கண்ணோட்டம் இருக்கவேண்டிய பெண்களிடம்கூட, இதன் மீதான பழங்கதைகளின் தாக்கம் மாறாமல் இருக்கிறது. இந்தியாவில் 88 சதவிகிதப் பெண்கள், நாப்கினின் பயன்பாட்டையே இன்னும் அறியாமல் உள்ளனர். 5-ல் ஒரு பெண், தன்னுடைய மாதவிடாய்க்காகப் பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொள்கிறார். மாதவிடாய் காலத்தில் சரியான சுகாதாரம் இல்லாமல் 70 சதவிகித கர்ப்பப்பை நோய்கள் ஏற்படுகின்றன. குறைந்தது 10 சதவிகிதம் பெண்கள் `மாதவிடாய்' என்பதை நோயாகக் கருதுகின்றனர். இந்த ஆய்வு முடிவுகளை ‘யூத் கி ஆவாஸ்’ எனும்  தன்னார்வ அமைப்பு சமீபத்தில் தெரிவித்துள்ளது.

`` `இது அசிங்கம், வெளியே சொல்லக்கூடாத ஒன்று' என, பெண்ணை மூளைச்சலவை செய்துவைத்திருக்கிறது இந்தச் சமுதாயம். மாதவிடாய் காலத்தில் அவள் குற்றவுணர்வாக உணர்கிறாள். அதை யாருக்கும் தெரியாமல் கடந்துபோக நினைக்கிறாள். அதனால்தான் மாதவிடாயின்போது தனக்கு ஏற்படும் சிரமங்களை, தேவைப்படும் வசதிகளைப் பற்றி குடும்பத்து ஆண்களிடம்கூட சொல்லத் தயங்குகிறாள். இன்னொன்று, மாதவிடாய் பற்றி ஆணுக்கு நாம் சொல்லித்தரவில்லை. சொன்னால் அதை அவன் புரிந்துகொள்வானா, தன்னைத் தப்பாக நினைப்பானோ என்ற குழப்பமும் பெண்ணுக்கு இருக்கிறது. அதனால்தான் அவர்கள் சொல்லத் தயங்குகிறார்கள்'' என்கிறார் ஆவணப்பட இயக்குநர் கீதா இளங்கோவன்.  இவர் ‘மாதவிடாய்’ என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்து, இது குறித்த விழிப்புஉணர்வை பலதரப்பட்ட மக்களிடமும் கொண்டுசேர்த்தவர்.

`` `மாதவிடாய்’ படத்துக்காக கல்லுப்பட்டி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் அரசுப் பள்ளிக்குப் போயிருந்தேன். எட்டாவது படிக்கும் அந்தக் கிராமத்து மாணவர்களிடம், மாதவிடாய் பற்றி அறிவியல்பூர்வமாக விளக்கிக் கொண்டிருந்தேன், ஒரு மாணவன் கேட்டான், `ஏங்க்கா, அப்ப வர்ற ரத்தம் புளூ கலர்லதான் இருக்குமாமே?' `இல்லையேப்பா, சிவப்பாத்தான் இருக்கும்’ `அப்புறம் ஏன் விளம்பரத்துல புளூ கலர்ல காமிக்கிறாங்க?' என்றான். இந்த லட்சணத்தில்தான் நாம் அவர்களுக்குப் புரியவைத்திருக்கிறோம். அப்புறம் ஆண்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?

கிராமத்தில் நடுத்தர வயது பெண்மணியிடம், `உங்க மகள் மாதவிடாய் நேரத்தில் என்ன பயன் படுத்துறாங்க?’ எனக் கேட்டேன். `தெரியலைம்மா. பஞ்சு வெச்சிக்குவாளா இருக்கும்’ என்றார். அதிர்ச்சியாகி `என்னங்க இதுகூடத் தெரியலைங்கிறீங்க’ என்றால், `இதைப் போய் எப்படிப் பேசுறது?’ என்றார்.

இந்த நிலையில்தான் பெரும்பாலான கிராமத்துப் பெண்கள் இருக்கிறார்கள். மாதவிடாய் பற்றி உரையாடக்கூட முடியாமல் மெளனம் சாதிக்கும் அறியாமை ஒரு புறம். பொருளாதார வசதி இன்னொரு புறம். 30 ரூபாய் கொடுத்து ஒரு நாப்கின் பாக்கெட் வாங்கமுடியாத வறுமையில்தான் பெரும்பாலான இந்தியப் பெண்கள் இருக்கிறார்கள். நாட்டின் மொத்தப் பெண்களில் 20 சதவிகிதத்தினர்தான் நாப்கின் பயன்படுத்துகிறார்கள். மாதவிடாய் காலத்தில் சுகாதார இன்மையால் கருப்பைவாய் புற்றுநோய் வந்து இறக்கும் பெண்களும் இந்தியாவில்தான் அதிகம்.

மாதவிடாய் என்பது அறிவியல்ரீதியான நிகழ்வு என்பதை பெண், ஆண் இருவருக்கும் புரியவைத்து, தயக்கம் இல்லாமல் இருபாலரையும் உரையாட வைக்கவேண்டும். இது பற்றிய மூடநம்பிக்கைகளை உடைத்து, நம் பெண்களுக்கு தன் உடலைப் பற்றிய புரிதலையும் நம்பிக்கையையும் அளிக்க வேண்டும். பெண் உடலில் நிகழும் விஷயங்களை ஆணுக்கு சரியாகப் புரியவைத்துவிட்டால், புதிர்த்தன்மை உடைபட்டு, சகமனுஷியாக அவளை மதிப்பான்'' என்கிறார் கீதா.

``கர்ப்பப்பையின் உட்பகுதியில் அமைந்துள்ள எண்டோமெட்ரியத்தில் கருவைப் பாதுகாக்கும் வகையில் அமைந்திருக்கும் ரத்தப்பைகளானது 22 முதல் 30 நாட்களுக்கு ஒரு முறை தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும். கர்ப்பைப்பையில் நிரம்பியிருக்கும் இந்த ரத்தம்தான், குழந்தை உருவாகும்போது அதைப் பாதுகாத்து, அந்தக் கருவுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் கவசமாகச் செயல்படும். ஒரு பெண் கருத்தரிக்காதபோது இந்த ரத்த நுண்ணிழைகள் தங்களைச் சக்திமிக்கதாகப் புதுப்பித்துக்கொள்ளும். அப்போது ஏற்கெனவே உருவாகியிருந்த ரத்த இழைகள் கழிவாக வெளித்தள்ளப்படும். இந்தச் சுழற்சிதான் மாதவிடாய். இது மாதத்தில் 4 முதல் 7 நாட்கள் வரை நடைபெறும்.

உடலின் ரத்தம் நிறைந்த இழைகள் வெளித்தள்ளப்படும் சூழ்நிலையில், பெண்களின் கர்ப்பப்பை மிகவும் பலவீனமாக இருக்கும். அந்த நேரத்தில் உடல் சார்ந்த சோர்வு, மனக்குழப்பம், கால்-கை வலி, வயிறு மற்றும் இடுப்பு வலி, சிந்தனை மாற்றங்கள் ஆகியவை பெண்களிடம் உண்டாகும். வயிற்றுப் பகுதியின் கீழ் பகுதியில் தசைப்பிடிப்பு, மார்பக வலி, மார்பக வீக்கம், தலைவலி, தோள்மூட்டு வலி, மனச்சோர்வு ஆகிய அறிகுறிகள் அதிகமாக இருக்கும்.

எரிச்சல், கோபம் போன்ற எண்ண மாற்றங்களும் அதிகமாக இருக்கும். இத்தகைய பிரச்னைகளுக்காகவே அந்த 4 முதல் 7 நாட்கள் பெண்களுக்கு ஓய்வு என்பது தேவைப்படுகிறது. எனினும் இன்றைய ஆண்களுக்கு இணையாக வேலைப்பளு அழுத்தும் சூழ்நிலையில் அந்த நாட்களில் ஓய்வு என்பது எட்டாத ஒன்றுதான். இந்த விஷயத்தைப் பற்றிய தயக்கத்தைக் களைந்து, ஆண்கள் நிச்சயமாக அவர்களின் உணர்வுகளை அந்த 4 நாட்களும் புரிந்துகொள்ளவேண்டியது அவசியம்'' என்கிறார் பெண்கள் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் மனுலட்சுமி.

‘நாப்கின்’ கெட்டவார்த்தை இல்லை!

`மாதவிடாயின்போது கருமுட்டையும் சேர்ந்து வெளியேறிவிடும் என்ற தவறான புரிதல் அனைவரிடமும் உள்ளது. ஆனால், கருமுட்டை ரத்தப்போக்குடன் வெளியேறுவது இல்லை' என்கின்றனர் மருத்துவர்கள். கரு உருவானால், அதைப் பாதுகாக்கும் பணியைச் செய்யும் கர்ப்பப்பையில் உள்ள ரத்தத்திசுக்கள் மட்டுமே கரு உருவாக்கம் நடைபெறாத மாதவிடாய் சமயத்தில் வெளி வருகிறது என்பதே சரியான விளக்கம்.

பெரும்பாலும் மிகக் குறைந்த அளவிலான பெண்களே இன்று நாப்கின்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அரசின் நாப்கின் வழங்கும் திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் சுகாதாரமான நாப்கின் தயாரிப்புகள் பரவலாகக் கிடைத்தாலும் பல அடிப்படை வசதிகள் கிடைக்காத கிராமப் பகுதிகளில் இன்றும் பழைய துணிகள், நியூஸ் பேப்பர் ஆகியவற்றை, நாப்கின்
களுக்கு பதிலாக உபயோகித்துவருகின்றனர்.

நாப்கின்கள்கூட அசெளகரியங்களை உண்டாக்கும். பெரும் அளவில் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்பதைக் கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்றுதான் ‘மென்சுரேஷனல் கப்’ எனப்படும் குமிழி போன்ற கப்கள். இது மேலைநாடுகளில் பயன்பாட்டுக்குப் பெரும் அளவில் வந்துவிட்டது. பிறப்பு உறுப்பினுள் பொருத்திக்கொள்ளும்படியான இந்த கப்கள், மறுசுழற்சி உபயோகத்துக்குச் சிறந்தவை. எனினும், இவற்றின் விலை 750 ரூபாயில் இருந்து ஆரம்பிப்பதும், அதிக அளவில் விற்பனையில் இல்லை என்பதாலும் இதன் பயன்பாடு குறித்து பெண்களிடம் அவ்வளவாகப் பரிட்சயம் இல்லை.

``மருத்துவரீதியாக மாதவிடாய்க்கு முன்பான உணவு முறை, பிறகான உணவுமுறை என்பது எல்லாம் கிடையாது. மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சில பெண்களுக்கு தலைவலி ஏற்படலாம். அதனால் டீ, காபி, காரம், புளிப்பு ஆகியவற்றை அந்த நாட்களில் தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் உணவைப் புறக்கணிக்கவே கூடாது. மாதவிடாய் நாட்களில் சிலருக்கு உடலில் நீர் தேங்கும். உப்பின் அளவு அதிகமாகும். அத்தகைய நேரங்களில் சோடியம் அதிகமாக உள்ள ஊறுகாய், மிளகாய்ப் பொடி, உப்புக்கடலை, அப்பளம், வத்தல், உப்பு பிஸ்கட், சால்ட் பிரெட் ஆகியவற்றைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. முக்கியமாக, எனர்ஜி பானங்கள், கூல்டிரிங்க்ஸ் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளக் கூடாது'' என்கிறார் டயட்டீஷியன் மீனாட்சி.

எந்த ரத்தம் தீட்டாகக் கருதப்படுகிறதோ அதே ரத்தத்தினுள்தான் ஒன்பது மாத காலம் ஒவ்வொரு குழந்தையும் நீச்சலிட்டுப் பிறக்கிறது என்பது அறிவியல் உண்மை. இதைப் புரிந்துகொள்ளும் மனநிலை, எல்லோரிடமும் வரவேண்டும்!

மைத்ரி ஸ்பீக்ஸ்

பெண்களுக்கான தன்னார்வ அமைப்பாகச் செயல்படும் மைத்ரி ஸ்பீக்ஸ், யூடியூபில் வளரிளம் பெண்களுக்கு மாதவிடாய் குறித்த விழிப்புஉணர்வை கார்ட்டூன்கள் மூலம் ஏற்படுத்திவருகிறது.
மைத்ரியின் யூடியூப் பக்கம்: youtube.com/user/Mythri00/videos

இந்தியாவிலேயே முதல்முறையாக ராஜஸ்தானின் அஜ்மீர் நகரில் பெண்களுக்கான நாப்கின்கள் எளிதாகக் கிடைக்கும் வகையில் ‘நாப்கின் வெண்டிங் மெஷின்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 10 ரூபாயை உள்ளிட்டு, மூன்று நாப்கின்களைப் பெற்றுக்கொள்ளலாம். இதை, மாநிலம் முழுக்க விரிவுப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது ராஜஸ்தான் சுகாதாரத் துறை!

‘மென்ஸ்ட்ரூபீடியா.காம்... குழந்தைகளுக்கும் எளிதில் புரியும்வகையில் மாதவிடாய் குறித்த தெளிவான விளக்கங்களைச் சொல்லிக்கொடுக்கும் வலைதளப் பக்கம். பூப்படைதல் முதல் நாப்கின் உபயோகம் வரையில் இதில் அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம்.

இதற்கான வலைதள முகவரி: www.menstrupedia.com/