சினிமா
Published:Updated:

சிலை மீட்பர்!

சிலை மீட்பர்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிலை மீட்பர்!

நா.சிபிச்சக்கரவர்த்தி

சிலை மீட்பர்!

`இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குக்  கடத்தப்பட்ட 200 சிலைகளை, மோடியிடம் வழங்கினார் ஒபாமா.'

`தமிழகக் கோயிலுக்குச் சொந்தமான நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகளை, மோடியிடம் கொடுத்தார் ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபாட்' - என்ற செய்திகளை, சமீபத்தில் கடந்து வந்திருப்போம்.

இவ்வளவு நாட்கள் இந்தச் சிலைகள் ஏன் அந்த நாடுகளில் இருந்தன, இப்போது எப்படி இந்தியப் பிரதமரிடம் திருப்பி ஒப்படைக்கப் படுகின்றன என்ற கேள்விகளுக்கான விடைதான் விஜய்குமார். சிலைகள் மீட்புக்கும், சிலைகள் தாயகம் திரும்புவதற்கும் பின்னால் இருக்கும் முக்கிய நபர்.

``எனக்கு சொந்த ஊர் சென்னை. ஆனால், கடந்த 10 வருடங்களாக சிங்கப்பூரில் கப்பல் நிறுவனத்தில் வேலைசெய்கிறேன். கல்லூரிக் காலங்களில் `பொன்னியின் செல்வன்' படித்துவிட்டு நம் வரலாற்று நாயகர்கள் மீது ஆசை வந்தது. அந்த மாபெரும் நாவலில் வந்த குறிப்புகளை எல்லாம் எடுத்து அந்த இடங்களையும் சிற்பங்களையும் தேடித் தேடிப் பார்ப்பதே என் பொழுதுபோக்கு. அப்போதுதான் நம் நாட்டில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் மீது என் கவனம் திரும்பியது. இந்தியா முழுவதும் உள்ள சிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான், கடந்த 20 வருடங்களாக என் பயணமும் தேடலும் கலைப்பொருட்கள் மீதே இருக்கின்றன'' என்கிறார் விஜய்குமார்.

``தொலைந்துபோன சிலைகளை, எப்படி தனி ஒரு நபரால் கண்டறிய முடியும்?''

``நான் முதலில் தனி ஆளாக இறங்கி, இப்போது மிகப் பெரிய குழுவுடன் இருக்கிறேன். இந்தக் குழு கிடைக்கக் காரணமே ஆன்லைன்தான். தொலைந்துபோன கலைப்பொருட்கள் பற்றி தொடர்ந்து படித்துத் தெரிந்துகொண்டு ஒரு ப்ளாக் எழுதிவந்தேன். இந்த நேரத்தில்தான் சோஷியல் மீடியா பெரிய வளர்ச்சி அடைந்தது. என்னைப் போலவே ஆர்வம்கொண்டவர்கள், பழைய கலைப்பொருட்கள் ஆராய்ச்சியாளர்கள் எனப் பலரும் ஒன்றுசேர்ந்தோம். நமது விலைமதிக்க முடியாத பழைமையான சிலைகளைத் தேடியபோது தான், அந்தக் கோயில்களில் இருக்கவேண்டிய சிலைகள் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. இதை எல்லாம் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் நம் நாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற முயற்சியில்தான் சில சிலைகளை மீட்டு வந்திருக்கிறோம். இதற்கு `India Pride Project’ எனப் பெயர் சூட்டியுள்ளோம்.''

சிலை மீட்பர்!

``நம் ஊர் சிலைகள் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் இருக்கின்றன என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?''

``விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மூலவர் சந்நிதிக்கு இடது புறத்தில் அர்த்தநாரீஸ்வரர் கற்சிலையை ஆஸ்திரேலியாவில் உள்ள ஓர் அருங்காட்சியகத்தில் பார்த்தோம். ஆனால், இங்கும் அர்த்தநாரீஸ்வரர் கற்சிலை இருந்தது. உடனே இன்டர்நெட்டில் ஒரு நண்பரைப் பிடித்துக் கோயிலுக்குப் போகச் சொல்லி அர்த்தநாரீஸ்வரர் சிலையை போட்டோ எடுத்து அனுப்பச் சொன்னேன். இந்த போட்டோவை சோதனை செய்தபிறகுதான் தமிழ்நாட்டில் இருப்பது டூப்ளிக்கேட் என்பது தெரிந்தது. உண்மையைப்போலவே வேறு ஒரு சிலையை செய்துவைத்துவிட்டு இந்தச் சிலையைக் கடத்தியிருக்கிறார்கள். `இந்தச் சிலை சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டது' என்ற ஆதாரத்தை ஆஸ்திரேலியா அரசாங்கத்துக்கு அனுப்பினோம்.

இதேபோலதான் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபுரந்தான் கோயிலில் இருந்த நடராஜர் சிலையும் திருடப்பட்டு ஆஸ்திரேலியாவில் இருந்தது. நாங்கள் ஆதாரங்களோடு அந்த நாட்டு அரசாங்கத்திடம் சொன்னதும், `உலகம் முழுக்க நிறைய நடராஜர் சிலைகள் இருக்கு. இது உங்களுடையது கிடையாது' எனப் பதில் சொன்னார்கள். நாங்கள் ஆதாரத்தை எல்லாம் எடுத்து யூடியூப் மூலமாக வெளியிட்டோம். அவர்களுக்கு அவமானமாகவே, முதலில் அருங்காட்சியகத்தில் இருந்து எடுத்தார்கள். அதன் பிறகுதான் ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபோட், இந்தியா வந்தபோது இந்த இரண்டு சிலைகளையும் மோடியிடம் திருப்பிக் கொடுத்தார். இதுக்குப் பிறகுதான் ஒரு தன்னார்வ அமைப்பால்கூட பெரிய விஷயத்தைச் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு வந்தது.''

சிலை மீட்பர்!

``நம் ஊர் சிலைகள் வெளிநாடுகளில் இப்போது இந்தெந்த இடங்களில் இருக்கின்றன என்ற தகவல்களை எப்படித் திரட்டுகிறீர்கள்?''

``உலகத்தில் எந்தெந்த அருங்காட்சியகத்தில் என்னென்ன இந்தியக் கலைப்பொருட்கள் இருக்கின்றன? அது எங்கு, எப்போது, யாரிடம் இருந்து வாங்கப்பட்டது என்ற பெரிய டேட்டாபேஸை மிகுந்த சிரமங்களுக்கு இடையே கடந்த எட்டு ஆண்டுகளாக உருவாக்கி இருக்கிறோம். இதன்படிதான் சிலைகள் மீட்பு வேலைகளைச் செய்துவருகிறோம்.''

``வெளிநாட்டில் உள்ள சிலைகள் நமக்குச் சொந்தம் என்றாலும், அவற்றை எப்படி உடனே நமக்குத் தர அவர்கள் முன்வருவார்கள்?''

``கடத்தப்பட்ட கலைப்பொருட்கள் சம்பந்தமாக, ஐ.நா அமைப்பு ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி 1970-ம் ஆண்டுக்குப் பிறகான கலைப்பொருட்கள் சட்டவிரோதமாக நம் நாட்டைவிட்டு வெளியே போய், அது நமக்குச் சொந்தமானது என ஆதாரத்துடன் நிரூபித்தால், அந்த நாடு நிச்சயமாகத் திருப்பிக் கொடுத்தாக வேண்டும். 1970-ம் ஆண்டுக்கு முன்னர் கடத்தப்பட்ட சிலைகளாக இருந்தால்தான் வழக்கு போடவேண்டிவரும். அதற்குப் பிறகு என்றால் வழக்கு போடத் தேவை இருக்காது.''

``சிலை கடத்தலைத் தடுப்பதில், இந்திய அரசாங்கம் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறது?''

``மற்ற நாடுகள் எல்லாம் இதற்காகவே ஸ்குவாடுகள் அமைத்து சிலை கடத்தலைத் தடுக்கிறார்கள். இந்தியாவில் அப்படி இல்லை. கம்போடியா, இத்தாலி போன்ற நாடுகளுக்குச் சொந்தமான சிலையை வேறு இடங்களில் பார்த்து தகவல் சொன்னால், இரண்டே மாதங்களில் அதை அவர்கள் நாட்டுக்குக் கொண்டுவந்து பெரிய விழாவே எடுக்கிறார்கள். ஆனால் இங்கே, நம் சிலை அந்த நாட்டில் இருக்கிறது என்ற ஆதாரத்துடன் தகவல் சொன்னால்கூட நடவடிக்கை எடுக்க நான்கு வருடங்கள் ஆகிறது. ஒரு லெட்டர் அனுப்பவே எட்டு மாதங்கள் ஆகிறது. அதுவே பெரிய போராட்டம்.

சிலை மீட்பர்!

ஒரு கடத்தல்காரனிடம் இரண்டு இத்தாலியன் சிலைகள், நான்கு இந்தியச் சிலைகள் இருந்தால்... முதலில் விற்பது நம் இந்தியச் சிலைகளைத்தான். காரணம், பெரிய ரிஸ்க் கிடையாது. யாரும் கேள்விகேட்க மாட்டார்கள் என்ற தைரியம்.''

``ஆனாலும் வாமன், சுபாஷ் கபூர், தீனதயாளன் போன்ற சிலை கடத்தல்காரர்களை இந்திய அரசாங்கம் கைது செய்திருக்கிறதே?''

``சிறை பிடித்து என்ன பயன்? வாமன் கியாவா கிட்டத்தட்ட 10,000 இந்தியச் சிலைகளைக் கடத்தி பகிரங்கமாக Sotheby's auction house-ல் ஏலம் விட்டவன். ஆனால், ஒரு சிலையைக்கூட இதுவரை நாம் இந்தியாவுக்குத் திருப்பிக் கொண்டுவரவில்லை. அப்போது வெளிநாட்டினர் இந்தியாவின் மீது படையெடுத்துவந்து சிலைகளையும் ஆபரணங்களையும் கொள்ளையடித்துக் கொண்டுபோனார்கள். இப்போது வெளிநாட்டில் இருந்து வந்து தங்கி கோயில் கோயிலாக ஏறி இறங்கி படம் எடுத்து `இந்த இந்தச் சிலைகள் வேணும்' எனக் கடத்தல்காரர்களிடம் டீல் பேசிக்கொண்டு கடத்துகிறார்கள். நாங்கள் எடுத்துவைத்திருக்கும் டேட்டாபடி, இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 10,000 சிலைகள் கடத்தப்பட்டுள்ளன. இதற்குப் பின்னால் உள்ள நெட்வொர்க் எப்படி இருக்கும் என யோசித்துப்பாருங்கள். இதில் நாங்கள் இப்போது 4,000 சிலைகளை ட்ராக் செய்து கொண்டிருக்கிறோம்.''

``தமிழ்நாட்டில் இருந்து இதுவரை எவ்வளவு சிலைகள் இதுவரை காணாமல்போய் இருக்கும்?''

``தமிழ்நாட்டில் சுமார் 15 சிலை கடத்தல் கும்பல்கள் இருக்கின்றன. தேர் மரச் சிற்பங்கள், பழைமையான ஓவியங்கள், கற்சிலைகள், உலோகச் சிலைகள் கடத்துவதே இவர்களது முக்கிய வேலை.

எங்கள் டேட்டாபடி 2000-ம் ஆண்டில் இருந்து 500 செப்பு திருமேனிச் சிலைகள், 3,000 கற்சிலைகள் கடத்தப்பட்டுள்ளன. ஆனால், காணாமல்போன ஐந்து சிலைகளுக்குக்கூட இங்கு எஃப்.ஐ.ஆர் போடவில்லை.

தமிழ்நாட்டில் சிலைகள் மட்டும் கடத்தப்படுவது இல்லை; பழைய ஓவியங்கள், பழுதான தேர்கள், பராமரிக்கப்படாத மண்டபங்களில் உள்ள தூண்கள் எனப் பழைமையான பொக்கிஷங்கள் அனைத்தையும் திட்டமிட்டுக் கடத்துகிறார்கள். இதற்கு இப்போது மார்க்கெட்டில் எக்கச்சக்க டிமாண்ட் இருக்கிறது. நமது சொத்துக்களை இன்னும்கூட நாம் பாதுகாக்காமல் போனால் எதிர்காலத்தில் இங்கு ஒன்றுமே இருக்காது.''

``சரி, நம் கலைப்பொருட்கள் கடத்தப்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?''

``முதலில் இங்கு உள்ள சிலைகளை எல்லாம் நல்ல தெளிவான புகைப்படங்கள் எடுத்து பத்திரப்படுத்த வேண்டும். ஒவ்வொரு சிலையையும் 3டி ஸ்கேன்செய்து சென்ட்ரல் ஆர்கைவ்போல ஒன்றை உருவாக்கிப் பத்திரப்படுத்த வேண்டும். அதன்பிறகு கோயிலுக்குப் பூட்டு போடவேண்டிய தேவையே இருக்காது. பல நாடுகளும் தங்களது கலைப்பொருட்களை போட்டோ எடுத்துவைத்து அந்தச் சிலையைப் பற்றி குறிப்பு எழுதித்தான் பாதுகாத்து வருகிறார்கள்.''

சிலை மீட்பர்!

``கடத்தல் கும்பலிடம் இருந்து கடுமையான அச்சுறுத்தல்களைச் சந்திக்கவேண்டியிருக்குமே?''

``அதை எல்லாம் பார்த்து பயந்தால் இந்த வேலையே செய்ய முடியாது. இங்கு இருந்து விலைமதிக்க முடியாத செல்வங்களைத் திருடிக்கொண்டுபோகிறார்கள். அனைத்தும் தெரிந்துகொண்டு அமைதியாகவே இருந்தால் அது நாட்டுக்குச் செய்யும் துரோகம். எங்களுக்கு இதில் பெரிய ரிஸ்க் இருப்பது தெரியும். `கடத்தப்பட்ட கடவுள், அவர் வீட்டுக்குத் திரும்பவும் வர, எங்களை ஒரு வாகனமாகப் பயன்படுத்துகிறார்' என நினைக்கிறோம். நல்லது செய்யும்போது கடவுள் ஏன் கைவிடப்போகிறார்?''

CAG 2013 ரிப்போர்ட்படி, இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து 2000-ம் ஆண்டு வரை கடத்தப்பட்ட சிலைகளில், வெறும் 18 சிலைகள் மட்டுமே இந்தியாவுக்குத் திரும்ப கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அதுவும் 2000-ம் ஆண்டு தொடங்கி 2011-ம் ஆண்டு வரை ஒரு சிலைகூட மீட்கவில்லை.