மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திரைத்தொண்டர் - 13

திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம்
பிரீமியம் ஸ்டோரி
News
திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம் ( திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம் )

பஞ்சு அருணாசலம்

திரைத்தொண்டர் - 13

நான் படங்களுக்கு எழுதியபோதும், பிறகு சொந்தமாகப் படங்கள் எடுக்க ஆரம்பித்தபோதும் கவிஞருடன்தான் இருந்தேன். என் படங்களுக்கு எழுதவேண்டியிருந்தால் கவிஞர் என்னைக் கூப்பிட மாட்டார். நேரம் கிடைக்கும்போது எல்லாம் அவரைப் பார்க்க ஓடிவிடுவேன். அப்படி ஒருமுறை அவரைப் பார்க்கப் போயிருந்தபோது, ‘அமுதம் பிக்சர்ஸ் வெங்கட்ராமன் இந்தப் படத்துக்குப் பணம் தரணும்... போய் வாங்கிட்டு வா’ என்றார். ஜெமினிகணேசன் நடித்த ‘புன்னகை’யில் தொடங்கி அமுதம் பிக்சர்ஸின் எல்லா படங்களுக்கும் கவிஞர்தான் பாடல்கள் எழுதுவார். அந்த நிறுவனம் தயாரித்து, பாலசந்தர் சார் இயக்கிய ‘மூன்று முடிச்சு’ படத்துக்கும் பாடல்கள் எழுதி முடித்திருந்தார் கவிஞர்.

திரைத்தொண்டர் - 13

அமுதம் பிக்சர்ஸுக்குப் போயிருந்தேன். ‘நானே அனுப்பணும்னு நினைச்சேன். யப்பா... கவிஞருக்கு செக்கைப் போடுப்பா’ - தன் அலுவலகத்தில் இருந்தவர்களிடம் சொன்ன வெங்கட்ராமன், என்னுடன் சினிமா பற்றி பேசிக்கொண்டிருந்தார். அப்போது ‘மூன்று முடிச்சு’ பட போட்டோ ஆல்பத்தை லேபில் இருந்து ஃப்ரெஷ்ஷாகக் கொண்டுவந்து கொடுத்துச் சென்றனர். அந்த ஆல்பத்தைப் புரட்டிக்கொண்டிருந்தேன்.

அதில் இருந்த கமலை எனக்குத் தெரியும். அவர் நான்கு வயதில் அறிமுகமான ‘களத்தூர் கண்ணம்மா’வைப் பார்த்த நாளில் இருந்தே நான் அவரின் ரசிகன். கமல் என்னைவிட பத்து வயதுக்கு மேல் இளையவர். பிறகு, கவிஞரின் உதவியாளராக கமலை பல இடங்களில் சந்தித்திருக்கிறேன். முதலில் எங்கு சந்தித்தேன் என்பது நினைவில் இல்லை. கமலைப் பார்க்கும்போது, ‘இந்தப் பையன் இவ்வளவு அழகா இருக்கானே, இப்படி நடிக்கிறானே...’ என நினைத்துக்கொள்வேன். நான் சினிமாவில் பெரிய ரைட்டர் ஆன பிறகுதான் இளையராஜாவை, ரஜினியைக் கண்டறிந்தேன். ஆனால் கமல்ஹாசனை நான் கண்டுபிடிக்கவில்லை. நான் சாதாரண ஆளாக இருக்கும்போதே அவர் பெரிய ஆளாகிவிட்டார்.

அந்த ஆல்பத்தில் இருந்த ஸ்ரீதேவியையும் எனக்குத் தெரியும். அவரை குழந்தை நட்சத்திரமாகக் கண்டறிந்ததே கவிஞர்தான். ஸ்ரீதேவியின் அப்பா, ஒரு காங்கிரஸ்காரர்; சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்குரைஞர். தன் மகள் ஸ்ரீதேவியின் பிறந்த நாளுக்கு ஆசீர்வாதம் வாங்க, காமராஜரைப் பார்க்க ஒருமுறை வந்திருந்தார். அப்போது  ஸ்ரீதேவிக்கு நாலரை, ஐந்து வயது இருக்கும். அந்தச் சமயத்தில் கவிஞரும் அங்கே இருந்தார். காமராஜரின் காலிலும் கவிஞரின் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டார் ஸ்ரீதேவி. ‘என்ன படிக்குது? நல்லா படிக்கவை. பொம்பளைப் புள்ளைங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு’ என காமராஜர் வாழ்த்தினார். ‘எங்கேம்மா படிக்கிற, என்ன படிக்கிற?’ என, கவிஞரும் அப்போது விசாரித்தார்.

பிறகு, ஒருமுறை தேவர் ஃபிலிம்ஸுக்கு கவிஞர் போயிருந்தபோது அவர் வீட்டு வராண்டாவில் கிட்டத்தட்ட 50 குழந்தைகள் வரிசையாக அமர்ந்திருந்தனர். ஏதோ பள்ளிக்குள் நுழைந்ததைப்போல் இருந்தது. கவிஞர், தேவரை `வாய்யா, போய்யா' என்றுதான் அழைப்பார். ‘யோவ் என்னய்யா, படம் எடுக்கிறதை விட்டுட்டு பள்ளிக்கூடம் நடத்தப்போறீயா...ஏகப்பட்ட பிள்ளைங்க வந்திருக்கு. இந்தக் காலத்துல பள்ளிக்கூடம் தான்யா நல்லது. தொந்தரவு இல்லாத வேலை. புண்ணியம் வேற. நிச்சயம் நஷ்டம் வராது’ என்றார்.

திரைத்தொண்டர் - 13

‘இல்ல கவிஞரே... ‘துணைவன்’ படம் எடுக்கிறேன்ல, அதுல பாலமுருகனா நடிக்க ஒரு புள்ளை வேணும். அதான் தேடுறேன். ஒரு குழந்தைகூட சரியா செட் ஆகமாட்டேங்குது. பார்க்க லட்சணமா கையெடுத்து கும்பிடுற மாதிரி தெய்வீகக் கலை உள்ள குழந்தை வேணும். ஆனா, ஒண்ணு கடோத்கஜன் மாதிரி இருக்கானுங்க, இல்லைன்னா ஓமப்பொடி மாதிரி இருக்கானுங்க. அருமையா பேசுற குழந்தைங்க பார்க்கிறதுக்கு லட்சணமா இல்லை. லட்சணமா இருக்கிற குழந்தைங்களுக்கு அழகா பேசத் தெரியலை. ச்சே...’ என அலுத்துக்கொண்டார்.

அப்போது கவிஞருக்கு ஒரு ஸ்பார்க். ‘டேய் பஞ்சு... அன்னைக்கு காமராஜர் வீட்ல அந்த வக்கீலோட புள்ளையைப் பார்த்தோம்ல. அழகா இருந்துச்சே’ என்றார்.

‘ஆமாண்ணே நல்லா இருந்துச்சுண்ணே’ என்றேன்.

‘யோவ்... என் ஃப்ரெண்ட் ஒரு காங்கிரஸ்காரர். அவரோட புள்ளை முருகன் வேஷத்துக்கு சரியா இருக்கும்யா. உன்னை வந்து பார்க்கச் சொல்றேன்’ என்றார்.

‘என்ன பேருய்யா?’ என்றார் தேவர்.

‘ஸ்ரீதேவி’ என்றதும், ‘யோவ் நான் சொல்றது முருகன் வேஷத்துக்குய்யா. நீ பொம்பளைப்புள்ளையைச் சொல்ற’ என்றார் தேவர்.

‘பாலமுருகனா நடிக்க பொம்பளைப்புள்ளையா இருந்தா என்ன, ஆம்பளைப்புள்ளையா இருந்தா என்னய்யா? ஏன்... அந்தக் காலத்துல பண்ணலையா? டெய்சி ராணி ‘யார் பையன்’ படத்துல குழந்தை நட்சத்திரமா பையன் கேரக்டர்ல நடிக்கலையா? அந்தப் படம் ஓகோனு ஓடலையா? பார்க்க லட்சணமா இருக்கணும். அவ்வளவுதானே, அந்தப் பொண்ணுக்கு பாலமுருகன் வேஷம் போட்டுப் பாரு’ என்றார். ஸ்ரீதேவி, முருகன் வேடத்துக்குச் சரியாகப் பொருந்துவார் என்பது கவிஞரின் எண்ணம்.

‘சரிய்யா... வரச்சொல்லு பார்ப்போம்’ - அரைமனதாகச் சொன்னார் தேவர்.

ஸ்ரீதேவியின் குடும்பம், அப்போது தேனாம்பேட்டையில், எல்டாம்ஸ் ரோடு பக்கத்தில் ஒரு சின்ன வீட்டில் குடியிருந்தது. அவர்களின் வீட்டு முகவரிகூட எங்களுக்குத் தெரியாது. கவிஞர் சொன்னதும் தேவரே ஆள் அனுப்ப, வீட்டைக் கண்டுபிடித்து ஸ்ரீதேவியை ஃபேமிலியுடன் அழைத்துவந்துவிட்டனர். ஸ்ரீதேவியைப் பார்த்ததும் ‘பாலமுருகன் வேஷத்துக்கு இந்தப் பொண்ணு சரியா இருக்கும்’ என தேவருக்கும் பிடித்துவிட்டது. இப்படித்தான் ‘துணைவன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஸ்ரீதேவி. கவிஞருக்கு நன்றி சொல்ல வரும்போதுதான் ஸ்ரீதேவியின் ஃபேமிலி எனக்கும் அறிமுகம். அதைத் தொடர்ந்து குழந்தைப் பருவ கேரக்டர்களில் நடித்தார் ஸ்ரீதேவி. அதன் பிறகு நானும் அவரை மறந்துபோனேன்.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு, ‘பாலசந்தர்  தன் ‘மூன்று முடிச்சு’ படத்தில் ஸ்ரீதேவி என்ற புதுமுகத்தை அறிமுகப்படுத்துகிறார்’ என்ற செய்தி வந்தது. அந்தப் படம் ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக். அப்போது  ஸ்ரீதேவியின் அம்மா, ‘பொண்ணை, பாலசந்தர் ஹீரோயினாக அறிமுகப்படுத்துகிறார்’ என்ற செய்தியைச் சொல்லி, நன்றி சொல்வதற்காக கவிஞரை மீண்டும் வந்து சந்தித்தார். ‘ரொம்ப சந்தோஷம்மா. கவலைப்படாதீங்க. பொண்ணு நல்லா வருவா’ என கவிஞர் வாழ்த்தி அனுப்பினார்.

அப்போது இந்தியில் தேவானந்த், ராஜ்கபூர், திலீப்குமார், பிரதீப்குமார்... என அழகான நடிகர்கள் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில், அவர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்ட தோற்றத்தில் வந்து இந்தி சினிமாவையே கலக்கிக்கொண்டிருந்த இரு முரட்டு இளைஞர்கள் சத்ருஹன் சின்ஹா, அமிதாப் பச்சன். கண்களில் ஆக்ரோஷமான சக்தியோடு அவர்களின் வித்தியாசமான நடிப்பு ரசிகர்களுக்குப் பிடித்துப்போய், இருவரும் பிரபலமாகிக் கொண்டிருந்த நேரம். அவர்களின் படங்களைப் பார்க்கும்போது, ‘தமிழிலும் இந்த மாதிரி ஓர் ஆள் வந்தா நல்லா இருக்குமே’ என நினைத்துக்கொள்வேன்.

அன்று நான் பார்த்த ‘மூன்று முடிச்சு’ ஸ்டில்ஸ்களில் கமல், ஸ்ரீதேவி தவிர மூன்றாவதாக இருந்த அந்தப் பையனைப் பார்த்ததும், ‘இவன் சத்ருஹன் சின்கா, அமிதாப் மாதிரி வித்தியாசமா இருக்கானே. கண்கள் பவர்ஃபுல்லா இருக்கு. இவனை நாம பயன்படுத்திக்கணும்’ என மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். ‘ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன் இஸ் தி பெஸ்ட் இம்ப்ரஷன் என்பார்களே, அப்படி பார்த்தவுடன் அவனிடம் ஏதோ பிடித்திருந்தது. ஆனால் ‘இவன் அமிதாப், சத்ருகன் மாதிரி வருவான்’ என, அப்போது நான் நினைக்கவில்லை. ஏதோ சம் அட்ராக்‌ஷன். ‘யாருண்ணே இந்தப் பையன்?’ என வெங்கட்ராமனிடம் கேட்டேன். ‘யப்பா... பாலசந்தர் அறிமுகப்படுத்தின பையன்பா. பேரு ரஜினி. ‘அபூர்வ ராகங்கள்’ நீ பார்க்கலையா?’ என்றார். உண்மையிலேயே அப்போது நான் ‘அபூர்வ ராகங்கள்’ பார்க்கவில்லை. பிறகு, ரஜினியை நான் மறந்துவிட்டேன்.

திரைத்தொண்டர் - 13

அப்போது ‘அன்னக்கிளி’ ஓகோவென ஓடிக்கொண்டிருந்த சமயம். அடுத்து இரண்டு படங்கள் எடுக்கத் திட்டமிட்டிருந்தேன். ஒன்று ‘கவிக்குயில்’, இன்னொன்று சுஜாதாவின் கதையை வாங்கி எடுக்கத் திட்டமிட்டிருந்த ‘காயத்ரி’. இவை இரண்டையும் தவிர எஸ்பி.முத்துராமனின் நண்பர் எம்.ஏ.மணி படம் தயாரிக்க ஒரு கதை தேடிக்கொண்டிருந்தார். அந்தப் படத்துக்கு நான் திரைக்கதை, வசனம் எழுதுவதாக இருந்தது. ‘கவிக்குயில்’ படத்துக்காக சிவகுமார் சாரை மட்டும் ஃபிக்ஸ் பண்ணிவிட்டு, மற்ற கேரக்டர்களுக்கான ஆட்களைத் தேடிக்கொண்டிருந்தேன்.

‘கவிக்குயில்’ படத்தில் இன்னொரு கேரக்டருக்கு ஜெய்கணேஷ், சிவச்சந்திரன்... எனப் பலரும் எனக்குள் வந்து போனார்கள். ‘சிவகுமார் சாரைவிட ஜெய்கணேஷுக்கு வயது குறைவாக இருந்தாலும், அவருக்கு அண்ணன் மாதிரி இருக்கார்’ எனத் தோன்றியது. அப்போதுதான் மின்னல் வெட்டியதுபோல் அன்று ‘மூன்று முடிச்சு’ போட்டோ பார்த்த ஞாபகம் மனதுக்குள் வந்துபோனது.
`கவிஞருடன் இருந்த அனுபவம், அந்தப் பயணம் கைகொடுக்கும்' என நான் அடிக்கடி சொல்வதற்கு இதுதான் காரணம். அவருடன் பல கம்பெனிகள், ஏகப்பட்ட ரிக்கார்ட்டிங் போகும்போது எத்தனையோ மனிதர்கள், எவ்வளவோ அனுபவங்கள். அவை தேவைப்படும் சமயத்தில் மிகச் சரியாக நம் முன் வந்துநிற்கும். அன்றும் அப்படித்தான் ரஜினி என் முன் வந்து நின்றார்.

அப்போது ரஜினி, ராயப்பேட்டையில் உள்ள தன் நண்பர் முரளி வீட்டில் தங்கியிருந்தார். ‘கவிக்குயில்’ படத்துக்கு இப்ப கால்ஷீட் தரமுடியுமானு கேட்டுட்டு வாங்க’ என என் தம்பிகள் லட்சுமணன், சுப்பு இருவரையும் அனுப்பினேன். தொடர்ந்து 20 நாட்கள் கால்ஷீட் கேட்டோம். கொடுத்துவிட்டார். பிறகுதான் ‘அபூர்வ ராகங்கள்’ பார்த்தேன். அதில் அவருக்கு சின்ன கேரக்டர். அதுவும் நடுத்தர வயது கேரக்டர். அதைவைத்து அவரின் நடிப்பை என்னால் கணிக்க முடியலை. ஒரு நம்பிக்கையில்தான் என் படத்துக்கு கமிட் பண்ணினேன். இவ்வளவுக்கும் அவரை நான் நேரில் சந்திக்கவே இல்லை.

`மூன்று முடிச்சு' ரிலீஸ் ஆனது. அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. ஆனால் ஃப்ளாப் கிடையாது. ஆவரேஜ். அப்போது ஒரு படம் சூப்பராக ஓடிவிட்டால், உடனே அதில் நடித்தவர்களுக்கு மார்க்கெட் வந்துவிடும். ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்துக்குப் பிறகு சுஜாதாவுக்கு வந்ததுபோல. ‘படத்துக்குப் பெரிய ஓப்பனிங் இல்லையே. நம் பொண்ணுக்கு ஃபியூச்சர் எப்படி இருக்குமோ?’ என்ற பயம் ஸ்ரீதேவியின் அம்மாவுக்கு. நான் அப்போது ‘அன்னக்கிளி’ படத்தைத் தொடர்ந்து அடுத்த படம் ஆரம்பிக்கப்போகிறேன் என்பதைத் தெரிந்துகொண்டு, ஸ்ரீதேவியின் அம்மா அப்போது என்னை வந்து சந்தித்தார். ‘இந்தப் படம் ஓகோனு ஓடியிருந்தா நிறையப் படங்கள் வந்திருக்கும். எம்.ஜி.ஆர்கூட `அடுத்தாப்ல எடுக்கிற படங்கள்ல வாய்ப்பு தர்றேன்'னு சொல்லியிருந்தார். ஆனால், அவர் அதுக்குள்ள கட்சி ஆரம்பிச்சுட்டார். நீங்க சந்தர்ப்பம் வந்தா சொல்லுங்க’ என்றார்.

‘நான் சொல்றேம்மா’ என்றேன்.

பிறகு நானும் ‘மூன்று முடிச்சு’ பார்த்தேன். படம் நன்றாக இருந்தது. நல்ல உயரம், அழகான கண்கள் என ஸ்ரீதேவி ஹீரோயினுக்கான லட்சணங்களோடு இருந்தார். ஆனால், அவரின் குரலில் மழலை மட்டும் மாறவில்லை. அது சிறுமியின் குரலாகவும் இல்லாமல் இளம்பெண்ணின் குரலாகவும் இல்லாமல் இடைப்பட்டதாக இருந்தது. சிலர் அப்போது அதை ஒரு குறையாகச் சொன்னார்கள். ‘அதுவே ஓர்அழகுதான். ஏன் சரோஜாதேவி கடைசிவரை அப்படிப் பேசித்தானே வெற்றிகரமான நடிகையா இருந்தாங்க’ என்றேன். அப்படித்தான் ‘கவிக்குயில்’ படத்தில் அந்த கேரக்டருக்கு ஸ்ரீதேவியை புக் பண்ணினேன்.  `மூன்று முடிச்சு’ படத்தில் ரஜினியும் நன்றாக நடித்திருந்தார்.

`நம் தேர்வு சரிதான்' என நினைத்துக்கொண்டேன்.

1976-ம் ஆண்டில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மூன்று மாதங்கள் ஷூட்டிங் எனத் திட்டமிட்டிருந்தோம். சிக்மகளூரில் படம் தொடங்கியது. அந்தச் சமயத்தில் அங்கு இருந்ததில் நல்ல ஹோட்டலில் ஆறேழு ரூம்களை புக் பண்ணினோம். அதில் சிவகுமார் சார், ஸ்ரீதேவி, டைரக்டர், கேமராமேன் உள்ளிட்ட முக்கியமான ஆட்களுக்கு அந்த ரூம்களைக் கொடுத்தோம். அந்த ஹோட்டல்களுக்கு எதிரேயே திருமண மண்டபம் மாதிரி பெரிய இடம் இருந்தது. துணை நடிகர்கள், தொழிலாளர்கள் தங்க அதையும் வாடகைக்குப் பிடித்திருந்தோம். ‘நான் அந்த மண்டபத்திலேயே தங்கிக்கிறேன்’ என ரஜினி சொல்லிவிட்டார்.

அப்போது எல்லாம், இருப்பதற்குத் தகுந்தாற்போல் அனைவரும் அட்ஜஸ்ட் செய்துகொள்வார்கள். ‘அன்னக்கிளி’ படத்தைவிட வசதி குறைவான இடங்களில் வேறு யாருமே படம் எடுக்க முடியாது. சிக்மகளூர் ஹோட்டல் அதைவிடக் கொஞ்சம் வசதியானது... அவ்வளவுதான்.

ஷூட்டிங் முதல் நாள். ‘ரஜினி, உங்களைப் பார்க்கணும்னு சொல்றார்’ எனச் சொன்னார்கள். ‘இதுக்கு எதுக்கு பெர்மிஷன். வரச்சொல்லுங்க’ என்றேன். வந்தார். அப்போதுதான் ரஜினியை முதல்முறையாக நேரில் சந்தித்தேன்.

‘வா... வா... ரஜினி. வா, உட்கார்’ என்றேன். டக்கென தரையில் உட்கார்ந்துவிட்டார். அதிர்ச்சியில், ‘எனக்கு இதெல்லாம் பிடிக்காது ரஜினி. மேலே உட்கார்’ என்றேன். பிறகு தயங்கியபடி மேலே உட்கார்ந்தார். பேசிக்கொண்டிருந்தோம்.

திரைத்தொண்டர் - 13

பிறகு, டிரிங்க்ஸ் சாப்பிட ஆரம்பித்தோம். அவர் மிகவும் கூச்சப்பட்டார். என்னுடன் சேர்ந்து டிரிங்க்ஸ் சாப்பிடக் கூச்சப்படுகிறாரா அல்லது பேசக் கூச்சப்படுகிறாரா எனப் புரியவில்லை. தர்மசங்கடத்தில் இருந்தார் என்பது மட்டும் புரிந்தது. கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தவர், ‘நான் ரூம்ல போய்ச் சாப்பிட்டுக்கிறேன் சார்’ எனக் கிளம்பினார். நான் அப்போது எடுத்துவைத்திருந்த ஒரு பாட்டிலை எடுத்துக் கொடுத்தேன். ‘இவ்வளவு வேண்டாம் சார்’ என்றார். ‘ரூம்ல வெச்சு சாப்பிடுங்க’ என்றேன். அதன் பிறகு அடிக்கடி சந்தித்து பேசிக்கொள்வோம். பிறகு, ஷூட்டிங் முடிந்து மெட்ராஸ் திரும்பத் தயார் ஆனோம். அப்போதே அடுத்து எழுதிக்கொண்டிருக்கும் இரண்டு படங்களில் ரஜினி நிச்சயம் இருக்கிறார் என, என் மனதுக்குள் ஃபிக்ஸ் பண்ணிக் கொண்டேன். பின்னாட்களில் அவருடன் கிட்டத்தட்ட முப்பது படங்களில் பணிபுரிவேன் என்றோ, அவர் `சூப்பர் ஸ்டார்’ ஆவார் என்றோ அப்போது எனக்குத் தெரியாது!

- தொண்டு தொடரும்...