மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 46

கலைடாஸ்கோப் - 46
பிரீமியம் ஸ்டோரி
News
கலைடாஸ்கோப் - 46

எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

கலைடாஸ்கோப் - 46

பாவன், கணினியை உற்றுப் பார்த்தான். `விதவிதமான முகபாவங்கள், டிஸ்கவுன்ட் விலையில் கிடைக்கும்' என்கிற ஆன்லைன் ஸ்டோர் கண்ணில் பட்டது.

`உனக்கு, நல்லா சிரிக்கிற மாதிரி ஒரு முகத்தை டவுண்லோடு பண்ணி மாட்டத் தெரியாதா?' எனக் கடந்த சந்திப்பில் கேட்டிருந்தாள் பாவனா.

அவள் முகத்தில், சிரிக்கும் சிலிக்கான் முகம் மாட்டப்பட்டிருந்தது.

இயந்திரங்களோடு இயந்திரங்களாகிப்போன இந்தக் காலத்தில், உணர்ச்சிகளை முகத்தில் காட்ட மனிதர்களால் முடியாமல்போய் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டதை நினைத்துக்கொண்டான். அந்த நினைப்புக்குக்கூட தன் முகத்தை எப்படி வைத்துக்கொள்வது எனத் தெரியாமல் குழம்பினான்.

ஆன்லைன் ஸ்டோரின் கேமராவில், தன் முகத்தின் பதிவை அப்லோடி விட்டு அரை நொடிக் காத்திருத்தலுக்குப் பிறகு, பல்வேறுவிதங்களில் சிரிக்கும் அவன் முகங்களை கணினி காட்டியது. அதில் நன்றாகச் சிரிக்கும்

ஒரு முகத்தைப் பார்த்து ஆர்டர் செய்தான். 3டி டிஜிட்டல் நுட்பம் சிரிக்கும் சிலிக்கன் முகத்தை, அவன் முகத்தில் பதித்தது.

கண்ணாடியைப் பார்த்தான். நன்றாகச் சிரிக்கும் முகம்.

“பாவனா, உன்னை இப்போதே பார்க்க வேண்டும்” - நுண்பேசியில் அழைத்தான்.

``நான் உன்னைப் பார்க்கத்தான் வந்துகொண்டிருக்கிறேன். உன் வாசல் வரை வந்துவிட்டேன். கதவைத் திற” என்றாள்.

நன்றாகச் சிரிக்கும் முகத்துடன் ஆவலுடன் கதவைத் திறந்தான்.

“என் நாய்க்குட்டி `பப்பி' செத்துப்போச்சு” என்றபடி, பாவனா உள்ளே வந்தாள்.

அழுகை முகத்தை ஒட்டியிருந்தாள்.

அபாவன் பாய்ந்து கணினியை மீண்டும் ஆன் பண்ணினான்!

கலைடாஸ்கோப் - 46

லவரக்காரர்கள், பழைய டயர்களைக் கொளுத்தி, தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதை செய்திகளில் பார்த்திருப்போம். ஆனால் யோங், பழைய டயர்களால் சிலைகளைச் செய்து தன் கலையை வெளிப்படுத்துகிறார். கொரியாவைச் சேர்ந்த யோங் ஹோ ஜி (yong ho ji) ஒரு சிற்பக் கலைஞர். சிறுவயதில் களிமண்ணால் சிற்பங்கள் செய்து போரடித்து, `அடுத்து என்ன?' என யோசித்தவர், `தேய்ந்துபோன தன் ஜீப் டயரைவைத்து ஏதாவது செய்தால் என்ன?' என யோசித்ததன் விளைவே இந்த டயர் சிற்பங்கள்.

`ஓவியங்களைவிட சிற்பங்கள் செய்வதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம்' என்பவர், அதற்கான காரணமாக சொன்னவற்றில் ஒன்று... சிற்பங்களின் வாசனை. பெட்ரோலை நுகர்வதில் சிலருக்கு ஒருவகையான கிக் இருக்கும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வகையில் டயர் வாசனை பிடிக்கும் என்பவர்கள், யோங்கின் ரசிகர்களாக இருக்க தகுதிபெறுகிறார்கள்.
`உருமாற்றம்' (mutant) என்ற பெயரில் அவர் செய்யும் இந்தச் சிற்பங்களுக்கு, டயர் ஒரு நல்ல மீடியம். டயரின் ஸ்ட்ரக்சர்கள், அதன் கடினமான தன்மை எல்லாம் யோங்கின் சிற்ப விலங்குகளுக்கு ஆக்ரோஷமான ஒரு தன்மையைக் கொடுக்கின்றன... குறிப்பாக, கறுப்பு வண்ணம்.

கலைடாஸ்கோப் - 46

சைக்கிள் டயருக்கு பஞ்சர் ஒட்டுவதற்கே அண்ணாச்சிகள் தேய்த்து, முறுக்கி, முக்கி, முனகுவதைப் பார்த்திருப்பீர்கள். யோங், கார்... லாரி போன்ற வாகனங்களின் கடினமான டயரையே தன் கற்பனைக்கு ஏற்ப வளைத்து, நெளித்து, கடைசியில் சிற்பமாக மாற்றுகிறார் என்பதை யோசிக்கும்போதே கைகள் வலிக்கின்றன. யோங்கின் கலையை `பஞ்சர் ஆகாத கலை' என்பேன்!

கலைடாஸ்கோப் - 46

லைப்பைப் பார்த்ததும் எனக்கே குழப்பமாகிவிட்டது. தமிழில் `மணி' என்பது, `ஒரு சொல்... பல பொருள்’ கொண்ட ஒரு வார்த்தை. நூலில் கோக்கும் மணி, நேரம், பெயர்... இப்படி. நான் சொல்ல வந்தது, பூஜைக்குப் பயன்படுத்தும் மணியைப் பற்றி. ஆங்கிலத்தில் `பெல்' எனச் சொல்வார்களே அந்த மணிதான்.

வீட்டின் பூஜை அறையில் சின்னதாகப் பயன்படுத்தும் மணி முதல், தேவாலயங்களில் பிரமாண்டமாகத் தொங்கிக்கொண்டிருக்கும் மணி வரை பல வடிவங்களில் பார்த்திருப்பீர்கள்; கேட்டிருப்பீர்கள். இந்த மணிகளின் சத்தம், வரலாற்றில் எப்படி எதிரொலிக்கிறது எனத் தேடினேன்.

சீனாவில்தான் மணிகள் பயன்படுத்த ஆரம்பித்ததற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. கி.மு 2,000 -ம் ஆண்டில் சீனாவில் உலோகத்தைக்கொண்டு மணிகளை உருவாக்கினர். `ஷாங் பேரரசு காலத்தில், வழிபாடுகளில் மணிகளைப் பயன்படுத்தியிருக்கலாம்' என்கிறார்கள். பிற்காலத்தில், அது மெள்ள உலகம் எங்கும் பரவியிருக்கலாம் என்பது யூகம். நமது ஊரில் காண்டாமணியில் இருந்து மேற்கு உலகின் சர்ச்சுகள் வரை மணியோசைகள் முழங்க ஆரம்பித்திருக்கின்றன. சங்க இலக்கிய நடுகல் வழிபாடு பற்றிய பாடல்களில், `மழவர் மணி கட்டிய கடிகை வேலை கையில் வைத்துக்கொண்டு ஆநிரைகளை மீட்கப்போவார்கள்' என இருக்கிறது. இந்த மணி வெறும் பாசிமணிபோல ஏதாவது வஸ்துவா அல்லது பெல்தானா எனத் தெரியவில்லை.

உலகிலேயே மிகப் பெரிய பெல், பர்மாவில் 16 -ம் நூற்றாண்டில் செய்யப்பட்டதாம். 300 டன் எடைகொண்ட அந்த பெல்லை, போர்த்துக்கீசியர்கள் படையெடுப்பின்போது ஆற்றில் தொலைத்துவிட்டார்களாம். அந்த பெல்லை உருக்கி, பீரங்கிகள் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். வரலாற்றில், குண்டுச் சத்தத்தைவிட மணியோசை நல்லது என இயற்கை நினைத்திருக்கும்போல.

கலைடாஸ்கோப் - 46

குழந்தைகள் ஓயாமல் அழுதால், பாட்டிகள் தங்கள் இடுப்பில் செருகியிருக்கும் சுருக்குப்பையை அவிழ்த்து `சிவ சிவா...' என்றபடி திருநீரை அள்ளிப் பூசுவதைப் பார்த்திருக்கிறேன். பத்மநாபசுவாமி கோயிலின் ரகசிய அறைபோல பாட்டிகளுக்குச் சுருக்குப்பை. அதில் சில்லறைக் காசுகள் மட்டும் அல்ல... அவசரத்துக்கு உதவும் சிறு மருந்துகள் முதல் தாத்தாக்களிடம் இருந்து ஒளித்துவைக்கும் மூக்குத்தி, தோடு போன்ற பொக்கிஷங்கள் வரை இருக்கும்.

பெற்றோருக்குத் தெரியாமல் பேரன்-பேத்திகள் மிட்டாய் வாங்க, பாட்டிகளின் சுருக்குப்பையை பேங்க்போல பயன்படுத்துவார்கள். பை சுருங்கி இருந்தாலும், பணம் தரும் பாட்டிகள் மனம் சுருங்குவதே இல்லை. தாத்தாக்களிடம் `ஆட்டையை'ப்போடுவது முதல் ஆட்டின் பால் விற்பது வரை சில்லறைப் புழக்கம் பாட்டிகளின் சுருக்குப்பையில் எப்போதுமே இருக்கும்.

இன்றைய ஃபேஷன் பெண்கள் விதவிதமான டிசைனர் கைப்பைகள் வைத்திருப்பதை மால்களில் (ஓரக்கண்ணால்)பார்த்திருப்பீர்கள். அதுபோலவே உள்ளூரில் விதவிதமான வண்ணங்களில் வேலைப்பாடுகள் செய்த சுருக்குப்பைகளை பாட்டிகள் வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவை எல்லாம் எங்கு இருந்து உற்பத்தியாகி பாட்டிகளின் இடுப்பு வரை வந்து தொற்றிக்கொண்டன என்பதை, தனியாக ஆராய்ந்து ஒரு நானோ ஹிஸ்டரியே எழுதலாம்போல!

கலைடாஸ்கோப் - 46

லகில் உள்ள நடன வகைகளை, ஓர் இல்லத்தரசியின் அன்றாட நிகழ்வுகளுடன் இணைத்து எழுதிப்பார்த்தேன். அது கீழே...

தேநீரில் சர்க்கரையைக் கலக்கும் கரண்டியின் `தில்லானா'வில் ஆரம்பிக்கிறது அவள் நடனம். தேங்காய் துருவும் அசைவுகளில் `பிரேக் டான்ஸ்' ஆடிக்கொண்டே மிக்ஸியை ஆன் செய்கிறாள். அதன் சத்தத்தில் அவள் உடல் `காப்பேஜ் பேட்ச்' ஆடுகிறது. மிளகாயைக் கிள்ளிப் போடும் லாகவத்தில் `பாலே' பெண்களைப்போல அவள் கைகள் காற்றில் அசைகின்றன. கறிவேப்பிலையை `மோகினி ஆட்ட'த்தின் பாவனையுடன் உதிர்க்கிறாள். உப்பு டப்பாவுடன் ஒரு சிட்டிகை `லிண்டி ஹாப்' ஆடியபடி, வாணலியில் சட்னியைத் தாளித்து, `ஜாஸ்' அசைவுகளுடன் இறக்கிவைக்கிறாள்.

ஆப்பிரிக்கன் `ஃபோக்' பாவனையுடன் பெரிய கரண்டியை தோசைமாவுப் பாத்திரத்தில் விட்டு, தாளமிட்டபடி ஒரு பிடி மாவை அள்ளுகிறாள்.

`பூகி வூகி'யின் சுழற்றல்போல மாவு, கல்லில் பரந்து விரிகிறது. `சல்சா'வில் ஜோடியை கைகளால் திருப்பும் பாவனையில் தோசையைத் திருப்புகிறாள். `கதகளி'யின் தாள அசைவுபோல தோசை மெள்ள தட்டுக்கு மாறுகிறது.

`ஹிப்ஹாப்'போல விரல்கள் அரிசியை அளைந்து தண்ணீருக்குள் கழுவுகின்றன. `ஆக்ரோ டான்ஸ'ரைப் போல விசிலைத் தலைகீழாகத் திருப்பி குக்கரில் மாட்டுகின்றன அவள் விரல்கள். வெண்டைக்காயால் `தாண்டியா' ஆடியபடி அரிவாள்மனையில் `மெட்டல் மோஷ்' ஆடும் கத்திரிக்காயை நறுக்குகிறாள். `ஒடிசி'யின் விரல் அசைவுபோல புளியைக் கரைத்து கிண்ணத்தில் நிரப்புகிறாள். ஜப்பானிய `பூயோ' நடன விசிறிபோல சாம்பார் தூள் பாக்கெட்டைக் கிழிக்கிறாள். க்யூபாவின் `மாம்போ' நடனத்தின் கூட்டாளியைப்போல ஒத்திசைவுடன் அனல் வீசுகிறது ஸ்டவ். `கவ்வாலி' நடனத்தின் சுழலும் ஆடைபோல கொதிக்கும் சாம்பாரின் அசைவுகளைப் பார்த்தபடி, ஒரு துளி நாவில் விட்டு `அரேபியன் டாப்கே' நடனத்தின் துள்ளல்போல நாவை அசைக்கிறாள்.

கலைடாஸ்கோப் - 46

`கரீபியன் போம்பா ஸ்கர்ட்'போல முட்டைக்கோஸின் லேயர்களை உதிர்க்கிறாள். உக்ரேனிய `கொசசோக்'கின் அசைவுகளுடன் நறுக்குகிறாள். அங்கோலா `கொசோம்பா’ போல பொரியலைச் சுழற்றலாகக் கிளறி இறக்குகிறாள்.

பார்வையாளர்கள் அற்ற வெளிறிய மதியத்தில் சமையலறையை ஒரு பித்தளைத் தட்டாகக் கற்பித்து, `குச்சிபுடி' ஆடிக்கொண்டிருக்கும் அவள், கையில் இருக்கும் தேக்கரண்டியின் குழியில் அவள் பிம்பத்தைப் பார்க்கிறாள். அந்தச் சிறிய பிம்பம் வளைந்து நெளிந்து அதில் இருந்து வெளியேறத் துடிப்பதை, பரதக் கலைஞனின் சாந்தமான கண்களால் ஒருகணம் கவனிக்கிறாள். ஆடி முடித்து, அரங்கைவிட்டு இறங்கும் தெருக்கூத்துக் கலைஞனின் தளர்வான நடையுடன் சமையலறையைவிட்டு அவள் வெளியேறுகிறாள்!