சினிமா
Published:Updated:

“நான் அஞ்சப்போவது இல்லை!”

“நான் அஞ்சப்போவது இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நான் அஞ்சப்போவது இல்லை!”

செ.சல்மான், படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

“நான் அஞ்சப்போவது இல்லை!”

ரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக செய்திகளில் அடிபடுகிறார் எழுத்தாளர் துரை.குணா. `ஊரார் வரைந்த ஓவியம்' என்ற இவரது  கதை நூலில், உள்ளூரின் ஆதிக்கச் சாதிக் கொடுமைகளை அம்பலப்படுத்தி எழுத, அதற்காக குணா மீது தாக்குதல்; ஊர் விலக்கம்... என, கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் சிக்கல்களைச் சந்தித்துவருகிறார். இந்த நிலையில்தான் திடீரென ஒரு வழக்கில் போலீஸ் இவரை கைதுசெய்து சிறையில் தள்ளி, மேலும் ஒரு பரபரப்புக்கு வித்திட்டிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி போலீஸார், துரை.குணா மீது கடந்த 9-ம் தேதி வழக்கு பதிவுசெய்தனர். சிவானந்தம் என்பவரை துரை.குணாவும், திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி கார்த்திகேயனும் சேர்ந்து தாக்கியதாகவும், சிவானந்தம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வழக்கு.
 
இதன் அடிப்படையில் ஆலங்குடி நீதிமன்றம், இவர்களை ரிமாண்டில் புதுக்கோட்டை கிளைச் சிறைக்கு அனுப்பியது. ஆனால், தாக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதாகச் சொல்லப்பட்ட சிவானந்தம், பத்திரிகையாளர்களைச் சந்தித்து, ``எனக்கு, துரை.குணா யார் என்றே தெரியாது. நான் யார் மீதும் புகார் கொடுக்கவில்லை. என்னிடம் கறம்பக்குடி போலீஸ் வெற்றுப் பேப்பரில் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியது மட்டும்தான் உண்மை'' எனச் சொல்ல, போலீஸின் மொத்தப் பொய்களும் அம்பலமாயின.

இதைத் தொடர்ந்து, மதுரையைச் சேர்ந்த `எவிடென்ஸ்' என்.ஜி.ஓ நிர்வாகி கதிர், மூத்த வழக்குரைஞர் ரத்தினம் மூலம் மதுரை உயர் நீதிமன்றக் கிளையை நாடினார். உடனே,
துரை.குணாவும் கார்த்திகேயனும் பிணையில் வர முடியாத வகையில் இன்னொரு வழக்கில் (2015-ல் இவர்களுக்கே தெரியாமல் போட்டு வைத்திருந்த ஒரு வழக்கு) இவர்களைக் கைது செய்திருப்பதாக கறம்பக்குடி போலீஸ், நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதைக் கேட்டு கோபமான உயர் நீதிமன்ற நீதிபதிகள் சசிதரனும் கோகுல்தாஸும், காவல் துறையைக் கடுமையாக எச்சரித்தனர். `உள்நோக்கத்துடன் இவர்களைக் கைதுசெய்தது மட்டும் அல்லாமல், அவர்கள் ஜாமீனில் வெளிவருவதைத் தடுக்கும் வகையில் 2015-ம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட பழைய வழக்கைக் காட்டியுள்ளீர்கள். இந்தப் பழைய வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள மற்றவர்கள் யாரையும் இதுவரை கைதுசெய்யவில்லை. இது உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை. அதனால், இருவரையும் சொந்த ஜாமீனில் விடுவிக்கிறோம்' என உத்தரவிட்டார்கள்.

“நான் அஞ்சப்போவது இல்லை!”

ஏன் துரை.குணா மீது காவல் துறை இவ்வளவு  வன்மத்துடன் நடந்துகொள்ளவேண்டும்? பிணையில் வந்த துரை.குணாவைச் சந்திக்க, அவர் வசிக்கும் கறம்பக்குடி அருகில் இருக்கும் குளந்திரான்பட்டு கிராமத்துக்குச் சென்றோம். தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் ஒரு சிறிய வீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார் துரை.குணா. 

``என் தந்தை துரைசாமிக்கு சொந்த ஊர் காடுவெட்டி விடுதி. என் அம்மா ஊர்தான் இது. இங்கு 130-க்கும் மேல் தலித் குடும்பங்கள் இருந்தாலும், இவர்கள் அனைவரும் இங்கு இருக்கும் 50 கள்ளர் மற்றும் வெள்ளாளர் குடும்பங்களுக்கு அடங்கியே இருக்க வேண்டும். சாதிக் கொடுமைகளுக்குப் பஞ்சம் இல்லாத கிராமம். கறம்பக்குடி வட்டாரம் முழுவதும் இதே நிலைமைதான்.

இந்தப் பகுதியில் ஐந்து ஆதிக்கச் சாதியினரின் வீட்டுக்கு ஒரு தலித் குடும்பம் என்ற கணக்கில், சாகும் வரை அடிமை வேலை செய்யவேண்டும். அவர்களின் தோட்டம், வயல்களில்தான் வேலை செய்யவேண்டும். வேறு எங்கும் செல்லக் கூடாது. தலித் மக்களுக்குள் சண்டை சச்சரவு வந்தால், அதை அவர்களே தீர்த்துக்கொள்ளக் கூடாது. ஆதிக்கச் சாதியினர்தான் அதற்கு முடிவு சொல்ல ேண்டும்.

தலித்கள் திருமணம் முடித்துவிட்டு வந்தால், ஆதிக்கச் சாதியினரின் காலில் விழுந்து மரியாதை செய்ய வேண்டும். இதை எதிர்த்து 1977-ம் ஆண்டில் குரல்கொடுத்தவர் என் தந்தை. அவர் காலில் விழ முடியாது என மறுத்துவிட்டார். அது மட்டும் அல்லாமல், இங்கு உள்ளவர்களுக்கு அடிமை வேலை செய்யாமல் வேறு தொழிலுக்குச் சென்றார். அதற்குக் காரணம் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். இப்போதும் அவர் கம்யூனிஸ்ட்டாகத்தான் இருக்கிறார். அவர் வழியிலேயே நானும் சி.பி.எம்-மில் இருந்து வருகிறேன்.''

“நான் அஞ்சப்போவது இல்லை!”

``நீங்கள் எழுதிய `ஊரார் வரைந்த ஓவியம்' புத்தகத்தை ஊர்க்காரர்கள் ஏன் எதிர்த்தார்கள். உங்களை ஏன் தாக்கினார்கள்?''

``சாதிக் கொடுமையினால் ஒரு தலித் குடும்பம் அனுபவிக்கும் கொடுமைகள், ஆதிக்கச் சாதியினரின் பஞ்சாயத்து, அவர்களின் பாலியல் கொடுமைகள், கம்யூனிஸ்ட்டாகவும் சாதிக்காரனாகவும் சிலர் நடந்துகொள்வது போன்ற விஷயங்களை அதில் எழுதியிருந்தேன்.  கதை உயிரோட்டமாக இருப்பதையும், அதில் வரும் சம்பவங்களையும் பார்த்து ஆதிக்கச் சாதியினர் கோபம் அடைந்தார்கள்.

`காட்டுவிடுதியான் மகன் குணா புத்தகம் எழுதி, நம்மளை அவமானப்படுத்திட்டான். அவனைக் காலிபண்ணணும்' எனப் பேச ஆரம்பித்தார்கள். அதற்குப் பிறகு ஊரைவிட்டு வெளியேற்றினார்கள். மனைவி, பிள்ளைகளை விட்டுவிட்டு மூன்று மாதம் தலைமறைவாக இருந்தேன். என்னை ஊரைவிட்டு ஒதுக்கிய குழுவில் சி.பி.ஐ (வலது கம்யூனிஸ்ட்) கட்சியைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள் என்பதுதான் கொடுமை. உயர் நீதிமன்ற உத்தரவு பெற்றுத்தான் மீண்டும் ஊருக்குள் வர முடிந்தது.''

``அதற்குப் பிறகு பிரச்னை ஒன்றும் இல்லையே?''

``ஊருக்குள் வந்த எங்கள் மீது, ஆதிக்கச் சாதியினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்கள். என் தந்தை கடுமையாகப் பாதிக்கப் பட்டார். மீண்டும் ஊரைவிட்டுப் போகும் சூழல் ஏற்பட்டது. எழுத்தாளர் பெருமாள்முருகன் தாக்கப்பட்ட போது அவருக்காக அனைத்து எழுத்தாளர்களும் த.மு.எ.க.ச-வும் களம் இறங்கிப் போராடினார்கள். ஆனால், நான் பாதிக்கப்பட்டபோது யாரும் வரவில்லை.''

“நான் அஞ்சப்போவது இல்லை!”

``சரி... தற்போது போலீஸ் உங்கள் மீது பொய்வழக்கு போடக் காரணம் என்ன?''

``இரண்டு வருடங்களுக்கு முன்னர், சகாய அன்பரசு என்பவர் கறம்பக்குடி இன்ஸ்பெக்டராக வந்தார்.  தலித்கள் என்றால், அவருக்கு அவ்வளவு வெறுப்பு. அதுமட்டும் அல்லாமல், தங்கு தடை இல்லாமல் திருட்டு மணல் அள்ளுவது, அதற்கு இன்ஸ்பெக்டரே பாதுகாப்புக்குச் செல்வது, லாட்டரி வியாபாரம், கந்துவட்டிக்காரர்களுக்குப் பாதுகாப்பு எனச் செயல்பட்டார். இவர் செய்த அட்டூழியங்களை நோட்டீஸ் அடித்து விநியோகம் செய்தோம். அந்த ஆத்திரத்தில்தான் என் மீது பொய்வழக்கு பதிவுசெய்தார். அதைத்தான் இப்போது ஒரு காரணமாகக் காட்டி, அதிகாலையில் வீட்டுக்கு வந்து, சட்டையைக்கூட மாற்ற அனுமதிக்காமல் கட்டிய  கைலியோடு தரதரவென ஜீப்பில் இழுத்துச் சென்றார்கள். ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு கடுமையாகத் தாக்கினார்; இழிவாகப் பேசினார். என்ன வழக்கு என்றே தெரியாமல், போலீஸின் அத்துமீறலை ஊருக்குச் சொன்னதால், செய்யாத குற்றத்துக்காக சிறை சென்று வந்திருக்கிறேன்.''

``பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதாக உணர்கிறீர்களா?''

``ஆம். இருந்தாலும் இதற்கு நான் அஞ்சப்போவது இல்லை. சமூக விரோத, மக்கள் விரோத, தலித் விரோத விஷயங்களை அம்பலப்படுத்திக்கொண்டே இருப்பேன். நம் எழுத்து பல பேரால் கொண்டாடப்படுவதைவிட, உயர்ந்த விருதுகளைப் பெறுவதைவிட, சமூகத்தில் நமக்கு அருகில் நடக்கும் ஒரு கொடுமையைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதே என் விருப்பம்!'' 

துரை.குணா, கார்த்திகேயன் இருவரையும் பிணையில் வெளியில் கொண்டுவர பெரும் முயற்சி எடுத்தவர் எவிடென்ஸ் கதிர். அவரிடம் பேசியபோது...

``எனக்கு துரை.குணா கைது செய்யப்பட்டிருக்கும் தகவல் கிடைத்தவுடன், புதுக்கோட்டை விரைந்து சென்று கள ஆய்வு செய்தோம்; கறம்பக்குடியில் பலரிடமும் விசாரித்தோம். பிறகு சிவானந்தத்திடம் பேசியபோதுதான் இதில் போலீஸ் போட்ட நாடகம் தெரிந்தது. சிவானந்தம் கையில் எந்தக் கீறலும் இல்லை. ஆனால், எஃப்.ஐ.ஆரில் `கத்தியால் குத்தியதால் கையில் காயம்’ எனக் குறிப்பிட்டிருந்தார்கள். அப்போதே அதை புதுக்கோட்டை எஸ்.பி-யிடம் தெரிவித்தபோது, அவரும் `கத்தியால் குத்தியது உண்மை’ என இன்ஸ்பெக்டருக்கு ஆதரவாகப் பேசினார். இவை எல்லாம் பொய் என நிரூபிக்க சிவானந்தத்தை எங்கள் பாதுகாப்பில் அழைத்துவந்து, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஆஜர்படுத்தினோம். ஒவ்வொரு முறையும் குணா - கார்த்திகேயன் குடும்பத்தினர் போனில் தகவல் கேட்பார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறிக்கொண்டே, இன்னொரு புறம் மூத்த வழக்குரைஞர் ரத்தினம் துணையுடன் சட்டப் போராட்டம் நடத்தி பிணை வாங்கினோம். பழைய பொய் வழக்கு ஒன்றைக்காட்டி இதற்கும் முட்டுக்கட்டை போட போலீஸ் முயற்சித்தது. அதை எல்லாம் மீறி ஜாமீன் ஆர்டரை கையில் பெற்றோம். ஏகப்பட்ட மனித உரிமை மீறல்களைச் செய்து, சட்டத்தை ஏமாற்றி, பொய் வழக்கு போட்ட இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசைப் பணியில் இருந்து விலக்க வேண்டும் என மீண்டும் வழக்கு போட இருக்கிறோம்’’ என்கிறார் கதிர்.