
பஞ்சு அருணாசலம், படங்கள் உதவி: ஞானம்

சிக்மகளூரில் ‘கவிக்குயில்’ ஷூட்டிங் முடித்துவிட்டு, சென்னை திரும்பினோம். சென்னையில் நான்கைந்து நாட்கள் பேட்ச் வொர்க் மீதி இருந்தது. அதை முடித்துவிட்டால் போஸ்ட் புரொடக்ஷன் முடித்து, படத்தை ரிலீஸ் செய்துவிடலாம். ஆனால், ஏன் எனத் தெரியவில்லை, அந்த பேட்ச் வொர்க் வேலைகள் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தன. விசாரித்தால், ‘தேவராஜுக்கும் உங்கள் தம்பி சுப்புவுக்கும் ஏதோ மனவருத்தம். அதனால் தேவராஜ் சொந்தப் படம் எடுப்பதற்காகப் போய்விட்டார்’ என்றார்கள். எனக்கு அதிர்ச்சி. அதை இருவருமே என்னிடம் சொல்லவில்லை.
பிறகு, தேவராஜை அழைத்து, ‘நீங்க என் ஃப்ரெண்ட். பிரச்னைன்னா என்கிட்ட சொல்லவேண்டியதுதானே’ என்றேன். ‘அதெல்லாம் ஒண்ணும் பிரச்னை இல்லண்ணே, முடிச்சிடுறேன்’ என்றவர் அதேபோல முடித்தும் கொடுத்தார். அவர் மாதவனின் உதவி இயக்குநராக இருக்கும்போதே எனக்கு அறிமுகம். நானும் `ஃபிலிமாலயா' ராமச்சந்திரனும் இணைந்து தயாரித்த ‘உறவு சொல்ல ஒருவன்’ படத்தை இயக்கினார். அதுதான் நான் தயாரித்த முதல் படம். தொடர்ந்து ‘அன்னக்கிளி’, ‘கவிக்குயில்’ படங்களை இயக்கினார். பிறகு, சொந்தப் படம் எடுக்கலாம் என முடிவெடுத்து ‘பூந்தளிர்’, ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ உள்பட சில படங்களைத் தயாரித்து இயக்கினார். அதில் `ரோசாப்பூ ரவிக்கைக்காரி' பெரிய வெற்றியடைந்தது. (இவர் 15 படங்கள் இயக்கியிருப்பார் என்றால், அதில் 10-க்கும் அதிகமான படங்களில் சிவகுமார் சார்தான் ஹீரோ.)
‘கவிக்குயில்’ பட வேலைகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில், என் தம்பிகளின் மீது வருத்தத்தில் இருந்தேன். அவர்களைத் தயாரிப்பாளர்களாக்கி, நடிகர்கள், டெக்னீஷியன்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு புராடக்ட்டை உருவாக்கிய எனக்கு ‘அண்ணன்’ என்பதைத் தாண்டி பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை. இனி சொந்தமாக நம் பெயரிலேயே படங்கள் பண்ணுவோம் என முடிவுசெய்திருந்தேன். அப்போது தயாரிப்பாளர் பாஸ்கர், `நீங்க ஏன் தனியா கஷ்டப்படணும். நானும் சேர்ந்துக்கிறேன். ரெண்டு பேரும் சேர்ந்து தயாரிப்போம்' என்றார். ‘விஜய மீனா ஃபிலிம்ஸ்’ என்ற கம்பெனியைத் தொடங்கினோம். (அவரின் மனைவி பெயர் விஜயா, என் மனைவி பெயர் மீனா) அதில்தான் ‘காயத்ரி’ படத்தைத் தயாரித்தோம்.
‘காயத்ரி’, எழுத்தாளர் சுஜாதா சாரின் கதை. அந்தக் கதை அப்போது தினமணி கதிரில் வந்திருந்தது. குறுநாவல், சிறுகதை இரண்டுக்கும் இடைப்பட்ட அளவில் வந்திருந்த கதை. அந்தக் கதையைப் படித்ததும் ‘வித்தியாசமா இருக்கே’ எனத் தோன்றியது. வெவ்வேறு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து, அந்தப் பெண்களுக்கே தெரியாமல் அவர்களுடன் தனிமையில் இருப்பதை வீடியோ எடுத்து அதை வெளிநாட்டுக்கு அனுப்பும் ஒரு கும்பல். அந்தக் கும்பலில் ஒரு பெண் மாட்டிக்கொள்கிறார். கடும் துயரத்தில் இருக்கும் அவள், தன் சூழலை ஒரு நோட்டில் எழுதி, அதை பழைய பேப்பருடன் சேர்த்து அனுப்புகிறாள். துப்பறியும் நிபுணர்களான கணேஷ்-வசந்த் இருவருக்கும் அது தெரியவருகிறது. அவர்களின் உதவியோடு அவள் அங்கு இருந்து எப்படித் தப்புகிறாள் என்பதுதான் கதை.
இதுபோன்ற கதைகளை ஆங்கிலப் படங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் தமிழில் படிக்கும்போது அது எனக்கு வித்தியாசமாகவும் புதிதாகவும் தெரிந்தது. ஏனெனில், அப்போது இங்கே வீடியோ கேசட்கூட பெரிய அளவில் வராத காலம். அதேபோல ‘எம்.ஏ படித்ததாகச் சொல்லி நான்கு திருமணங்கள் செய்த வாலிபர் கைது’, ‘தொழிலதிபர் என ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது’ என்ற செய்திகளைப் படிக்கும்போது, ‘இவனுங்களுக்கு எல்லாம் எப்படி பொண்ணு கொடுக்குறாங்க?, இவனுங்க எப்படி ஏமாத்தியிருப்பாங்க?’ என விநோதமாகவும் பரிதாபமாகவும் இருக்கும். கல்யாணம் என்ற சென்டிமென்ட்டும் ‘வீடியோ’ என்ற டெக்னாலஜியும் அந்தக் கதையில் இணைந்து இருந்ததால் ‘இதைப் படமாக எடுத்தால் புதிதாக இருக்கும்’ எனத் தோன்றியது.
சுஜாதா சாரிடம் பேசினேன். ‘சாவி சார் ஏதோ கேட்டார்னு அவசரத்துக்கு எழுதிக் கொடுத்தேன். அப்பவே, ‘நீங்கள் எல்லாம் இப்படி எழுதலாமா?’னு எனக்கு நிறையக் கண்டனக் கடிதங்கள். எழுதினத்துக்கே இவ்வளவு கண்டனங்கள்னா, இதை எப்படி சார் நீங்க படமா எடுப்பீங்க?’ என்றார்.

‘உங்களுக்கு என்ன சார், கதையைக் கொடுங்க நான் பண்ணிக் காமிக்கிறேன்’ என்றேன்.
‘தாராளமா வாங்கிக்கங்க சார்’ என ரைட்ஸ் தந்தார். அப்போது இண்டஸ்ட்ரியில் ஒரு கதைக்கு என்ன தொகை கொடுப்பார்கள் என்பதை விசாரித்து, அதுக்கு குறைவு இல்லாமல் அவருக்குத் தந்தேன்.
‘கவிக்குயில்’ பண்ணும்போதே, ‘நாலஞ்சு படங்கள் எழுதிட்டு இருந்தேன். அதில் எப்படியும் இரண்டு மூன்று படங்கள் உனக்கு செட் ஆகும். ஊர்ல சந்திப்போம்’ என்று ரஜினியிடம் சொல்லியிருந்தேன். அவரும், ‘நீங்க எப்ப வேணும்னாலும் கேளுங்க சார், டேட்ஸ் தர்றேன்’ எனச் சொல்லியிருந்தார். ஆனால் ‘கவிக்குயில்’ பண்ணும் சமயத்தில் அவர் நிறையப் படங்களில் நடிக்கவில்லை. ஆனால், அந்தப் படம் ரிலீஸ் ஆவதற்குள் ஏழெட்டு படங்கள் பண்ணி முடித்துவிட்டார். அப்போது அவர் நெகட்டிவ் கேரக்டர் பண்ணிக்கொண்டு இருந்ததால், திருமணம் செய்து ஏமாற்றும் இளைஞராக அவரையும், துப்பறியும் நிபுணராக ஜெய்சங்கரையும் ஃபிக்ஸ் பண்ணினேன். ‘என்ன சார் இந்த கேரக்டரா?’ என ரஜினி ஒரு வார்த்தைக்கூட கேட்கவில்லை. வரும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டால்தான் வளர முடியும் என்றாலும்கூட நான் என்ன கேரக்டர் தந்தாலும் நடிக்கும் அளவுக்கு என் மீது நம்பிக்கை வைத்திருந்தார்.
‘காயத்ரி’ படத்தின் இயக்குநராக யாரைப் போடலாம் என்பதில் குழப்பம். தேவராஜ் சொந்தப் படம் எடுக்கப் போய்விட்டார்.
எஸ்பி.முத்துராமன் சார் வெவ்வேறு படங்களில் பரபரப்பாக இருந்தார். எங்கள் யூனிட்டிலேயே `காற்றினிலே வரும் கீதம்', `கவரிமான்' ஆகிய படங்களில் பிஸியாக இருந்தார். அந்தச் சமயத்தில்
ஏவி.எம்-மின் ஆஸ்தான இயக்குநர்களான கிருஷ்ணன்-பஞ்சுவிடம் வெகுநாட்கள் அசோசியேட்டாக இருந்த `பட்டு' என்கிற பட்டாபிராமனின் நினைவு வந்தது. ஒரு வாய்ப்புக்கூட இல்லாமல் இளம் வயதைக் கடந்தவர். ‘சீனியர். அனுபவம் உள்ளவர். நிச்சயமா நல்லா பண்ணுவார்’ என நம்பி ‘காயத்ரி’யை இயக்கும் வாய்ப்பை அவருக்கு வழங்கினோம். அதன் பிறகு அவர் நிறையப் படங்கள் இயக்கி செட்டிலானார் என்பது கூடுதல் தகவல்.
‘காயத்ரி’ ஷூட்டிங் போய்க்கொண்டு இருக்கும்போதே, ‘பஞ்சு அண்ணனுக்கு என்னாச்சு. அந்த புளூ ஃபிலிம் கதையைப்போய் படமா எடுத்துட்டு இருக்கார்’ என இண்டஸ்ட்ரிக்குள் பேச்சு. என் மேல் அளவுக்கு அதிகமான அன்பு கொண்டிருந்த இன்னும் சில நண்பர்கள், ‘இந்தக் கதையைப் படிச்சுப் பாருங்க. இந்தக் கதையைத்தான் பஞ்சு அண்ணன் எடுத்துட்டிருக்கார்’ என்று ‘காயத்ரி’ கதையின் நகலை இணைத்து சென்சார் போர்டுக்குப் போட்டி போட்டுக்கொண்டு புகார் அனுப்பியபடி இருந்தனர். ஆனால், உண்மையில் சுஜாதா சார் எழுதிய அந்தக் கதையைப் படித்தால், ‘யோவ் பஞ்சு, உண்மையிலேயே புளு ஃபிலிம்தான் எடுக்கிறார்யா’ என்ற பலருக்கும் கோபம் வந்திருக்கும். ஏனென்றால், கதை அப்படிப்பட்டது. ஆனால், நான் அந்தக் கதையின் மையக் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு க்ளைமாக்ஸை மாற்றி சென்டிமென்ட், த்ரில்லர் கலந்து ஹிட்ச்காக் கதையைப்போல விறுவிறுவென திரைக்கதை அமைத்திருந்தேன். ஆனால், படத்தைப் பார்த்தால்தானே அந்த ஒரிஜினல் கதையில் நான் செய்துள்ள மாற்றங்கள் தெரியவரும். எதிர்பார்த்ததுபோலவே சென்சார் போர்டில் ஏக கெடுபிடி.
ஆனால், என்னைப் பற்றி அவர்களுக்குத் தெரியும். ‘நீங்க தப்பா எதுவும் பண்ண மாட்டீங்களே சார். ஏன் உங்களைப் பற்றி இவ்வளவு புகார்கள்?’ என்றவர்கள், ‘எங்களைத் தப்பா நினைச்சுக்காதீங்க. எல்லா கமிட்டி மெம்பர்களும் இருந்தால்தான் இந்தப் படத்தைப் பார்க்க முடியும். வெயிட் பண்ணுங்க’ என்றனர்.
‘சரி சார் அது எப்பனு சொல்லுங்க. ஏப்ரல் 14-ம் தேதி ரிலீஸ் பண்ணணும்’ என்றேன். பிறகு சென்சார் போர்டின் பெண் உறுப்பினர்கள் உள்பட ஃபுல் பெஞ்சும் படம் பார்த்தது. அவர்களுக்கு ஆச்சர்யம். ‘ரொம்பப் பிரமாதமா இருக்கே சார். படத்துல எந்தப் பிரச்னையும் இல்லையே. பிறகு ஏன் புளு ஃபிலிம் அது இதுனு பயமுறுத்தினாங்க?’ என்றவர்கள், சிங்கிள் கட் இல்லை, ஏ சர்ட்டிஃபிகேட்கூட இல்லாமல் படத்தை வெளியிட அனுமதித்தனர். படம் பெரிய வெற்றி.

சுஜாதா சாருக்கு ஸ்பெஷல் புரொஜக்ஷன் ஏற்பாடு செய்திருந்தேன். அவருக்கும் படம் பிடித்திருந்தது. ‘தனியா பார்த்தா எப்படி சார்? வாங்க தியேட்டர்ல பார்ப்போம்’ என அவரை ரசிகர்களோடு தியேட்டரில் படம் பார்க்க வைத்தேன். ரசிகர்களின் ஆரவாரம் அவருக்கு ஆச்சர்யம். என்றும் இல்லாத வகையில் எனக்கும் அன்று ஆச்சர்யம். வில்லன் ரஜினியை ஹீரோ ஜெய்சங்கர் அடித்தால் ரசிகர்கள் கோபித்துக்கொண்டு ஜெய்சங்கரைத் திட்டுகின்றனர். ரஜினி, ஜெய்யை அடிக்கும்போது விசில் பறக்கிறது. ‘இது புது டிரெண்டால்ல இருக்கு’ என எனக்கு வியப்பு. ரஜினியின் வித்தியாசமான நடிப்பால், அவரை ரசிகர்களுக்குப் பிடிக்க ஆரம்பித்துவிட்டது என நினைத்துக்கொண்டேன்.
இதற்கிடையில் ஏவி.எம்-மில் புரொடக்ஷன் மேனேஜராக இருந்த எம்.ஏ.எம்.மணியும் எஸ்பி.முத்துராமன் சாரும் என்னைச் சந்தித்தனர். இருவரும் ‘வாடா போடா’ என அழைத்துக்கொள்ளும் அளவுக்கு நெருங்கிய நண்பர்கள். ‘எம்.ஏ.எம் மணி படம் தயாரிக்க விரும்புகிறார். மகரிஷி எழுதிய ஒரு கதையைப் படமாக்கலாம்’ எனச் சொன்னார் முத்துராமன் சார். ‘படிச்சுட்டுச் சொல்றேன்’ என அந்தக் கதையை வாங்கி வைத்துக்கொண்டேன். பிறகு, படிக்கும்போது மகரிஷியின் அந்தக் கதை எனக்கும் பிடித்திருந்தது.
‘ஹீரோ சிவகுமார், வில்லன் ரஜினி, ஹீரோயின் சுமித்ரா மூவரின் கால்ஷீட்டையும் வாங்கிவிட்டோம். நீங்க திரைக்கதையை முடிச்ச பிறகு மற்ற கேரக்டர்களுக்கு யாரை ஃபிக்ஸ் பண்ணலாம்னு சொல்றீங்களோ அவங்களையே ஃபிக்ஸ் பண்ணிடலாம்’ என்றார்கள். அப்போது சிவாஜி சாருக்காக நான் எழுதி தயாரித்த ‘கவரிமான்’ உள்பட மூன்று படங்களுக்கு எழுதிக்கொண்டிருந்தேன். நேரம் கிடைக்கும்போது எல்லாம் மகரிஷியின் கதையைத் திரைக்கதையாக்கிக்கொண்டிருந்தேன்.
நான் திரைக்கதை எழுதும்போது, யாரிடமும் பேசவே மாட்டேன். தனியாக அமர்ந்து யோசித்தபடி அந்தக் கதைக்குள்ளேயே போய்விடுவேன். அதன் ஒவ்வொரு கேரக்டர்களாக என்னை நானே பாவித்துக்கொள்வேன். முழு திரைக்கதையையும் எழுதி முடித்த பிறகு அந்த ஒவ்வொரு கேரக்டரின் குணாதிசயங்களையும் மனதில்வைத்து எந்தெந்த நடிகர்-நடிகைகள் பொருத்தமாக இருப்பார்கள் என்பதையும் நானே சொல்வேன். ‘தயாரிப்பாளரின் கைக்கு எட்டும் உயரத்திலும் பட்ஜெட்டுக்குள்ளும் இருக்க வேண்டும். கதைக்குப் பொருத்தமாகவும் இருக்க வேண்டும்’ என்ற இரண்டு விஷயங்களையும் நடிகர்கள் தேர்வின்போது மனதில் வைத்துக்கொள்வேன்.
அப்படி அந்தக் கதைக்கான திரைக்கதையை எழுதி முடித்த பிறகு ‘சிவகுமார் சார் கேரக்டருக்கு ரஜினியும், ரஜினி கேரக்டருக்கு சிவகுமார் சாரும் பண்ணினால் நல்லா இருக்குமே. மாத்திப்போட்டால் சப்ஜெக்ட்டும் ஏறும்; ஆடியன்ஸுக்கும் இன்ப அதிர்ச்சியா இருக்கும். இல்லையென்றால், அது வழக்கமான படமாக இருக்கும்’ எனத் தோன்றியது. முத்துராமன் சாரையும் மணியையும் அழைத்து என் விருப்பத்தைச் சொன்னேன். ‘இப்படி இருந்தால்தான் சார் சரியா இருக்கும். இல்லை என்றால் ஜனங்க என்ன எதிர்பார்த்து வருவாங்களோ அதே மாதிரி வழக்கமா இருக்கும்’ என்றேன்.
‘எங்களுக்கு ஒண்ணும் பிரச்னை இல்லை. ஆனால் சிவகுமார் சார்ட்ட ஏற்கெனவே சொல்லிட்டோமே’ என்றார்கள்.
‘ஏன் சிவாஜி சாரே ‘ரங்கோன் ராதா’வுல நெகட்டிவ் கேரக்டர் பண்ணினாரே. இது சிவகுமார் சாருக்கு நிச்சயமா செட் ஆகும். ஆனால், அவர் சீனியர். நாம யாரையும் புண்படுத்திடக் கூடாது. அவருக்கு விருப்பம் இல்லைனா, அவர் பாசிட்டிவ் கேரக்டரே பண்ணட்டும். இப்படி மாற்றி பண்ணினால்தான் இருவருக்குமே ஸ்கோப் அதிகம் இருக்கும்’ என்றேன்.
சிவகுமார் சாரிடம் பேசினார்கள். ‘பஞ்சு அண்ணன் சொன்னா சரியா இருக்கும். பண்ணிடுவோம்’ என அவரும் ஒப்புக்கொண்டார். ரஜினிக்கும் பாசிட்டிவ் கேரக்டர் வந்ததில் சந்தோஷம். ஆனால், ஆரம்பத்தில் ரஜினிக்கு இந்த ரோல் மாறின விஷயங்கள் எல்லாம் தெரியாது. இப்படி உருவான படம்தான் ‘புவனா ஒரு கேள்விக்குறி’.
தயாரிப்பாளர் எம்.ஏ.ம்.மணிக்கு அது முதல் படம். அவர் வாசு மேனன் என்ற பெரிய ஸ்டுடியோ ஓனரின் உறவினர். அந்த ஒரு உதவியில் படம் தயாரிக்க வந்திருக்கார். ஒரு ஷெட்யூல் கேன்சல் ஆனால்கூட, அந்த இழப்பை அவரால் தாங்கிக்கொள்ள முடியாது. குற்றாலம், கன்னியாகுமரி, தென்காசி என வெளியூர் படப்பிடிப்பில் மொத்தம் 15 நாட்களில் ஷூட் செய்துவிட்டு, சென்னையில் நான்கைந்து நாட்கள் பேட்ச் வொர்க் செய்து ஒட்டுமொத்த படத்தையும் முடிப்பதாகத் திட்டம். எல்லோரும் ஷூட்டிங்குக்குப் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். ஆனால், 15 நாட்களில் 10 நாட்கள் கடும் மழை. இரண்டு, மூன்று நாட்களே அதுவும் அறைகுறையாக படப்பிடிப்பு நடத்தியிருக் கிறார்கள். ப்ளானிங் மொத்தமும் சொதப்பியது. தயாரிப்பாளரின் மனநிலையை நினைத்துப் பாருங்கள். மணி நொந்துவிட்டார்.
‘ஒண்ணும் கவலைப்படாத மணி. நான் பேட்ச் வொர்க் பண்ணி இங்கேயே முடிச்சுத் தர்றேன்’ என முத்துராமன் சார் சொன்னார். ஆனால், மணிக்கு நம்பிக்கை இல்லை. வாசு ஸ்டுடியோவிலேயே சின்னச்சின்ன செட்டுகளைப் போட்டனர். குற்றாலத்தில் எடுத்திருந்த கொஞ்சம் சீன்களுக்கு கோவளம் பகுதிகளில் உள்ள கடற்கரை, அதையொட்டிய தென்னந்தோப்புகள், ஓடைகள், குளம் என இரவு பகலாக படத்தை எடுத்தனர். எனக்கோ, ‘இவ்வளவு ஸ்பீடா போறாரே. படம் குப்பையா வந்துடுமோ’ என்ற பயம். ஆனால், அவரிடம் எதுவும் கேட்க முடியாது. அவர் எனக்கு மூத்தவர், பெரிய பேர் வாங்கியவர்.
ஒருநாள் தயங்கியபடி, ‘என்ன சார் ரொம்ப வேகமாப் போறீங்களே?’ எனக் கேட்டுவிட்டேன். ‘நீங்க ரிசல்ட்டைப் பாருங்க’ என்றார். ஒரு நாளைக்கு 10 சீன் எடுப்பார். 2-வது டேக்கே கிடையாது. நடிகர்களும் அவ்வளவு ஒத்துழைப்பு தந்தனர். பத்தே நாட்களில் மொத்தப் படத்தை முடித்துவிட்டார். படத்தைப் போட்டுப் பார்த்தால் அசந்துவிட்டோம். எல்லாம் பெர்ஃபெக்ட். அவசரஅடியில் முடித்ததுபோல் தெரியவில்லை. 40 நாட்கள் டைம் எடுத்து முடித்த படத்தின் குவாலிட்டியோடு இருந்தது.

ஒரு படத்தை எடுத்துவிட்டு கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதி நெடுங்கிவிட்டதே என அவசர அவசரமா பேட்ச் வொர்க் பண்ணுவார்கள். ஆனால், மொத்தப் படத்தையுமே பேட்ச் வொர்க்கில் பண்ணி எடுத்த படம் `புவனா ஒரு கேள்விக்குறி'. முத்துராமன் சார் அவ்வளவு பெரிய திறமைசாலி. நான் எத்தனையோ இயக்குநர்களுடன் பழகியிருக்கிறேன். அவர் அளவுக்கு திறமையான இயக்குநரைப் பார்த்தது இல்லை. அவர் எடிட்டராக இருந்து இயக்குநரானவர். கடுமையான உழைப்பாளி. ஒரு வாரம்கூட தூங்காமல் இருந்து வேலைசெய்வார். ஆனால், கோடி ரூபாய் கொடுத்தாலும் என்னால் அப்படி இருக்க முடியாது. எனக்கு எல்லாம் அப்படி ஒரு சூழல் வந்தால் ‘வேலையே வேணாம்சாமி’ எனச் சொல்லிவிட்டு ஓடிப்போயிருப்பேன். அந்த அளவுக்கு அவர் பாடுபட்டு அந்தப் படத்தை முடித்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட். இன்று வரை சிவகுமார்-ரஜினி இருவரின் சிறந்த படங்களில் ‘புவனா ஒரு கேள்விக்குறி’க்கு முக்கிய இடம் உண்டு. அதுக்கு முக்கியக் காரணம் எஸ்பி.முத்துராமன் சார், சிவகுமார், ரஜினிகாந்த் மூவரும்தான்.
- தொண்டு தொடரும்...