
எண்ணம், வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

மொழி
``நமக்கு ஒரே ஒரு மனித மூளை தேவை'' என்றார் அந்த ஸ்பேஸ் ஷிப்பின் ஜெனரல். ஸ்பேஸ் ஷிப்புக்குள் மிதந்தபடி மானிட்டரைப் பார்த்துக்கொண்டிருந்தார். பூமியின் ஈர்ப்பு விசைக்கு வெளியே மிதந்துகொண்டிருந்தது ஸ்பேஸ் ஷிப்.
`அதற்கான ஆளைக் கண்டுபிடித்துவிட்டோம்' என மானிட்டரில் பதில் வந்தது.
“நல்லது. அந்த மனிதனின் மூளையை நமது கிரகத்துக்கு எடுத்துச்செல்வோம். அதன் மூலம் அவன் மொழியை நாம் திருடப்போகிறோம். அந்த மனிதனுக்குத் தெரியாமல், நாம் நமது கிரகத்தில் இருந்து கொண்டுவந்திருந்த மூளையை அவனுக்கு மாற்றிவிடுங்கள்.”
`அப்படியே செய்துவிடலாம் ஜெனரல்' என்று பதில் வந்தது.
``அந்த மனிதன் என்ன செய்துகொண்டிருக்கிறான்?” என்று கேட்டார் ஜெனரல்.
“மேகஸினில் ஏதோ கதை படித்துக்கொண்டிருக்கிறான்.”

“பரவாயில்லை. அவன் படிப்பில் ஆழ்ந்திருக்கும்போதே நொடியில் மூளையை மாற்றிவிடுங்கள். நமது கிரகத்தின் மூளையை அவனுக்கு மாற்றியதும், அவன் மொழி அவனுக்கு முற்றிலுமாக மறந்து, நமது மொழிதான் தெரிய ஆரம்பிக்கும்” என்றார் ஜெனரல்.


பொம்மலாட்டோமேடா
மார்டின் ஸ்கார்ஸசி இயக்கிய `ஹ்யூகோ' படம் பார்த்திருப்பீர்கள். சினிமா கலையின் முன்னோடியான ஜார்ஜ் மிலியின் கதையை அடிப்படையாகக்கொண்டது. இன்றைய விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளை எல்லாம், தொழில்நுட்பரீதியாக சினிமா என்னும் கலை உருவான காலகட்டத்திலேயே செய்துபார்த்தவர் ஜார்ஜ். பிற்காலத்தில் ஜார்ஜ் ஒரு பொம்மைக் கடை வைத்திருப்பதாக படத்தில் வரும். எல்லாம் ஆட்டோமேடா பொம்மைகள்.
இந்த ஆட்டோமேடா பொம்மைகளை `மெக்கானிக்கல் ஆர்ட்' எனச் சொல்லலாம். நம் ஊர் பிரிட்டிஷ் காலத்து திப்புவின் புலி பொம்மையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஹைதராபாத் ஜாலார்ஜங் மியூசியத்தில் ஒரு கடிகாரம் இப்போதும் இருக்கிறது. ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒருதடவை அந்தக் கடிகாரத்தின் வாசற்கதவுகள் திறந்து இசைக் கலைஞர்கள் போன்ற பொம்மைகள் வெளியேறி, பீப்பீ ஊதியபடி டமாரம் அடிப்பதைப் பார்த்திருக்கிறேன். இவை எல்லாம் ஆட்டோமேடா பொம்மைகள்தான்.

சில நூற்றாண்டுகள் முன்னர் மக்களை, குழந்தைகளை மகிழ்வித்த ஆட்டோமேடா கலை பொம்மைகள், எலெக்ட்ரானிக் வருகையின் பிறகு மெள்ள வின்டேஜ் அந்தஸ்தை அடைந்துவிட்டன. ஆனால், சமீபத்தில் டேவ் ஹால் என்கிற கலைஞர் செய்யும் ஆட்டோமேடா பொம்மைகள் அசத்தலாக இருக்கின்றன. பெரியதாக மெக்கானிக்கல் சிக்கல்கள் இல்லாமல் சிம்பிளாக அட்டைகள், மரத்துண்டுகள், கம்பிகள், பற்சக்கரங்களைக் கொண்டு அவர் உருவாக்கும் இந்த ஆட்டோமேடா சிறு சிற்பங்கள் அல்லது பொம்மைகள் க்யூட்டான அசைவுகளால் நம்மைக் கவர்கின்றன.
இவருடைய ஆட்டோமேடா வீடியோக்களைக் காண: www.happinessishorizontal.co.uk/

கண் மை
கண்களைவிட, கண் மைதான் கவிஞர்களை அதிகம் பாதித்திருக்கிறது என்பதை சங்ககால கவிதைகள் முதல் சமீபத்திய ஹைக்கூக்கள் வரை உதாரணம் காட்ட முடியும். `உண் கண்' என்கிற பதம் சங்க இலக்கியங்களில் மையிட்ட கண்களைக் குறிக்கிறது. `கண்களும் கதை பேசுதே' என்ற சினிமா பாடல் வரிகள் ஞாபகம் வருகிறது. பெண்களின் கண்கள் கதை பேசும் புத்தகம் என்றால், அந்தக் கதையை அச்சிட்டிருப்பது கண் மையால் என நாமும் கொஞ்சம் கவித்துவமாக யோசித்துப்பார்க்கலாம். கண்களின் கதையைவிடுங்கள் கண் மையின் கதையைக் கொஞ்சம் தேடிப்பார்ப்போம்.
கண் மையை வடக்கில் `காஜல்' எனச் சொல்கிறார்கள். ஆங்கிலத்தில் கோல் (kohl). கோல் என்பது, ஆண்டிமனி ஸ்டிப்னைட் (Stibnite) என்னும் வேதிப்பொருளில் இருந்து தயாரிக்கப்படுவது. ஒருவகையான சல்பைட். அதன் வேதியல் ஃபார்மூலா இதுதான் Sb2S3. மையிட்ட கண்களைப் பார்க்கும்போது சிலருக்கு ஏன் `கெமிஸ்ட்ரி’ வேலைசெய்கிறது என்பது இப்போது தெரிகிறதா?
கி.மு 3,100 எகிப்திய இளவரசிகள், மத்தியக் கிழக்கு நாடுகளின் பெண்கள், ஆப்பிரிக்கப் பழங்குடிகள் முதல் `தண் துறை ஊரன் தெளிப்பவும் உண் கண் பசப்பது எவன் கொல் அன்னாய்' எனக் கேள்விக்கு உட்படும் ஐங்குறுநூறு தோழிகள் வரை கண் மை மனித வரலாறு முழுக்க தீட்டப்பட்டிருக்கிறது.
ஆனால், நான் முன்னர் குறிப்பிட்ட ஸ்டிப்னைட் போன்ற வேதியல் பொருட்கள் இல்லாமல், கரிசாலை இலைச்சாறில் ஊறவைத்த பருத்தித் துணியில் தீபம் ஏற்றி அதன் புகையை, கற்றாழைச்சாறு தடவி கவிழ்த்துவைத்த இன்னொரு சட்டியில் படியவைத்து, அந்த நுண்கரித்துகள்களைச் சேகரித்து அதை விளக்கெண்ணெயில் குழைத்து, இயற்கை கண் மை தயாரிக்கும் நுட்பங்கள் சித்த மருத்துவத்தில் இருக்கின்றன.
`கண்ணுக்கு மை அழகு' - காதலியைப் புகழ்வது சரிதான், அக்கறை இருந்தால் அது ஆண்டிமனி ஸ்டிப்னைட் வேதியல் பொருளா, கரிசாலை நுண்கரித்துகளா என்பதை அடுத்த முறை சந்திக்கும்போது கேட்டுப்பாருங்கள்.

பேகி பேன்ட்
பேகி பேன்ட் என்றாலே எனக்கு பிரபுதேவாதான் ஞாபகம்வருவார். அவர் அளவுக்கு நாம் லூஸாகப் போடாவிட்டாலும் கிட்டத்தட்ட அந்த லுக்கைக் கொண்டுவர சொல்லி டெய்லர்களை டார்ச்சர் செய்திருக்கிறோம். 80-களில் பெல்ஸ் பாட்டம் மெள்ள ஓய்ந்து, `மைக்கேல், மதன, காம, ராஜன்' காலத்தில் கொஞ்சம் ஸ்ட்ரெயிட் ஃபிட் பேன்ட்டுகளைப் போட ஆரம்பித்தார்கள். ஆனால், இன்றும் பெல்ஸ் பாட்டமும் பென்சில் மீசையுமாகத் திரியும் பழைய பீஸ்களை எங்கேயாவது பார்க்கும்போது, காலத்தில் அவர்கள் உறைந்துவிட்டவர்களாகத்தான் தோன்றுகிறது. நாம் பேகி பேன்ட்டுக்கு வருவோம்.
காலம் ஒரு வட்டம் என்பது, ஃபேஷன் டிசைன்களைப் பார்த்தால் நாம் புரிந்துகொள்ளலாம். பழைய எம்.ஜி.ஆர் படங்களில் கிட்டத்தட்ட பேகி பேன்ட் போலவே இருக்கும் டிசைனை சில படங்களில் பார்க்கலாம். உதாரணம், `எங்க வீட்டு பிள்ளை'. மறுபடியும் பெல்ஸ் பாட்டம், ஸ்ட்ரெய்ட் ஃபிட் என வந்து மீண்டும் பேகி வந்தது. 90-களின் தொடக்கத்தில் மெள்ளப் பரவ ஆரம்பித்த பேகி பேன்ட் கலாசாரம், வழக்கத்தைவிட கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிட் துணியைக் கேட்டது. இடுப்புக்குக் கீழே இருந்து பெருசாகி முட்டியில் தொளதொளத்துக் கீழ் இறங்கி கணுக்காலை அடையும்போது குறுகி முடிவதுதான் பேகி பேன்ட் ஸ்டைல்.
பேகி பேன்ட்டின் முன் பக்கத்தில் இரண்டு, மூன்று ஸ்பிளிட் வைத்து மடக்கி தைத்திருப்பார்கள். டிசைனுக்கு ஏற்ப காசு கொடுத்தால் அதில் சில பட்டன்கள் வைத்துத் தருவார்கள். பழைய புகைப்படங்களில் பேகி பேன்ட்டுடன் நிற்கும் யாரேனும் நிற்கும் புகைப்படம் உங்கள் கலெக்ஷனிலும் இருக்கலாம். இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் அது மெள்ள மாற்றத்துக்கு உட்பட்டு பூட் கட், பென்சில் கட் என வந்து நிற்கிறது. இப்போது கடைக்குப் போனால் கணுக்காலில் ஒட்டிக்கொண்டு வர மறுக்கும் பென்சில் ஃபிட் என்றெல்லாம் பேன்ட்டை எடுத்துக் காட்டுகிறார்கள். ஒப்புக்கொள்ள கால்களும் மனசும் மறுக்கின்றன. `ஸ்ட்ரெயிட் ஃபிட்'தான் எனக்கு எப்பவுமே செட் ஆகும் எனத் தேற்றிக்கொள்கிறோம். பெல் பாட்டம் வாத்தியார்களைப்போல நாமும் காலத்தில் உறைய ஆரம்பித்துவிட்டோமா?

வீடியோ கேம்
பழைய நோக்கியா மொபைலில் பாம்பு கேம் விளையாடியதோடு சரி, வீடியோ கேமுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்று குழந்தைகள் மற்றும் குழந்தை மனசுகொண்ட பெரியவர்கள் ஆயிரங்களைக் கொட்டி எக்ஸ் பாக்ஸ், பவர் ஸ்டேஷன் என கன்சோல்களை வாங்கி விளையாடுகிறார்கள். டீஸர், ட்ரெய்லர் எல்லாம் காட்டி அதிரடியாக விற்பனைக்குவரும் கேம்களை காசு கொடுத்தோ அல்லது இணையத்தின் டோரன்ட்களை சொடுக்கியோ இறக்குகிறார்கள். வீடியோ கேம்கள், குழந்தைகளை சோம்பேறிகளாக்கும்; வன்முறை எண்ணத்தைத் தூண்டும் போன்ற விமர்சனங்களும் ஒருபக்கம் மாரியோபோல ஓடிக்கொண்டிருக்கின்றன.
முதல் வீடியோ கேமை உருவாக்கியவர் வில்லியம் ஹிகின்பாதம் (william higginbotham) என்கிற இயற்பியலாளர். ஆண்டு 1958. இவர் உருவாக்கிய அந்த முதல் வீடியோ கேமின் பெயர் `டென்னிஸ் ஃபார் டூ' (Tennis for Two). அந்தக் கால அனலாக் கம்ப்யூட்டர்களின் திரை வாஷிங் மெஷின் மூடிபோல வட்டமாக இருக்கும். அதில் கிடைமட்டமாக ஓடும் ஒரு கோடு நடுவில் ஓர் ஒளிப்புள்ளி பந்துபோல இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் தாவும் டென்னிஸ் பால். இதுதான் வில்லியம் உருவாக்கிய முதல் வீடியோ கேமின் வடிவம்.
ஆனால், அதற்கு சில வருடங்களுக்கு முன்னர், 1947-ம் ஆண்டு வாக்கில் தாமஸ் டி கோல்ட்ஸ்மித் என்பவர், ஒரு கேதோட் ரே டியூபை வைத்து வீடியோ கேம்போல ஒரு பொழுதுபோக்கு உபகரணத்தைக் கண்டுபிடித்தார். கம்ப்யூட்டருக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை என்பதால், வரலாற்றில் வில்லியம்ஸின் `டென்னிஸ் ஃபார் டூ'வே முதல் வீடியோ கேமாக இடம்பிடித்தது.
நமது தாத்தா காலத்திலேயே வெள்ளையர்கள் வீடியோ கேமைக் கண்டுபிடித்திருந்தாலும், நம் ஊரில் அது பேரன்கள் காலத்தில்தான் அறிமுகமாகி இருக்கிறது. குழந்தைகள் டிவைஸ்களில் தலைகுனிந்தபடி கிடக்கிறார்கள். ஓடிவிளையாடு பாப்பாவையும் மறக்காமல், கொஞ்சம் தலை நிமிர வேண்டும்.