மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திரைத்தொண்டர் - 15

திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம்
பிரீமியம் ஸ்டோரி
News
திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம் ( திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம் )

பஞ்சு அருணாசலம்

திரைத்தொண்டர் - 15

‘புவனா ஒரு கேள்விக்குறி’ படம் மிகப் பெரிய வெற்றி. அந்தச் சமயம், ‘உங்க கேரக்டரை ரஜினிக்குத் தர ஏன் சார் சம்மதிச்சீங்க? அதை நீங்களே பண்ணியிருந்தா, உங்களுக்கு நல்ல பேர் வந்திருக்கும். உங்க மார்க்கெட் எங்கேயோ போயிருக்கும்’ என சிலர் சிவகுமார் சாரிடம் சொன்னதாகக் கேள்விப்பட்டேன். எனக்கு தர்மசங்கடம். ஏனெனில், அவரைக் கேட்டுவிட்டுத்தான் அந்த மாற்றம் பண்ணினோம். ‘இல்லல்ல... நான் இந்த ரோல்தான் பண்ணுவேன்’ என அவர் சொல்லியிருந்தார் எனில், அவர்தான் அந்த பாசிட்டிவ் கேரக்டர் பண்ணியிருப்பார். ஆனால், படத்தின் வெற்றிக்காக நாங்கள் கேட்டதுமே அந்த மாற்றத்துக்கு அவர் சம்மதித்தார். அவர் அப்படித் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார் என்பதை நான் அறிவேன். அதனால்தான் ‘ப்ரியா’ படத்துக்காக மீண்டும் அவரிடம் போனேன்.

திரைத்தொண்டர் - 15

இதுவும் சுஜாதா சார் கதைதான். சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசையுடன் சென்னை வருகிறாள் ஒரு பெண். அவளை வைத்து சம்பாதிக்க வேண்டும் என ஆசைப்படுகிறான் ஒருவன். அவன் பிடியில் இருந்துகொண்டே அவள் பெரிய நடிகையாகிறாள். தன்னை அந்தப் பணப்பேயிடம் இருந்து மீட்க வழக்குரைஞர் கணேஷின் உதவியை நாடுகிறாள். இதற்கு இடையில் அந்த நடிகை திடீரென இறந்துவிட்டதாக அதிர்ச்சி செய்தி வருகிறது. அவளுக்கு என்ன ஆனது என்பதை கணேஷ் துப்பறிந்து கண்டுபிடிக்கிறார். இதுதான் சுஜாதா சார் எழுதிய ‘ப்ரியா’ கதை.

அந்தக் கதையைப் படமாக்கக் கேட்டதுமே அவர் மறுப்பு சொல்லாமல் ரைட்ஸ் கொடுத்தார். அந்தக் கதைக்கான திரைக்கதை ட்ரீட்மென்ட்டுக்கு 10 நாட்கள், இளையராஜா ட்யூன்போட இரண்டு நாட்கள், ரிக்கார்டிங் நான்கைந்து நாட்கள் என ஒரே மாதத்தில் படப்பிடிப்புக்குத் தயாராகிவிட்டோம். தவிர ‘ப்ரியா’வை தமிழிலும் கர்நாடகாவைச் சேர்ந்த ஃபைனான்ஷியர் ராஜண்ணாவுக்காக கன்னடத்திலும் ஒரே சமயத்தில் எடுக்கத் திட்டமிட்டிருந்தோம்.

ரஜினி, சிவகுமார், ஸ்ரீதேவி, தேங்காய் சீனிவாசன் என நல்ல டீமை ஃபிக்ஸ் பண்ணியிருந்தேன். சிவகுமார்-ஸ்ரீதேவி காம்பினேஷன். ரஜினிக்கு ஜோடி இல்லை. அவருக்கு துப்பறியும் கணேஷ் கேரக்டர். ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தில் வந்ததாகச் சொல்லப்பட்ட மனவருத்தம் இதில் வந்துவிடக் கூடாது என்பதற்காக திரைக்கதையில் இருவரையும் சமமாக ட்ரீட் பண்ணியிருந்தேன். ஆக்‌ஷன் காட்சிகள், ஒரு பாட்டு, துப்பறியும் விஷயங்கள் ரஜினிக்கு. லவ், டூயட் எனக் கதையோடு வரும் காட்சிகள் சிவகுமார் சாருக்கு என சமமான முக்கியத்துவம். அனைவரிடமும் பேசி கால்ஷீட் வாங்கியாகிவிட்டது. ஒட்டுமொத்தப் படமும் சிங்கப்பூரில் நடக்கும் கதை என்பதால், ஃபாரீன் ஷூட்டிங் வேலைகள் நடந்துவந்தன.

தமிழில் நடிக்கும் ரஜினி, ஸ்ரீதேவியே கன்னடத்திலும் இருப்பார்கள். சிவகுமார் சார் ரோலுக்கு மட்டும் அம்பரீஷை நடிக்கவைக்கலாம் என முடிவானது. அப்போது அவர் அங்கு புதுமுகம். ‘ப்ரியா’ அங்கு அவருக்கு மூன்றாவது படம் என நினைக்கிறேன். ‘என் ஃப்ரெண்ட் நல்லா நடிப்பார். நல்லாவும் இருப்பார்’ என அவரை `ப்ரியா’வுக்கு ரெக்கமெண்ட் பண்ணி னதே ரஜினிதான். பெங்களூரில் இருந்த என் பார்ட்னர் ராஜண்ணா, அம்பரீஷைப் பார்த்து, பேசி, அவரை ஃபிக்ஸ் பண்ணிவிட்டார். சிங்கப்பூர் புறப்படத் தயாராகிக்கொண்டி ருந்தோம்.

அப்போது எதிர்பாராதவிதமாக சிவகுமார் சார், ‘தப்பா எடுத்துக்காதீங்க. ஒரு மாசம் தொடர்ச்சியா ஃபாரீன்ல தங்கி ஷூட் பண்றது எனக்குக் கொஞ்சம் சிரமம்’ என தன் சூழலைச் சொன்னார். அவருடன் ஏகப்பட்ட படங்கள் பண்ணியிருக்கிறேன். அதற்கு முன்னர் அவரால் எங்களுக்கு எந்தவித தர்மசங்கமும் ஏற்பட்டதே இல்லை. தயாரிப்பாளருக்காக தன் வசதிகளைக் குறைத்து, வளைந்துகொடுத்துச் செல்லும் அவரைப் போன்ற ஒரு நடிகரை நான் பார்த்ததே இல்லை. தவிர, அவர் எதுவாக இருந்தாலும் யோசனை செய்துதான் சொல்வார். ஒருமுறை சொல்லிவிட்டார் என்றால், அந்த விஷயத்தில் இருந்து மாறவே மாட்டார். அந்த அளவுக்கு உறுதியான மனிதர். ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தில் அவரின் கேரக்டரை மாற்றிய வருத்தத்தில் இன்னும் இருக்கிறாரோ எனத் தோன்றியது. ஆனாலும் ‘ஏன்... எதுவும் வருத்தமா?’ என நேரில் போய் கேட்டு கன்வின்ஸ் செய்திருக்கலாம். அதுக்குக்கூட நேரம் இல்லாத அளவுக்கு, அவ்வளவு வேலைகள் சூழ்ந்திருந்த நேரம்.

பிறகு ஒரு சமயம் சிவகுமார் சாரை நேரில் சந்திக்கும்போது கேட்டேன். ‘அதெல்லாம் ஒண்ணும் இல்லை சார். அவர் மற்ற படங்களில் வில்லனா நடிக்கிறதைக் கைதட்டி ரசிக்கிறாங்க... அப்பவே ரஜினியின் வெற்றி எழுதப்பட்டுவிட்டது. ‘புவனா ஒரு கேள்விக்குறி’ கேரக்டராலதான் அவர் சக்சஸ் ஆனார்னு சொல்ல, நான் என்ன முட்டாளா, எனக்கு சினிமாவைப் பற்றி தெரியாதா?’ என தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்பதைச் சொன்னார். அதற்குப் பிறகு, ‘வீட்டில ராமன் வெளியில கிருஷ்ணன்’ உள்பட என் பல படங்களில் அவர் நடித்திருக்கிறார். என் சினிமா வாழ்க்கையில் சிவகுமார் சார் மிக முக்கியமான மனிதர்.

இதற்கு இடையில் ராஜண்ணாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘ஏன் தமிழிலும் அம்பரீஷையே போடுங்களேன்’ என்றார். இத்தனைக்கும் ராஜண்ணாவுக்கு `ப்ரியா’ கதை எதுவும் தெரியாது. நானும் அம்பரீஷைச் சந்தித்தது இல்லை. அவர் எப்படி நடிப்பார் என்றும் எனக்குத் தெரியாது. ‘படத்துல சிவகுமார் சார் கேரக்டர் பெருசுய்யா. அதை எப்படிய்யா அவர் தாங்குவார்?’ என்றேன். ‘தமிழ் வெர்ஷன்ல ரஜினி போர்ஷனை அதிகமாக்கி, அம்பரீஷ் போர்ஷனைக் குறைச்சுக்கங்க’ என அதற்கும் அவரே யோசனை சொன்னார். காரணம் எல்லாரையும்போல அவருக்கும் ரஜினியைப் பிடிக்கும்.

தமிழ், கன்னடம் இரண்டு மொழிகளிலும் நாம்தான் நடிக்கிறோம் என அறிந்த அம்பரீஷுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். பிறகு திரைக்கதையைத் திருப்பி எழுதினேன். கதைப்படி அம்பரீஷும் ஸ்ரீதேவியும் காதலர்கள். அவர்கள் இருவரையும் சேர்த்துவைப்பது ரஜினி. ஆனால் ‘ப்ரியா’வில் சிவகுமார் சார் இல்லை என்பதால், ரஜினிக்கான காட்சிகளை அதிகமாக்கினேன். அதில் ஒன்று `ஹே... பாடல் ஒன்று...’ என்ற ரஜினி-ஸ்ரீதேவிக்குமான டூயட். ‘எப்படி அவங்க ரெண்டு பேருக்கும் டூயட் வரும்?’ என்ற உங்களின் சந்தேகத்தையே படத்தில் இயக்குநராக நடிக்கும் தேங்காய் சீனிவாசனிடம் அவரின் அசோசியேட் கேட்பது போலவும், ‘யோவ்... அது இமேஜினேஷன் டூயட்யா’ எனச் சொன்ன பிறகு இந்தப் பாடல் வருவதுபோலவும் எழுதினேன். இப்படி எங்கள் வசதிக்காக நிறைய மாற்றங்கள் பண்ணினேன்.

‘ப்ரியா’ படத்தைப் பொறுத்தவரை சுஜாதா சார் வருத்தப்பட்டதிலும் நியாயம் உள்ளது. காமெடி, சீரியஸ், சென்டிமென்ட் என படத்தில் எல்லாமும் இருக்கும். ஓப்பனிங், முடிவு அவர் கதைப்படிதான் இருக்கும். நடுவில் நான் பூந்து விளையாடினேன். இதற்கு முன்பே அவரின் ‘காயத்ரி’ கதையை நான் எடுத்தபோது ‘புளூ ஃபிலிம் எடுக்கிறார் பஞ்சு’ என என்னைச் சொன்னதுபோல, அவரிடம், ‘நீங்க எழுதின அற்புதமான ஒரு விஷயத்தை ‘காயத்ரி’ கதையில் கோட்டைவிட்டுட்டாங்க. கதையில் உயிரோட்டமே இல்லாமல் பண்ணிட்டார் பஞ்சு’ எனச் சொல்லியிருக்கிறார்கள்.

அவரின் கதையைப் படமாக்குவது பற்றி அவரிடம் கேட்டபோது இரண்டு மாதிரியும் அவர் பதில் சொல்லியுள்ளார். ஒரு கேள்வி பதில் பகுதியில்... ‘நாவலைப் படமா எடுக்கிறதுல தப்பே இல்லை. அது படம் எடுக்கிறவரின் சொந்த முடிவு. என் நாவல்ல கணேஷ்-வசந்த் 20 பக்கத்துக்குப் பேசிட்டே இருப்பாங்க. சினிமாவுல 20 பக்கத்துக்குப் பேசிட்டிருக்கிற சீனை எவனாவது பார்த்துட்டிருப்பானா?’ என எழுதியவர், பிறகு, ‘சிலர் எல்லாம் ஏன் சினிமாவுக்குக் கதை கொடுத்தீங்கனு கேக்குறாங்க. நம்ம கதையை இப்படிக் கெடுத்துட்டாங்களேனு வருத்தமா இருக்கு. என்ன பண்றது? சரி அவங்க வாங்கிட்டாங்க. அவங்க இஷ்டத்துக்கு எடுக்குறாங்க’ என்றும் எழுதியுள்ளார்.

திரைத்தொண்டர் - 15

‘ப்ரியா’ கதையை நான் வாங்கிய சமயத்தில் அவருக்கு வேறு ஒரு வருத்தம். அட்வான்ஸாகத் தந்த பணத்தைத் தவிர மீதி தரவேண்டிய பணம் என் கம்பெனியில் இருந்து அவருக்குப் போய்ச் சேரவில்லை. ‘சிரிக்கச் சிரிக்கப் பேசுவாங்க. ஆனால், வேறு மாதிரி நடந்துப்பாங்கனு சினிமாக்காரங்களைப் பற்றி சொல்வாங்க. நீங்ககூடவா சார் இப்படி?’ என மொத்தமே நாலு வரியில் எனக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டார் சுஜாதா. எனக்கு அவமானமாகப்போய்விட்டது. அவருக்கு மீதிப் பணம் போய்ச்சேரவில்லை என்ற விஷயமே, எனக்கு அவரின் கடிதத்தைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது. அவர் எங்கு இருக்கிறார் என விசாரித்தேன். பெங்களூரில் இருப்பதாகச் சொன்னார்கள். அங்கு இருந்த ராஜண்ணாவிடம், ‘இன்னைக்கு சாயங்காலம் ஏழரைக்குள்ள பணம் கொடுத்து ரசீது வாங்கிட்டு வரணும்’ என்றேன். அதேபோல அவரும் சுஜாதாவைத் தேடிக் கண்டுபிடித்து, பணத்தைக் கொண்டுபோய் சேர்த்தார்.

இதற்கு எல்லாம் பிறகு அவர் ஷங்கர், மணிரத்னம் ஆகியோரிடம் வொர்க் பண்ண ஆரம்பித்த சமயத்தில் ஒருமுறை ஏவி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில், ஒரு திருமணத்தில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் கூன்விழுந்துபோய் இருந்தார். ‘உடம்புக்கு என்னாச்சு சார்?’ என்றேன். ‘பைபாஸ். பையன் அமெரிக்காவில் இருக்கான். அங்கே போய் பைபாஸ் பண்ணிட்டுவந்தேன். இப்ப கொஞ்சம் பரவாயில்லை’ என்றார். ‘இதோடு எப்படி சார் எழுதுறீங்க?’ என்றேன். ‘ஐயய்யோ எழுதலைன்னா செத்துப்போயி டுவேன் சார்’ எனச் சிரித்தார்.

அப்போது, ‘உங்க கதையை அப்படி மாத்தி எடுத்திருக்காங்க, இப்படி மாத்தி எடுத்திருக்காங்க’னு நண்பர்கள் சொல்வாங்க. எனக்குக்கூட `ஏன்டா கொடுத் தோம்?’னு தோணும். ஆனா, ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு சீனுக்கும் எவ்வளவு டிஸ்கஸ் பண்ணவேண்டியிருக்கு, எவ்வளவு போராடவேண்டியிருக்குனு  உள்ளே வந்த பிறகுதான் தெரியுது சார்’ என அவர் சிரித்தபடி சொன்னது இன்று நினைவுக்கு வருகிறது.

ஓ.கே இப்போது `ப்ரியா’ பட ஷூட்டிங் அனுபவத்துக்கு வருகிறேன். அப்போது ஃபாரீன் படப்பிடிப்பு என்பது பெரும் சிக்கல். காரணம், ஃபெரா (Foreigen Exchange Regulation Act) சட்டம். அப்போது வெளிநாடு போனால் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு இத்தனை டாலர்தான் செலவுசெய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. அதுவும் அது கட்டுப்படியாகாத ஒரு அமௌன்ட். அதற்குள் அங்குபோய் நாம் படம் எடுத்து வர வேண்டும். அதற்குமேல் கூடுதலாகச் செலவுசெய்தால் ஃபெரா சட்டப்படி தவறு. நம் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுப்பார்கள்.

‘சாப்பாட்டுக்கும் தங்குறதுக்குமே அந்தப் பணம் பத்தாமல்  இருக்கும். அப்படி இருக்கையில் நீங்க எப்படி அங்கே போய் படம் எடுப்பீங்க? எம்.ஜி.ஆரே ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் எடுக்கப்போய் அந்தச் சட்டத்துல சிக்கினார். அவ்வளவு செல்வாக்கான அவராலேயே அந்த கேஸைச் சமாளிக்க முடியலை. நாம சிக்கினோம் அவ்வளவுதான்’ என அப்போது என்னைப் பயமுறுத்தினார்கள். அவர்கள் பயத்திலும் நியாயம் இருந்தது. காரணம், ஃபெரா அப்படிப்பட்ட பொல்லாத சட்டம்.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ பட ஷூட்டிங்குக்காக எம்.ஜி.ஆர்., மூன்று ஹீரோயின்கள், நாகேஷ்... என பெரிய யூனிட்டை அழைத்துக்கொண்டு ஜப்பானுக்குச் சென்றார். அவருக்கு அங்கு செலவுசெய்ய நிறைய ஆட்கள் இருந்தனர். பெரிய ஹோட்டலில் அனைவரும் தங்க அறைகள், சாப்பாடு... என அனைத்தையும் ‘எம்.ஜி.ஆர் பிக்சர்ஸின் பெயரிலேயே வரவு செலவுகளைச் செய்துள்ளனர். படத்தை முடித்துவிட்டு சென்னை வந்த பிறகு கொஞ்ச நாட்களிலேயே இன்கம்டாக்ஸ், சி.பி.ஐ ரெய்டு.

‘எவ்வளவு செலவாச்சு, எங்கெல்லாம் தங்கியிருந்தீங்க, யார் பேர்ல புக் பண்ணுனீங்க...’னு ஏகப்பட்ட கேள்விகள். ‘நண்பர்கள், ரசிகர்கள்தான் செலவுசெய்தார்கள்’ எனச் சொல்லியுள்ளனர். அதுதான் உண்மையும்கூட. ‘இல்ல உங்க தயாரிப்பு நிறுவனம் பேர்லதான் எல்லா பில்களும் இருக்கு’ என எல்லா ஆவணங்களின் ஜெராக்ஸ் காப்பிகளையும் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். சென்னையில்  அப்போது ஜெராக்ஸ் காப்பியே கிடையாது. ஜெராக்ஸ் என ஒரு மெஷின் இருக்கிறதே அப்போதுதான் தெரியவந்தது.

எம்.ஜி.ஆர் மீது வழக்கு போட்டதும் அந்த வழக்கின் முடிவு தெரியாமலேயே அவர் காலமானதும் வருத்தமான விஷயங்கள்.

பிறகு, என் ஆடிட்டர்தான் ஃபெரா சட்டம் குறித்து விளக்கினார். ‘குறைவான நபர்களை அழைச்சிட்டுப்போங்க. அங்கே நண்பர்கள் செலவுபண்ணினா, பில்களை அவங்க பேர்லயே போடச் சொல்லுங்க. எளிமையா இருந்துட்டு வாங்க’ என்றார்.

ரஜினி, ஸ்ரீதேவி, இயக்குநர் எஸ்பி.முத்துராமன் சார், நான் என மொத்தம் 21 பேர்கள். அவர்கள் அனைவருக்கும் இங்கேயே இந்தியப் பணத்தில் சம்பளம் கொடுத்துவிட்டோம். கேமரா, ஃபிலிம் உள்பட அனைத்தையும் இங்கேயே எடுத்துக் கொண்டோம்.

சிங்கப்பூரில் ரஜினி, ஸ்ரீதேவி என சிலருக்கு மட்டும் தனித்தனியாக ரூம் போட்டுவிட்டு நாங்கள் தங்குவதற்கு வாடகைக்கு ஒரு வீடு எடுத்துக்கொண்டோம். நான்கு ரூம்கள், ஹால், மொட்டைமாடி என அது பெரிய வீடு. பெரும்பாலானாவர்கள் அங்கேதான் தங்கினோம். ‘நான் ரூம்லலாம் தங்க மாட்டேன். உங்ககூடத்தான் இருப்பேன்’ என ரஜினியும் எங்களுடன் அந்த வீட்டிலேயே தங்கிவிட்டார்.

ஷூட்டிங்குக்குப் போகும்போது லைட்ஸ், கேமரா லென்ஸ், கேமரா எனத் தனித்தனியாக பேக் செய்யப்பட்ட பைகள் இருக்கும். மலைமேல் ஏறுவது, காட்டுப் பாதை, பீச்... போன்ற இடங்களுக்கு தோளில் தூக்கிச் செல்ல ஆட்களையோ, வண்டியையோ பிடித்தால் செலவு ஆகும் என்பதால், அதையும் நாங்களே பகிர்ந்து தூக்கிச்செல்வோம். அப்போது, ‘குடுங்க... நானும் எடுத்துட்டு வர்றேன்’ எனச் சொல்லி ரஜினி இரண்டு பைகளை வாங்கிக்கொண்டு அசிஸ்டன்ட்போல வொர்க் பண்ணினார்.

சொன்னால் நம்புவது சிரமம்... சிங்கப்பூரில் `ப்ரியா’ பட ஷூட்டிங்குக்கு ரொம்ப சுமாரான காரை வாடகைக்கு ஃபிக்ஸ் பண்ணி, திணித்தது போல் அடைத்துக்கொண்டு ஏழெட்டு பேர் போவோம். தங்குவது, சாப்பிடுவது என அவ்வளவு சிக்கனமாகச் செலவுசெய்தோம். சிங்கப்பூர் அரசிடம் பட ஸ்கிரிப்டைக் காட்டி பெர்மிஷன் வாங்கிவிட்டால் போதும், அரசாங்கம் சம்பந்தப்பட்ட எங்கு வேண்டு
மானாலும் ஷூட் பண்ணிக்கொள்ளலாம். ஆனால் தனியார் கடை, மால்களுக்குள் போய்விட்டால் பணம் தர வேண்டும். அதனால் மொத்தப் படத்தையும் கவர்ன்மென்ட் இடங்களிலேயே ஷூட் செய்து முடித்தோம்.

திரைத்தொண்டர் - 15

ஏற்கெனவே இளையராஜாவின் பாடல்கள் மக்களிடம் ‘ப்ரியா’ படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. படம் ரிலீஸ் ஆனது. சூப்பர் டூப்பர் ஹிட். ரஜினிகாந்துக்கு ‘ப்ரியா’தான் முதல் சில்வர் ஜூப்ளி படம். ஏவி.எம் செட்டியார் தலைமையில்  வெள்ளி விழா நடத்தினோம். ரஜினி-எஸ்பி.முத்துராமன்-பஞ்சு... இந்த மூவர் அணி அடுத்தடுத்து ஏகப்பட்ட சில்வர் ஜூப்ளி படங்கள் கொடுக்கும் என அப்போது நாங்கள் எதிர்பார்க்கவில்லை!

- தொண்டு தொடரும்