மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 48

கலைடாஸ்கோப் - 48
பிரீமியம் ஸ்டோரி
News
கலைடாஸ்கோப் - 48

எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

கலைடாஸ்கோப் - 48

ஃப்ளாப்பி படங்கள்

ஃப்ளாப்பி டிஸ்க் பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்றால், இன்றைய தலைமுறை உங்களை கணினி மூதாதைகளைப்போல பார்க்கலாம்.

நம் ஊரில் கம்ப்யூட்டர் வந்தபோதே ஃப்ளாப்பி டிஸ்க்கும் வந்துவிட்டது. மில்லினியத்துக்குப் பிறகுதான் மெள்ள சிடி-க்கள் வந்து ஃப்ளாப்பிகளைத் துரத்தியடித்தன. எனது பழைய அலுவலகத்தில் ஒருதடவை போகி கொண்டாட பழசை எல்லாம் தூக்கிக் கடாசிய ஒருநாளில், சில ஃப்ளாப்பி டிஸ்க்குகளை, தொல்பொருள் போல கண்டெடுத்து பையில் போட்டுக்கொண்டேன்.

கலைடாஸ்கோப் - 48

1980-ல் லண்டனில் பிறந்த நிக் ஜென்ட்ரி (Nick Gentry), ஃப்ளாப்பி டிஸ்க், வீடியோ டேப், கேசட்ஸ் என்று போன தலைமுறை டெக்னாலஜியைப் பார்த்து வளர்ந்தவர். தான் சேகரித்து வைத்திருந்த ஃப்ளாப்பிகளை கேன்வாஸ்போல பதித்து உருவப்படங்கள் வரைய ஆரம்பித்திருக்கிறார். இதை இவர் `Art of obsolete' எனச் சொல்கிறார். `காலத்தால் பழசாகிவிட்ட பொருட்களின் கலை’ என்று ஒருவாறாக தமிழ்ப்படுத்தலாம். இந்தப் படங்களைப் பற்றி கேட்டால், வாழ்க்கை, இறப்பு என தத்துவார்த்தமாக நிக் பேசினாலும், எனக்குப் பிடிக்கக் காரணம், அதன் விஷுவல் தன்மை. டெக்னாலஜியில் உறைந்து நிற்கும் மனித முகங்கள்.

கலைடாஸ்கோப் - 48

இதில் முக்கியமான விஷயமாக நிக் குறிப்பிடுவது, இந்த ஃப்ளாப்பிகளுக்குள்ளே இருக்கும் பலதரப்பட்ட டேட்டாக்களும் அவரின் ஆர்ட்டுடன் சேர்ந்து ஐக்கியமாகிவிட்டதைத்தான். டிஸ்க்குகளின் உள்ளே அலுவலகக் குறிப்புகள் தொடங்கி அந்தரங்க விஷயங்கள் வரை பதிவாகிக்கிடக்கும் டேட்டாக்கள். இவை எல்லாம் கலந்து நிக்கின் உருவச் சித்திரங்களை ரகசியங்கள் புதைந்துகிடக்கும் கலையாகவும் பார்க்கலாம் என்பது சுவாரஸ்யம். நவீனக் கலைகள் இப்படி பல லேயர்களில் யோசிப்பதற்கும் இடம் தருகின்றன. `நவீனக் கலைகள் சொல்ல வருவது என்ன?’ என்று கேட்பவர்களுக்கு எனது பதில், `அனுபவிக்கணும், ஆராயக் கூடாது’ என்பதுதான்!

கலைடாஸ்கோப் - 48

தியரி

``இது சாத்தியமா பாஸ்?” என்ற லலித், தன் முன்னால் மூடிவைக்கப்பட்டிருந்த பெட்டியைப் பார்த்தான். நேற்று தனிஷ் தந்துவிட்டுச் சென்ற பெட்டி. உள்ளே தங்கக் கட்டிகள். 

“சாத்தியம்... முதலில் தங்கம் ஏன் பொன்னிறத்தில் இருக்கிறது எனும் தியரியை நீ அறிந்துகொண்டால்’’ என்றான் கல்யாண்.

கல்யாணை ஆவலாகப் பார்த்தான் லலித்.

“தங்கம் கனமான அணுக்களால் ஆனது. அதன் உள்ளே இருக்கும் எலெக்ட்ரான்கள் அதிக நிறையின் காரணமாக நியூக்ளியஸை மிகக் குறுகிய வட்டத்தில் அதிவேகமாகச் சுற்றிவருகிறது. ஆகவே, அது ஒளியை உள்ளிழுத்து வெளிவிடும்போது அதிக அலைநீளத்துக்கு வெளியேற்றும். ஒளியில் அதிக அலைநீளம்கொண்ட நிறம் மஞ்சள், அதற்கு அடுத்தது ஆரஞ்சும் சிவப்பும். ஆகவேதான் மஞ்சள் போன்ற பொன்னிறமாக தங்கம் ஒளிர்கிறது. இதுதான் தியரி... புரிந்ததா?” என்றான் கல்யாண்.

“ஒரு மாதிரி புரிந்தது. ஆனால், அதற்கும் இந்தத் தங்கத்தை நாம் கடத்துவதற்கும் என்ன சம்பந்தம்?” என்றான் லலித்.

``அதன் அணுக்களில் சுழலும் எலெக்ட்ரான்களில் சிறிய மாற்றம் செய்யப்போகிறேன். ரசவாதம் என்று வைத்துக்கொள். விளைவு இருபத்து நான்கு மணி நேரத்துக்குப் பொன்னிறமாக ஒளிராது. தங்கத்தை இரும்புபோல காட்டலாம். இரும்பை தங்கம் போலவும் காட்டலாம் ” என்று சிரித்தான் கல்யாண்.

“சூப்பர்” என்றான் லலித்.

கல்யாண் பெட்டியைத் திறந்ததும் அதிர்ந்தான். இரும்புத் துண்டுகள் சீராக அடுக்கப்பட்டிருந்தன.

“நேற்று தங்கமாக மின்னியதே” - எட்டிப்பார்த்தபடி சொன்னான் லலித்.

“தியரி தனிஷுக்கும் தெரிந்திருக்கிறது” என்றான் கல்யாண்!

கலைடாஸ்கோப் - 48

சர்பத்

சர்பத் என்ற வார்த்தையின் மூலத்தைத் தேடினால் அது அரேபியன், பெர்ஷியன், துருக்கி எனக் கண்டம்விட்டு கண்டம் தாவி, நம் ஊர் வரை பரவியதை அறிய முடிகிறது. ஆனால், நன்னாரி அந்த ஊர்களில் எல்லாம் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை. அது நம் நாட்டின் இயற்கை மூலிகைகளில் ஒன்று. சர்பத் என்கிற வார்த்தை வருவதற்கு முன்னரே நன்னாரி வேரையும் வெல்லத்தையும் போட்டு குளிர்ச்சியான பானம் அருந்தும் பழக்கம் இருந்திருக்கலாம். அகத்தியர் குணபாடம் `மென்மதுர நன்னாரி’ என்றே சொல்கிறது.

கோலாக்களின் கோலாகலக் காலத்திலும் குமரி மாவட்டத்தில் அன்றுபோல் இன்றும் சில பெட்டிக்கடைகளில் சர்பத் கிடைக்கிறது. வெற்றிலை பாக்கு, பீடி போக இந்தச் சர்பத்தை நம்பியே அன்று பாட்டாக்கள் பெட்டிக்கடை போடுவார்கள். வழக்கத்தைவிட தடிமனாகவும் பெரிதாகவும் இருக்கும் `குப்பி கிளாஸில்’ எலுமிச்சையைப் பிழிந்துவிட்டு, கால் கிளாஸுக்கு சர்பத்தை நிறைத்து தண்ணீர் ஊற்றுவார்கள். எலுமிச்சையைப் பிழிய மரத்தால் செய்த உபகரணம் ஒன்று வைத்திருப்பார்கள். அது இன்று பெரும்பாலும் வழக்கொழிந்து உலோகத்தில் வந்துவிட்டது. பிற்காலத்தில் ஐஸ்கட்டிகளைப் போடும் பழக்கம் வந்தது... முற்காலத்தில் அதுவும் இல்லை. நன்னாரியின் இயல்பான குளிர்ச்சியே போதுமானதாக இருக்கும்.

90-களில் திறந்த சந்தையில் காலகேயர்கள்போல கோலாக்கள் நுழைந்தபோது, சர்பத் போன்ற உள்ளூர் பானங்கள் எல்லாம் காணாமல்போகும் என்று எல்லோரைப்போலவே நானும் நினைத்தேன். அதிரடியான விளம்பரங்கள், அட்டகாச மார்க்கெட் என கோலாக்கள் படையெடுத்தாலும் நமது ஞாபகங்களில் இருந்து சர்பத்தை அழிக்க முடியவில்லை. அப்போது கொஞ்சம் பின்வாங்கினாலும், இப்போது நன்னாரி வேர் போன்றவற்றை ஆர்வத்துடன் வாங்கும் மக்களை, திருவல்லிக்கேணியின் காலத்தில் உறைந்துவிட்டதைப்போல தோற்றம்காட்டும் வைத்தியர் கடைகளிலேயே பார்க்கிறேன். வேர்களுக்கு அழிவே இல்லை!

கலைடாஸ்கோப் - 48

ஓப்பனர்

பாட்டில் மூடியைத் திறக்க பற்களையே ஓப்பனராகப் பயன்படுத்தும் `பல்’லவர்களைப் பார்த்திருப்பீர்கள். உணவு அல்லது `திரவ’ ஆகாரங்கள் அடைத்த பாட்டில்களையோ, டின்களையோ திறக்கவே ஓப்பனர்கள் பயன்படுத்துகிறார்கள். நம் ஊரில் கடைகளைத் தவிர வீடுகளில் ஓப்பனர்கள் பயன்படுத்துவது அரிது. நகம்வெட்டியில்கூட சின்னதாக ஒரு ஓப்பனர் இருக்கும். அதை பெரும்பாலும் நம் ஊரில் முதுகு சொறியத்தான் பயன்படுத்துகிறார்கள். இப்போது ஃப்ரிட்ஜ்களின் உபயத்தில் சாஸ்கள், குளிர்பானங்கள் என பாட்டில்கள் நம் வீடுகளுக்குள்ளும் புகுந்துகொள்ள ஆரம்பித்துவிட்டதால், மெள்ள வீடுகளுக்குள்ளும் ஓப்பனருக்கு ஒரு ஓப்பனிங் கிடைத்திருப்பதைப் பார்க்கிறேன்.

18-ம் நூற்றாண்டில் டச் கடற்படை, உணவைப் பதப்படுத்தி டின்களில் அடைத்துப் பயன்படுத்தி யிருந்தாலும், அந்த டின்களைச் சரியான முறையில் உருவாக்கியவர் பீட்டர் துராண்ட். 1812-ம் ஆண்டில் பீட்டர் துராண்டின் இந்த டின் கேன்களுக்கு பேட்டன்ட் வாங்கி, உலகின் முதல் பதப்படுத்தப்பட்ட கேன் உணவுகளுக்கான தொழிற்சாலையை ஆரம்பித்தவர் ப்ரையான் டோங்கின். ஆனால், இந்த கேன்களைத் திறப்பதற்கான ஓப்பனர் அப்போது கண்டுபிடிக்கப்படவில்லை. எப்படியாயினும் பசியில் உடைத்தோ, நொறுக்கியோ உணவை வெளியே எடுத்துவிடுவார்கள் என நம்பி இருப்பார்களோ என்னவோ.

கேன்களைக் கண்டுபிடித்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகு 1850-களில்தான் ராபர்ட் யீடஸ் என்கிற மெக்கானிக், டின் ஓப்பனர்களைக் கண்டுபிடித்திருக்கிறார். பாட்டில் ஓப்பனர்களைக் கண்டுபிடித்தவர் வில்லியம் பெயின்டர். கிட்டத்தட்ட அதே காலம். ஓப்பனர் போன்ற சின்னஞ்சிறிய பொருட்களின் வரலாற்றைத் தேடினால்கூட மக்களின் உணவுப்பழக்கம், பொருளாதாரம், உணவு அரசியல் எனப் பெரிதாக ஒரு வலை விரிகிறது.

கலைடாஸ்கோப் - 48

டின்களுக்குள்ளோ, பாட்டில்களிலோ அடைத்துவைத்த ஆகாரத்தை எக்ஸ்பயரி தேதி பார்த்துச் சாப்பிடும் உணவுப்பழக்கமா... அல்லது சுடச்சுட தோசையோ இட்லியோ சீவிய இளநீரோ ஃப்ரெஷ்ஷாகச் சாப்பிடும் பழக்கமா... எது நல்லது என்பது நமது சாய்ஸ்தான். பாட்டில் ஓப்பனர் அல்ல, உண்மையில் நமக்கு தேவை நம் அறிவைத் திறக்கும் `ஓப்பனர்’! 

கலைடாஸ்கோப் - 48

ஊசிகள்

புகைப்படக் கலைஞர் நண்பர் பால் கிரேகோரி, ஒரு புத்தகத்தை அன்பளிப்பாக கையில் திணித்து, குறிப்பிட்ட ஒரு கட்டுரையைப் படிக்கச் சொன்னார்.

அது எழுத்தாளர் நக்கீரன் எழுதிய `திருடப்பட்ட தேசம்’ என்னும் புத்தகம். பால் சொன்ன கட்டுரை ஐந்தாவதாக இருந்தது.

ஆங்கில மருத்துவத்தில் `germ theory' எனச் சொல்வார்கள். இந்த வகை கருத்துக்கள் முன்னரே மேற்கின் மருத்துவ உலகில் உருவாகிவந்தாலும், லூயி பாஸ்டர் அதில் முக்கியமானவர்.

கிருமிகளால்தான் சில குறிப்பிட்ட நோய்கள் வருகிறது என்பதே அந்த தியரி. இந்த தியரியை அடிப்படையாகக்கொண்டுதான் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக `தடுப்பூசி’ என்னும் கான்செப்ட் உலகம் முழுக்க அமலில் இருக்கிறது. ஆயுத சந்தை யுத்தங்களையும் கலவரங்களையும் நம்பி இருப்பதுபோல, இந்தத் தடுப்பூசிச் சந்தை நோய்களையும் கிருமிகளையும் நம்பியிருக்கிறது. இந்த ஜெர்ம் தியரியை அம்பலப்படுத்துவது வழியாக, தடுப்பூசிச் சந்தையைக் கேள்விகேட்கும் ஒரு புத்தகம். goodbye germ theory எழுதியவர் வில்லியம் பி. ட்ரெபிங் (william p trebing) என்னும் மருத்துவரேதான்.

வில்லியம் ட்ரெபிங் புத்தகம் உள்பட பல தரவுகளை அடிப்படையாகக்கொண்டு, நக்கீரன் எழுதிய கட்டுரைதான் (வாசிக்கும்போது அதிர்ச்சியூட்டக்கூடிய) `குழந்தைகளின் மீது மருத்துவம் நிகழ்த்தும் வன்முறைகள்’. தடுப்பூசிகளின் ஈவுஇரக்கமற்றப் பொருளாதார அரசியலைப் பேசும் இந்தக் கட்டுரை, ஒவ்வொரு பெற்றோரும் வாசிக்கவேண்டியது எனச் சொல்வேன். தடுக்க வேண்டியது நோய்களையா... ஊசிகளையா?