மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திரைத்தொண்டர் - 16

திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம்
பிரீமியம் ஸ்டோரி
News
திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம் ( திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம் )

பஞ்சு அருணாசலம், படங்கள் உதவி: ஞானம்

திரைத்தொண்டர் - 16

டத் தயாரிப்பில் மற்றவர்களோடு இணைந்து ஈடுபட்டதில் ஏகப்பட்ட கசப்பு. ‘அன்னக்கிளி’, `கவிக்குயில்’, `ப்ரியா’ இவை மூன்றும், என் தம்பி சுப்புவுடன் சேர்ந்து பண்ணின படங்கள். சுப்புவை, நான்தான் தயாரிப்பாளர் ஆக்கினேன். நடிகர்-நடிகைகள், டெக்னீஷியன்கள் புக் பண்ணுவது தொடங்கி, எல்லா வேலைகளையும் நான்தான் கவனித்தேன். ‘இந்தா, உனக்கு இவ்வளவுதான்’ என ‘அன்னக்கிளி’ சமயத்திலேயே சொல்லியிருந்தால், சத்தம்போடாமல் கொடுத்ததை வாங்கிக்கொண்டுப் போயிருப்பான். ஆனால், விட்டுக்கொடுத்தே ஏமாந்தேன் எனச் சொல்லலாம். `அன்னக்கிளி’ மிகப் பெரிய வசூல். ஆனால் எதுவும் எனக்குத் தரவில்லை. கேட்டால், ‘ ‘கவிக்குயில்’ பட லாபத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றான். ஆனால், ‘கவிக்குயில்’ படம் நஷ்டம். அதை முழுவதையும் நானே அடைத்தேன். தம்பிதான் இப்படி என்றால், தயாரிப்பாளர் பாஸ்கருடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப்பில் பண்ணின ‘காயத்ரி’ பட லாபத்தையும் அவர் எனக்குத் தரவில்லை. அதில் வந்த லாபத்தில் அவர் வீடு வாங்கிக்கொண்டார்.

‘இனி பார்ட்னர்ஷிப்பே வேண்டாம். நாமே தனியாக படம் எடுப்போம்’ என முடிவுசெய்து ‘ப்ரியா’ எடுக்கத் திட்டமிட்டேன். பூஜை போடவில்லை, ஷூட்டிங் போகவில்லை. அவ்வளவுதான். மற்றபடி ரஜினி உள்பட எல்லா ஆர்ட்டிஸ்ட்களுக்கும் அட்வான்ஸ் கொடுத்து ஃபாரீன் படப்பிடிப்புக்குத் திட்டமிட்டு இருந்தோம். அந்தச் சமயத்தில் ஊரில் இருந்து என் அம்மா போன் பண்ணினார். நான் தனியாகப் படம் பண்ணும் விஷயத்தை என் தம்பி, அம்மாவிடம் சொல்லி அழுது புலம்பியிருக்கிறான்.

எங்கள் அம்மா, ஓர் அப்பாவி; உலகமே தெரியாத மனுஷி. ‘சுப்பு வந்து அழுறான்டா பஞ்சு. ‘எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு.

நீ சொன்னாத்தான் அவுரு கேப்பாரு’ங்கிறான். எனக்கு என்ன நடந்துச்சு, ஏது நடந்துச்சுனு எதுவும் தெரியாது. இந்த ஒரு படம் மட்டும் நீ அவனுக்குப் பண்ணிக்கொடு’ என்றார். அம்மா இப்படிக் கேட்டதும் பயங்கர எமோஷனாகி விட்டேன். காரணம், அம்மா அதுவரை ஆசைப்பட்டு என்னிடம் எதுவுமே கேட்டது கிடையாது. துணிமணி, பணம் என நான்தான் அனுப்புவேன். அவர்களையும் பார்த்துக்கொள்கிறேன், தங்கைகளைப் படிக்கவைக்கிறேன் என்பது அம்மாவுக்குத் தெரியும். ஆனாலும் ‘எனக்கு ஒரு நெக்லஸ் வாங்கிக்கொடு, செயின் வாங்கிக்கொடு’ இப்படிச் சிறியதாகவோ பெரியதாகவோ அவர் எதுவுமே என்னிடம் கேட்டதே இல்லை.

‘எதையும் என்னிடம் கேட்காத அம்மாவே கேட்கிறார்... பண்ணுவோம்’ என நினைத்து, மீண்டும் தம்பியுடன் இணைந்து ‘ப்ரியா’வைத் தயாரித்தேன். படம் மிகப் பெரிய வெற்றி. ‘இனி யார் சொன்னாலும் அண்ணன் நமக்காகப் படம் பண்ண மாட்டார்’ என நினைத்தானோ என்னவோ, வந்த வரை லாபம் என நினைத்து தியேட்டர் மூலம் வந்த லாபம், இந்தி, தெலுங்கு ரைட்ஸ்... என அந்தப் படம் மூலம் வந்த ஒட்டுமொத்த லாபத்தையும் எடுத்துக் கொண்டான். அதன் மூலம் வந்த பணத்தில் என் தம்பிகள் சொந்தமாக வீடு வாங்கினார்கள். ஆனால், நானோ தொடர்ந்து குடியிருந்தது அதே தி.நகர் மூசா தெரு வாடகை வீட்டில்தான்.

நடிகர்-நடிகைகள், டெக்னீஷியன்கள் என என் நண்பர்கள் அனைவருக்கும் நான் ஏமாற்றப்படும் விஷயம் தெரியும். ‘நீங்க முட்டாள்தனமா பண்றீங்க. நீங்களே சொந்தமா படம் பண்ணவேண்டியதுதானே. நாங்க என்ன உங்க தம்பிக்காகவா உங்களோட வொர்க் பண்றோம். உங்களுக்காகத்தானே பண்றோம்’ என என்னை சத்தம்போடுவார்கள். ‘சொந்தம்பந்தம் வேறு, தொழில் வேறு. தம்பிகளுக்கு உதவ வேண்டும் என்றால், வேறு வகையில் செய்வோம். இனி தொழிலில் அவர்களை அனுமதிக்கக் கூடாது’ என முடிவுசெய்து, நானே சொந்தமாகத் தொடங்கிய கம்பெனிதான், ‘பி.ஏ ஆர்ட் புரொடக்‌ஷன்ஸ்’.

அது கமல், ரஜினி இருவரும் சேர்ந்து நடித்துக்கொண்டு இருந்த சமயம். என் கம்பெனியின் முதல் தயாரிப்பிலேயே இருவரையும் சேர்த்து வைத்து ஒரு படம் பண்ண விரும்பி அவர்களிடம் கால்ஷீட் கேட்டேன். இருவரும் ஒரு வருடம் கழித்து கால்ஷீட் தந்திருந்தனர். என் படத்துக்கு அவர்கள் தந்த கால்ஷீட் தேதி நெருங்கியது. அந்த இடைப்பட்ட ஒரு வருடத்தில் அவர்கள் சேர்ந்து நடித்த சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. அப்போது, `ரஜினி, கமல் இருவரும் இனி சேர்ந்து நடிப்பது இல்லை என்று அவர்கள் பேசி முடிவுசெய்து இருக்கிறார்கள். நீங்கள் ரெடியாக வைத்துள்ள கதை ரஜினி, கமல் இருவரில் யாருக்கு பொருத்தமாக இருக்கிறதோ அவரை வைத்து இந்தப் படத்தை எடுத்து விடுங்கள். இன்னொருவரை வைத்து அடுத்த படம் எடுத்துக்கொள்ளலாம்’ என்று அவர்கள் சொன்ன தகவலை இயக்குநர் எஸ்பி.முத்துராமன் என்னிடம் சொன்னார். ‘அவங்க சேர்ந்துதானே படம் பண்ண மாட்டாங்க. இருவரும் தந்துள்ள கால்ஷீட்டை மாற்ற வேணாம்னு சொல்லுங்க. இருவரையும் வைத்து ஒரே சமயத்தில் தனித்தனியாக பண்றேன்’ என்றேன். அவர்களும் ஓ.கே சொல்ல இருவருக்கும் நான் பண்ணின படங்கள்தான் ‘கல்யாணராமன்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’. இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி வெற்றதை நான் ஏற்கெனவே குறிப்பிட்டு இருக்கிறேன்.

தற்கு முன்னர் `காயத்ரி' படம் தொடங்கிய சமயத்தில் என் நண்பர் ராஜண்ணா `தமிழில் பெரிய நடிகரை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும்' என ஆசைப்பட்டார். அப்போது அவரும் நானும் சேர்ந்து தொடங்கிய படம்தான் ‘கவரிமான்’. சிவாஜி சார், ஸ்ரீதேவி உள்பட அந்தப் படத்தில் ஏகப்பட்ட ஆர்ட்டிஸ்ட்டுகள். அதற்கும் எஸ்பி.முத்துராமன் சார்தான் டைரக்‌ஷன். இன்னும் ஒரு வார காலம் படப்பிடிப்பு மீதி இருந்த நிலையில் ‘தச்சோலி அம்பு’ என்ற ஒரு மலையாளப் பட ஷூட்டிங்கில் நடந்த விபத்தில் சிவாஜி சார் காயமடைந்து ஓய்வில் இருந்தார். அதற்குள் நான் `காயத்ரி', `ப்ரியா'வை ரிலீஸ் செய்து ‘ஆறிலிருந்து அறுபதுவரை’, ‘கல்யாணராமன்’ ஷூட்டிங் தொடங்கி முக்கால்வாசி முடித்து விட்டேன்.

பிறகு ஆறேழு மாத ஓய்வுக்குப் பிறகு ‘கவரிமான்’ படத்துக்காக சிவாஜி சார் கால்ஷீட் தந்திருந்தார். அப்போது முத்துராமன் சார் ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ படப்பிடிப்பில் பரபரப்பாக இருந்தாலும் அவர் அசரவில்லை. ஏவி.எம்-ல் வேறொரு ஃப்ளோரில் ‘கவரிமான்’க்கு செட் போட்டு ஒரே சமயத்தில் அந்தப் படத்தையும் ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ படத்தையும் மாறி மாறி படப்பிடிப்பு நடத்தி யாருடைய கால்ஷீட்டையும் வீணாக்காமல் இரண்டு படங்களையும் முடித்தார்.

இந்த மூன்று படங்களில் ‘ஆறிலிருந்து அறுபவதுவரை’யும், ‘கல்யாணராம’னும் இரண்டு வார இடைவெளியில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆனது. அதற்கு அடுத்த ரிலீஸ் ‘கவரிமான்’. இந்த மூன்று படங்களுமே பெரிய அளவில் வெற்றிபெற்றன. இவற்றின் மூலம் நல்ல லாபம் வந்தது. அந்தப் பணத்தில்தான் என் தங்கைகளுக்குத் திருமணம் முடித்தேன். ஒரு சவரன் 120 ரூபாய்க்கு விற்ற அந்தக் காலத்திலேயே ஒவ்வொரு தங்கைக்கும் ஒன்றரை லட்சத்துக்குமேல் செலவுசெய்து திருமணம் செய்துவைத்தேன். என் அப்பாவுக்கு சஷ்டியப்த பூர்த்தியை பெரிய அளவில் செலவுசெய்து திருப்தியாகச் செய்தேன். இப்படி அந்த படங்களின் லாபத்தில் என் கடமைகளை எல்லாம் செய்து முடித்தேன்.

திரைத்தொண்டர் - 16

அப்போது லாபம் என்பது, ராயல்டி, ஏரியா ரைட்ஸ் என 50 ஆயிரம் ரூபாய், ஒரு லட்சம்... எனச் சிறுகச் சிறுகத்தான் வரும். அதேபோல ரீமேக் ரைட்ஸ் எல்லாம் இப்போதுபோல ரிலீஸ் ஆன மூன்றாவது நான்காவது நாளிளேயே யாரும் கேட்டு வர மாட்டார்க்ள். படம் ரிலீஸ் ஆகி ஆறேழு மாதங்களுக்குப் பிறகோ, ஒரு வருடத்துக்குப் பிறகோதான் ரைட்ஸ் கேட்டு வருவார்கள். அப்படி ‘கல்யாணராமன்’ படத்தை இந்தியில் ரீமேக் ரைட்ஸ் கேட்டு மூன்று நான்கு பேர் வந்தனர்.

என் படங்களுக்கு, ஸ்ரீசந்த் என்கிற இந்திக்காரர்தான் அப்போது ஃபைனான்ஸ் செய்வார். அவர்தான் ‘கல்யாணராமன்’ பட இந்தி ரைட்ஸை விற்றுக் கொடுத்தார். அப்போது தர்மேந்திரா அங்கு நிறைய ஆக்‌ஷன் படங்கள் செய்துகொண்டிருந்தார். அவர் `கல்யாணராம'னைப் பார்த்துள்ளார். பிறகு, ஒரு தயாரிப்பாளரை அழைத்து, ‘அந்தப் படம் வித்தியாசமா இருக்கு. ஒரே ஒரு ஃபைட்தான். இப்படி ஒண்ணு பண்ணிப் பார்ப்போம். நீ ரிஸ்க்னு நினைச்சா எனக்கு சம்பளம் தர வேணாம். படம் ஓடுச்சுன்னா சம்பளம் கொடு’ எனச் சொல்லியிக்கிறார். அந்தத் தயாரிப்பாளரும் ஸ்ரீசந்த்தும் நண்பர்கள்.

‘நீதானே ஃபைனான்ஷியர். அந்தப் பட புரொடியூஸர்கிட்டப் பேசி ரைட்ஸ் வாங்கிக்கொடு’ என அந்த புரொடியூஸர் ஸ்ரீசந்த்திடம் கேட்க, `பஞ்சு, நான் பேசுறேன். நீங்க பேசாதீங்க’ எனச் சொல்லி, ‘அந்தப் படம் எவ்வளவு கலெக்ட் பண்ணியிருக்கு? எந்த அளவுக்கு சக்சஸ் ஆகியிருக்கு?’ எனப் புள்ளிவிவரம் காட்டி, ‘பெரிய அமவுன்ட்டா இருந்தா கொடுப்பார். இல்லைன்னா அவரே `இந்தியிலும் கமலை வெச்சு எடுக்கிறேன்'னு சொல்றார்’ எனச் சொல்லியிருக்கிறார்.

அந்தத் தயாரிப்பாளர் அதிகம் பேரம் பேசாமல் மூன்று லட்சத்துக்குப் பேசி, ஒரே பேமென்ட்டாக டிராஃப்ட் எடுத்துக் கொடுத்தார். நான் சிறுகச் சிறுக நிறையப் பணம் பார்த்துள்ளேன். ஆனால், மூன்று லட்சத்தை ஒரே டிராஃப்ட்டில் பார்த்தது என் வாழ்க்கையில் அதுதான் முதல்முறை. ‘இதை வெச்சு முதல்ல நல்ல வீடா வாங்குங்க’ என்றார் ஸ்ரீசந்த். இவர், பிறகு ரியல்எஸ்டேட் பிசினஸில் செட்டில் ஆனதும் அண்ணாசாலையில் மூடிக்கிடந்த நியூ எலிவின்ஸ்டன் திரையரங்கை விலைக்கு வாங்கி, அதை இடித்துவிட்டு, அங்கே ரஹேஜா காம்ப்ளெக்ஸைக் கட்டியவர் என்பதும் கூடுதல் தகவல்.
அப்போது மாம்பலத்தில் ஒரு கிரவுண்டு ஒன்றரை லட்சத்துக்கு விற்றுக்கொண்டிருந்த நேரம். அந்த மூன்று லட்சத்துக்கு இரண்டு கிரவுண்டு நிலம் வாங்கலாம். வீடோடு வாங்கினால் ஒன்றரை கிரவுண்டில் வாங்கலாம். ஆனால், வீடு வாங்கணும், இடம் வாங்கணும் என்ற ஆசையே எனக்குக் கிடையாது. மேலும் மேலும் நிறைய எழுதி வளர வேண்டும் என்பதுதான் என் விருப்பம். ‘இந்திப் படம் எடுப்போம்’ என்று ஆசை வந்தது. அப்போது எல்.வி.பிரசாத் புரொடக்‌ஷனில் பாலசந்தர் சார் டைரக்‌ஷனில் ‘ஏக் துஜே கேலியே’ படத்தில் கமல் நடித்துக்கொண்டிருந்தார். பாலசந்தர் சார் படங்களில் எத்தனையோ படங்கள் எனக்குப் பிடிக்கும். `அதில் அதிகமாக ரசித்த 10 படங்கள் எவை?' எனக் கேட்டீர்கள் என்றால், அதில் இந்தப் படமும் ஒன்றாக இருக்கும்.

அந்தப் படம் முடியும் சமயம். ‘இந்தப் படம் இந்தியில் சூப்பராக ஓடும். கமலுக்கு நிச்சயமாக அங்கே ஒரு பெரிய மார்க்கெட் வரும். அந்தப் பட ரிலீஸை ஒட்டி நாம் கமலை வெச்சு இந்திப் படம் எடுத்தால் லாபமும் பெருசா வரும். பெரிய பேர் கிடைக்கும்’ என நினைத்தேன். இத்தனைக்கும் எனக்கு இன்று தெரிந்த வியாபார நுணுக்கம்கூட அன்று தெரியாது.

அந்த மூன்று லட்சம் ரூபாய் டிராஃப்ட்டை எடுத்துக்கொண்டு கமல் சாரிடம் போனேன். ‘கமல், இந்த மாதிரி விஷயம்...’ என எல்லா விஷயங்களையும் சொன்னேன். பொறுமையாகக் கேட்ட கமல், ‘செட்டியாரே, நானும் எங்கேயும் ஓட மாட்டேன். இந்திப் பட மார்க்கெட்டும் எங்கேயும் ஓடிப்போகாது. நானும் இருப்பேன், நீங்களும் இருப்பீங்க. முதல்முதல்ல பெரிய அமவுன்ட் வந்திருக்கு. வீடு வாங்கிட்டீங்களா? இல்லைல. முதல்ல போய் இடம் வாங்கி, வீடு கட்டுங்க. நாம அப்புறம் இந்திப் படம் பண்ணுவோம்’ என்றார். அவர் சொன்னபடியே இப்போது தி.நகரில் குடியிருக்கும் இந்த மூணு கிரவுண்டு இடத்தை இரண்டே கால் லட்சம் ரூபாய்க்கு வாங்கினேன்.

பாலசந்தர் சார், நான், எஸ்பி.முத்துராமன் சார், மகேந்திரன் சார், பாரதிராஜா இப்படி அடுத்த தலைமுறை இயக்குநர்கள், எழுத்தாளர்கள், புதுப்புதுத் தயாரிப்பாளர்களுடன் இளையராஜாவின் இசை என, தமிழ் சினிமா அப்போது செழிப்பாக இருந்தது. அமிதாப் பச்சன் இந்தியில் உச்சத்தில் இருந்தாலும் அவர் படம் உள்பட எந்த இந்திப் படங்களும் தமிழகத்தில் பெரிய அளவுக்கு வரவேற்பு இல்லை. ‘நாம எதிர்பார்த்தது நடந்துவிட்டது’ என்ற அந்த மகிழ்ச்சியை அனுபவித்தபடி நாங்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தோம்.

எங்களின் உற்சாகம், சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த பழைய தயாரிப்பாளர்களையும் தொற்றத் தொடங்கியது. எம்.ஜி.ஆரை வைத்து அதிகமான படங்களைத் தயாரித்த தேவர் ஃபிலிம்ஸ், எம்.ஜி.ஆர் சினிமாவில் இருந்து விலகியதால் படத் தயாரிப்பில் இருந்து விலகியிருந்தது. பிறகு அவர்கள் மீண்டும் சினிமா தயாரிப்பில் இறங்கினர். ‘அன்னை ஓர் ஆலயம்’, ‘அன்புக்கு நான் அடிமை’ என ரஜினி சாரிடமும் ‘ராம் லட்சுமண்’ என கமல் சாரிடமும் கால்ஷீட் வாங்கி பரபரப்பாக இருந்தனர்.

மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமான ஏவி.எம் சினிமா தயாரிப்பில் இருந்து விலகிய சமயத்தில் வரிசையாக ஏழெட்டு படங்கள் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை. தவிர, அப்போது மார்க்கெட்டும் நன்றாக இல்லை. அந்தச் சமயத்தில், ‘கொஞ்ச நாளைக்கு நாம படம் எடுக்க வேணாம்’ என அப்புச்சி சொல்ல, அவர்களும் தயாரிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தனர். அப்போது ஏவி.எம் ஸ்டுடியோ ஃப்ளோர்களை வெளிப்படங்களுக்கு வாடகைக்குக் கொடுத்ததாக சரித்திரமே கிடையாது. அவர்கள் படம் எடுப்பதை நிறுத்திய பிறகுதான் வாடகைக்குவிடத் தொடங்கினர். அப்போது அவர்களும் மீண்டும் படம் தயாரிக்கலாம் என முடிவுசெய்து இரண்டு படங்களை அறிவித்து இருந்தனர். இரண்டு படங்களுக்குமே ஹீரோ கமல். ஒரு படத்துக்கு பாலசந்தர் சார், இன்னொரு படத்துக்கு பாரதிராஜா இயக்குநர்கள். அவர்கள் மீண்டும் படத் தயாரிப்புக்குள் வருவதால் ஆர்ட்டிஸ்ட், டெக்னீஷியன்கள் எனப் பலருக்கும் நிறைய வாய்ப்புகள் கிடைக்குமே என எங்களுக்கு மிகப் பெரிய சந்தோஷம்.

அந்தச் சமயத்தில் ஒருமுறை இளையராஜாவின் ரிக்கார்டிங்க்காக ஏவி.எம் ஸ்டுடியோ போயிருந்தேன். அப்போது ஏவி.எம்-மின் மேனேஜர் வீரப்பன் வந்து, ‘அவசரம் இல்லை. ரிக்கார்டிங் முடிச்சுட்டு வீட்டுக்குப் போகும்போது சரவணன் சார் உங்களைப் பார்த்துட்டுப் போகச் சொன்னார்’ என்றார். சரவணன் சாரைச் சந்தித்தேன். ‘பஞ்சு சார், நாங்க திரும்பவும் படம் பண்றது உங்களுக்குத் தெரியும்தானே? `நீங்க எப்ப கூப்பிட்டாலும் நான் வந்து பண்றேன்’னு கமல் சொல்லியிருக்கார். ஆனால், பாலசந்தர் சாரும் பாரதிராஜாவும் அவங்க கமிட்மென்ட்ஸை முடிச்சுட்டு எங்களுக்கு எப்ப படம் பண்ணுவாங்கனு தெரியலை. ஓ.கே. அவங்க பண்ணும்போது பண்ணட்டும். நீங்க எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா?’ என்றார்.

‘சொல்லுங்க சார், நான் என்ன செய்யணும்?’ என்றேன்.

‘ரஜினி சார்கிட்ட ஒரு கால்ஷீட் வாங்கித் தர முடியுமா?’ என்றார்.

‘நிச்சயமா சொல்றேன் சார்’ என்றேன்.

அப்போது பாலசந்தர் சார் சில படங்களில் கமிட் ஆகியிருந்தார் என நினைக்கிறேன். தவிர, பிரமிட் நடராஜனுடன் சேர்ந்து சொந்த கம்பெனி ஆரம்பிக்கும் முயற்சியில் இருந்தார். ஏவி.எம்-மிலும் கமிட் ஆகியிருந்தார். பாரதிராஜாவுக்கும் வெவ்வேறு கமிட்மென்ட்ஸ் இருந்தன. இந்த மாதிரி விஷயங்களால்தான் அவர்கள் இயக்குவதாக இருந்த ஏவி.எம் படங்கள் தள்ளிப்போயிருக்கும் என நினைக்கிறேன்.

பிறகு சரவணன் சார் கேட்ட விஷயத்தை, ரஜினி சாரிடம் சொன்னேன். அப்போது ரஜினியிடம் ஏகப்பட்ட பேர் கால்ஷீட் கேட்டிருந்தனர். ‘நிச்சயமா பண்றேன் சார்.

ஏவி.எம் கேட்டு பண்ணாம இருப்பேனா. ஆனா, உங்களுக்கே தெரியும். உங்க படம் உள்பட இந்த வருஷம் கமிட்மென்ட் சரியா இருக்கு. அடுத்து ஆர்டர் பண்ணும்போது ஏவி.எம்-க்கு ஃபர்ஸ்ட்டா கால்ஷீட் தர்றேன்னு சொல்லுங்க’ என்றார். நானும் அந்த விஷயத்தை சரவணன் சாரிடம் சொல்லிவிட்டேன்.

பிறகு, சில நாட்கள் கழித்து சரவணன் சார் மீண்டும் அழைத்திருந்தார். `ரொம்ப நாளைக்குப் பிறகு இண்டஸ்ட்ரி நல்லா இருக்கு. நாம திரும்பவும் படம் எடுக்கலாம்’ங்கிற எண்ணத்துக்கு அப்புச்சி வந்தாங்க. ஆனா, கமிட் பண்ணின அந்த இரண்டு படங்களும் தள்ளிப்போகுது. இப்ப ரஜினியும் `அடுத்த வருஷம் கால்ஷீட் தர்றேன்'னு சொன்ன விஷயத்தை அப்புச்சிகிட்ட சொன்னா, அவர் மூட் அவுட் ஆகி, `நமக்கும் படம் எடுக்கிறதுக்கும் ராசி இல்லைபோல. நல்லா வசதியா இருக்கோம். போதும், நீங்க பேசாம ஸ்டுடியோவை மட்டும் கவனிச்சுக்கங்க’னு சொல்லிட்டார்னா எந்தக் காலத்துலயும் இனி நாங்க படம் எடுக்க முடியாது. ஏன்னா, அப்புச்சி பேச்சை நாங்க தட்ட மாட்டோம்னு உங்களுக்கே தெரியும். ஆனால், அந்தச் சூழ்நிலை வராம இருக்க நீங்க நினைச்சா முடியும்’ என்றார்.

திரைத்தொண்டர் - 16

‘என்ன சார் செய்யணும் சொல்லுங்க. எழுதித் தர்றதுன்னா எப்ப வேணும்னாலும் கூப்பிடுங்க சார், வந்து எழுதித் தர்றேன்’ என்றேன்.

‘இல்லை... நீங்க எப்ப ரஜினி படம் ஆரம்பிக்கப்போறீங்க?’ என்றார்.

‘இன்னும் ரெண்டு மாசத்துல ஆரம்பிச்சுடுவேன் சார்’ என்றேன்.

‘பஞ்சு சார் எனக்கு எப்படிச் சொல்றதுன்னு தெரியலை. தப்பா நினைச்சுக்காதீங்க. உங்க ரஜினி கால்ஷீட்டை நீங்க எங்களுக்கு விட்டுத்தரணும். அடுத்த வருஷம் எங்களுக்கு தர்றேன்னு சொன்ன அந்த கால்ஷீட்டை நீங்க வாங்கிக்கங்க. ஏன்னா, ஒரு படம் ஆரம்பிச்சுட்டோம்னா நாங்க ரெகுலரா தொடர்ந்து படம் பண்ண இது ஒரு கிரீன் சிக்னலா இருக்கும். பிறகு, அப்புச்சியும் ஒண்ணும் சொல்ல மாட்டார்’ என்றார்.

அப்போது அவருக்கு நான் என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் அமர்ந்து இருந்தேன்.

- தொண்டு தொடரும்...