மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 49

கலைடாஸ்கோப் - 49
பிரீமியம் ஸ்டோரி
News
கலைடாஸ்கோப் - 49

எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

கலைடாஸ்கோப் - 49

கண்

ராணுவத் தளபதி கே, தனிமையில் சுவர் முழுக்க பரவியிருந்த சி.சி.டி.வி டிஸ்பிளேக்களைப் பார்த்துக்கொண்டி ருந்தார்.

சி.சி.டி.வி கேமராக்களை நாட்டின் இண்டுஇடுக்குகளில்கூடப் பொருத்தியாயிற்று. இப்போது ரோபோக்களிடம் இருந்து எந்த அச்சுறுத்தலும் இல்லை; பயமும் இல்லை.

மக்கள் சந்தோஷமாக ஷாப்பிங் செய்துகொண்டும் விளையாடிக்கொண்டும் வேலைக்குப் போய்க்கொண்டும் சிக்னல்களுக்குக் கட்டுப்பட்டு வாகனங்களை நிறுத்தி காத்துக்கொண்டும்… இருந்தார்கள்.

ரோபோக்கள் வன்முறையைப் பிரயோகித்து, மனிதர்களை அழித்து, நாட்டைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைப்பது இனியும் நடக்காது. ஒரு ரோபோவைக்கூட விட்டுவைக்காமல் எல்லாவற்றையும் அழிக்கச்சொல்லி உத்தரவுபோட்டு மூன்று நாட்களாகிவிட்டதை நினைத்துக்கொண்டார்.

ரிமோட்டை அழுத்தி, டிஸ்பிளேக்களை மாற்றி, தனது அறையின் வெளிப்புறம் முதல் நாட்டின் தெருக்கள், வீதிகள், பரபரப்பான சாலைகள், மக்கள் கூடும் இடங்கள் வரை ஒரு சுற்று பார்த்தார். எங்கும் மனிதர்கள் சந்தோஷமாக இருந்தார்கள். ஒரு ரோபோவைக்கூடப் பார்க்க முடியவில்லை.

`சுபிக்‌ஷம்’ என்று தனக்குத்தானே சொல்லியபடி ரிலாக்ஸ் ஆனார். கதவு தட்டப்படவும் தளர்வாக எழுந்து நடந்து சென்று திறந்தார்.

சட்டென்று இரண்டு ரோபோக்கள், அவரை உள்ளே தள்ளியபடி வந்து நின்றன. அதிர்ந்து தடுமாறி கீழே விழுந்தார். மாஸ்டர் ரோபோ இயந்திரச் சிரிப்புடன் வந்து நின்று, குனிந்து அவரைப் பார்த்துச் சொன்னது... “இரண்டு நாட்களாகப் பழைய ஃபுட்டேஜ்களைப் பார்த்துக்கொண்டிருக் கிறாய். வெளியே ஒரு மனிதர் இல்லை. நீ மட்டுமே கடைசி” என்றது... பச்சைக் கண்களில் ஒளிர் வன்மம்.

“எப்படிச் சாத்தியம்... எங்கள் சி.சி.டி.வி கேமராக்கள் எங்களை ஏமாற்றாது” என்றபடி தரையில் இரண்டு ஸ்டெப்கள் பின்னால் இழைந்தார் கே.

“சி.சி.டி.வி கேமராக்களும் ரோபோக்கள்தான் என்பதை மறந்துவிட்டாயா?” எனச் சிரித்தது ரோபோ. தன் அறைச் சுவரின் மூலையை அண்ணாந்து பார்த்தார் கே.

கே-வின் அறையில் இருந்த சி.சி.டி.வி கேமரா ஆட்டோமேட்டிக்காக இயந்திரத் தலையைத் திருப்பி தன் ஒற்றைக் கண்ணால் அவரைப் பார்த்தது!

கலைடாஸ்கோப் - 49

மார்க்

எல்லா குழந்தைகளிடமும் ஓவியனோ, இசைக் கலைஞனோ, நடனக்காரனோ ஒளிந்திருப்பார்கள். சின்னக் கிறுக்கல்களில், மழலைப் பாடல்களில், தப்பும் தவறுமாக அதே நேரம் `க்யூட் ஸ்டெப்’களில் அதை நாம் பார்த்திருப்போம். ஆனால், நமது நாடு விரைவில் வல்லரசாக மாற இன்ஜினீயர்கள், டாக்டர்கள் அதிக எண்ணிக்கையில் தேவை என்ற ஒரே `நல்ல எண்ணத்தில்’ கலைகளை எல்லாம் குழந்தைகளிடம் இருந்து அழித்துவிட்டு `படி... படி...’ எனப் படுத்தி எடுத்து ரேஸில் ஓடவிடுகிறோம். குழந்தைகளா இல்லை குதிரைகளா எனச் சந்தேகம் வருகிறது.

கலைடாஸ்கோப் - 49

மார்க் ஆலென்டே (marc allante) என்கிற இளம் ஓவியரின் ஒழுகும் மை ஓவியங்கள் (Dripping ink illustrations) இன்று உலகம் முழுதும் பிரபலம். ஹாங்காங்கைச் சேர்ந்த இவர் ஓவியங்களில், வண்ணங்களும் அதைப் பயன்படுத்தும் விதமும் பார்ப்பவரின் மனதையும் கரைந்து ஒழுகச் செய்பவை. மை ஓவியங்கள் வரைவது சீன ஓவிய மரபில் முக்கியமான அம்சம். மார்க் இந்த மரபையும் மேற்கத்திய நீர் வண்ண ஓவியங்களின் பாணியையும் இணைத்து, சுவராஸ்யமான ஒரு புதிய ஸ்டைலில் தன் படைப்புகளை உருவாக்குகிறார்.

கலைடாஸ்கோப் - 49

இரண்டு வயது முதல் 28 வயது வரையான தன் ஓவியங்களின் பரிணாம வளர்ச்சியைப் பார்வைக்கு வைத்திருந்தார். உலகம் முழுக்க குழந்தைகள் கிட்டத்தட்ட ஒரே போலத்தான் வரைய ஆரம்பிக்கிறார்கள். பிற்காலத்தில் கல்வி, பொருளாதாரச் சூழல்களால் திசைமாறி, தங்கள் திறனை மறைத்து, சம்பந்தம் இல்லாத ஏதோ துறைகளில் வேலைசெய்கிறார்கள். பரீட்சை, மார்க்குக்காக உங்கள் குழந்தைகளின் உள்ளே இருக்கும் `மார்க்’கை வீணாக்கி விடாதீர்கள்!

கலைடாஸ்கோப் - 49

ஹ்யூமன்ஸி

ஹ்யூமன்ஸி என்ற ஆங்கில வார்த்தையின் அர்த்தத்தை உங்களால் ஊகிக்க முடிகிறது அல்லவா? மனிதனுக்கும் சிம்பன்ஸிக்கும் பிறந்த குழந்தை. இந்த ஹ்யூமன்ஸி என்பது இல்யா இவனோவிச் இவனோவ் (Ilya Ivanovich Ivanov) என்கிற ரஷ்ய உயிரியலாளரின் பெரும் கனவு. இவர் ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் பெயர்பெற்றிருந்த ஓர் உயிரியலாளர். செயற்கைக் கருத்தரிப்பில் பல ஆய்வுகள் செய்தவர்.

1910-ம் ஆண்டு நடந்த உலக விலங்கியலாளர்கள் மாநாட்டில், மனிதனையும் சிம்பன்ஸியையும் இணைத்து ஹ்யூமன்ஸிகளை உருவாக்கலாம் என்ற திட்டத்துக்குக் கோடு போட்டிருக்கிறார் இவனோவ். பலர் எதிர்க்கவே கொஞ்சம் தள்ளிப்போட்டு, 1920-களில் உண்மையாகவே இந்த ஆராய்ச்சியில் இறங்கினார். சோவியத்தின் பொருளாதார உதவியுடன் ஆப்பிரிக்காவின் கினி (Guinea) நாட்டில் தன் ஆராய்ச்சியை ஆரம்பித்திருக்கிறார்.

டார்வின் பரிணாமக் கொள்கையை இனவெறுப்பு கோட்பாட்டுடன் அணுகுபவர்கள் உண்டு. ஆப்பிரிக்க மக்களை குரங்குகளுக்கு நெருக்கமானவர்களாகப் பார்க்கும் பார்வை அதில் ஒளிந்திருந்தது. இவனோவ், ஏன் ஆப்பிரிக்க நாட்டை இந்த ஆராய்ச்சிக்குத் தேர்ந்தெடுத்தார் என்பது விளங்குகிறது.

உள்ளூர் ஆப்பிரிக்க இன ஆண்களின் விந்தணுவை பெண் சிம்பன்ஸிகளின் கர்ப்பப்பையில் செலுத்தி `ஹ்யூமன்ஸி’யை உருவாக்க முனைந்த இவனோவின் கனவு, கருவிலேயே கலைந்துபோனது. சிம்பன்ஸிகளின் உயிரியல் அமைப்பு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தனது ஆய்வுக் கூடத்தில் இருந்த கடைசிக் குரங்கும் செத்துப்போனதும், தன் ஆய்வைக் கைவிட்டு ரஷ்யாவுக்குத் திரும்பினார் இவனோவ். அங்கே கைதாகி, தன் வாழ்நாளை சிறையில் கழித்து இறந்தார்.

`ஏன் கைதானார்?’ என்பதற்கு ஆதாரம் இல்லாத சில விளக்கங்கள் உள்ளன. அதில் ஒன்று, `ஹ்யூமன்ஸிகளை உருவாக்கும் கனவு இவனோவினுடையது அல்ல... உண்மையில் ஸ்டாலினுடையது’ என்கிறார்கள். இந்த வகை ஹ்யூமன்ஸிகளாலான ரெட் ராணுவப் படைகளை உருவாக்கும் பெரும் கனவு ஸ்டாலினின் ஆசை என்கிறார்கள். அதில் தோல்வியுற்ற இவனோவ் அரசியல் கைதி ஆக்கப்பட்டார். இதெல்லாம் ஆதாரம் இல்லாத செய்திகள்தான். சோவியத்துக்கு எதிராக அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகள் அவிழ்த்துவிட்ட பொய் மூட்டைகளில் ஒன்றாகக்கூட இருக்கலாம். ஆனால், தாவரங்களில், உயிரினங்களில் செயற்கை இனக் கலப்புகளையும் மாற்றுகளையும் செய்வதற்குப் பின்னால், அறிவியலைவிட அரசியல்தான் பிரதானக் காரணம் என்பது இன்றும் தொடர்கதை.

கலைடாஸ்கோப் - 49

பீப்பி

மால்களுக்குப் போய் குழந்தைகள்கூட `கிரெடிட் கார்டுகள்’ தேய்த்து, வீடியோ கேம்ஸ் விளையாடுவதைப் போல அல்ல... சுற்றி என்னென்ன கிடைக்கின்றனவோ அவற்றை எல்லாம் விளையாட்டுப் பொருட்களாக்கும் கலை, அன்றைய குழந்தைகளுக்குத் தெரிந்திருந்தது.

நாம் மறந்துபோன விஷயங்களில் பீப்பிகளும் உண்டு. `நாஸ்டால்ஜியா நோட்டில் `பூவரசம் பீப்பி’ பற்றி எழுதவில்லையா?’ என நண்பகள் கேட்பார்கள். உண்மையில் பூவரசம் பீப்பி மட்டும் அல்ல... பப்பாளி இலைத்தண்டில் புல்லாங்குழல் போல ஓட்டை போட்டு, ஒரு முனையில் கண்ணாடித்தாளால் கட்டி ஊதும் பப்பாளித்தண்டு பீப்பிகள், எங்கள் ஊரில் கிடைக்கும் நல்லமிளகுக் கொடியின் குருத்தினை, சீவாளிபோல பாவித்து ஊதும் பீப்பிகள், விளையாட்டுச் சாமான் விற்க வருபவர்கள் கொண்டுவரும் மூங்கில் பீப்பிகள் வரை பல்வேறு பீப்பிகள் ஞாபகத்துக்கு வருகின்றன.

மூங்கில் பீப்பிகளின் ஒரு முனையில், ஒரு பலூனைக் கட்டியிருப்பார்கள். அதை மூச்சு வாங்க ஊதி பலூனை விரித்த பிறகு வாயை எடுத்தால், பலூனில் இருக்கும் காற்று இறங்கும். அப்போது பீப்பி ஆட்டோமேட்டிக்காக ஊதும் அற்புதம், அந்த வயதில் ஆச்சர்யம் கொடுக்கும் ஒன்று.

திருவல்லிக்கேணியின் ஒரு டீக்கடைக்கு முன்பாக ஒரு பூவரச மரத்தைப் பார்த்தேன். டிராஃபிக் தூசிகள் படிந்த இலைகளுடன், குழந்தைகளை எதிர்பார்த்தபடி தன் பழைய ஞாபங்களில் உறைந்து நிற்கிறது அந்த மரம்!

கலைடாஸ்கோப் - 49

பேப்பர் க்ளிப்

சிறுவயதில் பரீட்சை பேப்பர்களைக் கோக்க குண்டூசியால் குத்திவைப்போம். பெரிய தேர்வுகளில் பேப்பரில் பன்ச் பண்ணிய துளைகளில் நூலால் கோத்துக் கட்டியிருக்கிறோம். பிற்காலத்தில் பேப்பர் க்ளிப்களைப் பயன்படுத்தக் கற்றுகொண்டோம். பேப்பர் க்ளிப்களில் பலவகை இருக்கின்றன. ஆனால், ஒரே ஒரு சின்னக் கம்பியை இரண்டு யு டர்ன்கள் போட்டு வளைத்தால் கிடைக்கும் சிம்பிள் பேப்பர்கள் க்ளிப்கள் டிசைனில் ஒரு புரட்சிதான். 

ஒரு சின்ன விஷயத்துக்காக வரலாற்றில் நடந்த அக்கப்போர்கள் பெரியவை. குட்டி பேப்பர் க்ளிப்பின் வரலாற்றைப் புரட்டினாலே இது தெரிகிறது. இந்தச் சின்னஞ்சிறிய பேப்பர் க்ளிப்களைக் கண்டுபிடித்தது தாங்கள்தான் என அதன் வரலாற்றில் மல்லுக்கட்டுபவர்கள் ஏராளம்.

கலைடாஸ்கோப் - 49

அமெரிக்காவின் சாமுவேல் (Samuel B.Fay) என்பவர் தொடங்கி, நார்வேயின் ஜான் வாலீர் (Johan Vaaler) வரைக்கும் பலர் இதன் கண்டுபிடிப்பில் உரிமை கோரியிருக்கிறார்கள். ஹெர்பர்ட் ஸ்பென்சர் (Herbert Spencer) கேள்விப்பட்டிருப்பீர்கள். பரிணாம வளர்ச்சித் தத்துவத்தின் ஆதரவாளரான இவரின் `வலியதே வாழும் (Survival of the fittest)’ எனும் வாக்கியம் அறிவியல் உலகில் பிரபலமான பன்ச் டயலாக். இவரும் இந்த பேப்பர் க்ளிப் கண்டுபிடிப்பில் உரிமை கோரியவர்களில் ஒருவர்.

இரண்டாம் உலகப்போரின்போது நார்வேயில் நாஜிக்களை எதிர்க்கும் ஒரு சிம்பலாக, பேப்பர் பின்களை சட்டைப்பைகளில் செருகிவைக்கும் பழக்கம் இருந்ததால், அதற்குத் தடைகூட விதித்திருக்கிறார்கள். வரலாற்றை பெரிய விஷயங்களில் மட்டும் அல்ல... இப்படிச் சின்ன விஷயங்களைத் தேடுவது வழியாகவும் கற்றுக்கொள்ளலாம்!