Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

வில்லன்-1

தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், தளபதி இயக்கத்தில் ஒரு படத்துக்கு ஒப்பந்தமாகி இருக்கிறார் சத்யராஜ். அந்தப் படத்தில் ஹீரோ உதயநிதியோடு மோதும் வில்லனாக நடிக்கிறார். ஏற்கெனவே ‘சிவாஜி’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க அதிகச் சம்பளம் தருவதாக ஷங்கர் அழைத்தபோது கறாராக நோ சொன்னார். ‘இசை’ படத்தில் எஸ்.ஜெ.சூர்யாவுக்கு வில்லன், இப்போது உதயநிதிக்கு வில்லன்.

வில்லன்-2

பாலா இயக்கும் ‘மல்டி ஸ்டார்’ படத்தில் விஷால், ஆர்யா, அரவிந்த்சாமி, ராணா, அதர்வா என நட்சத்திரப் பட்டாளங்கள் நடிக்கின்றன. அரவிந்த்சாமிக்கு அதிரடி வில்லன் வேடம். அதற்காக, தினசரி தன் வீட்டில் கிக் பாக்ஸிங் கற்று வருகிறார் அரவிந்த்சாமி. அதுமட்டுமல்ல, பயிற்சியாளராக ஒரு மாஸ்டரை வைத்து உடம்பை ஏற்றி வருகிறார். விஜய், அஜித்துக்கு வில்லனாக அழைத்தபோது ‘முடியாது’ என்றவர், பின்னர் ‘தனி ஒருவன்’ படத்தில் வில்லனானது தனிக்கதை.

மிஸ்டர் மியாவ்

வில்லன்-3

தமிழ் சினிமாவில் உள்ள பிரபல இயக்குநர்கள் எல்லாம் எஸ்.ஜெ.சூர்யாவை தங்கள் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கவைக்க எவ்வளவோ முயற்சித்தனர். அப்போது எல்லாம் ‘‘ஹீரோ வேடம்னா கிட்ட வாங்க. வில்லன் வேடம்னா எட்டிப் போங்க’’ என்று வில்லன் வேடத்தை வெறுத்து வந்தார். ஆந்திராவில் நம்ம ஊர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தெலுங்குப் படத்தில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக நடிக்க அழைக்க, ‘குஷி’யாக உடனே ஓ.கே சொல்லிவிட்டார்.

வில்லன்-4


அஜித் நடிக்கும் புதுப்படத்துக்கு நாயகியாக நடிக்க முதலில் அணுகியது அனுஷ்காவை. இப்போது ஏனோ காஜல் அகர்வால். அதுபோல வில்லன் வேடத்துக்கு முதலில் விஜயசேதுபதியை அழைத்தபோது ‘நோ’ சொல்லி விலகிக்கொண்டார். அடுத்த வலை அரவிந்த்சாமிக்கு. அவரும் எஸ்கேப். இப்போது இயக்குநர் சிவா இறுதியாக குறிவைத்து இருப்பது சிரிப்பழகி சிநேகாவின் கணவர், பிரசன்னா. ஏற்கெனவே மிஸ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’ படத்தில் மிரட்டல் வில்லனாக வந்து நடிப்பில் அசத்தியவர் ஆயிற்றே?

மியாவ் பதில்கள்

எம்.ஜி.ஆர் உறவினர் எவரும் சினிமாவில் ஜெயிக்கவில்லையே?

எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி மகன் எம்.ஜி.எஸ்.சுகுமார் சில படங்களில் நடித்தார். நடிகை ‘படாபட்’ ஜெயலட்சுமி தற்கொலை செய்துகொண்ட பிறகு சுகுமார் காணாமல் போய்விட்டார்.

நடிகைகள் ஷூட்டிங்குக்கு தாய்க்குலத்தோடு வருவது ஏன்?


நடிகைகள் ஒன்றும் அழைத்து வருவதில்லை. எங்கே தன் மகள் நடிக்கும் ஹீரோக்களோடு காதல் ஏற்பட்டு கல்யாணம் நடந்துவிட்டால் பணம் சம்பாதித்துக் கொடுக்கும் ஏ.டி.எம் மிஷின் பறிபோய்விடுமோ என்கிற பயத்தில் தாய்க்குலம்  அவர்களாகவே கூட வருகிறார்கள்.

நடிகர்கள் உதவி செய்வதை விளம்பரம் செய்வது ஏன்?

ஒருமுறை நாகப்பட்டினத்தைப் புயல் தாக்கியது. அப்போது, அரசாங்கத்துக்கு முன்பாக ஓடோடிப் போய் தன் சொந்தப் பணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்தார், ஜெய்சங்கர். அதுபற்றி அவர் ஒருபோதும் விளம்பரம் செய்துகொண்டதே இல்லை. சென்னையில் வெள்ளம் வந்தபோதே எட்டிப்பார்க்காத எட்டாவது வள்ளல்கள் நமது நடிகர்கள்.