
பஞ்சு அருணாசலம்

‘ரஜினி சார் இப்போது உங்களுக்குத் தந்துள்ள கால்ஷீட்டை ஏவி.எம்-க்கு விட்டுக் கொடுத்துட்டு, அடுத்த வருஷம் அவர் எங்களுக்குக் கொடுத்திருக்கிற கால்ஷீட்டை நீங்கள் பயன்படுத்திக்கலாமா?’ - ஏவி.எம்.சரவணன் சார் இப்படிக் கேட்டதும், எனக்கு என்ன பதில் சொல்வது என்றே புரியவில்லை. அப்போது என்னால் உடனடியாக எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. ‘நான் கொஞ்சம் யோசிச்சிட்டுச் சொல்றேன் சார்’ என்றேன். ‘நீங்கதானே தயாரிப்பாளர், நீங்க யார்கிட்ட கேட்கப்போறீங்க?’ என்றார். ‘இல்ல சார்... ரஜினி எதுவும் தப்பா நினைச்சுடக் கூடாது இல்லையா? அவர் அப்படி நினைக்க மாட்டார். இருந்தாலும், ‘நான் உங்களுக்குத்தானே கால்ஷீட் கொடுத்தேன். அப்புறம் என்னைக் கேட்காம எப்படி மாத்தினீங்க?’னு அவர் கேட்டா, நம்ம மூணு பேருக்குமே தர்மசங்கடம். அவர்கிட்ட கன்சல்ட் பண்ணிட்டுச் சொல்றேன் சார்’ என்றேன்.

சரவணன் சாரிடம் பேசிவிட்டு வந்த பிறகு ஏகப்பட்ட யோசனைகள். அப்போது என்னுடன் நிறைய நண்பர்கள் இருப்பார்கள். என்னுடனே இருப்பதால் என்னைப் பற்றிய சகலமும் அவர்களுக்குத் தெரியும். அவர்களில் பலரும், ‘என்ன சார் அறிவு இல்லாமல் பேசறீங்க. எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கீங்க. பல படங்கள் நல்லா ஓடியும் ஏமாற்றப்பட்டீங்க. இப்பதான் ‘ஆறிலிருந்து அறுபதுவரை’, ‘கல்யாணராமன்’ படங்கள் ஓகோனு ஓடி 100 படங்கள்ல வரவேண்டிய பேர் எல்லாம், இந்த ரெண்டே படங்கள்ல வந்திருக்கு.
பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷனுக்கும் தனி மார்க்கெட் உருவாகியிருக்கு. நீங்க ‘இந்தி படம் பண்ணுவோம் வாங்க’னு கமல் சாரைக் கூப்பிட்டப்போ, நீங்க நல்லா இருக்கணும்னு நினைச்சுத்தானே ‘முதல்ல இடம் வாங்கி வீடு கட்டுங்க’னு சொன்னார். இடம் வாங்கிப் போட்டிங்க. ஆனா, இன்னும் வீடு கட்டலை. வந்த பணத்தையும் ஒழுங்கா வெச்சுக்காம, ருத்ரய்யா படத்துக்கு ஃபைனான்ஸ் பண்ணீங்க. அதுவும் போச்சு (ருத்ரய்யாவின் ‘கிராமத்து அத்தியாயம்’ படத்துக்கு ஃபைனான்ஸ் பண்ணினதைப் பற்றி பிறகு சொல்கிறேன்.) ரஜினி, கமல் ரெண்டு பேரும் அடுத்தடுத்து தந்திருக்கிற கால்ஷீட்டை வெச்சு, ஒழுங்கா சொந்தப் படம் எடுத்து செட்டிலாகப் பாருங்க. ஏவி.எம் மிகப்பெரிய ஸ்தாபனம். அவங்க இந்த வருஷம் எடுத்தா என்ன, அடுத்த வருஷம் எடுத்தா என்ன? அவங்க பெருமைக்குப் படம் எடுக்கிறாங்க. நீங்க உங்க வாழ்க்கைக்கு எடுக்கிறீங்க. முதல்ல உங்களை நிலைநிறுத்திக்கங்க’ என அட்வைஸ் செய்தனர்.
நான் எப்போதும் நன்றி விசுவாசம் பார்ப்பேன். பெருந்தன்மையாக நடந்துகொள்ள வேண்டும் என முயற்சிசெய்வேன். அது என் இயல்பு. நான் கவிஞரிடம் உதவியாளராக இருக்கும்போது,
ஏவி.எம் தயாரிக்கும் படங்களின் கம்போஸிங்குக்கு செல்லத் தொடங்கிய அன்றில் இருந்து இன்று வரை, ஏவி.எம்.சரவணன் சார், ஏவி.எம்.குமரன் சார் இருவரிடமும் நன்றாகப் பழகிவருகிறேன். அவ்வளவு பெரிய நிறுவனத்தில் ஒரு பாடல் எழுத சான்ஸ் கிடைக்காதா என ஏங்கிக்கிடந்த சமயத்தில் என்னை அழைத்து ‘நானும் ஒரு பெண்’ படத்தில் ‘பூப்போல பூப்போல...’ பாடல் எழுத வாய்ப்பு தந்ததே சரவணன் சார்தான்.
அந்தப் பழக்கத்தைவைத்துதான் ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ படத்தின் ஷூட்டிங்கை வடபழநியில் உள்ள ஏவி.எம் பிரஸ்ஸில் எடுத்தேன். திருமணப் பத்திரிகை அச்சிடுவது தொடங்கி, அந்த பிரஸ்ஸில் ஏகப்பட்ட பிரின்ட்டிங் வேலைகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். அப்படிப்பட்ட சமயத்தில், ‘சார் நம்ம பிரஸ்ல ஒரு வாரம் ஷூட் பண்ணிக்கலாமா?’ என நான் கேட்டதும், ‘என்ன பஞ்சு என்னைக் கேட்கணுமா? தாராளமா ஷூட் பண்ணிக்கங்க’ எனச் சொல்லி அனுமதித் தந்தார்.
‘ஷூட்டிங் நடந்துட்டிருக்கு. பொறுமையா வாங்கிக்கலாம்னா கொடுங்க. அவசரம்னா வெளியில அடிச்சுக்கங்க’ என அப்போது வந்த பிரின்ட்டிங் வேலைகளை எனக்காகக் குறைத்துக்கொண்டார். அதேபோல்தான் ‘ஆறிலிருந்து அறுபதுவரை’, ‘கல்யாணராமன்’, ‘கவரிமான்’ ஆகிய மூன்று படங்களுக்கும் ஏவி.எம்-ல்தான் ஒரே சமயத்தில் ஷூட்டிங் நடந்தது. அந்தப் படங்களுக்கான ரிக்கார்டிங்கும் அங்குதான் நடந்தது.

ஏவி.எம் நிறுவனம் பண விஷயத்தில் ஸ்ட்ரிக்டாக இருக்கும் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால், என் விஷயத்தில் அந்தக் கெடுபிடி இல்லை. ஆரம்பத்தில் ஒரு அட்வான்ஸ் கொடுப்பேன். ஷூட்டிங், ரிக்கார்டிங் எனத் தொடர்ந்து அங்கு வேலைகள் நடந்துகொண்டே இருக்கும். மறுபடியும் எப்போது பணம் கைக்கு வருகிறதோ அப்போது பணம் கொடுப்பேன். இப்படி இடைவெளிவிட்டு இடைவெளிவிட்டு கிடைக்கும்போது கொடுக்கலாம் என்ற அளவுக்கு, எனக்கு அங்கு சுதந்திரம் தந்திருந்தார்கள். இவை எல்லாம் அன்றும் இன்றும் என்றும் மறக்கக் கூடாத உதவிகள். அப்படிப்பட்டவர் கூப்பிட்டு ரிக்வெஸ்ட் பண்ணிக் கேட்பதே ஒரு பாக்கியம். ‘இந்தப் படத்தை அவர்களுக்கே பண்ணுவோம்’ என நான் பெர்சனலாக முடிவு எடுத்தேன்.
ரஜினி சாரைப் பார்த்து, ‘எனக்கு இப்ப தந்துள்ள கால்ஷீட்டை ஏவி.எம் கேக்குறாங்க. ஆனா, `இந்த கால்ஷீட்டை நீ மிஸ் பண்ணிடாத’னு என் ஃப்ரெண்ட்ஸ் சொல்றாங்க. ஆனாலும், இந்தப் படத்தை ஏவி.எம்-கே பண்ணிடுவோம்னு பெர்சனலா நான் முடிவு எடுத்திருக்கேன். அடுத்த வருஷம் அவங்களுக்கு கொடுத்திருக்கிற கால்ஷீட்டை நீங்க எனக்குக் கொடுங்க. என்னோட இந்த முடிவு சரியான்னு நீங்கதான் சொல்லணும்’ என்றேன்.
‘என்ன பஞ்சு சார்... உங்களுக்குத் தெரியாத விஷயமா? ஏவி.எம்-க்குப் பண்ணச் சொன்னாலும் பண்றேன். இல்ல... நீங்களே பண்ணணும்னாலும் உங்க படத்தை முடிச்சுட்டு, அடுத்த வருஷம் அவங்களுக்கு கால்ஷீட் தர்றேன். முடிவுபண்ண வேண்டியது நீங்கதான். இந்த மாதிரி பெரிய விஷயம் எல்லாம் என்கிட்ட சொல்லாதீங்க. எனக்கு இதெல்லாம் தெரியாது’ என்றார்.
‘சரி ரஜினி... அவங்க பெரிய கம்பெனி. இந்தப் படத்தை அவங்களுக்குப் பண்ணிக்கொடுப்போம்’ என்றேன். ‘உங்க விருப்பம்’ என்றார். ‘சரவணன் சார்கிட்ட சொல்லிடலாமா?’ என்றேன். ‘தாராளமா சொல்லுங்க’ என்றார்.
விஷயத்தை சரவணன் சாரிடம் சொன்னேன். அவருக்கும் சந்தோஷம். அப்போது சரவணன் சாரிடம், ‘சார், ஒரே ஒரு கண்டிஷன். `ரஜினி சார் படம் பண்றோம்'னு எங்க யூனிட்ல உள்ள எல்லார்கிட்டேயும் ரொம்ப நாளைக்கு முன்னாடியே சொல்லிட்டேன். அவங்களும் வேற எங்கேயும் கமிட் ஆகாம இந்தப் படத்துக்காகக் காத்திருக்காங்க. அதனால தயவுபண்ணி அந்த யூனிட்டை மட்டும் மாத்திடாதீங்க. அப்படி ஏதாவது பண்ணினா எனக்கு தர்மசங்கடமா போயிடும். அதனால என் யூனிட்டை வெச்சுக்கிட்டு, என் படமா இதைப் பண்ணிக்கொடுத்துடுறேன் சார்’ என்றேன்.
‘உங்க கதைக்குப் பொருத்தமான ஆர்ட்டிஸ்ட், டெக்னீஷியன்னு எல்லாரையும் நீங்களே ஃபிக்ஸ் பண்ணிக்கங்க. ஆனால், ஒரே ஒரு விஷயம் சார்.டைரக்டரா முத்துராமன் சாரே இருக்கலாமாங் கிறதை மட்டும் அப்புச்சிகிட்ட கலந்துகிட்ட பிறகு சொல்றேன்’ என்றார்.
எனக்கு பயங்கர அதிர்ச்சி. ‘ஏன் சார்?’ என்றேன். ‘எனக்கும் ஒண்ணும் ஆட்சேபனை இல்லை சார். அவரை மாதிரி கெட்டிக்காரர், நல்ல மனிதர் இங்கே யார் இருக்கா? தவிர, எனக்கும் நெருக்கமானவர். ஆனால், எங்க அப்புச்சிக்கு மனசுக்குள்ள ஒரு வருத்தம் இருக்கும்னு நினைக்கிறேன்’ என்றபடி பழைய விஷயம் ஒன்றை நினைவுகூர்ந்தார்...
அப்போது முத்துராமன் சார் ஏவி.எம்-ல் ஏ.சி.திருலோகசந்தர், பீம்சிங், கிருஷ்ணன்-பஞ்சு போன்ற பல சீனியர்களிடம் அடுத்தடுத்து அசிஸ்டன்டாக இருந்தார். 15 வருடங்கள் அங்கு வேலை செய்திருக்கிறார். ஏவி.எம்-ல் எடிட்டிங், டைரக்ஷன் எனப் பல துறைகளில் வேலை கற்றுக்கொண்ட பெரிய அனுபவஸ்தர். அங்கு சீனியாரிட்டி அடிப்படையில் அவர்தான் அடுத்து இயக்குநராக வேண்டும்.
அந்தச் சமயத்தில் சித்ராலயா கோபு எழுதி இயக்கிய ‘காசேதான் கடவுளடா’ என்ற நகைச்சுவை மேடை நாடகத்தை செட்டியார் பார்த்திருக்கிறார். அந்த நாடகம் அவருக்குப் பிடித்துவிட்டது. அதை சினிமாவாக எடுக்கலாமே என நினைத்து, கோபுவிடம் செட்டியார் அதன் ரைட்ஸ் கேட்டிருக்கிறார். கோபு, நகைச்சுவை ஏரியாவில் கில்லி. இயக்குநர் ஸ்ரீதரின் உதவி இயக்குநர். பிறகு, ஸ்ரீதரின் சகோதரர் சி.வி.ராஜேந்திரன் இயக்கிய `சுமதி என் சுந்தரி’, `கலாட்டா கல்யாணம்’ போன்ற பல படங்களுக்கு கதை-வசனம் எழுதினார்.
செட்டியார் கேட்டதும், கோபு ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறார். ‘அப்புச்சி, எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க. நான் ரைட்ஸ் தர்றேன். அமெளன்ட் எவ்வளவு வேணும்னாலும் நீங்களே ஃபிக்ஸ் பண்ணிக்கங்க. ஆனா, இந்தப் படத்தை நான்தான் டைரக்ட் பண்ணுவேன்’ எனச் சொல்லியிருக்கிறார்.
செட்டியாருக்கு ஷாக். ‘நல்லா கதை பண்ணியிருக்க. வேணும்னா நீயே இதுக்கு திரைக்கதை, வசனம் எழுது’ என்றார். காரணம், அந்தப் படத்தை முத்துராமன் சாரை வைத்து இயக்கலாம் என்பது செட்டியாரின் எண்ணம்.

ஆனால், தான்தான் டைரக்ஷன் பண்ணுவேன் என்பதில் கோபு பிடிவாதமாக இருந்திருக்கிறார். ‘நல்ல கதை அமைஞ்சு, நிச்சயமா நல்லா போகும்னு நம்பிக்கை இருக்கும்போதுதான் டைரக்ஷன் சான்ஸ் கேட்க முடியும். இந்தக் கதை எழுதி டிராமா பண்ணும்போதே இதை சினிமாவா எடுக்கும்போதும் நாமதான் டைரக்ட் பண்ணணும்னு மனசுல இருந்தது. நீங்க டைரக்ட் பண்ணச் சொன்னா பண்றேன். இல்லைன்னா இந்தக் கதையை விட்டுடுங்க. உங்களுக்கு வேணும்னா வேற கதை பண்ணித் தர்றேன். அதை நீங்க வேறு யாரை வேணும்னாலும் வெச்சு டைரக்ஷன் பண்ணிக்கலாம்’ எனச் சொல்லியிருக்கிறார்.
செட்டியாருக்கு அந்தக் கதையை விட மனசு இல்லை. அதனால், ‘சரிப்பா... நீயே டைரக்ஷன் பண்ணு’ என, கோபுவே டைரக்ஷன் பண்ண ஓ.கே சொல்லியிருக்கிறார்.
ஆனால், `கோபு உதவி இயக்குநராக, நாடக எழுத்தாளராக இருந்தாலும் அவர் டைரக்ஷன் பண்ணுவது அதுதான் முதல்முறை. அதனால் அவருடன் அனுபவம் உள்ள ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும்’ என நினைத்து, ‘நாளையில இருந்து முத்துராமனை கோபுகிட்ட வந்து அசோசியேட்டா வொர்க் பண்ணச் சொல்லுங்க’ எனச் சொல்லியிருக்கிறார் செட்டியார்.
ஏவி.எம் அப்போது ஒரு பெரிய தொழிற்சாலை போல் இயங்கும். ஆமாம், அது ஒரு பெரிய கலைத் தொழிற்சாலை. தமிழ், தெலுங்கு, கன்னடம்... எனப் பல மொழி சினிமா ஷூட்டிங் நடந்துகொண்டே இருக்கும். ‘அதை இவங்களுக்குக் கொடுங்க, இந்த கேரக்டருக்கு அவர்கிட்ட பேசுங்க’ என செட்டியார் சொல்லிவிட்டார் என்றால், வேதவாக்குபோல நோட் போட்டு வைத்துக்கொண்டு எல்லோரும் அதை ஃபாலோ பண்ணுவார்கள்.
அப்படி மறுநாள் எஸ்பி.முத்துராமன் சார் வந்ததும், ‘கோபு டைரக்ட் பண்ற ‘காசேதான் கடவுளடா’ படத்துல உங்களை அவருக்கு அசோசியேட்டா வொர்க் பண்ணச் சொல்லி செட்டியார் சொல்லியிருக்கார்’ என அவரிடம் சொல்லியிருக்கிறார்கள்.
‘கோபு கெட்டிக்காரர்தான். ஆனால், இவ்வளவு நாள் வொர்க் பண்ணின பிறகும், சீனியரான தன்னை ஜூனியர் ஒருவரிடம் அசோசியேட்டா வொர்க் பண்ணச் சொன்னா எப்படி?’ என முத்துராமன் சாருக்குக் கோபம். அந்த வேகத்தில், ஏவி.எம் வேலையை ரிசைன் பண்ணிட்டு, கிடுகிடுனு வெளியில் போய்விட்டார்.
முத்துராமன் சாரை தன் பையனாக நினைத்து ப்ரியம் காட்டியவர் செட்டியார். ‘நம்ம பையன்னு நினைச்சு உரிமையில சொன்னேன். அவன் தன்னைக் குறைச்சுக்கணும்னு சொல்லலையே. அந்தக் கதை எனக்குப் பிடிச்சிருந்தது. அதைப் படமா எடுக்கணும்னு ஆசைப்பட்டேன். கோபு நல்லா எடுக்க மாட்டாரோனு பயந்து அவருக்கு சப்போர்ட் பண்ணத்தான் முத்துராமனைக் கூட இருக்கச் சொன்னனே தவிர, எனக்கு வேற எந்த எண்ணமும் கிடையாது. டைரக்டர்னு பேர் போட்டாதான் டைரக்டரா? நான் அவனைத்தான் டைரக்டரா மனசுல நினைச்சுக்கிட்டுச் சொன்னேன். நம்ம பையன் கூட இருந்து பார்த்துக்குவான்னு நினைச்சுத்தானே சொன்னேன்... கூப்பிடுங்க அவனை’ என ஆள்விட்டு அனுப்பியிருக்கிறார்.
‘ஒருமுறை வெளியே வந்த பிறகு அப்புச்சியை மறுபடியும் பார்ப்பது நல்லா இருக்காது. தர்மசங்கடம். பிறகு பார்த்துக்கலாம்’ என நினைத்து முத்துராமன் சார் அப்போது போகவில்லை.
இப்படி பழைய விஷயங்களை நினைவுகூர்ந்த சரவணன் சார், ‘அதன்பிறகு முத்துராமன் சார் `பெத்த மனம் பித்து', `எங்கம்மா சபதம்', `மயங்குகிறாள் ஒரு மாது', `ப்ரியா' உள்பட பல படங்களில் தன்னை நிரூபித்து இன்னைக்கு முக்கியமான இயக்குநரா இருக்கார். அவரை மாதிரி பெரிய கெட்டிக்காரர் கிடையாது. ஆனால், எங்க அப்புச்சி மனசுல முத்துரான் சார் மேல வருத்தம் இருக்குமோங்கிற பயம் எனக்கு இருக்கு. அதனால அவர்கிட்ட கலந்து பேசிட்டு சொல்றேன்’ என்றார்.
உடனே நான், ‘சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க சார், முத்துராமன் சார் இல்லைனா நான் இந்தப் படம் பண்ண மாட்டேன்’ என்றேன்.
பிறகு சரவணன் சார், இதுபற்றி அப்புச்சியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அப்புச்சி, ‘ஏம்பா... அது எப்பவோ நடந்த விஷயம். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? இதுக்கு இடையில அவன் எவ்வளவோ ஹிட் கொடுத்து தன்னை நிரூபிச்சிருக்கான். அதுமட்டும் இல்லாம அவன் பண்ணின ‘ப்ரியா’ பட வெள்ளி விழா நிகழ்ச்சிக்கு, நானே போய் எல்லாருக்கும் என் கையால ஷீல்டு கொடுத்து வாழ்த்தியிருக்கேன். அப்படி இருக்கும்போது அவனை ஏன் நான் வேணாம்னு சொல்லப்போறேன்? அவனே இந்தப் படத்தைப் பண்ணட்டும்’ எனச் சொல்லியிருக்கிறார். அதுதான் அப்புச்சியின் பெருந்தன்மை.
அன்று ஏதோ வருத்தத்தில் நடந்த ஒரு சம்பவத்தை, ஏன் காலம் முழுவதும் தூக்கிச் சுமக்க வேண்டும் என நினைத்த செட்டியார், அப்பாவுக்குத் தங்களால் எந்த தர்மசங்கடமும் வந்துவிடக் கூடாது என நினைத்த சரவணன் சார், ‘உங்களுக்குக் கொடுத்த கால்ஷீட்டைப் பற்றி முடிவெடுக்கவேண்டியது நீங்கதான்’ என பெருந்தன்மையோடு நடந்துகொண்ட ரஜினி சார், வருத்தத்தில் ஏவி.எம்-ல் இருந்து வெளியே வந்தாலும், தன்னை நிரூபித்து மீண்டும் ஏவி.எம்-க்கு படம் இயக்க வந்த எஸ்பி.முத்துராமன் சார், இவர்களுடன் நான்... இப்படி தொடங்கிய ‘முரட்டுக்காளை’ படம் எப்படி வளர்ந்தது என்பதில் பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. அதை அடுத்த வாரம் சொல்கிறேன்.
- தொண்டு தொடரும்...