மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 50

கலைடாஸ்கோப் - 50
பிரீமியம் ஸ்டோரி
News
கலைடாஸ்கோப் - 50

எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

கலைடாஸ்கோப் - 50

Z யானை

``யா
னைகளுக்கு பெரிய உடல். அதுதான் பிரச்னை. காட்டில் உணவு போதவில்லை. சாலைகளைக் கடக்கின்றன. நகரங்களுக்குள் வருகின்றன” என்றார் டாக்டர் ஆர்.ஜே.

லேபுக்கு வெளியே விருந்தினர் அறை சோபாவில், கிருஷ்ணாவை உட்கார சைகை காட்டியபடி தானும் வந்து அமர்ந்தார்.

“அதன் வாழிடங்களின் வழித்தடங்களின் மீது மனிதர்களின் குறுக்கீடுக்கு பங்கு இல்லையா... சரி என்னதான் தீர்வு?” எனச் சாய்ந்தபடி கேட்டார் கிருஷ்ணா.

“ஜி.எம்.ஓ! யானைகளை ஜெனிட்டிக்கலி மாடிஃபை பண்ணுவது. கிட்டத்தட்ட தீர்வை எட்டிவிட்டேன். இதை வெற்றிகரமாகச் செயல்படுத்தினால், இன்னும் ஐம்பது வருடங்களில் உங்கள் நாட்டின் காடுகளில் பன்றிக்குட்டி சைஸுக்குத்தான் யானைகள் இருக்கும். காடுகளுக்குள் கிடைத்ததைத் தின்று அமைதியாக வாழும். மனிதர்களுக்குத் தொந்தரவு இல்லை” என்ற ஆர்.ஜே., தன் மடிக்கணினியைத் திறந்து திரையை ஒளிரச்செய்தார்.

கிருஷ்ணா கவலையுடன் அதைப் பார்த்தார்.

“ஜீன்கள் வழியாக யானையின் உடல் வளர்சிதை மாற்றத்தில் கை வைத்திருக்கிறேன். மூன்று அடிக்கு மேல் அவை வளர சாத்தியம் இல்லை. லேபில் நடக்கும் மாற்றங்களை, இந்த கிராஃபிக்ஸ் துல்லியமாகச் சொல்லிக்கொண்டே இருக்கும். இங்கு இருந்தே நீங்கள் அதைப் பார்க்கலாம்” என்ற ஆர்.ஜே., கணினியை கிருஷ்ணாவிடம் நகர்த்தினார்.

நீலத் திரை சில சிக்கலான ஜீன்களின் பின்னல் வடிவங்களைக் காட்டிவிட்டு, பிறகு ஒரு யானையின் கருவாக வளரத் தொடங்குவது கிராஃபிக்கலாகத் தெரிய ஆரம்பித்தது. கிருஷ்ணா தீவிரமாக கணினியில் ஆழ்ந்திருப்பதை, புன்னகையுடன் நிதானமாகப் பார்த்துக்கொண்டிருந்தார் ஆர்.ஜே.

“இட்ஸ் ஹேப்பனிங் ரிவர்ஸ். ஜீனில் நீங்கள் செய்த மாற்றம், யானையின் பரிணாம வளர்ச்சியை, பின்னோக்கி அழைத்துச்செல்கிறது பாருங்கள்” - கத்தினார் கிருஷ்ணா.
“வ்வ்வாட்?” என்றபடி மாறும் கிராஃபிக்ஸைப் புரியாமல் பார்த்தார் ஆர்.ஜே.

“இட்ஸ் மம்மூத்” எனப் பரபரத்தார் கிருஷ்ணா.

அடுத்த விநாடி கட்டடமே அதிரும்படியாக லேபுக்குள் இருந்து கேட்டது ஒரு பிளிறல்!

கலைடாஸ்கோப் - 50

ரிப்பனேஷியா

ரிப்பன்கள் என்றதும் உங்களில் சிலருக்கு `பால்யகால சகி’கள் ஞாபகம் வந்து பள்ளிப்பருவம் கண்முன் விரியலாம். பொதுவாக, ரிப்பன்கள் சாடின் அல்லது சில்க் (satin or silk) துணிகளால் செய்யப்படுகின்றன. இந்தத் துணி வகைகளின் மிருது தன்மைக்கு, ஒரு ரொமான்டிக் தன்மை இருக்கிறது. அதனால்தான் பரிசுப்பொருட்களை முடிச்சிட ரிப்பன்களைப் பயன்படுத்துகிறார்களோ என்னமோ! சாதாரணமாக கடையில் பரிசுப்பொருட்களை பேக் பண்ணும்போது கூட்டல்குறிபோல ஒரு ரிப்பனை முடிச்சிடுவதே பெரும்பாலோருக்கு கைவராத கலை. கடைக்காரரிடமே பொறுப்பை ஒப்படைத்துவிடுவோம்.

கலைடாஸ்கோப் - 50

ஆனால், ஜப்பானியக் கலைஞரான பகு மேடா (baku maeda) இந்த ரிப்பன் கலையில் `பின்னுகிறார்’. ரிப்பனேஷியா (Ribbonesia) எனும் பெயரில் பல நவீன படைப்புகளை உருவாக்கியிருக்கிறார். ஜப்பானின் பாரம்பர்ய நாடக முகமூடிகளைப்போல ரிப்பன்களால் செய்த, பார்ப்பதற்கு டெரராக இருக்கும் முகமூடிகள் வரிசை அதில் ஒன்று. நவீன கலை ஆர்வலர்களின் கவனிப்பைப் பெற்ற இந்தப் படைப்புகள், பகு மேடாவுக்கு உலகம் முழுவதும் பரவலான கவனிப்பைப் பெற்றுத்தந்தன.

ஆனால், அவருடைய சமீபத்திய ‘ரிப்பனேஷியா’ வரிசை படைப்புகள், விலங்குகளின் க்யூட் குட்டி முகங்கள். வழக்கமாக நாம் பரிசுப்பொருட்களின் மீது ரிப்பன் முடிச்சுகள் போடும் பாணியில்தான், இந்த க்யூட் விலங்குகளை உருவாக்கியிருக்கிறார். ஓரிகாமி போல ஜப்பானியர்களின் இந்த வகையான அழகியல் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது. இவற்றை ஒரு கலைப்படைப்பாக மட்டும் பார்க்காமல், ஆன்லைன் மூலம் விற்பனையும் செய்கிறார்.

கலைடாஸ்கோப் - 50

உன் காலைச் சுற்றும் பூனைக்குட்டி என்றோ, நீ எங்கே சென்றாலும் நானும் அங்கே என்று பழைய `ஹட்ச்'நாய் போல கவித்துவமாகவோ, ஏதோ ஒரு விலங்கு ரிப்பனை ஆர்டர்செய்து காதலருக்கான பரிசுப்பொருளில் குறியீடாக முடிச்சிடலாம்போல.

கலைடாஸ்கோப் - 50

அயர்ன் பாக்ஸ்

எங்கள் ஊரில் பரவலாக மின்சாரம் வராத காலத்தில், தெரிந்த அண்ணன் ஒருவர் அதிதீவிரக் காதலில் இருந்தார். `மின்சாரம் வராததற்கும் அதிதீவிரக் காதலுக்கும் என்ன சம்பந்தம்?' எனக் கேட்பீர்கள். வழக்கமாக அப்போது எல்லாம் நல்ல உடுப்புகள் எடுப்பது தீபாவளி, பொங்கலுக்குத்தான். வேறு வழி இல்லாமல் தீபாவளியும் பொங்கலும் வருடத்துக்கு ஒருமுறைதான் வரும் என்பதால், துணிகள் வேறு கசங்கி வெளுத்துப்போய்விடும். இருக்கும் சட்டைகளை நன்றாக அயர்ன் செய்து போட்டுக்கொண்டு காதலியின் பார்வையில் படுவதுபோல அங்கும் இங்கும் நடப்பது மற்ற பையன்களிடம் இருந்து, தன்னை வித்தியாசப்படுத்திக்காட்டும் என்பது அண்ணனின் ஏக நம்பிக்கை. வீட்டில் மின்சாரம் இல்லை, பாக்கெட்டில் காசும் இல்லை என்பதால் `கரி’போடும் அயர்ன் பாக்ஸுக்குக்கூட வழி இல்லை என்பதால், ஒரு பாத்திரத்தில் வெந்நீரைப் பிடித்து, அந்தச் சூடு ஆறுவதற்குள் பாத்திரத்தின் அடிபாகத்தால் தேய்த்து, அயர்ன் பண்ணும் நுட்பத்தை அண்ணன் கண்டுபிடித்ததை நான் வியந்து பார்த்திருக்கிறேன்.

ஆனால், சீனாவில் கி.மு 1-ம் நூற்றாண்டிலேயே உலோகப் பாத்திரங்களில் நிலக்கரிகளைப் போட்டு, கொளுத்திச் சூடாக்கி, துணிகளை அயர்ன் பண்ணும் நுட்பத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக இந்தக் `கரி’நுட்பம்தான் புழக்கத்தில் இருந்திருக்கிறது. நமது தெருவோரச் சலவை வண்டிக் கடைகளில் இப்போதும் கரிகளை நிரப்பிப் பயன்படுத்தும் அயர்ன் பாக்ஸுகள், 17-ம் நூற்றாண்டில்தான் வடிவத்துக்கு வந்தன. நெடுநேரம் கனலும் என்பதால், நம் ஊரில் சிரட்டை, கரி போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

கலைடாஸ்கோப் - 50

பிற்காலத் தொழிற்புரட்சியின் மின்சாரக் காலத்தில் 1882-ம் ஆண்டில் ஹென்றி டபிள்யூ சீலி (Henry W. Seeley) என்பவரால் எலெக்ட்ரிக் அயர்ன் பாக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு நூற்றாண்டுக்குள் துணி வகைகளுக்கு ஏற்ற மாதிரி வெப்பத்தை அட்ஜெஸ்ட் செய்யும் நுட்பங்கள் வந்துவிட்டன. எங்கள் ஊரிலும் மின்சாரம் வந்து எல்லா வீடுகளிலும் எலெக்ட்ரிக் அயர்ன் பாக்ஸுகள் இருக்கின்றன. ஆனால், காதல் பருவத்தை எட்டிவிட்ட ஒரு தம்பி கசங்கலாக சட்டையை மாட்டிக்கொண்டு வந்தான்... `இது லினன், கசங்கி இருந்தாதான் ஸ்டைல்' என்றான். `வெந்நீர்’ அண்ணன் ஞாபகத்தில் வந்துபோனார்! 

கலைடாஸ்கோப் - 50

முறம்

முன்னர் எல்லாம் வீடுகளில் முறம் இருக்கும். பாட்டிகள், அம்மாக்கள் பாம்புகள்போல `ஸ்ஸ்... ஸ்ஸ்...’ என லேசாகச் சத்தம் எழுப்பியபடி தானியங்களைப் புடைப்பார்கள். புடைப்பது மட்டும் அல்ல, தெள்ளுதல், நாவுதல், கொழித்தல்... எனப் பல வார்த்தைகள்  இருக்கின்றன. எங்கள் விளவங்கோடு பக்கம் `கொழித்தல்' என்ற வார்த்தை இன்றும் புழக்கத்தில் இருக்கிறது.

அரிசியைப் புடைக்கும்போது உமி போன்ற இலகுவான வஸ்துகள் காற்றிலும், சிறு கற்கள் போன்ற கனமானப் பொருட்கள் முறத்தின் ஒரு மூலையிலும் ஒதுங்கிவிட, முறத்தை ஓர் ஆட்டு ஆட்டி, அரிசியை கைகளில் அள்ளி தனியாகப் பிரிப்பார்கள். பார்ப்பதற்கு மேஜிக்போல இருக்கும். இதெல்லாம் தொழில்நுட்பம் இல்லையா!

இன்று நிறுவனங்களின் இயந்திரங்களால் பாலீஷ் செய்யப்பட்டு, `100 சதவிகிதம் ப்யூர்' என்ற முத்திரையுடன் பேக்கேஜ் தானியங்கள் பகட்டாக அடுக்களையை நிறைப்பதால் முறத்தின் தேவை இல்லாமல் ஆகிவிட்டது. அதிகபட்சம், அம்மாக்கள் சீரியல் பார்த்துக்கொண்டே கீரை ஆய்வதற்கு மட்டுமே, முறங்கள் பயன்படுவதை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்க்கிறேன். அதுவும் பிளாஸ்டிக் முறங்கள்தான். பழைய முறங்கள் மூங்கில் பட்டைகள் அல்லது பனை மட்டைகளின் பாகங்களைக் கொண்டு செய்யப்பட்டிருக்கும். சுளகுக்கு ஒரு வடிவம். முறம் என்றால் மற்றொரு வடிவம் என்ற வேறுபாடுகளும் உண்டு.

`முறத்தினால் புலியைத் துரத்தினாள்’ எனப் பெருமைப்பட்டோம். இன்று முறத்தையே துரத்திவிட்டோம்!

கலைடாஸ்கோப் - 50

அயனி

குமரி மாவட்டத் தமிழை `நாஞ்சில் தமிழ்' எனப் பொத்தாம்பொதுவாகச் சொல்லிவிட முடியாது. தமிழ் இலக்கியம் படிப்பவர்கள் அப்படி நம்புகிறார்கள். வில்லுக்குறி தாண்டினால் களியக்காவிளை வரை நீண்டு கிடக்கும் கல்குளம், விளவங்கோடு வட்டாரங்களின் மொழியை, கொஞ்சம் மலையாளம் கலந்த மொழி எனச் சொல்வார்கள். ஆனால், அதுவும் முழு உண்மை அல்ல. இதை `கொடுந்தமிழ்’ என ஒரு நேர்காணலில் சொன்னார் எழுத்தாளர் குமாரசெல்வா.

தூய்மையான தமிழ்ச் சொற்கள் இன்றும் எங்கள் ஊரில் புழக்கத்தில் இருப்பதைக் கவனித்திருக்கிறேன். கருவுற்றப் பெண்ணை `சூலி’ என்பார்கள். `சூல்கொண்டவள்’ என அந்தச் சொல்லின் கவித்துவமான பொருள் அறிந்து பிற்காலத்தில் வியந்திருக்கிறேன். தமிழ்நாட்டில் வேறு எங்கும் இந்தச் சொல் பயனில் உள்ளதா எனத் தெரியவில்லை.

குமரி மாவட்டத் தமிழ்ச் சொற்களைப் பற்றிப் படித்துக் கொண்டிருந்தபோது, `அயனி’ எனும் சொல்லைப் படித்ததும், அந்தச் சொல்லே இனிப்பாக மாறிவிட்டதைப்போல இருந்தது. அயனி என்பது ஒரு வகை பலா மரம். உள்ளங்கையில் பிடித்துவிடும் அளவுக்கு மினிசைஸ் பலாப் பழங்கள்போல இருக்கும். மென்முட்களைக்கொண்ட தோலை உரித்தால், கொத்தாக சிறு சுளைகள் நடுத்தண்டில் ஒட்டிக்கொண்டிருக்கும். சுளைகள் தேனாக இனிக்கும். அயனி மரங்கள் நெடுநெடுவென வளர்ந்து கதவு, கட்டில் போன்ற மரச் சாமான்கள் செய்ய உகந்ததாக இருக்கின்றன. வீடுகள் பெருகும் வேகத்துக்கு மரங்கள் பெருகாது என்பதால், ஊரில் இப்போது அயனி அரிய மரம் ஆகிவிட்டது. ஜியாகிராஃபியில் காணாமல் போய்க்கொண்டிருக்கும் ஒன்றை, ஹிஸ்டரியில் பதிவுசெய்யும் நோக்கத்துடன் இங்கே எழுதிவைக்கிறேன்.