``துர்காவுக்கு வெளிக்குப் போகணுமாம்!” தயங்கித் தயங்கிக் கூறுகிறான் அந்த இளைஞன்!
``காரை ஓரமா நிறுத்து டா!” என்று கூறுகிறான் மற்றொருவன்.
``இருடா! இருட்டா இருக்கிற இடமா பார்த்துத்தானே நிறுத்த முடியும்?” என்கிறான் இன்னொருவன்.
``அய்யயோ! அதுக்குள்ள அவளுக்கு வந்துடுச்சுனா?!” என்று கேலி செய்கிறான் மற்றொரு நபர்.
``தங்கச்சி போனா, நீ வேணும்னா புடிச்சுகோ” என்கிறான் மற்றொருவன்.
- நள்ளிரவு பயணத்தில், ஒரு மாருதி வேனில் தன்னைச் சுற்றியுள்ள ஆண்கள் இப்படி ஓர் உரையாடலில் ஈட்டுப்பட்டிருந்தால், அந்தப் பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும்?!
ஒரு பெண் இயற்கை உபாதைகளைக் கழிக்க வேண்டும் என்று கேட்டால், அதை ஆண்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை சிந்திக்க வைக்கிறது மேல் இருக்கும் உரையாடலைப் படித்தால். இப்படிப் பல அழுத்தமான வசனங்கள், சர்ச்சைக்கு ஆளாகும் காட்சிகள் என `சென்சார்’ கத்திரிகளையும் தாண்டி வெளியாகியிருக்கிறது `எஸ் துர்கா’ (முதலில் செக்ஸி துர்கா என்று தலைப்பு வைக்கப்பட்டது) திரைப்படம். இத்தகைய அருவருக்கத்தக்க, உயிரைப் பதைக்க வைக்கும் சம்பவங்கள் பெண்களுக்குத் தற்காலத்தில் மட்டுமா நடக்கிறது? காலங்காலமாகவே இப்படித்தானே பெண்களை இந்த உலகம் நடத்துகிறது? காலங்காலமாக எனில் இவ்வளவு காலமா என்ற கேள்விக்கு, `ராமாயணம்’ கதை நடந்த காலம் முதல் என்ற விடையை, இத்திரைப்படத்தின் மூலம் பதிலளித்திருக்கிறார் இயக்குநர் சனல் குமார் சசிதரன்.
இச்சமூகம் பெண்களை ஒரு பக்கம் கடவுளாகக் கொண்டாடிக்கொண்டு, மறுபக்கம் அந்தப் பெண்ணை எப்படிக் கொடூரமாக நடத்துகிறது என்பதைப் பேசியிருக்கிறது செக்ஸி துர்கா.
பசுமையான கிராமத்தில் இளைஞர்கள் கூட்டம் ஆர்ப்பரித்திருக்கின்றது. கேரளாவில் `கருடன் தூக்கம்’ (Garudan Thookkam) என்ற திருவிழா மிகவும் பிரபலம். இந்துக் கடவுள் காளியை வணங்கும் இந்தத் திருவிழாவில், ஆண்கள் தங்களின் உடலின் பல பகுதிகளில் அலகு குத்திக்கொண்டும், தன்னை வருத்திக்கொண்டும், அந்தப் பெண் தெய்வத்தை வணங்குவார்கள். படத்தில், ஒரு பக்கம், இந்தத் திருவிழாவுக்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன.
இன்னொரு பக்கம், வட இந்தியப் பெண்ணான துர்கா தன்னுடைய காதலன் கபீருடன் சேர்ந்து வாழ்வதற்காக வீட்டை விட்டு வெளியேறுகிறாள். துர்காவும், கபீரும் ஊரை விட்டுத் தப்பித்து செல்வதற்கு ரயில் நிலையம் செல்ல வேண்டும் என நினைக்கின்றனர். அந்த இரவில், சாலையில் செல்லும் ஒவ்வொரு காரையும் நிறுத்தி லிஃப்ட் கேட்க, கடைசியாய் ஒரு மாருதி வேன் அவர்களுக்காக நிற்கிறது. அந்த வேனில் உள்ள இருவரும், கபீரையும். துர்காவையும் சந்தேகப் பார்வையுடன் கேலியாக விசாரிக்கின்றனர்.
கபீரும், துர்காவும் ஒரு வித பயத்திலேயே எதற்கும் பதில் சொல்லாமல் பயணிக்கிறார்கள். அவர்கள் அதிகமாக இவர்களைப் பற்றி விசாரிக்கவும், ``எங்களை இறக்கி விட்டு விடுங்கள்.. நாங்கள் நடந்தே போகிறோம்..", என துர்கா கெஞ்ச, `` எங்களை நம்புங்கள்; உங்களை எதுவும் பண்ண மாட்டோம்”, என அவர்கள் கூறுவதை நம்பிச் செல்கிறார்கள்.
வழியில் போலீஸ் விசாரணையையும், அவர்கள் எளிமையாகக் கடக்கிறார்கள். ஒவ்வொரு முறை அவர்கள் பேசுவதைப் பொறுக்க முடியாமல், இறக்கி விடச் சொல்லி, துர்கா கபீரிடம் முணுமுணுக்கிறாள். ஆனால், கபீர் அந்த இரவில் செய்வதறியாமல், அவளைச் சமாதானப்படுத்திக்கொண்டு, அந்த நபர்களைச் சமாளித்துக்கொண்டும் இருக்கிறார்.
ஒருமுறை, அந்த வேனிலிருந்து இறங்கி இருவரும் தப்பித்துச் செல்ல, சாலையில் இருசக்கர வாகனத்தில் வரும் இருவர், இவர்களிடம் விசாரணை நடத்துகின்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க முடியாமல் துர்காவும், கபீரும் பயப்படுகிறார்கள். அந்தச் சமயத்தில் இவர்களுக்கு உதவி செய்த வேனில் வந்த நான்கு நபர்கள் இருவரையும் `காப்பாற்றுகிறார்கள்'. அவர்களை ரயில் நிலையத்தில் விடுவதாய் சொல்லி ஏறச் சொல்ல, வேறு வழியில்லாமல் இருவரும் அதே மாருதி வேனில் மீண்டும் ஏறுகின்றனர்.
ஒரு கட்டத்தில், அவர்களின் வண்டி ஒரு ரயில் நிலையத்தைக் கடக்கிறது. இருவரும் அங்கு நிறுத்திவிடுமாறு, அவர்களிடம் கெஞ்சுகிறார்கள். ஆனால், வேனில் உள்ளவர்கள் அதற்கு அடுத்த ரயில் நிலையத்தில் இறக்குவதாகச் சொல்லி ஏமாற்றுகிறார்கள். இடைப்பட்ட சமயத்தில் கபீரையும், துர்காவையும் மிக மோசமாக கமென்ட் அடிக்கிறார்கள் வேனில் இருக்கும் நால்வர்.
ரயில் நிலையத்தின் அருகிலேயேதான் இவர்களின் வேன் சென்றுகொண்டிருக்கிறது, என்பதைத் தண்டவாளத்தில் ரயில்கள் செல்லும் காட்சிகள் நமக்கு உணர்த்துகிறது. இம்முறை வேனில் உள்ளவர்கள் மது அருந்திக்கொண்டே காதல் ஜோடிகளைக் கேலி செய்கிறார்கள். உடனே துர்கா, ``நாம இறங்கிடலாம் கபீர்” எனத் தன் காதலனிடம் கெஞ்சுகிறார். அதற்கு வேனில் உள்ளவர்கள் `ரயில் நிலையம் இதோ வந்துவிட்டது' எனச் சொல்லி மீண்டும் ஏமாற்றுகிறார்கள்.
வண்டியில் சென்றுகொண்டிருக்கும்போது, சிறுநீர் கழிக்க வேண்டும் என துர்கா கபீரிடம் சொல்ல,அதனை மிக வக்கிரமாகக் கேலி செய்துவிட்டு, ஒரு மறைவான பகுதியில் காரை நிறுத்துகின்றனர். அப்போது துர்காவும், கபீரும் சென்றதும் துர்காவின் பையைச் சோதித்து, `சேச்சி ஜட்டிடா இது!’ எனக் கிண்டல் செய்கின்றனர். அதே சமயம், இருவரின் பையிலும் கத்தி இருக்கிறது. அது வேனில் வந்தவர்களுடையது.
இது குறித்து கபீரிடம் விசாரிக்க, `தாங்கள் செய்தது தவறுதான்' என மன்னிப்பு கேட்கிறார்கள் அந்தக் காதல் ஜோடி.``இதுக்கு மேல் நாங்க உனக்கு உதவ மாட்டோம்”, எனக் கூறி, வழியிலேயே இறக்கிவிடுகின்றனர். சில தூரம் நடந்துசென்று, இவர்கள் லிஃப்ட் கேட்டு கை அசைக்க மீண்டும் அதே வேன் வந்து நிற்கிறது. ``நீங்கள் எங்களுக்குத் துரோகம் செய்திருக்கலாம்; ஆனால், இது மிகவும் மோசமான ஏரியா! நாங்கள் உதவுகிறோம்”, எனக் கூறி மறுபடியும் வண்டியில் ஏற்றுகின்றனர். இந்தக் கொடுமையான பயணம், அவர்களை என்ன செய்கிறது என்பதுதான் இப்படத்தின் திருப்புமுனை!
கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளிவர வேண்டிய இப்படம், அது பேசிய அரசியலையும் மதம் சார்ந்த கருத்தியல்களும், பல சர்ச்சைகளை உருவாக்கி, தற்போது வெளியாகியிருக்கிறது. முதலில், செக்ஸி துர்கா என்றிருந்த இத்திரைப்படத்தின் பெயரை, எஸ் துர்கா என்று பெயர் மாற்றப்பட்டது. இந்துக் கடவுள் துர்காவின் பெயருக்கு இழுக்கு வராத வகையில் இப்படி மாற்றப்பட்டதாக இத்திரைப்படத்தின் இயக்குநர் தன் ஃபேஸ்புக் பதிவில் ஒருமுறை தெரிவித்திருக்கிறார். தற்போது 21 வசனங்களை `சென்சார்’ கட்டிற்கு பின்னர், யு/ஏ சர்டிஃபிகேட்டுடன் வெளிவந்திருந்தாலும், அந்தப் பெண்ணின் மனவலியை, இரவு நேரம் பயணிக்கும் பதைபதைப்பு உணர்வை, நம்மால் உணர முடிந்ததுதான் இயக்குநரின் வெற்றி!. இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ரோட்டர்டாம் (International Film Festival Rotterdam) என்ற திரைப்பட விழாவில், டைகர் விருது உட்பட பல விருதுகளை இத்திரைப்படம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருபக்கம், பெண் தெய்வத்தை புனிதக் கடவுளாக வழிபடுகிறார்கள். அந்தக் பெண் தெய்வத்துக்காக, தங்களை வருத்திக்கொண்டு, வழிபடுகின்றனர். மறுபக்கம், சமூகம் வகுத்து வைத்துள்ள கோட்பாடுகளிலிருந்து தன்னைச் சற்றே தளர்த்திக்கொண்டு, தான் விரும்பும் ஆணுடன் வாழத் துணிந்து ஒரு பெண் வெளியில் வந்தால், அவளைப் புழு போல் நசுக்கி வீச எந்நேரமும் இந்தச் சமூகம் தயாராகத்தான் இருக்கிறது என்ற அழுத்தமான உண்மையைக் கூறியிருக்கிறது இப்படம்.
உடல் ரீதியாகக் கொடுப்பது மட்டும் வன்முறை என நினைக்கும் ஆண்களுக்கு, `செக்ஸி துர்கா’ இந்தச் ஆண்ணுலகம் ஒரு பெண்ணுக்கு மன ரீதியாகக் கொடுக்கும் வன்முறைகளை உரக்கப் பேசியிருக்கும் இப்படம், சமூகக் காவலர்கள் அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று!