காதலனுடன் ஊரைவிட்டு வெளிவரும் பெண் ஓர் இரவைக் கடக்க முடிகிறதா? இந்தச் சமூகம் பகலைப் பார்க்க விடுகிறதா? என்பதை 90 நிமிட த்ரில்லராக சொல்லும் படம் 'எஸ்' துர்கா. மலையாள மாற்று சினிமாவின் அசல் முகம் என வர்ணிக்கப்படும் இயக்குநர் சனல்குமார் சசிதரன் இயக்கத்தில் வந்திருக்கும் இப்படம் தியேட்டரில் ரிலீஸாகும் முன்பே உலகத் திரைப்படவிழாக்களில் கவனம் ஈர்த்தது.
கேரளாவின் ஏதோ ஒரு மூலையில், இரவு நேரம் ஆள் அரவமற்ற ஒரு நெடுஞ்சாலையில் சுமார் 25 வயது துர்கா (ராஜ்ஶ்ரீ தேஷ்பாண்டே) தனது காதலனுக்காக கையில் பையுடன் காத்திருக்கிறாள். அவசர அவசரமாக வரும் கபீர்(கண்ணன் நாயர்) துர்காவோடு கிளம்புகிறான். அந்த ஏகாந்தமான பொழுதில் கொஞ்சமும் பொருந்தாத அவர்களின் நெடுஞ்சாலைப் பயணம் முடிவுறா பயங்கரமான கனவொன்றை ஞாபகப்படுத்துகிறது. கண்கள் கூசும் வெளிச்சத்தை அள்ளி வீசிச்செல்லும் வாகனங்களை வகைபிரிக்காமல் அந்த இருள் சூழ்ந்த சாலையில் அவர்கள் நடந்தவாறே லிஃப்ட் கேட்டு தோல்வியடைகிறார்கள். ஒரு மோசமான இரவாக கருநாகத்தின் குறியீடாக அந்த நெடுஞ்சாலை அவர்கள் முன் நீண்டு கிடக்கிறது. வாகனங்கள் வேகத்தைக்கூடக் குறைக்காமல் அவர்களைக் கடந்து செல்கிறது. அப்போதுதான் முழுவதும் எல்.இ.டி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, டெத் மெட்டல் இசை அலற சென்றுக்கொண்டிருந்த ஒரு ஆம்னி வேன் ஆபத்பாந்த்கவனாய் நின்று லிஃப்ட் கொடுக்கிறது. வண்டியிலிருக்கும் சுஜீஷ், வேத் என்ற இருவரும் காதலர்களுக்கு உதவுவதாகவும் அவர்களை 'ரயில்வே ஸ்டேஷனில்' பத்திரமாக இறக்கிவிடுவதாகவும் சொல்கிறார்கள். பயணம் ஆரம்பமாகிறது. முதல் கோணலாக சுஜீஷ் அவர்களின் பெயர் என்னவென்று விசாரிக்க கபீர் தன் பெயரை மறைக்கக்கூடத் தெரியாமல் முதலில் கபீர் என்றவன்... 'கண்ணன்' என்று திருத்திச் சொல்கிறான். அவள் பெயர் 'துர்கா' என்றதும், அவர்களின் கேலி ஆரம்பமாகிறது.
சுஜீஷ் மேலும் அனாவசியமான கேள்விகளை அடுக்க அவனது பார்வையும், வார்த்தைகளும் துர்காவை பயமுறுத்துகிறது. இந்தியில் 'நாம் இறங்கிவிடலாம்' என்று காதலனிடம் சொல்கிறாள். வட இந்தியப் பெண் என்பதால் இன்னும் அவர்களால் பரிகாசிக்கப்பட வேறு வழியில்லாமல் பயணத்தை அவர்களுடன் தொடர வேண்டிய சூழல் காதலர்களுக்கு. காவல் துறையினரின் நெடுஞ்சாலை பரிசோதனையைக் கடந்து செல்லும் போதும் உதவி கேட்கப் பயந்து மௌனமாகிறான் கபீர். ஒரு கட்டத்தில் வேனில் இருப்பவர்களால் வரம்புமீறி கேலி செய்யப்பட்டதும் துர்காவும் கபீரும் தங்களை இறக்கிவிட இரைஞ்சுகிறார்கள். ஆனால், வேன்காரர்களைவிட்டால் அந்த நெடுஞ்சாலையில் தங்களை ரயில்வே ஸ்டேஷனில் இறக்கிவிட யாருமில்லை என்பதை தாமதமாக உணர்ந்து அவர்களோடு தொடர்ந்து பயணித்தாக வேண்டிய சூழல். மீண்டும் எல்லைமீறிய நடவடிக்கைகளாலும், அருவருக்கத்தக்க வார்த்தைகளாலும் காதல் ஜோடியின் கேள்விக்குறியான பயணம் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் அவர்களிடமிருந்து தப்பித்து அந்த நெடுஞ்சாலைப் பயணத்தைத் தொடர்கிறார்கள். அது இன்னும் மோசமான ஒரு பயணமாக நீள்கிறது. வேட்டி சட்டையணிந்த போதையேறிய இருவரின் பிடியில் சிக்கிக் கொள்கிறார்கள். மீண்டும் ஒருமுறை ஆம்னி வேன் 'நண்பர்களால்' காப்பாற்றப்பட்டு அதே வேனில் பயணத்தைத் தொடர்கிறார்கள். அவர்களின் இந்த நெடுஞ்சாலைப்பயணம் இலக்கை சென்றடைகிறார்களா என்பதை விவரிக்கிறது 'எஸ் துர்கா'.
படம் துவங்குவதே 'டீட்டெய்லான' துர்க்கை அம்மன் விழாவான 'கருடன் தூக்கம்' நிகழ்விலிருந்துதான். கபீர்- துர்காவின் ஒட்டுமொத்த பயணத்தின் நடுநடுவே கேரளத்தின் ஃபேமஸான இந்தத் திருவிழா குறியீடாகக் காட்டப்படுகிறது. ஒரு புறம் துர்கா என்ற பெண் தெய்வத்துக்காக உடலில் அலகு குத்தி பயபக்தியோடு வணங்கும் சமூகத்தில்தான் அதே பெயர் கொண்ட ஒரு பெண்ணுக்கு அநீதியும் இழைக்கப்படுகிறது என்பதைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இன்றைய இந்தியாவின் இரவில் ஒரு பெண்ணால் ஒரு ஆணின் துணையோடுகூட சுதந்திரமாகச் செல்ல முடியாது என்பதை பொட்டில் அடித்தாற்போல சொல்லியிருக்கிறது படம்.
திரைக்கதை என்ற ஒன்றே எழுதப்படாத... அதற்கான தேவையும் இருக்காத 'கேண்டிட்' பாணியிலான கதை சொல்லலில் கவனம் ஈர்ப்பவர்தான் இப்படத்தின் இயக்குநர் சனல் குமார் சசிதரன். இயக்குநரின் 'ஒழிவு திவசத்துக் களி' படத்தில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இரண்டாம் பாதி போன்ற பரிசோதனை முயற்சியும், சினிமா நேர்த்தியும் இதில் இல்லை. இருந்தாலும் படத்தில் அவர் பேச நினைத்த அரசியலை சரியாக பேசியிருக்கிறார். இந்திய சமூகத்தில் மண்டிக்கிடக்கும் சாதிய அடுக்கின் கொடிய முகத்தை 'ஒழிவு திவசத்துக்களி'யில் காட்டியவர் இதில் பல அடுக்குகளாக கருத்தியல்களையும் அவர் பேச நினைத்த நுண்ணரசியலயும் பார்வையாளனுக்கு உணர்த்த முயற்சித்திருக்கிறார். ஆம். 'எஸ் துர்கா' ஒவ்வொருவருக்கும் ஒரு கதையை சொல்வாள், உணர்த்துவாள், பிரதிபலிப்பாள். இப்படத்தின் ஓட்டம் இப்படி உணர்த்தியவற்றை பலரும் பட்டியலிடலாம். மதங்கள் கடந்த காதலுக்கு இந்த சமூகத்தில் கிடைக்கும் அங்கீகாரம், இரவு நேர இந்தியா, பெண் சுதந்திரத்தின் எல்லை, காவல்துறையின் கையாலாகத்தனம், கலாச்சாரக் காவலர்களின் இன்னொரு முகம், சக மனிதர்களின் மீதான காரணமற்ற வன்மம், பாலியல் வறட்சி, தன்வழியில் மட்டுமே கவனம் செலுத்தும் மனிதர்களின் சுயநலம் என பல அடுக்குகளை குறியீடுகளாக இக்கதை நமக்குள் விதைக்கிறது. கண்ணுக்கெட்டியத் தூரத்தில் அவர்களோடு பயணிக்கும் ரயில்வே பாதை கடைசிவரை அவர்களுக்கு சாத்தியப்படாமலே அவர்களுடனே நீள்வதெல்லாம் பல உணர்வுகளை நமக்குள் கடத்திச் செல்கிறது.
நம் வீட்டிலிருக்கும் துர்காக்கள் நம் பார்வையில் எஸ்.துர்காக்களாக தெரிந்தாலும் வெளியில் வரும்போது பலருக்கு செக்ஸி துர்காவாகத்தான் தெரிவார்கள் என்பதைச் சொல்கிறது இக்கதை!
பொதுவாக இதுபோன்ற இன்டிபெண்டென்ட் சினிமாக்களில் தொழில்நுட்ப அளவில் சிறிய பரிசோதனை முயற்சிகள் நிகழ்த்தப்படும். எஸ் துர்கா இன்னும் உச்சம் தொட்டிருக்கிறது. பல யுக்திகளைக் கையாண்டுள்ளது. யதார்த்த சினிமாவுக்கான இலக்கணங்களை தகர்த்தெறிந்துவிட்டு ஒரு த்ரில்லராய் நம்மை சீட் நுனிக்கு அழைத்து வருகிறது படத்தின் ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும்! ஒளிப்பதிவு செய்திருக்கும் பிரதாப் ஜோசஃப், தன் கேமராவையும் பார்வையாளனாக மாற்றியிருக்கிறார். இரவின் இருளையும் வெளிச்சத்தின் பயங்கரத்தையும் நமக்கு(க்குள்) கடத்தியிருக்கிறார். ஒரு கதாப்பாத்திரமாகவே மாறி, கேமராவும் வேனுக்கு உள்ளே வெளியே என கதை மாந்தர்களோடு பயணிக்கிறது. கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி கேமராவைக் கையாண்ட விதம் 'இந்தக் காட்சியை எப்படி எடுத்திருப்பார்கள்!?' என்று நம்மை பிரமிக்க வைக்கிறது. படத்தொகுப்பு செய்த சனல்குமார் சசிதரன் 'கிளாஸ்ட்ரோஃபோபிக்' எனப்படும் ஒருவித அதிர்ச்சி தரும் வகையில் காட்சிகளை அடுக்கி எடிட் செய்திருக்கிறார். அவரது வழக்கமான நம்பகத்தன்மையை நீளச்செய்யும் நீண்ட நெடிய ஷாட்கள், இரவின் நிஜ லைவ் சவுண்ட்கள் படத்தின் யதார்த்தத்திற்கு வலிமை சேர்க்கின்றன. படத்தில் வரும் கெட்டவார்த்தைகள் சென்ஸாரின் உபயோகத்தால் எக்கச்சக்க ம்யூட்கள், கட்களால் தூக்கப்பட்டிருப்பதை உணர முடிகிறது. தலைப்பில்கூட 'செக்ஸி' கட் செய்யப்பட்டு 'எஸ்' துர்காவாக மலர்ந்திருக்கும் இப்படம் நேர்மையான சினிமா ரசிகர்களுக்குக் கிடைத்த பொக்கிஷம்.
இந்தப்படத்துக்கு ஏன் சென்ஸாரில் இத்தனை கத்திரிகள், உள்ளூர் திரைப்படவிழாவில் இத்தனை புறக்கணிப்பும் என்பதே நம்முன் தொக்கி நிற்கும் கேள்விகள். உள்ளீடற்ற படங்கள் உலகத்திரைப்பட விழாக்களுக்கு இந்தியா சார்பாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில் 'செக்ஸி துர்கா' மிக உண்மையான இந்தியச்சூழலைப் பல அடுக்கில் பேசியிருப்பதால் படைப்பு ரீதியாக இது மிக நல்ல சினிமா. மொத்தத்தில் இருட்டிலே எடுக்கப்பட்டிருந்தாலும் இப்படம் நமக்கு பல விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. நிச்சயம் பார்வையாளனை ஏதோ ஒருவகையில் இப்படம் பாதிக்கும்!