
மிஸ்டர் மியாவ்

கதை-1
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கில் ராஜேந்திர பிரசாத், சௌந்தர்யா நடித்த திரைப்படம் ‘மேடம்’. அந்தப் படத்தில் தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கும் சௌந்தர்யாவைக் காதலிப்பதற்காக ஹீரோ ராஜேந்திர பிரசாத் பெண் வேடமிட்டு நர்ஸாக வேலைக்குச் சேர்வார். ராஜேந்திர பிரசாத் பற்றி நல்லவிதமாகக் கூறி, செளந்தர்யா மனதில் காதலை உண்டாக்குவார். அந்தப் படத்தின் அப்பட்டமான ஜெராக்ஸ் காப்பிதான் தற்போது சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துவரும் ‘ரெமோ’ திரைப்படத்தின் கதை.
கதை-2
‘எங்க வீட்டுப் பிள்ளை’ + ‘திருப்பாச்சி’ படங்களின் ஜெராக்ஸ் காப்பி ‘தளபதி 60’. எம்.ஜி.ஆர் படம் போலவே ஒரு விஜய், கோழை, இன்னொரு விஜய், வீரத்தின் அடையாளம். நாயகியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் கல்லூரி மாணவியாக வருகிறார். அவருடைய தாய்மாமனாக தம்பி ராமையா நடிக்கிறார். ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தைத் தயாரித்த நாகிரெட்டியின் வாரிசுதான் ‘தளபதி 60’ படத்தையும் தயாரிக்கிறார் என்பது ஆச்சர்யமான உண்மை.

கதை-3
அகிலத்தையே அதிரவைத்த ‘அவதார்’ கதையின் இன்னொரு முகம் ‘2.0’. ஒரு கிரகத்தில் வசிக்கிற ஒருவர், இன்னொரு கிரகத்துக்கு அனுப்பப்படுகிறார். அந்தக் கிரகத் தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்ப அவருக்கு உடல்ரீதியான மாற்றம் நிகழ்கிறது. அப்போது அவருடைய கட்டுப்பாட்டை இழந்த ஒரு மிருகவெறி அவரை ஆட்டிப்படைக்கிறது. எந்திரன் அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை. ஏற்கெனவே வந்த ‘எந்திரன்’ மூன்று மணி நேரம் திரையில் ஓடியது. ‘2.0’ இரண்டு மணிநேரம் மட்டுமே ஓடக்கூடிய படம்.
கதை-4
‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘ஜப்பானில் கல்யாண ராமன்’ படங்களை போல, முழுக்க முழுக்க வெளிநாட்டிலேயே படப்பிடிப்பு நடக்க இருப்பது அஜித்தின் 57-வது திரைப்படம். இந்திய ராணுவ ரகசியங்களை வெளிநாட்டில் கசியவிடும் கறுப்பு ஆடுகளைக் கண்டுபிடித்து பழிவாங்கும் உளவாளி வேடத்தில் அஜித் நடிக்கிறார்.

மியாவ் பதில்கள்
நடிகர்களை தெய்வமாக நினைக்கும் போக்கு எப்போது தொடங்கியது?
பாகவதர் காலத்திலேயே தொடங்கிவிட்டது.
ரஜினியின் மனநிலை என்ன?
சூப்பர் ஸ்டாராக அவரை உலகமே கொண்டாடினாலும் உள்ளுக்குள் மன உறுத்தலுடனே இருந்து வருகிறார் ரஜினி. கர்நாடகா சென்றால் மராட்டி என்கிறார்கள். தமிழ்நாடு வந்தால் கன்னடம் என்கிறார்கள். மனிதனாக இருக்கவே விரும்புகிறார் ரஜினி.
வடிவேலு எல்லோரையும் சிரிக்க வைக்கிறாரே?
தனது உதவியாளர்களாக இருந்து மறைந்த முருகேசன், வேலுசாமி குடும்பத்தினரைச் சிரிக்கவைக்க விரும்பவில்லையே.