மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திரைத்தொண்டர் - 18

திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம்
பிரீமியம் ஸ்டோரி
News
திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம் ( திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம் )

பஞ்சு அருணாசலம்

திரைத்தொண்டர் - 18

பொதுவாக, எனக்கு நிறையக் கதைகள் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். அப்படி ரஜினி சார் எனக்குத் தந்திருந்த கால்ஷீட் நெருங்க நெருங்க, `அவருக்கு என்ன மாதிரியான கதை பண்ணலாம்?' என நிறைய யோசனை. ` ‘காயத்ரி’, ‘ப்ரியா’ உள்ளிட்ட பல படங்களில் மார்டன் கேரக்டர்களில் நடித்துவிட்டார். ‘ஆறிலிருந்து அறுபது வரை’யில் தன்மையான அண்ணனாக அவரை வேறு ஒரு பரிமாணத்தில் காட்டிவிட்டோம். புதிதாக என்ன பண்ணலாம்?’  ரஜினி மார்க்கெட் ஏற ஏற இப்படி நான் நிறைய யோசிக்கவேண்டியிருந்தது. `அவர் படம் முழுவதும் கோபக்காரக் கிராமத்து இளைஞனாக வருவதுபோல ஒரு கதை பண்ணினால் எப்படி இருக்கும்?’ என ஒரு யோசனை. ‘இப்படிப் பண்ணலாமா... அப்படிப் பண்ணலாமா?’ என, நேரம் கிடைக்கும்போது எல்லாம் இந்த லைனை மனதுக்குள் ஓட்டிப்பார்த்து ஒரு ட்ரீட்மென்ட் ரெடி பண்ணிக்கொண்டிருந்தேன்.

திரைத்தொண்டர் - 18

ரஜினி சாரின் அந்த கால்ஷீட்டை ஏவி.எம் தங்களுக்கு விட்டுக்கொடுக்கக் கேட்டது, அந்தச் சமயத்தில்தான். அவர்கள் வந்துசேர்ந்த பிறகு அது இன்னும் பெரிய புராஜெக்ட் ஆனது. அந்தக் கதைக்கு நான் இன்னும் பெரிதாக யோசிக்கவேண்டியிருந்தது. தனக்கு ஏகப்பட்ட நிலபுலன்கள், வசதி வாய்ப்புகள் இருந்தும், தன் தம்பிகள்தான் உலகம் என வாழும் ஓர் அப்பாவி அண்ணன். அவன்தான் காளையன். உள்ளூர் ஜமீன்தார்தான் அவனுக்கு வில்லன். அவர்கள் இருவருக்குள் இருக்கும் பிரச்னை? காளையன் அதை எப்படிச் சமாளித்து ஜெயிக்கிறான்?’ - இதுதான் கதை.

ரஜினி சார், ஏவி.எம் சரவணன் சார் உள்பட அனைவருக்குமே அந்தக் கதை பிடித்திருந்தது. நான் ட்ரீட்மென்ட் எழுதி முடித்தேன். படம் கமர்ஷியலாகப் பிரமாதமாக வரும் என எனக்குத் திருப்தியாக இருந்தது. ‘முரட்டுக்காளை’ என்ற தலைப்பும் அமைந்துவிட்டது. இதற்கு இடையில் ‘பொதுவாக என் மனசு தங்கம்...’, ‘எந்தப் பூவிலும் வாசம் உண்டு...’ உள்பட இளையராஜா தந்த பாடல்கள் அனைத்தும் பிரமாதமாக வந்திருந்தன.

திரைத்தொண்டர் - 18
திரைத்தொண்டர் - 18

முழுத் திரைக்கதையையும் எழுதி முடித்த பிறகு, வில்லனாக ரஜினிக்கு சமமான ஒரு கேரக்டரைப் போட்டால்தான் சிறப்பாக இருக்கும் என நினைத்தேன். ‘யாரிடம் கேட்கலாம்?’ என யோசனை. ஜெய்சங்கர் சார் நடித்தால் புதிதாகவும் பிரமாண்டமாகவும் இருக்கும் எனத் தோன்றியது. அவர் என் நெருங்கிய நண்பர். ‘கல்யாணமாம் கல்யாணம்’ தொடங்கி நான் எழுதிய பல படங்களில் அவர் ஹீரோவாக நடித்திருந்தார். நான் முன்னுக்கு வர அவரும் ஒரு முக்கியக் காரணம். 

‘நடித்தால் ஹீரோவாக நடிப்போம். இல்லை என்றால், வீட்டில் சும்மா இருப்போம்’ என அந்தச் சமயத்தில் அவர் படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருந்தார். ஆனால், நாங்கள் அவரை  வில்லனாக நடிக்கக் கேட்போம் என அவர் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

ஏவி.எம்.சரவணன் சாரிடம், ‘சார், இந்த ஜமீன்தார் கேரக்டருக்கு ஜெய்சங்கர் சார் இருந்தா நல்லா இருக்கும். நான் சொன்னேன்னு சொல்லாதீங்க. நீங்களே கூப்பிட்டுப் பேசுங்க’ என்றேன். ஏனென்றால், ‘பஞ்சு, நான் உனக்கு ஹீரோவாத் தெரியலையா? அவ்வளவு சாதாரணமாப்போயிட்டேனா?’ எனக் கேட்டு விட்டால் தர்மசங்கடமாகிவிடும் என்பதால், சரவணன் சாரிடம் சொன்னேன். ‘நீங்க ஒண்ணும் சொல்லாதீங்க. நான் பேசிக்கிறேன்’ என்றார் சரவணன் சார்.

திரைத்தொண்டர் - 18

அதேபோல அவரை அழைத்து சரவணன் சார் பேசியிருக்கிறார். கதை நன்றாக இருந்ததாலும், சரவணன் சார் அழைத்ததாலும் அவரால் தட்ட முடியவில்லை. நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால், தான் எடுத்த முடிவு சரியா... தவறா எனத் தீர்மானிக்க முடியாமல் குழப்பத்தில் இருந்தார். என்னை வந்து பார்த்தார். ‘பஞ்சு, சரவணன் சார் கேட்டதும் என்னால தட்ட முடியலை. ‘ஓ.கே’னு சொல்லிட்டேன். நீ சொல்லு, நான் பண்ணட்டுமா... வேணாமா? அந்த கேரக்டர் எப்படி இருக்கும்? சரவணன் சார் கதை சொல்லும்போது நல்லாதான் இருந்துச்சு. இருந்தாலும் கதை எழுதின உனக்குத்தான் நல்லா தெரியும்? எனக்கு நடிக்க ஸ்கோப் இருக்கும்ல. தப்பா ஆகிடாதில்ல’ இப்படி அவருக்கு நிறையத் தயக்கங்கள்.

ஆரம்பம் முதல் ஹீரோவாகவே நடித்துக்கொண்டிருந்த ஒருவர், திடீரென வில்லனாக நடித்தால், மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? டூயட் இருக்காது, சண்டைக் காட்சிகளில் ஹீரோவிடம் அடிவாங்க வேண்டும். ஏற்கெனவே நமக்கு உள்ள நற்பெயருக்கு இதனால் களங்கம் வந்துவிடுமோ என்ற அவரின் குழப்பமான மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

திரைத்தொண்டர் - 18

‘பஞ்சு, இது தலைபோற விஷயம் இல்லை. நடிக்கத்தான் வந்தோம். ஆனா, நமக்கு பணம் பிரச்னை இல்லை; யார்கிட்டயும் போய் வாய்ப்பு கேட்கணும்கிற அவசியமும் இல்லை. நிம்மதியா இருக்கேன். இப்பப்போய் வில்லனா நடிச்சு பேரைக் கெடுத்துக்கணுமானு யோசனையா இருக்கு’ என்றார்.

‘உங்க பேர் கெட்டுப்போகாது சார். அதுக்கு நான் கியாரன்ட்டி. இது உங்களுக்கு மிகப்பெரிய கம்பேக்கா இருக்கும்; எங்களுக்கும் பெருமையா இருக்கும். தவிர, இது முழுக்க முழுக்க வில்லன் கிடையாது. கேரக்டர் ரோல். நீங்க தைரியமா பண்ணுங்க சார்’ என்றேன்.

என் பதில் அவருக்கும் திருப்தியாக இருந்தது. ‘நீயெல்லாம் இருக்க. ஒண்ணும் பிரச்னை இல்லை. ஆனா, ஃபைட் வைக்கும்போது மட்டும் ரொம்ப அடி வாங்காமப் பாத்துக்க’ என காமெடியாகச் சொன்னார். ஹீரோயின், பணக்கார கிராமத்துப் பெண் கேரக்டர். நிறைய யோசனைக்குப் பிறகு ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் அறிமுகமாகி இருந்த ரதியைத் தேர்வுசெய்தோம். 

அப்போது விக் வைத்து நடிப்பது என்றால், ரஜினி சாருக்கு பெரும்பாடு. ‘விக் வேணாமே சார். அது ஒரு மாதிரி இருக்கும்’ என்பார். ஷூட்டிங் சமயத்தில் தலைமுடியைக்கூட ஒழுங்காகச் சீவ மாட்டார். அப்படியே கோதிவிட்டு வந்துவிடுவார். அப்படிப்பட்டவருக்கு ‘விக் வைக்க வேண்டும்' என்றால் ரொம்பவே யோசித்தார். ‘கிராமத்து இளைஞன் கேரக்டர். புதுசா இருக்கும்’ என, கொஞ்சம் அழுத்திச் சொன்ன பிறகே, விக்குக்கு `ஓ.கே' சொன்னார். அது புதிதாகவும் அந்த கேரக்டருக்குப் பொருத்தமாகவும் இருந்தது.

‘முரட்டுக்காளை’ படத்தை கம்ப்ளீட்டாக முடித்துக் கொடுத்தோம். படம் பார்த்த சரவணன் சாருக்கு சந்தோஷம். ஆனால், அவர் வேறுவிதமான க்ளைமாக்ஸை எதிர்பார்த்தார். ‘படம் பிரமாதம். நாங்க ரொம்ப நாள் கழிச்சுத் திரும்பவும் படம் எடுக்க வந்திருக்கிறோம். அப்ப  க்ளைமாக்ஸ் பேர் சொல்லக்கூடிய அளவுக்கு எக்ஸ்ட்ராடினரியா இருக்கணும். ஆனா, இந்தக் கதைக்கு வழக்கமா வர்ற ஒரு க்ளைமேக்ஸா இது இருக்கு. வித்தியாசமாவும் பிரமாண்டமாவும் இல்லை. க்ளைமாக்ஸை மட்டும் இன்னும் ஏதாவது புதுசா பண்ணுங்களேன். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. பணத்தைப் பற்றி யோசிக்காதீங்க. பிரமாண்டமா வேணும்’ என்றார்.

பண்ணையார் வீட்டில் பாட்டு முடிந்ததும் ஒரு ஃபைட் என, அந்த க்ளைமாக்ஸை முடித்திருந்தேன். ‘வழக்கமா இருந்தாலும் இதுவே நல்லாத்தானே இருக்கு. என்ன பண்ணலாம்?’ என எனக்கு  யோசனை. வழக்கமாக, நன்றாக வந்திருக்கும் படத்துக்கு மேலும் அதிகமாக செலவு செய்ய தயாரிப்பாளர்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால், இவர்கள் ‘பணத்தைப் பற்றி பிரச்னை இல்லை’ எனச் சொல்கிறார்கள் என்றால், ‘நல்லதுக்குத்தானே சொல்வார்கள். யோசிப்போம்’ எனப் பலவிதமான க்ளைமாக்ஸ்களை யோசித்தேன்.

திரைத்தொண்டர் - 18

மனதில் பிரமாண்டமான நிறைய க்ளைமாக்ஸ்கள் வந்தாலும், அதை ஏற்கெனவே எடுத்திருந்த காட்சிகளோடும் அந்தக் கிராமத்தோடும் லிங்க் செய்வதில் நிறைய பிரச்னைகள் இருந்தன. அப்போது, எப்போதோ பார்த்த ஒரு இங்கிலீஷ் படம் சட்டென நினைவுக்கு வந்தது. ஆரம்பம் முதல் கடைசி வரை ரயிலிலேயே நடக்கும் கதை. க்ளைமாக்ஸில் ட்ரெயினிலேயே ஃபைட். அடிதடி, கலாட்டா என மக்கள் பதறி சிதறி ஓடுவார்கள். எளிய கதைதான். ஆனால், பார்ப்பதற்கு பிரமாண்டமாக இருக்கும்.

அதேபோல ஒரு ட்ரெயின் ஃபைட்டுடன் படத்தை முடித்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. பல கிராமங்களை ரயில்கள்தான் இணைக்கின்றன என்பதால், அதைக் கதையோடு ஒட்டுவதும் எளிது என நினைத்தேன். தமிழ்ப் படங்களில் அப்படி ஒரு ட்ரெயின் ஃபைட் சின்னச்சின்னதாக வந்துள்ளதே தவிர, க்ளைமாக்ஸ் முழுவதும் வந்தது கிடையாது. ஓடும் ரயிலில் அவுட்டோரில்தான் இதை எடுக்க முடியும். அந்த மாதிரி ஒரு ட்ராக் கிடைக்குமா? ட்ரெயினை வாடகைக்குப் பிடிக்க முடியுமா? என ஒருபக்கம் யோசனை. ஏவி.எம் நினைத்தால் நிச்சயம் இதைச் செய்வார்கள் என்பது தெரியும்.

புதிதாக எடுத்து ஒட்டியதுபோலவும் இருக்கக் கூடாது, கதையோடு சேர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக சில புது சம்பவங்கள் சேர்த்து கதையைக் கொஞ்சம் இழுத்து, ட்ரெயினில் ஃபைட் வருவதுபோல் க்ளைமாக்ஸை மாற்றி எழுதினேன். இந்த விஷயம் இதுவரை படக் குழுவினரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. நான் சொல்லித்தான் இன்று உங்களுக்குத் தெரியும்.

திரைத்தொண்டர் - 18

முத்துராமன் சாரிடம் சொன்னதற்கு, ‘பிரமாதமா இருக்கு. ஆனால், நிறைய செலவாகும் போலிருக்கே. ட்ரெயின் ட்ராக், எங்கே கிடைக்கும்?’ என யோசித்தார். சரவணன் சாரிடம் சொன்னபோது, ‘பிரமாதமாப் பண்ணியிருக்கீங்க பஞ்சு சார்’ என்றார். ‘நீங்க கேட்டீங்கங்கிறதுக்காக நான் பாட்டுக்கு எழுதிட்டேன். இதெல்லாம் எங்கே ஷூட் பண்ணுவீங்கன்னு எனக்கு ஒண்ணும் புரியலை’ என்றேன். `நல்லா வரும். நீங்க கவலைப்படாமப் போங்க’ என்றார்.

அப்படி ஒரு ட்ரெயினை இன்று வாடகைக்கு எடுத்து படப்பிடிப்பு நடத்துவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால் அன்று, அது மிகப்பெரிய விஷயம். ஏவி.எம் தங்களின் அனுபவங்களை, தொடர்புகளை வைத்து எந்த ரயில்வே ட்ராக் காலியாக இருக்கும், எந்த ட்ரெயினை வாடகைக்கு எடுப்பது என்பதை எல்லாம் தேடி, செங்கோட்டைக்குப் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்குள் கடந்து செல்லும் ரயில்வே ட்ராக்கைப் பிடித்தார்கள்.

இப்படி க்ளைமாக்ஸை மாற்றி, பிரமாண்டமான ஒரு விஷயத்தை படத்தில் கூடுதலாகச் சேர்த்தால் நமக்கும் நல்லதுதானே என ரஜினிக்கும் சந்தோஷம். அந்தச் சந்தோஷம், ஆர்வத்திலேயே ஓடும் ரயிலில் அந்தச் சண்டைக்காட்சியில் டூப் போடாமல் நடித்தார். `டூப் போட்டுக்கலாம் ரஜினி. க்ளோஸப் மட்டும் உங்களை வெச்சு எடுத்துக்கலாம்' என்று  எஸ்பி.முத்துராமன் சார் எவ்வளவோ சொல்லியும் ரஜினி கேட்கவில்லை. அதலபாதாள பாலத்தில் மீது ஓடும்போதும்கூட தவ்விக்குதிப்பது, தொங்குவது என அவ்வளவு ரிஸ்க் எடுத்தார். இன்று உள்ள டெக்னாலஜி யுகத்தில் அந்தச் சண்டைக்காட்சி சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், கிராஃபிக்ஸ் செய்து ஏமாற்ற முடியாத அந்த 80-களில் அந்தக் காட்சி உயிர்ப்போடு இருக்க வேண்டும் என்பதற்காக அவர் ரிஸ்க் எடுத்து டூப் போடாமல் நடித்ததை இப்போது நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது.

படம் ரிலீஸ் ஆனது. ஒவ்வொரு காட்சியையும் கொண்டாட்ட மனநிலையுடன் ரசித்தார்கள். ‘பொதுவாக என் மனசு தங்கம்...’ பாட்டுக்கு அப்படி ஒரு மாஸ் ரெஸ்பான்ஸ். தாறுமாறு ஹிட் என்பார்களே அப்படியான மிகப்பெரிய வெற்றி. படம் வெள்ளிவிழா கொண்டாடியது.

‘வில்லனாக நடிப்பதா..?’ என யோசித்த ஜெய்சங்கர் சாருக்கு, அந்தப் படம் புது வாசலைத் திறந்துவிட்டது. ஹீரோவாக நடித்த சமயத்தில் இருந்ததைவிட வில்லன் ஆன பிறகு அவர் இன்னும் பரபரப்பானது நாம் அறிந்ததே! ‘ஹீரோவா நடிக்கும்போதே ஒரு லட்சம், ரெண்டு லட்சம்தான் சம்பளம் பேசுவாங்க. இப்ப அஞ்சு லட்சம் வரை தரத் தயாரா இருக்காங்கப்பா. அதுவும் வில்லனுக்கு!’ என சந்தோஷப்பட்டார். இப்படி `முரட்டுக்காளை'த் தந்தது மாபெரும் மகிழ்ச்சி!

- தொண்டு தொடரும்...