மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 51

கலைடாஸ்கோப் - 51
பிரீமியம் ஸ்டோரி
News
கலைடாஸ்கோப் - 51

எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

கலைடாஸ்கோப் - 51

தெரு ஓவியம்

கிராஃபிட்டி வகை ஓவியங்கள் வாண்டலிசத்தில் (vandalism) சேர்த்தி. க்யூபிசம், சர்ரியலிசம்போல வாண்டலிசமும் ஏதோ ஆர்ட் மூவ்மென்ட் அல்ல. பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதை ஆங்கிலத்தில் `வாண்டலிசம்' என்பார்கள். ரயில் கழிவறை முதல் பார்க் மரங்கள் வரை கண்டதையும் கிறுக்கிவைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இவை எல்லாம் வாண்டலிசம். கிராஃபிட்டி என்பது, இப்படி பொது இடங்களின் சுவர்களில் வண்ணங்களால் கிறுக்குவது என்றாலும் ஓவியத்தில் கிராஃபிட்டி ஒரு புரட்சிகர வடிவம். ஸ்பிரே டின்னும் கையுமாக பெரும்பாலும் ஆண்கள் ஆக்கிரமித்திருக்கும் இந்தக் கலை வடிவத்தில் கலக்குகிறார் நடாலியா ராக் (Natalia Rak) என்கிற பெண் ஓவியர். இவருடைய ஓவியங்கள் வழக்கமான கிராஃபிட்டி ஓவியங்களின் ஏனோதானோ தன்மையில் இல்லாமல், துல்லியமான வடிவத்துடனும் வண்ணத்துடனும் ரியலிஸ்டிக் ஓவியங்களை பிரமாண்டமாகவும் பிரமிப்பாகவும் இருக்கின்றன.

கலைடாஸ்கோப் - 51

`இந்த ஓவியங்களுக்கான இன்ஸ்பிரேஷன் என்ன?' என்று ஒரு நேர்காணலில் கேட்டபோது, தனது பாய் ஃப்ரெண்ட் எனச் சொன்னார். `கவிதைக்கு இன்ஸ்பிரேஷன், காதலிதான்' என நம் ஊர் கவிஞர்கள் சொல்வார்கள் அல்லவா! அதுபோல சொல்லவில்லை நடாலியா. அவரின் பாய் ஃப்ரெண்ட் பெஸ்ட் (bezt), சுவர் ஓவியங்களில் உலகின் கவனம்பெற்ற (etam cru) குழுவில் ஒருவர்.
நடாலியா உள்பட இந்த மாதிரியான ஸ்ட்ரீட் ஓவியர்கள் நாடோடிகள்போல ஜாலியாக ஊர் ஊராகச் சென்று வரைவதும், பயணம் செய்வதுமாக தங்கள் கலையை வளர்க்கிறார்கள். இது வெறும் ஆர்ட் மட்டும் அல்ல, வாழ்க்கைமுறை என்பது அவர்கள் பதில். வாழ்கிறார்கள்!

கலைடாஸ்கோப் - 51
கலைடாஸ்கோப் - 51

பாட்டில்

குமரி மாவட்டத்தில் பிரபலமான எண்ணெய், காயத்திருமேனி. அடிபட்ட இடத்தில் (ஆக்ஸிடென்ட் ஆன இடம் அல்ல. அது பழைய ஜோக். உடம்பில் அடிபட்ட இடம்.) தேய்ப்பது முதல் சளி, இருமலுக்கு ஒரு ஸ்பூன் வீதம் வயதுக்கு ஏற்ப உள்ளுக்குள் குடிப்பது வரை, இந்த எண்ணெய் ஒரு சர்வரோக நிவாரணி. ஊரில் பெரும்பாலான பாட்டி-தாத்தாக்கள் கட்டில் காலுக்கு அருகில் காயத்திருமேனி வைத்தி ருப்பார்கள். ஊரில் ஒரு சித்தவைத்தியரிடம் `காயத்திருமேனி' எண்ணெய் வாங்கச் சென்றிருந்தேன். கையில் பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்தேன். `கிராதகா' என்பதுபோல பார்த்தவர், அதைப் பிடுங்கிக் குப்பைத்தொட்டியில் வீசினார். ஒரு கண்ணாடி பாட்டிலைக் கையில் திணித்தார். `என் தாத்தா `பரண்’களில் மருந்து வைத்திருந்தார். நான் பாட்டில்களில் வைத்திருக்கிறேன்' என அவருடைய ஹிஸ்டரியைச் சொன்னார். நான் கண்ணாடி பாட்டில்களின் ஹிஸ்டரியைத் தேடினேன். சினிமாக்களில் பழைய விஞ்ஞானிகளின் ஆய்வுக்கூடத்தைக் காட்டும்போது, கண்ணாடிக்குடுவைகளைக் காட்டுவார்கள். விதவிதமான திரவங்களின் வண்ணங்களைவிட அந்தக் குடுவைகளின் வடிவங்கள்தான் பயங்கரமாக இருக்கும். தெற்கு ஆசிய நாடுகள் கி.மு 1730-களிலேயே கண்ணாடித் தொழில்நுட்பத்தை அறிந்திருந்தாலும், ரோமில்தான் glassblowing எனும் கண்ணாடியை, பலூன்போல ஊதி பாட்டில்கள் போன்றவற்றை உருவாக்கும் நுட்பத்தைக் கண்டறிந்தார்கள். ஒயினைப் பாதுகாத்து வைக்கத்தான் கண்ணாடி பாட்டில்களை முதலில் உருவாக்கினார்களாம்.

கலைடாஸ்கோப் - 51

கண்ணாடி பாட்டில்களை முழுக்க முழுக்க ரீசைக்கிள் பண்ண முடிவதால், சுற்றுச்சூழல் பாதிப்பில் பிளாஸ்டிக் அளவுக்குப் பங்கெடுப்பது இல்லை. கண்ணாடி பாட்டில்கள்கூட நமக்கு அந்நிய நாட்டு அறிமுகம்தான். ஆனால், இன்ஸ்டன்ட் வாழ்க்கையின் பரபர ஓட்டம், யூஸ் அண்ட் த்ரோ பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்கவைத்து நம்மை இயற்கையின் எதிராளியாக்கிவிடுகிறது!

கலைடாஸ்கோப் - 51

கவண் வில்

நரிக்குறவர் இன மக்கள், அப்போது எல்லாம் ஊரில் திடீரெனத் தோன்றுவார்கள்; அரசுப் பள்ளி மைதானத்தில் தற்காலிகக் குடில்கள் அமைத்து சில மாதங்கள் தங்குவார்கள். நாடோடிகளான அவர்கள், வாழ்க்கையில் ஏற்கெனவே சில தலைமுறைகளாக எங்கள் ஊரையும் கடந்து சென்றிருப்பார்கள்போல. அவர்களில் சில மூத்தவர்களைக் கண்டால் எங்கள் வீட்டுத் தாத்தாக்கள், நட்பாகப் புன்னகைத்துக் குசலம் விசாரிப்பதைக்கூடப் பார்த்திருக்கிறேன்.

அவர்களில் சில இளவட்டப் பையன்கள், கைகளில் கவண் வில்லுடன் பிரத்யேக ஸ்டைலுடன் ஊரை வலம்வந்து காக்கா, குருவிகளை வேட்டையாடி ஆச்சர்யப்படுத்தும்போது, கவண் வில் மீது மோகம் பிறக்கும். சிறுவர்களான எங்களுக்கு, காசுகொடுத்து வாங்கும் அளவுக்குப் பொருளாதாரம் கைகொடுக்காது. எங்களில் மூத்த சில அண்ணாக்கள், காட்டிலும் மரத்திலும் தேடி `Y’ வடிவக் கொம்பை உடைத்துக்கொண்டோ, வெட்டிக்கொண்டோ வருவார்கள். சைக்கிள் கேரியரில் புத்தகங்களை இறுக்கமாகக் கட்ட, சற்று பெரிய கறுப்பு ரப்பர் பேண்ட் கடைகளில் கிடைக்கும். அதை இரண்டாக கட் செய்து `Y’ வடிவக் கொம்பின் இரு முனைகளிலும் கட்டுவார்கள். பக்கத்துத் தெரு சைக்கிள் கடை அண்ணாவிடம் இருந்து வாங்கிய சைக்கிள் ட்யூபின் துண்டு நடுவில் கல் வைத்து அடிக்கும் பட்டையான பகுதிக்கு, கவண் வில் என்ற `கேடா புள்' தயாராகிவிடும்.

எனது நண்பர்கள் கவண் வில்லை எடுத்துக்கொண்டு காக்கா, குருவி, ஓணான் என அதிபயங்கர உயிரினங்களை வேட்டையாடி, தங்கள் வீரத்தை ஒருவருக்கொருவர் நிரூபித்துக்கொள்வார்கள். பிறகு, கவண் வில்களுடன் தங்கள் பால்யத்தையும் தொலைத்த நண்பர்கள் இன்று அலுவலகக் கணினி அறைகளில் சம்பளம், இன்கிரிமென்ட், அச்சீவ்மென்ட், டார்கெட் என வேட்டையை மட்டும் வேறு ஒரு வடிவில் விடாதிருக்கிறார்கள். வேட்டைச் சமூகம்!

கலைடாஸ்கோப் - 51

மேட்ச்

சீதாராமன் மானிட்டரை ஆர்வமாகப் பார்த்துவிட்டு, ``ஓ.கே-வா?” என்றார்

``டி.என்.ஏ மேட்ச் ஆகுது. இது சரியா இருக்கும்... ஓ.கே” என்றார் டாக்டர் கோவர்த்தன்.

“இதுல கிராஸிங் கோடு எதுவும் இல்லையே?” என்றார் சீதாராமன் சந்தேகமாக.

“சுத்தமா இல்லை. ப்யூரா இருக்கு” என தம்ஸ்அப் காட்டினார் கோவர்த்தன்.

மானிட்டரின் புரியாத டிஜிட்டல் டிஸ்பிளேவில் விரல்களைச் சுட்டியபடி, “டி.என்.ஏ இணைப்புகளை அக்குவேறு ஆணிவேறா அலசியாச்சு. எல்லா கோடோன்ஸிலயும் சிஸ்டோசின்ல இருந்து தைமின் வரைக்கும் ஆராஞ்சாச்சு. இதெல்லாம் கொஞ்சம் டெக்னிக்கல் சமாசாரம். புரியுற மாதிரி சொல்லணும்னா, 2,000 வருஷ ஹிஸ்டரியை நானோ மில்லிமீட்டர்ல படிச்சுட்டேன். நத்திங் டு வொர்ரி” என்றார் டாக்டர் கோவர்த்தன்.

``சயின்ஸ் எங்கேயோ போயிடுச்சு இல்லை. எவ்வளவு துல்லியம்?!'' என வியந்தார் சீதாராமன்.

டாக்டர் கோவர்த்தன் ஆமோதிக்க, தலையை ஆட்டினார்.

திருப்தியாக எழுந்த சீதாராமன் “ஓ.கே பண்ணிடலாம் இல்ல” என்றபடி மொபைலை எடுத்து டயல்செய்து காதுக்குக் கொண்டுபோனார்.

பூரிப்புடன் சொன்னார், “ஐ காஸ்ட் மேட்ரிமோனியலா. எங்களுக்கு இந்த வரன் ஓ.கே சார்.”

கலைடாஸ்கோப் - 51

மால்தூஸ் மேரேஜ்

ஒரு நண்பன், கிட்டத்தட்ட நடுத்தர வயதில் கல்யாணம் பண்ணிக்கொண்டான். கேட்டால், `லைஃபில் செட்டில் ஆகிவிட்டுத்தான் கல்யாணம்' எனப் போன வருடம் வரை சொல்லிக்கொண்டிருந்தான். இது ஒரு நண்பனின் கதை மட்டும் அல்ல, பலரின் கதை. இந்த `செட்டில்’ என்ற வார்த்தை இப்போது எல்லாம் காதில் பூச்சியைப்போல அடிக்கடி புகுந்து தொந்தரவுசெய்கிறது. செட்டில் என்பதன் `பொருள் விளக்கம்’ கேட்டால், இரண்டு விஷயங்கள்தான். ஒன்று, வீடு; இன்னொன்று கார். இந்த இரண்டும் வருவதற்குள் காதோரம் நரைத்துவிடுகிறது அல்லது காலையில் தலை துவட்டினால் துண்டில் முடிகொட்டுவதைப் பார்த்துத் துணுக்குறுகிறார்கள்.

கல்யாணத்தைத் தள்ளிப்போடுவது என்பது இவர்கள் எடுத்த சொந்த முடிவு என நினைத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், 19-ம் நூற்றாண்டுப் பொருளாதார வல்லுநர் மால்தூஸ் (Thomas Robert Malthus) எழுதியவற்றை வாசித்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. மனிதர்கள் 2, 4, 8, 16 என ஜியோமேட்ரிக் விகிதத்தில் பல்கிப் பெருகிக் கொண்டிருக்க, உணவு உற்பத்தியோ 2, 4, 8, 10 என அரித்மேடிக் விகிதத்தில் இரட்டிப்பாகிக்கொண்டிருக்கும். அதனால் மக்கள்தொகை பெருகி உணவுப் பற்றாக்குறை ஏற்படும் எனக் கணித்தார் மால்தூஸ்.

ஆகவே, அரசாங்கமும் அதிகார அமைப்புகளும் மதுபானம், நோய்களை உருவாக்குதல், யுத்தங்கள், கலவரங்கள் மூலம் நேரடியாகவும், குடும்பக்கட்டுப்பாடு செய்தல், பொருளாதாரக் காரணங்களை, ஆசைகளைக் காரணம் காட்டி திருமணங்களைத் தள்ளிப்போடவோ அல்லது திருமணங்கள் செய்யாமல் இருக்கவோ மக்களை மறைமுகமாகத் தூண்டுதல் போன்றவை மூலம் மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது பற்றி மால்தூஸ் அறிவுறுத்தியிருக்கிறார். நண்பனிடம் `அவன் லேட் மேரேஜுக்குக் காரணம் பழைய காதலி மட்டும் அல்ல, மால்தூஸும்தான்' எனச் சொன்னால், நம்பவாபோகிறான்?