காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டுமென்று தமிழகத்தில் பலரும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். கடந்த ஞாயிறு அன்று சினிமாத் துறை சார்பாக மெளனப் போராட்டம் நடைபெற்றது. ரஜினி, கமல், சத்யராஜ், விஜய், சூர்யா, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். இதற்கிடையில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐ.பி.எல் போட்டியைத் தடை செய்யக்கோரி இயக்குநர் பாரதிராஜா, அமீர், தங்கர்பச்சான், கவுதமன் உள்ளிட்டோர் சென்னை எழும்பூர் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கெல்லாம் முதல் புள்ளியாக, இசையமைப்பாளார் ஜேம்ஸ் வசந்தன் தனது ஃபேஸ்புக் கணக்கில், ``காவிரி தண்ணீர் வேண்டும் என நினைப்பவர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டியைப் புறக்கணிக்க வேண்டும்" என்றார். இவரது இந்தப் பதிவு வைரல் ஆனதற்குப் பிறகுதான் அனைத்துப் போராட்டங்களும் ஐ.பி.எல் போட்டிக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்தது. தற்போது மீண்டும் ஒரு புதுவடிவப் போராட்ட முயற்சியை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மற்றும் பாடலாசிரியர் மதன் கார்க்கி இருவரும் இணைந்து எடுத்திருக்கிறார்கள். சில தினங்களில் வெளியாகவிருக்கும் காவிரிப் பிரச்னைக்காகப் பாடல் அது. இந்தப் பாடலை சைந்தவி, சத்யபிரகாஷ் மற்றும் சிலர் இணைந்து பாடியிருக்கிறார்கள். காவிரிப் பிரச்னைக்காக உருவான இப்பாடல் குறித்தும், பாடல் உருவான விதம் குறித்தும் மதன் கார்க்கியிடம் பேசினேன்.
``வாட்ஸ் அப்ல `மியூசிக் ஆல்பம்'னு ஒரு குரூப் வெச்சிருக்கோம். இதில், நிறைய பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் எல்லோரும் இருக்கோம். ஜேம்ஸ் வசந்தன், `காவிரிக்காக ஒரு பாட்டு பண்ணலாம்னு நினைக்கிறேன். பண்ணுவோமா?னு கேட்டார். நான் பாடல் வரிகள் எழுதுறேன்னு சொன்னேன். நிறைய பாடகர்கள் பாட வந்தாங்க. சைந்தவி, சத்யபிரகாஷ், ராஜேஷ் வைத்யா, ஆலாப் ராஜூனு பலரும் `நாங்களும் பங்கேற்கிறோம்'னு முன்வந்தாங்க. எல்லோரும் சேர்ந்துதான் பாடலுக்காக உழைத்தோம். முதலில் நான் பாடல் வரிகளை எழுதினேன். பிறகு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்தார். மொழிபெயர்ப்பாளரை வைத்துக்கொண்டு தமிழில் நான் எழுதிய இந்தப் பாடலை முதல்முறையாக கன்னடத்தில் மொழிபெயர்த்திருக்கிறோம். ஏன்னா, காவிரி விஷயத்துல நாம என்ன சொல்ல வர்றோம்ங்கிறது முதல்ல கன்னடர்களுக்குப் புரியணும். நம்மளோட நோக்கத்தை கன்னடர்களுக்கு அன்போட வெளிபடுத்தினால் நல்லாயிருக்கும்னு தோணுச்சு. இதை ஜேம்ஸ் வசந்தன்கிட்ட சொன்னேன். ஜேம்ஸ் வசந்தனும் அதைப் புரிஞ்சுக்கிட்டு சரினு சொன்னார்.
பாடல் எழுதும்போது கன்னட மொழி பெயர்ப்பாளர் ஒருவரைக் கூட வெச்சுக்கிட்டேன். என் எண்ணங்களை நான் சொல்ல, அதை அவர் கன்னடத்தில் மொழிபெயர்த்துச் சொன்னார். அதைக் கேட்டு, பாடல் வரிகளை எழுதினேன். இந்தப் பாட்டு கன்னட சகோதர, சகோதரிகளுக்காகவே ரெடி பண்ணியிருக்கோம். ஜேம்ஸ் வசந்தனுக்கும் கன்னடத்துல இது ஃபர்ஸ்ட் டைம் மியூசிக் பண்ற வாய்ப்பு. அவருக்கும் கொஞ்சம் சவாலாதான் இருந்தது.
காவிரி பிரச்னையைப் பேசியிருக்கோம். பாட்டு வரிகள்ல கோபம் இருக்காது. `ஒடஹீட்டிதவரே'ங்கிற முதல் வரியோட பாட்டு தொடங்கும். கன்னடத்துல இதுக்கு `உடன் பிறந்தவரே'னு அர்த்தம். இந்தப் பாட்டை எழுத நாளைஞ்சு நாள் டைம் எடுத்துக்கிட்டேன். இன்னும் ரெண்டு நாள்ல பாட்டை வெளியிடலாம்னு திட்டமிட்டிருக்கோம். கன்னடத்துல இந்தப் பாட்டோட வரிகள் இருக்கிறதுனால தமிழ், இங்கிலீஷ், இந்தியில் சப் டைட்டில் போட்டு ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கோம். என் மனைவி அந்த வேலைகளைப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. முக்கியமா, இந்தப் பாட்டை கன்னடத்தில் இருக்கும் பிரபலங்களுக்கு அனுப்பலாம்னு இருக்கோம்.
ட்விட்டரில் கன்னடம் பேசும் நண்பர்களுக்கு டேக் பண்ணிவிடலாம்னும் திட்டம் இருக்கு. ஏன்னா, தமிழ்நாட்டுல நிறைய கன்னட நண்பர்கள் இருக்காங்க. கர்நாடகாவுல நிறைய தமிழர்கள் இருக்காங்க. முக்கியமா, கர்நாடகாவுல ஆட்சியில இருக்கிற அரசியல்வாதிகளும் இந்தப் பாட்டைக் கேட்கணும்னு நினைக்கிறோம். சண்டை, சச்சரவுகளோட கசப்பான விஷயமா காவிரி முடியக் கூடாது என்பது எங்க எண்ணம்.
ரமேஷ் வைத்யா பாட்டுக்காக வீணை வாசிச்சிருக்கார். இந்தப் பாடல் வெளியாகும்போது வீடியோ மேக்கிங்கும் ரிலீஸ் ஆகும். கன்னடத்துல முதல்முறையா பாட்டு எழுதுன விஷயத்தை மனைவி தவிர, அப்பாகிட்டகூட இன்னும் சொல்லலை. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு முறையில போராடிக்கிட்டு இருக்காங்க. நான், எனக்குத் தெரிந்த வழியில் காவிரிக்காகக் குரல் கொடுத்திருக்கேன்!'' என்று முடிக்கிறார், மதன் கார்க்கி.