
பஞ்சு அருணாசலம், படங்கள் உதவி: ஞானம்

ரஜினி, கமல், நான், இளையராஜா, முத்துராமன் சார் என, நாங்கள் அனைவரும் அப்போது அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். இளையராஜாவைச் சந்தித்தால், என் படங்கள் மட்டும் அல்லாது மற்றவர்களின் படங்களுக்கு அவர் பதிவு செய்துள்ள பாடல்களைப் போட்டுக் காட்டி, ‘எப்படி இருக்குது?’ என என் கருத்தைக் கேட்பார். அப்படி ஒருநாள் சந்தித்தபோது, சில பாடல்களைப் போட்டுக்காட்டினார். எல்லா பாடல்களும் நன்றாக இருந்தன. ` ‘அவள் அப்படித்தான்’ எடுத்த ருத்ரய்யாவோட அடுத்த படத்துக்காகப் போட்டதுண்ணே. நல்ல திறமையான ஆள்’ என அவரைப் பற்றி பெருமையாகச் சொன்னார்.

பிறகு, அந்த விஷயத்தை நான் மறந்துவிட்டேன். சில நாட்கள் கழித்து என் அடுத்த பட கால்ஷீட்டுக்காக கமலைச் சந்திக்கச் சென்றிருந்தேன். ‘இப்ப சில படங்கள் பண்ணிக்கிட்டிருக்கேன். அதுல ‘ராஜா என்னை மன்னித்துவிடு’னு ருத்ரய்யாவுக்கு ஒரு படம் பண்றேன். இதெல்லாம் முடிச்சுட்டு, வழக்கம்போல அடுத்து நாம சேர்ந்து பண்ணுவோம்’ என்றார் கமல். ‘நல்ல டைரக்டர். பண்ணுங்க. ஆனா, அவர் ஏதோ ‘கிராமத்து அத்தியாயம்’னு ஒரு படம் பண்ணிட்டிருக்கிறதா ராஜா சொன்னாரே’ என்றேன். ‘ஆமாண்ணே, அது சின்னப் படம்தான். இன்னும் ரெண்டு மூணு மாசத்துல அதை அவர் முடிச்சுடுவாரு. இது பெரிய படம். வித்தியாசமாவும் அதே சமயம் கமர்ஷியலாவும் இருக்கும்’ என `ராஜா என்னை மன்னித்துவிடு' படத்தின் கதையைச் சொன்னார். அந்தக் கதை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது.
எத்தனையோ படங்களுக்குக் கதை எழுதிக் கொண்டிருந்ததால் எந்த மாதிரியான கதைகள் ரசிகர்களை ஈர்க்கும் என்ற அனுபவத்தில் கமல் சொன்ன அந்தக் கதையைக் கேட்கும்போதே, ‘இந்தப் படம் நிச்சயமா வெள்ளி விழா காணும்’ எனத் தோன்றியது. ‘நல்ல கதை அம்சம் உள்ள படங்கள் பண்ற ருத்ரய்யா, கமர்ஷியல் படங்களும் பண்ணுவார்போலிருக்கு’ என நினைத்துக்கொண்டேன்.
திடீரென ஒருநாள், ருத்ரய்யா என்னைப் பார்க்க வந்திருந்தார். ‘உங்களைப் பற்றி கமலும் ராஜாவும் ரொம்பப் பெருமையா சொன்னாங்க சார்’ என்றேன். ‘என் ஸ்டைல் உங்களுக்குத் தெரியும். என் படத்துக்குத் தேவை இல்லாம அதிகமா செலவு பண்ண மாட்டேன். இப்ப நான் பண்ற ‘கிராமத்து அத்தியாயம்’கூட சின்ன பட்ஜெட் படம்தான். அதுக்குக் கொஞ்சம் பணம் தேவைப் படுது. உங்களுக்குத் தெரிஞ்ச ஃபைனான்ஷியர்கள் யார்கிட்டயாவது சொல்லிவிட்டீங்கன்னா உதவியா இருக்கும்’ என்றார். என்னைச் சந்திக்கச் சொல்லி கமல் அல்லது ராஜா யாராவது சொல்லி யிருப்பார்கள் என நினைத்துக்கொண்டேன்.
‘உங்க ‘அவள் அப்படித்தான்’ எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. வித்தியாசமாப் பண்ணியிருந்தீங்க. உங்களுக்குன்னே ஒரு தனி பாணி உருவாகியிருக்கு. இந்த ‘கிராமத்து அத்தியாயம்’ படத்தையும் அந்த மாதிரி நல்லா பண்ணிடுங்க. இந்தப் படத்தை முடிக்க உங்களுக்கு எவ்வளவு தேவைப்படும்?’ என்றேன். ‘ஒரு ரூபாய் வாங்கிக் கொடுங்க’ என்றார். அதாவது ஒரு லட்சம் ரூபாய். ‘ரிலீஸ் சமயம் கூடுதலா தேவைப்படுமே! எல்லாம் சேர்த்து மொத்தம் எவ்வளவு தேவை?’ என்றேன்.
யோசித்தார். ‘மொத்தம் மூணுல இருந்து மூன்றரை லட்சத்துக்குள்ள ஃபர்ஸ்ட் காப்பி முடிச்சுடுவேன்’ என்றார். நான் எப்போதுமே ஒரு விஷயத்தில் அவ்வளவு சீக்கிரம் முடிவுபண்ண மாட்டேன். ஆனால், ஒரு விஷயம் பிடித்துவிட்டால் என்னிடம் வசதி இருக்கிறதா இல்லையா, அதன் சாதக-பாதகம் என்ன என்பதைப் பற்றி கவலைப்படாமல் தைரியமாக இறங்கிவிடுவேன். அன்றும் அப்படித்தான் ருத்ரய்யா விஷயத்தில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ‘உங்க மேல நம்பிக்கை இருக்கு. நீங்க பண்ணுங்க. நானே இந்தப் படத்தைப் பண்றேன். நாலு ரூபாய் வரை வாங்கித் தர்றேன். பிரின்ட் அண்ட் பப்ளிசிட்டியையும் நானே பார்த்துக்கிறேன். வர்ற லாபத்தை நாம ஷேர் பண்ணிக்கலாம்’ என்றேன்.
‘பெரிய சுமை நீங்கின மாதிரி இருக்கு சார். ஃபைனான்ஸ் விஷயம் அவ்வளவு பிரஷரா இருந்துச்சு. இனி அதைப் பற்றி கவலைப்படாம கதையில கான்சன்ட்ரேட் பண்ணுவேன். ரொம்ப நன்றி சார்’ என கைகளைப் பிடித்துக்கொண்டவர், ‘கதை கேக்குறீங்களா சார்?’ என்றார். ‘என் பாணி சினிமா வேற. உங்களுக்கு விருப்பம் இருந்தா சொல்லுங்க’ என்றேன். கதையின் அவுட்லைன் மட்டும் சொன்னார்.
எளிமையான காதல் கதை. அழகாகச் சொன்னார். நான் அதன் திரைக்கதை ட்ரீட்மென்ட், டயலாக்ஸ் எதுவும் கேட்கவில்லை. எப்போதுமே காதல் கதைகள் எளிமையாகத்தான் இருக்கும். அந்தக் கதையையும் ராஜாவின் பாடல்களையும் மனதில் ஓட்டிப்பார்த்து, ‘இந்தக் கதை இப்படித்தான் வரும். நிச்சயமா க்ளாஸான ஒரு லவ் ஸ்டோரியா இருக்கும்’ என நினைத்துக்கொண்டேன். அதில் சந்திரஹாசன் உள்பட புதுமுகங்கள் பலர் நடிகர்கள்.

இதற்கு இடையில், ‘வேணும்னா, கமல் சார் பண்ற ‘ராஜா என்னை மன்னித்துவிடு’ படத்தையும் நீங்களே பண்ணுங்க சார்’ என்றார் ருத்ரய்யா. ‘ஒரு பக்கம் நாம கமர்ஷியல் படங்கள் பண்ணிட்டிருக்கோம். இந்த மாதிரியான படங்கள் பண்ணினா நல்ல பேர் வரும் என நினைத்தேன். தவிர நல்ல நடிகர், நல்ல இயக்குநர் சேரும் படம். ‘பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன் வழங்கும் ‘ராஜா என்னை மன்னித்துவிடு’ என வரும்போது நம் கம்பெனிக்கும் நல்ல பெயர் வரும்’ என்ற நோக்கத்தில் அந்தப் படத்தையும் பண்ண ஆர்வமாக இருந்தேன்.
‘அதுக்கு என்ன பட்ஜெட் ஆகுணும்னு அப்புறம் சொல்றேன். இப்ப பூஜை போட்டு ஒரு பாட்டு எடுக்கிறேன்’ என, பாடல் பதிவுக்கு பணம் கேட்டார். அந்தப் படத்துக்கு 50 ஆயிரம், 50 ஆயிரமாக இரண்டு லட்சம் ரூபாய் வரை கொடுத்திருப்பேன் என நினைக்கிறேன். கமல், சுஜாதா நடிக்க ஒரு பாட்டும், நாலு நாள் டாக்கி போர்ஷனும் எடுத்தார். அந்தப் படத்துக்கு கமல் ஃபுல் கால்ஷீட் தந்திருந்தார். ருத்ரய்யா எல்லா பத்திரிகைகளுக்கும் முழுப்பக்க விளம்பரம் தந்திருந்தார்.
இதற்கு இடையில் ‘கிராமத்து அத்தியாயம்’ படத்தை ஒரே மாதத்தில் முடித்துவிட்டார். ‘ரஷ் பார்க்கிறீங்களா சார்?’ என்றார். ‘நான் என் படங்களுக்கே ரஷ் பார்க்க மாட்டேன். அது என் வேலையும் இல்லை. ஃபர்ஸ்ட் காப்பி போட்டுக் காட்டுங்க போதும்’ என்றேன். அதேபோல வேலைகள் முடித்து படத்தைப் போட்டுக் காட்டினார். ‘அவள் அப்படித்தான் எடுத்தவரா இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்?’ என எனக்குப் பயங்கர அதிர்ச்சி. அந்த அளவுக்கு படம் ரொம்ப சுமார். காதல் கதை. ஒரு சீனாவது நன்றாக இருக்கணுமே! ம்ஹும். ஒட்டுமொத்தமாக அந்தப் படம் என்னை ஈர்க்கவே இல்லை.
‘சார், நீங்க சொல்லும்போது இருந்த அழகு, இப்ப படமா பார்க்கும்போது இல்லை.’ - அவர் மனம் வருத்தப்படக் கூடாது என்பதற்காக நாசூக்காகச் சொன்னேன். ‘என்ன பஞ்சு சார் இப்படிச் சொல்றீங்க?’ - அவருக்கும் பயங்கர ஷாக். ‘என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் பார்த்தாங்க. `இந்தப் படத்தோட கம்பேர் பண்ணும்போது ‘அவள் அப்படித்தான்’லாம் நத்திங். அது இந்திய லெவல்னா, இது உலக லெவல் படம்’னு சொன்னாங்க’ என்றார்.
‘ஸாரி சார். ஒருவேளை எனக்கு ஜட்ஜ் பண்ணத் தெரியலைனு நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை இந்தப் படத்தில் நான் உங்களோட புகழைத்தான் விரும்பினேன். அதை நீங்க கெடுத்துக்கிட்டீங்கனு நினைக்கிறேன்’ என்றேன். ‘சார் நீங்க உங்க கமர்ஷியல் கண்ணோட்டத்துல பார்க்கிறீங்க. இதுக்கு எப்படி ரெவ்யூஸ் வருதுனு மட்டும் பாருங்க. உங்களையும் என்னையும் எத்தனை பேர் பாராட்டுறாங்கனு ரிலீஸுக்குப் பிறகு உங்களுக்குத் தெரியும். இத்தனை படங்கள் எடுத்து கிடைக்காத புகழ், இந்த ஒரு படத்துல உங்களுக்குக் கிடைக்கும் சார்’ என்றார். ‘அப்படி ஒரு பேர் வந்துச்சுன்னா, உங்களைவிட ஆயிரம் மடங்கு சந்தோஷப்படுவேன்’ என கைகொடுத்து வாழ்த்தி அவரை வழி அனுப்பிவைத்தேன்.
அப்போது சின்ன பட்ஜெட் படங்களுக்கு 30 முதல் 35 வரையும், பெரிய படமாக இருந்தால் 60 பிரின்ட் வரையும் ரிலீஸ் பண்ணுவோம். ‘கிராமத்து அத்தியாயம்’ படத்துக்கு 30 பிரின்ட் போடலாம் என நினைத்திருந்தேன். ஆனால், படம் பார்த்த பிறகு 25 ஆகக் குறைத்துவிட்டேன். வழக்கமாக என் படங்களுக்கு என தனி விநியோகஸ்தர்கள் இருப்பார்கள். அவர்களுக்குள் இரு வேறு கருத்துக்கள். சிலர், ‘அவர் அவார்டுக்கு படம் எடுக்கிறவர். எதுக்கு சார் நமக்கு வம்பு?’ எனப் பயந்தார்கள். வேறு சிலரோ, ‘என்ன ரெண்டு மூணு பிரின்ட்டுதான் தர்றேன்னு சொல்றீங்க. அவர் படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கு சார். டிஸ்ட்ரிபூஷன் வேணாம் சார். நாம அவுட்ரேட் பண்ணிக்கலாம்’ என்றார்கள். உண்மைதான் அன்று அந்தப் படத்துக்கு ரஜினி, கமல் படங்களுக்கு இணையான ஓப்பனிங். காரணம், ருத்ரய்யாவின் முந்தைய படமான அவள் அப்படித்தானின் வெற்றி.
ஆனால், நான் நிதானமாக இருந்தேன். ‘ஒவ்வொரு ஊருக்கும் ரெண்டு இல்லைன்னா மூணு பிரின்ட் தர்றேன். படம் பிக்கப் ஆனதும் அதிக பிரின்ட் போடுறதைப் பற்றியும், அவுட்ரேட் பண்றது பற்றியும் பேசிக்கலாம்’ என்றேன். ‘நான் இந்தப் படத்தை பணத்துக்காக எடுக்கவில்லை. நல்ல பேரும் போட்ட பணமும் வந்தால் போதும் என்பதற்காகத்தான் எடுத்திருக்கிறேன்’ என்பதை அவர்களுக்கு புரியவைத்தேன்.
ஆரம்பத்தில் இந்தப் படத்தை வாங்க பயந்த டிஸ்ட்ரிபியூட்டர்கள்கூட, படத்துக்கு எகிறிக்கிடந்த எதிர்பார்ப்பைப் பார்த்துவிட்டு ‘மூணு பிரின்ட் பத்தாது சார். எனக்கு உனக்குனு தியேட்டர்காரங்க நெருக்குறாங்க. உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்? நாம அவுட்ரேட் பண்ணிக்கலாம்’ என்றார்கள். நான் ஒரு வியாபாரியாக இருந்திருந்தால் அந்த ஓப்பனிங்கைப் பயன்படுத்திக் கொண்டு அதிக விலை வைத்து அவுட்ரேட்டுக்கு படத்தை விற்றிருக்கலாம். ஆனால், அதை நான் விரும்பவில்லை. ‘தப்பா எடுத்துக்காதீங்க. பிரின்ட்டை அதிகமாக்குறது, அவுட்ரேட் பண்ணிக்கிறது பற்றி எல்லாம் படம் எப்படி ஓடுதுனு பார்த்துட்டுப் பண்ணிக்கலாம். இப்ப இதோட ரிலீஸ் பண்ணுங்க’ என்றேன்.
படம் ரிலீஸ் ஆனது. நம்பவே மாட்டீர்கள், எந்த பெரிய நடிகரும் நடிக்காத, இயக்குநரின் இரண்டாவது படத்துக்கு அப்படி ஒரு ஓப்பனிங். படம் போடுவதற்கு முன்னரே ட்ரங்கால் புக் பண்ணி டிஸ்ட்ரிபியூட்டர்கள் கதறினார்கள். ‘சார்... இன்னும் ரெண்டு மூணு பிரின்ட் எக்ஸ்ட்ரா தரச்சொல்லி, நான் அப்பவே சொன்னேன். இப்ப பாருங்க ஒவ்வொரு தியேட்டர்லயும் அவ்வளவு கூட்டம்’ என்றனர்.
ஆனால், அப்படிச் சொன்னவர்களிடம் இருந்து அடுத்தடுத்த நாட்களில், ‘ஷோவைக் குறைச்சுட்டாங்க சார்... குறைச்சுட்டாங்க சார்’ என்று போன். ‘நான்தான் அப்பவே சொன்னேனே. இப்ப ஒண்ணும் பிரச்னை இல்லை. ஏதாவது லாஸ்னா அடுத்தடுத்த படங்கள்ல அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்’ என்றேன். ‘அது இல்ல சார். இப்படி ஒரு ஓப்பனிங்ல படம் கொஞ்சம் நல்லா இருந்திருந்தாக்கூட நல்லா போயிருக்கும் சார். இப்படிப் பண்ணிட்டாரே’ என வருத்தப்பட்டனர். ‘நல்ல டெக்னீஷியன். ஏதோ மிஸ் ஆகிடுச்சு. விடுங்க’ என்றேன். ஒரு வாரத்துக்குப் பிறகு அந்தப் படம் எங்கேயும் ஓடவில்லை என நினைக்கிறேன்.
பிறகு, ஒருநாள் ருத்ரய்யா வந்தார். ‘நான் எங்க தப்பு பண்ணினேன்னு தெரியலை சார். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அப்படிச் சொன்னாங்க.’ அவர் பெரும் வருத்தத்தில் இருக்கிறார் என்பது புரிந்தது. அதுவும் சினிமாவில் வெற்றி என்றால் நீங்கள் கூப்பிடாமலேயே ஓடி வருவார்கள்; தோல்வி என்றால் நீங்கள் அழைத்தாலும் எட்டிக்கூடப் பார்க்க மாட்டார்கள். இதுபோன்ற சமயங்களில்தான் கலைஞர்களுக்கு ஆறுதல் தேவை என்பதை நான் அறிவேன். அதுவும் ருத்ரய்யா போன்ற கலைஞர்கள் மேலே வர வேண்டும் என நான் விரும்பினேன்.
‘இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. கவலையை விடுங்க. அடுத்து கமல் படம் பண்றீங்க. அதுல கவனம் செலுத்துங்க’ என்று அவரை உற்சாகப்படுத்தினேன். அவரும் ‘நான் எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு உங்களை வந்து பார்க்கிறேன் சார்’ எனச் சொல்லிவிட்டு சென்றார். ஆனால், அதன் பிறகு என்ன நடந்தது எனத் தெரியவில்லை. ‘ராஜா என்னை மன்னித்துவிடு’ படம் டிராப் ஆகிவிட்டது.
இவர் என்ன சொன்னார், கமல் சார் என்ன சொன்னார் என்பது குறித்து எதுவும் எனக்குத் தெரியாது. ‘கிராமத்து அத்தியாயம்’ படத்தில் நான் போட்ட பணம் வந்துவிட்டது. ஆனால், டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு நஷ்டம். அதை அவர்களுக்கு நான் என் அடுத்தடுத்த படங்களில் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். அதாவது வட்டியில்லாக் கடன்போல. `ராஜா என்னை மன்னித்துவிடு’ படத்துக்கு வாங்கிய இரண்டு லட்சத்துக்கு வட்டி கட்டிக் கொண்டிருக்கிறேன்.
பிறகு, வழக்கம்போல ஒருநாள் கமலைப் பார்க்கப் போயிருந்தேன். ‘ருத்ரய்யா படத்துக்கு எவ்வளவு கொடுத்திருக்கீங்க செட்டியாரே?’ என அவராகவே கேட்டார். ‘என்ன இரண்டு லட்சம் கொடுத்திருப்பேன்’ என்றேன். ‘சரி அதை விட்ருங்க. நான் அந்தப் படம் பண்ணப்போவது இல்லை’ என்றவர், ‘நாம வழக்கம்போல அடுத்த படத்தை ஆரம்பிச்சுடலாம். நீங்க அதுக்கான வேலைகளைப் பாருங்க’ என்றார்.

‘நீங்க ருத்ரய்யாவுக்குப் பணம் கொடுங்க, `கிராமத்து அத்தியாயம்' எடுங்க, நானும் அவரும் பண்ற படத்தையும் நீங்களே தயாரிங்க’ என கமல் எதுவும் என்னிடம் சொல்லவில்லை. ருத்ரய்யாதான் கேட்டார், கொடுத்தேன். ஆனால், அதன் பிறகு ருத்ரய்யா என்னை வந்து பார்க்கவும் இல்லை. நானும் ஒருநாள்கூட ‘அந்தப் பணம் என்ன ஆனது?’ என நேரிலோ போனிலோ அவரிடம் கேட்டதே இல்லை.
ஆனால், அவர் என்னை நேரில் சந்தித்து என்ன நடந்தது எனச் சொல்லாதது எனக்கு அப்போது மிகப்பெரிய வருத்தம். என்னை வந்து சந்தித்து கலந்து பேசியிருந்தால், ‘என்ன செய்யலாம்’ என்று ஏதாவது ஐடியா சொல்லி, அவருக்கு உதவியிருப்பேன். கடைசி வரை அவர் என்னைச் சந்திக்கவே இல்லை. சமீபத்தில் இறந்துவிட்டார் எனக் கேள்விப்பட்டேன். ‘ச்சே... எப்படி வந்திருக்கவேண்டிய மனிதர், இப்படிப் போய்விட்டாரே!’ என வருந்தினேன்!
- தொண்டு தொடரும்...