மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 52

கலைடாஸ்கோப் - 52
பிரீமியம் ஸ்டோரி
News
கலைடாஸ்கோப் - 52

எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

கலைடாஸ்கோப் - 52

முகங்கள்

பாஸ்கல் கோயத் (Pascal Goet), பிரெஞ்சு புகைப்படக் கலைஞர். அவர் எடுத்த இந்த மேக்ரோ புகைப்படங்களைப் பாருங்கள். என்ன என யூகிக்க முடிகிறதா? பழங்குடிக் கலைஞர்களின் முகமூடிகள்போலவோ... அறிவியல் புனைக்கதைகளில் வரும் ஏலியன்கள் முகம்போலவோ உங்களுக்குத் தோன்றுகிறதா?

இவை எல்லாம் விதவிதமான பூச்சிகள், வண்டுகள். நிறைய வண்டு இனங்களுக்குப் போலி கண்கள் அதன் உடல் வடிவமைப்பிலேயே உண்டு. உதாரணம், Eyed elater. இவற்றின் போலி கண்கள் என்பது, உடல் மீது இயற்கை செய்திருக்கும் போட்டோஷாப் வேலை. ஆனால், பாஸ்கல் எந்த போட்டோஷாப் வேலையும் செய்யவில்லை. அவை சிறகுகளை மடக்கிக்கொண்டு உட்கார்ந்து இருப்பதை, பிரத்யேக ஒளி நிழலுடன் புகைப்படங்களாக எடுத்திருக்கிறார்.

புகைப்படக் கலைஞனுக்கு ஒளிதான் உளி. அதை வைத்துக்கொண்டு எப்படிச் செதுக்க முடியும் என்பதற்கு இந்தப் புகைப்படங்களே உதாரணம். வழக்கமான வழியில் இதுபோல பூச்சிகளைப் புகைப்படம் எடுத்தால், அவை பூச்சிகள் என்பது சாதாரணமாகத் தெரியும்.

கலைடாஸ்கோப் - 52

“எங்கெங்கு ஒளி வரவேண்டும்; நிழல் வரவேண்டும் என்பதை நுட்பமாக அமைத்ததால்தான் இப்படி முகமூடிகள் போல தோற்றம் வருகிறது. கண்காட்சியில்கூட பார்வையாளர்களின் முகத்தின் அளவுக்கு வருவதுபோல பெரிதாக பிரின்ட் செய்துதான் மாட்டுகிறேன். அருகில் வந்து பார்ப்பவர்கள் சின்னஞ்சிறுப் பூச்சிகளின் உடல்தான் இது எனத் தெரியாமல் வியப்பார்கள். ஒருவகையில் விஷுவல் மேஜிக்” எனச் சொன்னார் பாஸ்கல்.

கலைடாஸ்கோப் - 52

பிக்சல்

``சார், நான் ஒரு கேம் டெவலப்பர்” என்றான் ப்ராண்.

ஆகாஷ்நாத், பிசினஸ் உலகில் பிஸி முதலீட்டாளன். ப்ராணை ஏறிட்டுப் பார்த்துவிட்டுச் சொன்னான், “கேம்ஸுக்கு நான் முதலீடு பண்றது இல்லை. ரிட்டர்ன் பற்றிய உத்தரவாதம் கிடையாதே.”
“ஆனா, இந்த கேம் பற்றி நீங்கள் தெரிந்துகொண்டால் வேண்டாம் எனச் சொல்ல மாட்டீர்கள்” என்றான் ப்ராண்.

“என்ன விசேஷம்?” என்றபடி டிவைஸைப் பார்த்தார்.

“இந்த கேம், ஆகுமென்டட் ரியாலிட்டியோட அடுத்த லெவல். இதுல நீங்க விளையாட ஆரம்பிச்சா, உண்மையிலேயே எங்கே வேணும்னாலும் போகலாம்; எந்தக் கட்டடங்களுக்கு உள்ளே வேணும்னாலும் நுழையலாம்.”

ஆகாஷ்நாத்தின் கண்கள் கூர்மையானது. ப்ராணை நெருங்கி “எங்கே வேணும்னாலும் நுழையலாமா?” என்றான்

“ஆமா” என்றான் ப்ராண்.

“வங்கிகளின் லாக்கர் ரூமுக்குள்?” என்றான் ஆகாஷ்.

``ஆமாம். சந்தேகம் இருந்தால் உங்கள் பெருவிரலை இந்த டிவைஸில் அழுத்தி, லாக் இன் பண்ணி விளையாடிப்பாருங்கள்” என்றான் ப்ராண்.

ஆகாஷ் பெருவிரலால் அழுத்தினான்.

``என்ன... ஒன்றுமே ஆகவில்லை” என்றான்.

``ஆகிவிடும். நான் இப்போது உங்கள் வங்கி லாக்கர் ரூமில் இருந்து கேம் வழியாக உங்கள் முன்பு வந்திருக்கிறேன். உங்கள் லாக்கரைத் திறக்க உங்கள் பெருவிரல் அடையாளம் தேவைப்பட்டது”
என்றான்.

ஆகாஷ்நாத் எட்டி, ப்ராணைப் பிடிக்க முயன்றார். அவன் நொடியில் பிக்சல்களாகக் காற்றில் கரைந்தான்!

கலைடாஸ்கோப் - 52

பாட்டில் மீன்கள்

எங்கள் ஊரில் ஒரு சிற்றோடை ஓடுகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து விவசாயத்துக்காகத் திறக்கப்படும் நீர் சேனல்கள் வழியாக ஓடி எங்கெங்கோ சிறு கிளைகளாகப் பிரியும். அதில் ஒன்று எங்கள் ஊரில் சிறு ஓடையாகக் கடந்துசெல்லும். வண்டலும் சரளையுமாகக் கிடக்கும் அதன் அடிப்பாகம் தெரியும்படி கண்ணீர்போல தண்ணீர் ஓடும். பெருமழைக் காலங்கள் தவிர, பெரும்பாலும் மூட்டு வரைதான் தண்ணீர் இருக்கும். மூழ்கிக் குளிக்கும்போதே மீன்கள் முதுகைத் தாண்டிச் செல்வதைப் பார்க்க முடியும்.

சிறுவயதில் குளிக்கப் போகும்போதெல்லாம் கூடவே ஒரு காலி பாட்டிலையும் எடுத்துச்செல்வோம். பெரும்பாலும் ஹார்லிக்ஸ் பாட்டில். இரண்டு பேர் துண்டைப் பிடித்துத் தண்ணீருக்குள் துழாவினால் போக்குக் காட்டிவிட்டு சில மீன்கள் வசமாகச் சிக்கி, துண்டின் மீது துடித்துத் துள்ளும். அதைத் தண்ணீர் நிறைத்த பாட்டில்களில் விட்டு வீட்டுக்கு எடுத்துவருவோம். எங்கள் ஊரில் சிற்றோடை என்றால், உங்கள் ஊரில் ஆறு, குளம் என இந்த மீன் பிடிக்கும் அனுபவம் உங்களுக்கும் இருக்கும்.

அக்வாரியமும் ஃபிஷ் ஃபுட்டும் அறிமுகமாகிடாத நேரம். கண்ணாடி பாட்டிலுக்குள் சுற்றி வரும் மீன் குஞ்சுகளுக்கு உணவாக, சேற்றில் பிடித்த புழுக்கள் முதல் சோற்று உருண்டைகள் வரை போடுவது, அழகுக்காக பாட்டிலுக்குள் கோலிக்குண்டுகளைப் போட்டுவைப்பது, பிளாஸ்டிக் செடியை நட்டுவைப்பது என டார்ச்சர் செய்த நண்பர்களைப் பார்த்திருக்கிறேன். பின்னர் ஓர் அதிகாலையில் அவை ஜலசமாதியாகி மிதக்கும். மீன்களுக்கு ஆத்மா உண்டு என்றால், சமீபகால தமிழ் சினிமாவில் வரும் பேய்களைப் போல காத்திருந்து பழிவாங்கியிருக்கும்.

கலைடாஸ்கோப் - 52

வளையல்

நமது சங்கக் கவியின் `வளையுடைக் கையள்’ முதல் சினிமா கவியின் `வளையோசை கலகலகலவென' வரை வளையலை அழகுணர்ச்சியின், காதலின் பெளதீகப் பொருளாகக் கொண்டாடியிருக்கிறார்கள். தெருவில் வளையல் விற்கும் வணிகர்கள் பாடிச் செல்வது, `வளையற்சிந்து' என்னும் பா வடிவமாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

மொகஞ்சதாரோ நடனமாது சிலையின் கைகளை, வளையல்கள் அலங்கரிப்பதைப் பார்த்திருக்கிறோம். கி.மு-வுக்கு முன்னர் மெளரியப் பேரரசு கால செம்பு வளையல்கள் மகுஜ்ஹாரி அகழாய்வில் கிடைத்திருக்கின்றன. வளையல்களின் வரலாறு, நமது தேசத்தின் தொல்லியல் ஆதாரங்களில் நிறையத் தட்டுப்படுகிறது. சங்க இலக்கியத்தில் பிரிவாற்றாமையால் தோழியின் உடல் மெலிந்து கை வளை கழல்வதை அடிக்கடி பார்க்கிறோம்.

கடல் சங்கு, தாமிரம், பித்தளை முதல் தங்கம் வரை பல உலோகங்களால் செய்திருக்கிறார்கள். மரச்செதுக்கு வளையல்கள்கூட உண்டு. `பவள வளைசெறிந்தாட்கண்டு அணிந்தாள்பச்சைக் குவளைப் பசுந்தண்டு கொண்டு’ என்று பரிபாடலில் வரும் பாடலுக்கு, செல்வ பெண்டிர் பவழ வளை அணிவதைக் கண்டு வயலில் வேலைசெய்யும் உழைக்கும் பெண்கள் குவளை மலர் தண்டுகளை வளையல்களாக அணிந்தனர் என ஒரு விளக்கம் படித்தேன். பழங்குடிகள் கொடிகளையும் தண்டுகளையும் இப்படி வளையல்களாக பாவிப்பதை, புகைப்படங்களில் பார்த்திருக்கிறோம். பிற்காலத்தில் கண்ணாடி, பிளாஸ்டிக் வரை வந்துவிட்டது.

கலைடாஸ்கோப் - 52

பண்டைய இந்தியாவில் இருபாலரும் அணிந்திருந்த வளையல்கள், பிற்காலத்தில் பெண்களின் அணிகலன்களாக மட்டுமே மாறிப்போயிருக்கின்றன. நம் ஊர் பெண்களின் வாழ்க்கையின் எல்லா பருவங்களிலும் வளையல் முக்கியமான அணிகலனாக இருந்திருக்கிறது. கண்ணாடி வளையல்களைக் கண்டால் மனம் சிணுங்காத பெண்கள் இல்லை.

கலைடாஸ்கோப் - 52

பிரேக்அப் குருவி!

Purple-crowned Fairywren. ஊதா நிற மண்டையுடன் அழகாக இருக்கும் ஆஸ்திரேலியக் குருவி. அழகாக மட்டும் அல்ல, அழியும் நிலையிலும் இருக்கும் ஒரு பறவை இனம். சமீபத்தில் இந்தக் குருவி பற்றிய ஓர் ஆய்வுத் தகவலைப் படித்தேன். இந்த வகை குருவிகள் Monogamy பழக்கம்கொண்டவை.

Monogamy என்றால், ஒரே துணையுடன் மட்டுமே காலத்தைக் கழிப்பது. இந்த ஊதா தலைக் குருவிகள் பல வருடங்கள் ஒரே துணையுடன் வாழ்ந்தாலும், இருப்பிடம் போன்ற காரணங்களுக்காக ஏற்கெனவே இருக்கும் துணையை பிரேக்அப் செய்துவிட்டு புதிய துணையைத் தேடுமாம். அதிலும் இந்த பிரேக்அப் முடிவை எடுப்பது, பெண் குருவிகள்தான் என்பது ஆய்வாளர்களின் முடிவு.

பெரும்பாலும் பாதுகாப்பான இருப்பிடமும் உணவும் கிடைக்கிற மாதிரியான பாய்ஃப்ரெண்டுகளைத் தேர்ந்தெடுத்தால், அதற்காக பல ஆண்டுகள்கூடக் காத்திருக்குமாம். ஏற்கெனவே அந்தக் கூட்டில் இருக்கும் பெண் குருவி இறந்துபோனாலோ அல்லது சண்டையிட்டுப் பறந்துபோனாலோதான் இடம் காலியாகும் அல்லவா! அதற்காகத்தான் இந்தக் காத்திருப்பாம்.

இன்று அழியும் நிலையில் இருக்கும் இந்தக் குருவிகள், தங்கள் ஆரோக்கியமான சந்ததிகளைப் பெருக்கிக்கொள்ளவும், நல்ல இருப்பிடங்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் இப்படி பிரேக்அப் விட்டு பறக்கின்றன. இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழல், காதலர்களைப் போலவே இந்தக் குருவிகளிடமும் பிரேக்அப் பழக்கத்தை அதிகப்படுத்தி, ஆண் குருவிகளை சூப் பாய்ஸ்களாகக் கீச்சுக் குரலில் கதறவிடுகிறதா என்பதையும் ஆய்வாளர்கள்தான் சொல்ல வேண்டும்!