மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 53

கலைடாஸ்கோப் - 53
பிரீமியம் ஸ்டோரி
News
கலைடாஸ்கோப் - 53

எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

கலைடாஸ்கோப் - 53

மடி

மிதந்து இறங்கிய விண்கலத்தில் இருந்து வெளியே வந்த கேப்டன் ட்யூக், அரசனுக்கு வணக்கம் வைத்தான்.

“இந்த சோலார் சிஸ்டத்தில் நமக்கு போட்டி, பூமி மட்டும்தான். அதை அழிக்க நீங்கள் போட்ட திட்டங்கள் என்ன ஆனது?” என்றார் அரசர்.

“பல்லுயிர்கள் பல்கிப்பெருகிய அந்தக் கிரகத்தில் உள்ள உயிரிகளின் சிந்தனையைத் திருடி, குழப்பம் விளைவித்து பூமியை அழிப்பதுதான் நாம் போட்ட திட்டம். பல்லாண்டுகளாக முயன்றும் எந்த உயிரிகளிடமும் அது எடுபடவில்லை. ஒரே ஓர் உயிரியைத் தவிர” என்றான் ட்யூக்.

“ம்ம்..!” என்று ஆர்வமானார் அரசர்.

``அந்த உயிரிகளுக்கு பூமியில் `மனிதர்கள்' என்று பெயர். அவர்கள் சிந்தனையைத் திருடி, யாம் குழப்பங்களை விளைவித்தோம். மதம், இனம் எனக் குழுக்களாக அவர்களைத் தங்களுக்குள் சண்டைபோட்டுக்கொள்ள வைத்தோம். அறிவைப் பெருக்கி, ஆயுதங்களை உருவாக்கவைத்து அவர்களுக்கு இடையில் யுத்தங்களை உண்டாக்கினோம். அவர்களுக்குள்ளாகவே உணவுகளையும் உடைமைகளையும் பகிர்ந்துகொள்வதில் சுரண்டலையும் சண்டைகளையும் உருவாக்கினோம். ஆனால், அது போதுமானதாக இல்லை” என்றான் ட்யூக்.

“பிறகு...” என்றார் அரசர்.

``வேறு வழி இல்லை. கடைசியாக மனிதர்களை மட்டும் அல்ல, பூமியையே அழிக்கும் ஒரு வழியை மனிதர்கள் சிலரின் சிந்தனைக் கண்ணியில் உருவாக்கினோம். பிரபஞ்சத்தின் அடி மடியிலேயே கையை வைத்துச் சுட்டுக்கொள்ளப்போகிறார்கள். அதை அவர்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தவும் ஆரம்பித்துவிட்டார்கள்.”

“முட்டாள்கள். அதற்கு அவர்கள் என்ன பெயர் வைத்திருக்கிறார்கள்?” என்றார் அரசர்.

சிரித்தபடி சொன்னான் ட்யூக், “அட்டாமிக் எனர்ஜி”.

கலைடாஸ்கோப் - 53

`வலை’ஞன்

`பறவையின் குணமே பறக்கிறதுதான்... பறக்கவிடு. வாழ்வா... சாவாங்கிறதை அது தீர்மானிக்கட்டும்'னு `கபாலி' படத்தில் வரும் வசனம் எனக்குப் பிடித்திருந்தது. பறவைகள் பறக்கும்போதே புகைப்படம் எடுப்பது, பறவைப் புகைப்படக்காரர்களுக்குப் பிடித்த விஷயம். ஆனால், டோட் ஃபார்ஸ்க்ரென் (Todd Forsgren), வலையில் மாட்டிக்கொண்ட பறவைகளை மட்டுமே புகைப்படம் எடுக்கிறார். ஏன்?

கலைடாஸ்கோப் - 53

பறவையியல் (ornithology) என்பது, பறவைகளைப் பற்றிய ஆய்வுத் துறை. பறவைகளை ஆய்வுசெய்யும் வழிகளில் ஒன்று, பறவைகளை இப்படி வலை போட்டுப் பிடித்து... அதன் பாலின, உடலியல் அடையாளங்களை ஆய்வுசெய்து பதிவுசெய்வது. அப்படிப் பதிவுசெய்த பிறகு, பறவைகளை மீண்டும் சுதந்திரமாகப் பறக்கவிட்டுவிடுவார்கள். இப்படி வலைகளில் மாட்டும் பறவைகளை ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளும் முன்னர் புகைப்படமாக்கிக் கொள்ளும் டோட், இதை `Ornithological Photographs' என்கிறார்.

கலைடாஸ்கோப் - 53

வலைகளில் இருந்து ஆய்வாளர்கள் கைகளுக்குப் போகும் முன்னர், இந்தப் பறவைகளின் பயம், கோபம், படபடப்பு என உணர்ச்சிகளை இந்தப் புகைப்படங்கள் பதிவுசெய்வதாகச் சொல்கிறார் டோட். `சிறுவயதில் இருந்தே பறவை பார்த்தல் (bird watching) மீது இருந்த ஆர்வமும், தான் படித்த ஆர்ட் ஹிஸ்டரி பட்டப்படிப்பும்தான் இதற்குக் காரணம்' என்கிறார். `ஆய்வுக்குப் பிறகு பறவைகள் காட்டுக்குள் சென்று மறைந்துவிடும். ஆனால் அவற்றின் உணர்ச்சிகள், எனது புகைப்படத்தில் காலத்தைக் கடந்து உறைகின்றன' என்னும் டோட்டின் புகைப்படங்கள், பறவைகள் பற்றிய ஆய்வுக்கும் எதிர்கால ஆவணமாக இருக்கும்.

டோட், ஒரு பறவைப் புகைப்பட`வலை’ஞன்.

கலைடாஸ்கோப் - 53

பேப்பர் பேக்

மளிகைப்பொருட்கள் வாங்குவதற்குகூட வீட்டில் இருந்து பையை எடுத்துப்போவதை இழுக்கு என நினைக்கிறோம். விளைவு, வீதி எங்கும் பாலித்தீன் குப்பைகள். பாலித்தீன் பைகளின் சூழல் கேடுகளைத் தவிர்க்க, பேப்பர் பைகளைப் பரிந்துரைக்கிறார்கள்.

இந்தப் பேப்பர் பைகளைக் கண்டுபிடித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த மார்கரெட் இ.நைட் (Margaret E.Knight). 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர், சிறுவயதில் தந்தையை இழந்து குழந்தைத் தொழிலாளியாக பருத்தி ஆலைகளுக்கு வேலைக்குச் சென்றவர். இயந்திரங்களின் மீது சிறு வயது முதல் தோன்றிய ஆர்வம்தான், தன் 12-ம் வயதில் பேப்பர் பைகளைத் தயாரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடிக்கவைத்தது.

ஆனால், தன்னுடைய பேப்பர் பேக் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்க, அவர் கொடுத்த பட்டறையில் இருந்து அந்த டிசைனைத் திருடி, சார்லஸ் என்னும் ஆசாமி அவனது பெயரில் அந்த டிசைனை பேட்டன்ட் வாங்கியிருக்கிறார். ஆனால் மார்கரெட், விடாமல் நீதிமன்றம் வழியே போராடி, தனது 30-வது வயதில் தன் கண்டுபிடிப்பின் உரிமையை மீட்டு `அமெரிக்காவின் முதன்முதலாக பேட்டன்ட் வாங்கிய பெண்மணி’யாக வரலாற்றில் நிற்கிறார்.

கலைடாஸ்கோப் - 53

பேப்பர் பையின் கண்டுபிடிப்புக்காக அவர் போராடியிருக்கிறார். பாலித்தீனைவிட்டு பேப்பர் பையைப் பயன்படுத்தச்சொல்லி இப்போது போராடவேண்டி இருக்கிறது.

கலைடாஸ்கோப் - 53

ஓமத்திரவம்

ஓமத்திரவம், ஓமத்திராவகம் என ஊர் பக்கங்களிலும், படித்தவர்கள் வாழ்ந்த நகர்ப்புறங்களில் `ஓமவாட்டர்' என்றும் ஊருக்கு ஒரு பெயர் சொன்னாலும், எங்கள் ஊர் பக்கம் `ஓமத்திரம்’ - சுருக்கென நாக்கில் பிடிக்கிற மாதிரி சொல்வார்கள். ஓமத்திரவத்தின் குணாம்சமும் நாக்கில் சுருக்கெனப் பிடிப்பதுதான்.

90-களில் மூலைமுடுக்கு எல்லாம் மெடிக்கல் ஷாப்புகளும் விதவிதமான மாத்திரைகளும் வந்து, வாயு முதல் வயிற்றுக்கடுப்பு வரையிலான செரிமானப் பிரச்னைகளுக்கு இன்ஸ்டன்ட் தீர்வுகள் கொடுக்க ஆரம்பித்தன. அதற்கு முந்தைய தலைமுறைக்குத்தான் ஓமத்திரவத்தின் அருமை தெரியும். பள்ளிக்கூடம் கட்டடிப்பதற்குச் சொல்லும் பொய்களில் ஒன்று, வயிற்றுவலி. அதற்கு பெருசுகள் ஐம்பது காசோ, ஒரு ரூபாயோ கொடுத்து பெட்டிக்கடையில் சென்று ஓமத்திரவம் வாங்கிவந்து கொடுப்பார்கள்.

பாட்டிலில் தண்ணீர்போல சாதுவாக இருக்கும் ஓமத்திரவத்தை, Sci-Fi படங்களில் வரும் விஞ்ஞானி போன்ற பாவனையில் அளந்து கிளாஸில் ஊற்றுவார் கடைக்காரர். அப்படி ஊற்றும்போது காஸ் கிளம்பி கிளாஸை மூடியிருக்கும் நியூஸ்பேப்பர் துண்டை ஈரமாக்கும். அதை அப்படியே வீட்டுக்கு எடுத்துவந்து, வயிற்றுவலிக்காரர்களுக்குப் புகட்டுவார்கள். சில பெற்றோர்கள், ஸ்டாக்போல வாங்கிவைத்து அவ்வப்போது பசங்களுக்கு அடாவடியாக ஊட்டுவார்கள். அதன் கசப்பும் காரமும் கலந்து சுவையும் பிரத்யேக வாசமும் தொண்டை முதல் வயிறு வரை எரியும். ஆனால், இப்போது நினைக்கும்போது இனிக்கிறது என்பதுதான் நாஸ்டால்ஜியா சிறப்பு.

கலைடாஸ்கோப் - 53

கல் முனிவரும் வாட்டர் பாக்கெட்டும்!

சமீபத்தில் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலுக்குச் சென்றிருந்தேன். இரண்டாம் ராஜராஜனால் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில். தஞ்சைப் பெருவுடையார் கோயிலைப்போல யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பர்யச் சின்னங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்ட கோயில். வழக்கமாக, சிவன் கோயில்களில் தேவியருக்கு எனத் தனியாக சந்நிதி அமைத்திருப்பார்கள். இங்கே இறைவிக்கு எனப் பிரமாண்டமான தனிக்கோயிலே உள்ளது.

கோயிலும் புளியமரங்களும் சூழ்ந்த புல்வெளிகளுமாக சுற்றுப்புறம் பரமாரிக்கப்பட்டாலும், கோயிலில் இருந்து சற்றுத் தள்ளியிருக்கும் பிரமாண்ட நுழைவாயில் உடைந்துபோன கற்களும் தூண்களுமாகக் கிடக்கிறது. பல அடுக்குகளாக இருந்திருக்கும் அந்த நுழைவாயில் மண்டபத்தின் இரண்டு பக்கமும் சிதிலங்களாகி வெளவால் வீச்சத்துடன் புராதனத்தன்மையுடன் இருக்கிறது. பழைய கட்டடங்களின் சிதிலமான தன்மைக்கு என ஓர் அழகியல் இருக்கிறது, அதன் உடைசல்களில் வரலாறு இருக்கிறது என்பதால் சிதிலத்தைக்கூட ரசிக்க முடியும்.

நுழைவாயிலும் அதைச் சுற்றியிருக்கும் கற்சிற்பங்களும் நமது மூத்தோர்களின் கட்டட மற்றும் சிற்ப அறிவின் நுட்பத்தைச் சொல்லும்போதே, கற்களுக்கும் சிற்பங்களுக்கும் நடுவில் உடைந்துகிடக்கும் மதுப்புட்டிகள், பாட்டில் மூடிகள் அந்த மூத்தோர்களின் பேரன்கள் இன்று என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் சொல்லிவிடுகிறது. வரலாறு, கலை பற்றிய அறிவோ, அக்கறையோ இல்லாத ஒரு தலைமுறையைத்தான் உருவாக்கியிருக்கிறோமா?

கிளம்பும்போது கவனித்தேன், மண்டபத்தின் ஒரு சிறு மாடத்தில் ஒரு முனிவரின் கற்சிற்பம். அதற்கு முன்னால் பாதி குடித்துவிட்டு கசங்கலாக வைத்துப்போன ஒரு வாட்டர் பாக்கெட். கொடூரமான குறியீடுபோல இருந்த அந்தக் காட்சி, இந்தச் சமூகத்துக்குச் சொல்லவருவது என்ன என நினைத்துக்கொண்டேன்.